May 28, 2008

உள்ளம் கவர்ந்த கள்வர்கள்


கோடைக்காலத்தில் பாட்டி கையில் தயிர் சாதத்தை பிசைந்து போட்டு அதில் கற்சட்டியில் வைத்த வத்த குழம்பை ஊற்றி சாப்பிட வைப்பது,

வளர்ந்த பிறகும் அம்மாவின் புடவையின் வாசனையை நுகர்ந்தபடி படுத்து தூங்குவது,

நண்பனாக கிடைக்கும் அப்பா,

வாழ்க்கையின் நிர்பந்தங்களினால் காணாமல் போன பால்ய நண்பனை மீட்டெடுப்பது,

ஒற்றுமையாக இருக்கும் சகோதர சகோதரிகள்,

உழைத்து கிடைத்த பணத்தை வைத்து பேராசை இல்லாமல் வாழ்வது

பிறருக்கு கொடுத்து மகிழ்வது,

பல வருடங்களுக்கு பிறகு சொந்த கிராமத்துக்கு போய் அந்த மண்ணின் வாசனையை நுகர்வது,

மனைவியை சினேகிதியாக நினைத்து, மகளிர் மசோதா இல்லாமலேயே அவளுக்கு இதயத்திலும், வாழ்க்கையிலும் சம உரிமை கொடுப்பது,

பக்தி இலக்கிய தமிழில் கரைந்து போவது,

வீணையாய் இதயத்தை மீட்டும் நல்ல வார்த்தைகள் கொண்ட வாக்கியத்தில் வசியப்படுவது,

நல்ல சங்கீதம்,நல்ல சினிமா.

கொடுப்பினை என்கிற வார்த்தையில் நம்பிக்கை இருந்தால் இவையெல்லாமே கொடுப்பினைகள்தான்.

எனக்கு சமீபத்தில் கிடைத்த கொடுப்பினை (வியாபார சினிமாவின் விமர்சகர்களைப் பற்றி கவலை வேண்டாம்)

திரையரங்கில் போய் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தை பார்த்தது.

ஒவ்வொரு காட்சியிலும் மனித வாழ்க்கையின் யதார்த்த பிரதிபலிப்பு. அறிவோடு பேசாமல், உணர்வுகளோடு உலாவும் கதாபாத்திரங்கள்.

தெலுங்கு படமான பொம்மரிலுவின் தழவல் என்றாலும், கதை தமிழ் மண்ணோடு, ஏன் ஒவ்வொரு நல்ல குடும்பத்தோடும் ஒன்றிப்போகிற விஷயம் இந்தப் படம்.

ஒவ்வொரு நல்ல தகப்பனும் பிரகாஷ்ராஜில் தன்னைப் பார்ப்பான். பொத்தி பொத்தி வளர்க்கப்படுகிற எந்த மகனும், ஜெயம் ரவியில் தன் பிம்பத்தை காண்பான்.மனைவியில்லாமல் பெண் குழந்தையின் தகப்பன் ஒவ்வொருவனுக்குள்ளும் ஷ்யாஜி ஷிண்டே இருப்பார்.


படத்தில் பெரிய வெற்றியே கதாநாயகி ஜெனிலியாதான். அவருக்காக பாத்திரம் உருவாக்கப்பட்டதா, அல்லது இயக்குனரின் சிறப்பான தேர்வா? பட்டி மன்றமே நடத்தலாம்.அந்த கதாபாத்திரத்தின் இயல்பான வெகுளித்தனத்தால் உள்ளத்தை நெருடுகிறார். சில பெண்களைப் பார்த்தால் கையெடுத்துக்கும்பிட தோன்றும்,. திரை பாத்திரமாக இருந்தாலும், இனி அந்த கதாநாய்கியை எங்கு பார்த்தாலும் கைகள் குவியும், நமஸ்கரிக்க.

இந்த மாதிரி படம் எடுக்கிற கொடுப்பினை சிலருக்குத்தான் கிடைக்கும். அது இந்த படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்திற்கு கிடைத்திருக்கிறது. ஆனாலும் கொடுப்பினையிலும், அவருக்கு ஏற்பட்டிருக்கிற ஒரே குறை. படத்தின் இசை. தேவி பிரசாத் இந்த விபரீத ஆசையை மறந்துவிடலாம். நல்ல படமெடுக்கும் ரசனையுள்ளவர்கள் கூட நல்ல இசைதான் ஒரு படத்திற்கான முகவரி என்பதை மறக்காமல் இருக்க வேண்டும்.