Jan 19, 2009

விரல் நுனியில் புத்தகங்கள்



32வது புத்தகக் கண்காட்சி முடிந்துவிட்டது.இந்த முறையும் ஏராளமான கடைகள். பலவிதமான புத்தக குப்பைகளை ஒரே இடத்தில் வைத்து காட்டுகிற முயற்சியாக போய்க்கொண்டிருக்கிறது புத்தகக் கண்காட்சி.`பணம் சம்பாதிக்க சுலபமான வழி’என்று யாராவது என்னைக் கேட்டால் இப்போது என்னால் யோசனை சொல்லமுடியும்.

1.தேசீயமயமாக்கப்பட்ட நூல்களின் பட்டியலை எடுத்துக்கொள்ளுங்கள்.

2 யாருமே கேள்வி கேட்க முடியாத புத்தகங்க ளை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

அப்படியென்றால் என்ன ?

1. மகாகவி பாரதியார், பாரதிதாசன்,கல்கி, மகாபாரதம், ராமாயணம், பகவத் கீதை, விக்ரமாதித்யன் கதைகள், தெனாலி ராமன் கதைகள், இவைகளை யார் வேண்டுமானாலும் உரிமை இல்லாமல் பதிப்பித்துக்கொள்ளலாம்.

இதை நீங்கள் சில ஆயிரம் பிரதிகள் நீங்கள் அச்சடித்துக்கொள்ளுங்கள். உங்கள் பதிப்பகத்திற்கு ஒரு பெயர் வைத்துக்கொள்ளுங்கள். இந்த பதிப்பகத்தின் உரிமையாளர் பெரும்பான்மை வாக்குகள் உள்ள ஜாதியினராக இருந்தால் நல்லது. (பிறாமண வகுப்பை சேர்ந்தவராக இல்லாமல் இருந்தால் இந்த வியாபாரத்திற்கு ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கும்)

அடுத்து கல்வி அமைச்சருக்கு ( தற்போது தங்கம் தென்னரசு) தெரிந்தவராக இருப்பது மிகவும் அவசியம். உடனே உங்கள் புத்தகங்கள் அரசு நூலகங்களுக்கு வாங்கப்படும். அதற்கு எத்தனை பிரதிகள் தேவையோ அதை அடித்துக் கொடுத்துவிட்டால், உங்களுக்கு ஒரு பதிப்பகம் நடத்துவதற்கான அடிப்படை பொருளாதார பலம் வந்துவிடும்.

பதினோரு மாதங்கள் இப்படி ஒட்டிவிட்டால், பனிரெண்டாவது மாதம் புத்தகக் கண்காட்சி வந்துவிடும் உங்களுடைய காவியங்களை (பெரும்பாலும் குப்பைகள்)கடை பரப்பி விற்றுவிடலாம்.

இப்படித்தான் இருந்தது பல கடைகள். கல்கியின் பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும் பல கடைகளில் பார்க்க முடிந்தது.

2.ராமாயணம், மகாபாரதம், மத நூல்கள், தமிழ் இலக்கியங்கள் கொஞ்சம் தெரிந்த ஒரு ஒய்வு பெற்ற தமிழ் ஆசிரியரை பிடித்துக்கொள்ளுங்கள். பழைய நூல்களை கொஞ்சம் திருத்தம் செய்யச் சொல்லுங்கள். உடனே புத்தகம் தயார். நீங்களும் பதிப்பாளராகிவிட்டீர்கள். இந்த புத்தகங்களின் உரிமைக்காக உங்கள் மீது யாரும் வழக்கு போட முடியாது.

இந்த புத்தகங்களின் வெளியீட்டு விழாவை நீங்கள் அந்த பொருட்காட்சி மேடையிலேயே நடத்திக்கொள்ளலாம். இந்த விழாவிற்கான முக்கிய தேவை. புத்தக வாசனையே அறியாத ஒரு தொலைக்காட்சி, அல்லது ஒரு சினிமா பிரபலம்தான் இந்த வெளியீட்டு விழாவின் பிரதான விருந்தினராக இருக்க வேண்டும். உங்களுக்கு உதவியாக இருக்க இதோ சில பெயர்கள் அட்சர சுத்தமாக தமிழ் பேசி நடிக்கும், புத்தகப் புழக்களான அசின், நயன்தாரா, நமீதா இருந்தால் மிகவும் நல்லது.

இதுதான் பணம் சம்பாதிக்க சுலபமான வழி.

தமிழ் எழத்தளனாக இருப்பதை விட, பதிப்பாளராக இருப்பதுதான் பிழைக்கிற வழி.

எழத்தாளனாக இருந்தால் நிறைய யோசிக்க வேண்டும். படிக்க வேண்டும். பல அரிய தகவல்களை திரட்டி ஆய்வெல்லாம் செய்ய வேண்டும். பதிப்பாளருக்கு இது எதுவுமே தேவையில்லை. உங்களுக்கென்று ஒரு நிறுவன பேனர் இருந்தால் போதும். நான்கைந்து வருடங்களில் நீங்கள் எந்த குப்பையை போட்டாலும் விற்கும்.பதிப்பாளனாக இருந்தால் இன்னொரு செளகரியம். எழத்தாளனுக்கு ராயல்டியை உங்களுக்கு இஷ்டம் இருந்தால், அந்த எழத்தாளர் நச்சரித்தால் மட்டுமே கொடுத்தால் போதுமானது. எனக்கு தெரிந்தவரையில் இதில் விதிவிலக்கு, காந்தி கண்ணதாசனும், அல்லயன்ஸ் சீனுவாசனும்தான்.துரத்திவந்து எழத்தாளனுக்கு பணத்தைக் கொடுப்பார்கள். இது என் சொந்த அனுபவம்.

விகடன், குமுதம் பதிப்பக சமீபத்திய வெளியீடுகள் மிகப் பெரிய ஏமாற்றம்..

விகடனும், குமுதமும், தங்களுடைய பழைய பதிப்புகளில் உள்ள பல விஷயங்களை உருப்படியாக திரட்டினாலே போதும். அதுவே பல தகவல் களஞ்சியங்களை கொடுக்கும். ஆனால் அதைப்பற்றி யோசிக்கவோ அந்த நிர்வாகத்தினருக்கு நேரமில்லை. அதை நிர்வாகத்திடம் சொல்லுகிற தைரியமும் கூட அந்த ஆசிரியர் இலாக்காவிற்கு இல்லை. அவர்களை சொல்லியும் தவறில்லை. முன்பு பத்திரிகைகளில் ஆசிரியர் இலாக்காவிற்கு இருந்த சுதந்திரமும், மதிப்பும் இப்போது கிடையாது. இப்போது விளம்பர இலாக்காவினர்தான் உண்மையில் பத்திரிகையின் ஆசிரியர்கள். இப்போது அந்த வாரப் பத்திரிகைகளில் பல வார அட்டைப் படக் கட்டுரைகளை விளம்பர இலாக்காவும், விற்பனைப் பிரிவும்தான் முடிவு செய்கிறது. விளைவு பல விதமான குப்பைகளும், புத்தகங்களாய் நம் முன் விரிந்து கிடக்கிறது.

எல்லாமே ஒரு அவசரத்தில் ஒடுகிறது. விளைவு இன்னும் சில ஆண்டுகளில் நல்ல நூல்கள் படிக்க கிடைக்காமல் போகும். பழைய புத்தக கடைகளில்தான் தேட வேண்டிய நிலை வரும். நான் பேசாமல் ப்ளாட்பாரத்தில் பழைய புத்தக கடை துவங்கினால், நல்ல வாசிப்புக்கு நான் செய்யும் சேவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த மன உளைச்சலுக்கு நடுவே ஒரு ஆறுதலாக வந்திருப்பது, தமிழில் ஒரு நல்ல முயற்சியாக சங்கப்பலகை.காம் (sangapalagai.com)இந்த தளத்திற்கு போனால், நல்ல தமிழ் புத்தகங்களை நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் வாங்கலாம். ஆனால் நீங்கள் பிரதி எடுக்க முடியாத மாதிரியான ஒரு தொழில் நுட்பம். நீங்கள் கிரெடிட் கார்டு மூலமாக வாங்கினால் மட்டுமே முழவதுமாக படிக்க முடியும். இதில் ஒரு செளகரியம் அந்த புத்தகத்தை எழதிய எழத்தாளருக்கான ராயல்டி உடனடியாக போய் சேர்ந்துவிடும். இதற்கு ஆதாரம் வேண்டுமானால், எழத்தாளர் விக்ரமனிடம் நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.இதை நடத்தும் எம்.ஏ.பார்த்தசாரதி, விகடனில் புகைப்பட கலைஞராக இருந்தவர்.ராஜீவ் கொலையை அந்த களேபரத்தின் நடுவே துணிச்சலாக வண்ணப்படம் எடுத்த ஒரே புகைப்படக் கலைஞர். இன்று உலகம் பூராவும் ராஜீவ் காந்தி உடலை மூப்பனாரும், ஜெயந்தி நடராஜனும் அருகில் இருந்த பார்க்கிற புகைப்படம் இவர் எடுத்ததுதான். நல்ல ரசனையுள்ளவர். வீடு வீடாக போய் எழத்தாளரை சந்தித்து தன் தளத்திற்கு புத்தகம் வாங்குகிறார்.

இவருடைய இந்த விற்பனை யோசனையை இன்னும் பல பதிப்பாளர்கள் புரிந்து கொள்ளவேயில்லை. இப்போதுள்ள பதிப்பகத்தாருக்கு காகித, அச்சு செலவில்லை. அவர்களுடைய புத்தகங்களை இந்த தளத்தின் மூலமாக விற்பனை செய்தால் அவர்களுக்கு உண்டான பணம் உடனடியாக அவர்கள் கணக்கில் வந்து சேரும்.புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தலைவரும், கண்ணதாசன் பதிப்பக உரிமையாளருமான காந்தி கண்ணதாசனுக்கே இன்னும் இது விளங்கவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.

சங்கப்பலகைதான் எதிர்கால இணையதள புத்தக விற்பனைக்கூடமாக இருக்கும் என்பதை இப்போதே நான் உறுதியாக சொல்ல முடியும். அதே போல் இதன உரிமையாளர் பார்த்தசாரதி நிச்சயம கண்ட குப்பைகளையும் தளத்தில் வைத்து விற்கமாட்டார் என்கிற உறுதியையும் தர முடியும்.

No comments:

Post a Comment