Jan 27, 2009

என் `யுக’ புருஷன் -1


எனக்குத் தெரிந்த வரையில் `பத்ம பூஷண்’ பதவி தன் பாவங்களையெல்லாம் கழவி தனக்கே ஒரு `ஞானஸ்நானம்’ செய்து கொண்டிருக்கிறது. என் `யுக’ புருஷன் ஜெயகாந்தனுக்கு அந்த பட்டத்தை அளித்ததன் மூலமாக.

இந்த `ஞான்ஸ்நான’த்தில் மத்திய அரசுக்கு ஆதரவு அளித்துவரும் திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு ஏதாவது பங்கு உண்டென்றால், அவர்களும் தங்கள் கறைகளை கொஞ்சம் போக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

விருது வழங்குவதில் இவர்களுக்கு என்ன பங்கு என்று யாராவது அப்பாவித்தனமாக கேள்வி எழப்பலாம்.கடந்த பத்தாண்டுகளில் விருதுகள் எப்படியாவது வாங்கப்படுகிறது. அதனால் அது தகுதியில்லாத பலருக்கு கிடைத்தது என்பதற்கு ஒரு பட்டியலே போடலாம்.

விருதுகள் என்பது பணக்காரர்களுக்கு, அந்த பணத்தின் மூலமாக ஊடகங்களை வளைத்து அதில் தன்னைப் பிரபலப்படுத்திக்கொண்டவர்களுக்கு,அந்த ஊடகங்களில் வருவதினாலேயே அவர்களுக்கு எல்லா தகுதியும் வந்துவிட்டதாக அவர்களும், விருதை தீர்மானிப்பர்களும் நினைப்பவர்களுக்கு, அது தவிர அந்த மாநிலங்களில் மத்திய அரசுக்கு இணக்கமாக இருக்கும் அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு, அது தவிர மத்திய அரசின் மையப்பொறுப்பிலிருக்கும் முக்கியமானவர்களுக்கு வேண்டியவர்கள் என்று விருதைத் தீர்மானிக்க இப்படி பலவித காரணிகள் உண்டு.

இம்முறை ஜெயகாந்தனுக்கு கிடைத்தது கூட இது போன்ற ஏதாவதொரு காரணம் நிச்சயம் இருக்கும். இல்லையென்றால் இது நிச்சயம் நிறைவேறியிருக்காது. ஆனாலும் இம்முறை அந்த காரணிகளைக்கூட மன்னித்துவிடலாம் காரணம் அது கிடைத்தது, ஒரு தலைமுறையை தலைமுறையைத் தாண்டி சிந்திக்க வைத்த ஒரு ஞானஸ்தனுக்கு கிடைத்திருக்கிறது.

நான் சொல்வதை பலர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.என் கருத்துக்கள் எனக்கு சொந்தமானவை.அதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பது அவசியமற்றது.

இதில் திமுகவிற்கு பங்கு உண்டென்றால், அதில் அவர்களது கறைகளும் கொஞ்சம் கழவப்பட்டிருக்கும் என்று மேலே சொல்லியிருந்தேன். அதற்கு காரணம் உண்டு. துதிபாடிகளுக்குத்தான் தேர்தல் விளையாட்டில் இருக்கும் இரண்டு திராவிடக் கட்சிகளின் தலைவர்களுக்கும் பிடிக்கும். ஆனால் திமுக தோன்றிய காலத்திலிருந்தே அது இந்த நாட்டை அழிக்க வந்த நச்சுக்கிருமி என்று தொடர்ந்து தமிழக மக்களை எச்சரித்து வந்தவர் ஜெயகாந்தன்.

1972ம் வருடம் அவர் `துக்ளக்’ பத்திரிகையில் `ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ என்று ஒரு தொடர் எழதினார். அதிலிருந்து சில முக்கிய பகுதிகளை நிச்சயம் இங்கே பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

அதன் துவக்கத்தில் எழதுகிறார் ` ஒரு அரசியல் கட்சிக்குச் சார்பாக கொடி தூக்கி பிரசாரம் செய்வது எனக்குப் பழக்கப்பட்ட காரியம்தான். ஆனால் இப்போது நான் அந்த நிலையில் இல்லை’ (பக்கம் 17)

`திமுக கழகம் பிறந்த போது அதன் முக்கிய தலைவராக விளங்கிய திரு அண்ணாதுரை சொன்னார் `திராவிடர் கழகமும், தி.மு. கழகமும் இரட்டைக்குழல் துப்பாக்கி போன்றது’ என்றார்.

அதாவது இந்த இரண்டுக் கட்சிகளுக்கும் கொள்கை, லட்சியம், குறிக்கோள் எல்லாமே ஒன்றுதான். திராவிட இயக்கத்தலைவர் ஈ.வெ.ரா பெரியாரிடம் கொண்ட மனத்தாங்கல் காரணமாகவும், சமூக சீர்திருத்த கொள்கையை பிரசாரம் செய்த திரு ஈ.வெ.ராவே எழபது வயதுக்கு மேல் ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டதை கண்டிப்பதற்காகவும் வெளியே வந்திருக்கிற நாங்கள், அந்த இயக்கத்தின் கொள்கைகளுக்காக மேலும் தீவிரமாக போராடுவோம் என்றே திமுகழகத்தினர் தங்களை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து கொண்டார்கள்.

இந்த அறிவிப்பைக் கேட்டு நாங்கள் சிரித்தோம். இவர்களை அக்காலத்தில் யாரும் அரசியல்வாதிகளாக மதிக்கவில்லை. திமுகழகத்தினரும் தங்களை அரசியல்வாதிகள் என்று அந்தக் கால கட்டத்தில் சொல்லிக்கொள்ளவுமில்லை. இவர்கள் தங்களை அறிஞர்கள் என்றும், கலைஞர்கள் என்றும், சிந்தனைவாதிகள் என்றும் பாமரர்கள் மத்தியில் கூறிக்கொண்ட போது கற்றவர்களும், பண்டிதர்களும், அரசியல் அறிஞர்களும், கல்வியாளர்களும், இவர்களை மிகவும் அலட்சியமாகவும், ஏளனமாகவும், சிரித்தும், அருவருத்தும் பேசினார்கள். இவர்கள் மிகவும் சிறுபிள்ளைத்தனமானவர்கள் என்று எல்லா மக்களும் எல்லாக் கட்சிக்காரர்களும் மிகவும் அலட்சியமாகப் பார்த்தார்கள். அதுவே இவர்களுக்கு வசதியாகப் போயிற்று.

ஒரு தொழிலாளி இளைஞனுக்குரிய அரசியல் பண்பாடு கூட, அறிவியல் ஞானம் கூட, திமுகவின் தலைவரான அண்ணாதுரைக்கே கிடையாது என்பதை நாங்கள் அந்தக் காலத்தில் ஆதாரங்களோடு விவாதித்துச் சொல்லுவோம் (பக்கம்64,65,66)

திமுக அரசியலை ஒரு `ஸைடு பிசினஸாக’ வே வைத்திருந்தது. அதன் முக்கியத் தலைவர்கள், சினிமாக் கதைகளிலும், சிட்டு விளையாடிலும், சில்லறை ரஸானுபவங்களிலும் திளைத்துக்கொண்டிருந்தார்கள் என்பதை அவர்களது அந்தக் காலப் பேச்சும், எழத்தும் மக்களுக்கு எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தன.

`ஏக இந்தியாவில் எந்த ஆட்சி வந்தால் எங்களுக்கென்ன?> எங்கள் உயிர் மூச்சே திராவிட நாடு ஒன்றுதான். நாங்கள் கேவலம் அரசியல்வாதிகள் அல்ல. நாங்கள் ஒரு புதிய சமுதாயத்தைப் படைக்க புறப்பட்டவர்கள், சட்டசபைக்கு போகிறவர்கள் வெட்டுக்கிளிகள்: பதவிமோகம் என்கிற நோய் பிடித்தவர்கள்’ என்று அவர்கள் அப்போது கச்சேரி பாணியில் முழங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எதிலும் உண்மையான நாட்டம் கொள்ளவில்லை. சொந்த வாழ்க்கையில் உயருவதற்காக, சினிமா, நாடகம், அரசியல், எழத்து, பேச்சு எல்லாவற்றையும் பயன்படுத்தி இதில் எதுவுமே இல்லாத entertainers ஆக வளர்ந்துக்கொண்டிர்ந்தார்கள்.(பக்கம் 89)

திமுகழகம் என்பது ஒரு அரசியல் இயக்கமல்ல. அது மனித மரியாதைகளுக்கும், சமுதாய வளர்ச்சிக்கும் இந்திய நாகரீகத்திற்கும் நமது கலாச்சாரத்திற்கும் ஏற்பட்டிருக்கின்ற ஒரு பேரழிவின் அறிகுறி (a social cultural menace)என்ற எனது கருத்தை ஏற்றுக்கொள்கிற யாராக இருந்தாலும் நான் அவர்களைத் தேடி ஒடினேன்.(பக்கம் 127)

இப்படி திமுக மீது ஆழ்ந்த கருத்துக்கொண்டிருந்த ஜெயகாந்தனுக்கு திமுக பதம்விபூஷண் வாங்கிக்கொடுக்க முனைந்திருந்தால் அது கறைப்போக்கிக்கொள்ளுக்கிற விஷயமா? அல்லது இப்படி ஒரு கருத்துக்கொண்டிருப்பவருக்குக்கூட நாங்கள் மதிப்பளித்தோம் என்று காட்டிக்கொள்கிற ஒரு அரசியல் தந்திரமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

தான் அன்று திமுக மீது கொண்டிருந்த கருத்து தவறு என்று சொல்லி இன்றுவரை ஜெயகாந்தன் பகிரங்கமாக `பாவ மன்னிப்பு’ கேட்கவில்லை. ஆனால் அவர் இப்போது திமுக தலைவருடன் நெருக்கமாக இருப்பதால், நேரடியாக கேட்டாரா என்பது தெரியாது.

எது எப்படியோ ஒரு தலைமுறையின் சிந்தனைகளை வேறு மாதிரி திருப்பிவிட்டவர் ஜெயகாந்தன். என் போன்ற பலர் அவர் இல்லையேல் சிறிதேனும் ஆழ்ந்து யோசிக்கிற திறன் வந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.வனப்புகளை மட்டுமே காட்டிக்கொண்டிருந்த எழத்தாளர்களுக்கு நடுவே, வறுமையைக் காட்டி, அதிலுள்ள மனித மேன்மைகளை புரிய வைத்தவர் ஜெயகாந்தன்.

இன்று பிறாமணர்கள் இட ஒதுக்கீடு கேட்கிற அளவிற்கு யோசிக்கிறார்கள். ஆனால் பிறாமண எதிர்ப்பு தீவிரமாக இருந்த ஐம்பதுகளிலேயே பிறாமணர்களுக்கு குரல் கொடுத்த முதல் ஷத்திரியன் ஜெயகாந்தன் என்பது எத்தனை பிறாமணர்களுக்கு தெரியும்? அவரைப் போல் பிறாமணர்கள் கூட இன்றுவரை பிறாமணர்களுக்காக குரல் கொடுத்ததில்லை.

அப்படி என்னதான் குரல் கொடுத்தார் ?


(தொடரும்)

Jan 25, 2009

`இடி’ப்பார் வேண்டாத `மன்னர்’கள்
சத்யம் கம்யூட்டர் நிறுவன விவகாரங்கள் தொழிலதிபர்களுக்கு பல பாடங்களை புகட்டியிருக்கிறது. இதில் எத்தனை பேர் பாடம் கற்றுக்கொள்ள போகிறார்கள் என்பது தெரியாது.

என்ன செய்ய வேண்டும் என்பதை விட என்ன செய்யக்கூடாது என்பதை தெளிவாகச் சொல்லியிருக்கிறது சத்யம் விவகாரம்.

ஆறு மாதங்களுக்கு முன்பு வரை அமெரிக்காவில் போய் இறங்கி நீங்கள் ஆந்திராவிலிருந்து வருகீறீர்கள் என்று சொன்னால், ராமலிங்க ராஜீவின் ஊர்காரரா என்று உங்களை பெருமிதத்தோடு பார்ப்பார்கள். இன்றைக்கு அங்கே போய் நான் ஆந்திரக்காரன் என்று மார் தட்டிசொல்ல முடியுமா ?

ஒரு வருடத்திற்கு முன்பு வரை ஐடி தொழில் என்றாலே உங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்புதான். முன்பெல்லாம் ஹோட்டல்களின் வாசலில் `பெருவியாதியஸ்தர்கள் உள்ளே வரக்கூடாது’ என்று பலகையில் எழதிவைத்திருப்பார்கள். இப்போது தகவல் தொழில் நுட்ப காரர்களுக்கு அதே கதிதான் கல்யாணம் சந்தையில்.தகவல் தொழில்நுட்பத்தில் இருப்பவர்கள் ஜாதகத்தை அனுப்ப வேண்டாமென்கிறார்கள் வரன் தேடுபவர்கள்.

தீடிர்ப் பணம், தீடிர்புகழ் இவைகளெல்லாம் நோய்க் கிருமிகள். உள்ளிருந்து கொல்லும். இவை இரண்டும் வரும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை என்பதற்கு நிகழ்கால உதாரணம் தான் சத்யம் நிறுவன ராமலிங்க ராஜீவின் கதை.

தான் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக கருத்துச் சொல்லாதவர்களைத்தான் அவருக்கு பிடுக்குமாம்.ஆமாம் சாமிகளுக்குத்தான் அங்கே பெரிய பதவி. நிறைய சம்பளம். கூடவே அவருக்குள் எழந்துவிட்ட பேராசை.

ராமலிங்க ராஜீவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவர்கள் ஊடக முதலாளிகள் தான். தன்னம்பிக்கையற்றவர்கள் இவர்கள்தான். தங்கள் மூதாதையர்கள் சேர்த்து வைத்த சம்பிராஜ்யத்தின் தற்போதைய care taker களாக இருக்கும் இவர்களைப்போன்ற கோழைகளைப் பார்ப்பது கடினம். இவர்களின் சாம்பிராஜ்யத்தில் அவர்களுக்கு தேவை திறமையல்ல, தலையாட்டுகிற அடிமைகள். துதிபாடிகள். இதனால் இன்றைக்கு சுகமாக இருக்கும் வாழ்க்கை நாளை என்னவாகும் என்பதை அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.

பல பத்திரிகை உலக சாம்ராஜ்யங்களின் உள்ளே பல கரையான்கள்.முன்பு பத்திரிகைகளினால் பல எழத்தாளர்கள் உருவானார்கள். இன்று வெளியே ஏதாவது ஒரு வகையில் புகழ் அடைந்தவர்களை எல்லாம் எழத்தாளர்களாக்கி பிழைக்க வேண்டிய நிலை பத்திரிகைகளுக்கு.

படைப்புகளை பணம் சாகடித்துக்கொண்டிருக்கிறது. கார்பரேட்டுகள் தான் இன்று படைப்புகளை தீர்மானம் செய்கிறார்கள். பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா மூன்றிலும் இன்று ஆட்சி செய்து கொண்டிருப்பது கார்பரேட் கலாச்சாரம்.ஏதாவது ஒரு மானேஜ்மெண்ட கல்லூரியில் எம்பிஏ படித்திருந்தால் போதும், அவரிடம்தான் பணம் காய்ச்சி மரம் குத்தகையில் இருக்கிறது. அவர்கள் வைத்ததுதான் இன்று படைப்புலகின் வேதம்.

எஸ்.எஸ்.வாசன்,மறைந்த குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை, ராம்நாத் கோயங்கா நல்ல படைப்பாளிகளை நம்பி பணம் பண்ணினார்கள். அவர்கள் உருவாக்கிய சாம்ராஜ்யங்கள் ஒரு வல்லரசுக்கு நிகரானது.

பணம் சம்பாதிக்கிற வழியிலும் அவர்களிடம் ஒரு சமூக பார்வை இருந்தது, தேசப்பற்று இருந்தது. அதனால் அவர்களின் வேர்கள் ஆழமாக இருந்தது. நீருபூத்த நெருப்பாக இல்லை.

உலகத்தின் மிகப்பெரிய கோடிஸ்வரர் வாரன் பபே. அவர் சொல்வார்` பணம் சம்பாதியுங்கள். ஆனால் அது மட்டுமே சந்தோஷத்தை கொடுக்கும் என்று மட்டும் நினைக்காதீர்கள்’

பணத்தை வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கூடவே சிறைக்கும் போகலாம் என்பதை ராமலிங்க ராஜீவின் கதை அவர்களுக்கு பாடம் புகட்டினால் நல்லது. இடிப்பார் இல்லாமல் போனால், தவறுகளை தட்டிக்கேட்க ஆளிருக்க மாட்டார்கள். செய்வது எல்லாமே சிறப்பானது என்கிற நினைப்பு தலைக்குள் ஏறும். புகழ்ந்து கொண்டேயிருப்பவர்கள் நம்முடைய வளர்ச்சியின் முதல் எதிரி என்பதை இவர்களுக்கு யார் புரிய வைக்கப்போகிறார்கள்.

Jan 19, 2009

விரல் நுனியில் புத்தகங்கள்32வது புத்தகக் கண்காட்சி முடிந்துவிட்டது.இந்த முறையும் ஏராளமான கடைகள். பலவிதமான புத்தக குப்பைகளை ஒரே இடத்தில் வைத்து காட்டுகிற முயற்சியாக போய்க்கொண்டிருக்கிறது புத்தகக் கண்காட்சி.`பணம் சம்பாதிக்க சுலபமான வழி’என்று யாராவது என்னைக் கேட்டால் இப்போது என்னால் யோசனை சொல்லமுடியும்.

1.தேசீயமயமாக்கப்பட்ட நூல்களின் பட்டியலை எடுத்துக்கொள்ளுங்கள்.

2 யாருமே கேள்வி கேட்க முடியாத புத்தகங்க ளை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

அப்படியென்றால் என்ன ?

1. மகாகவி பாரதியார், பாரதிதாசன்,கல்கி, மகாபாரதம், ராமாயணம், பகவத் கீதை, விக்ரமாதித்யன் கதைகள், தெனாலி ராமன் கதைகள், இவைகளை யார் வேண்டுமானாலும் உரிமை இல்லாமல் பதிப்பித்துக்கொள்ளலாம்.

இதை நீங்கள் சில ஆயிரம் பிரதிகள் நீங்கள் அச்சடித்துக்கொள்ளுங்கள். உங்கள் பதிப்பகத்திற்கு ஒரு பெயர் வைத்துக்கொள்ளுங்கள். இந்த பதிப்பகத்தின் உரிமையாளர் பெரும்பான்மை வாக்குகள் உள்ள ஜாதியினராக இருந்தால் நல்லது. (பிறாமண வகுப்பை சேர்ந்தவராக இல்லாமல் இருந்தால் இந்த வியாபாரத்திற்கு ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கும்)

அடுத்து கல்வி அமைச்சருக்கு ( தற்போது தங்கம் தென்னரசு) தெரிந்தவராக இருப்பது மிகவும் அவசியம். உடனே உங்கள் புத்தகங்கள் அரசு நூலகங்களுக்கு வாங்கப்படும். அதற்கு எத்தனை பிரதிகள் தேவையோ அதை அடித்துக் கொடுத்துவிட்டால், உங்களுக்கு ஒரு பதிப்பகம் நடத்துவதற்கான அடிப்படை பொருளாதார பலம் வந்துவிடும்.

பதினோரு மாதங்கள் இப்படி ஒட்டிவிட்டால், பனிரெண்டாவது மாதம் புத்தகக் கண்காட்சி வந்துவிடும் உங்களுடைய காவியங்களை (பெரும்பாலும் குப்பைகள்)கடை பரப்பி விற்றுவிடலாம்.

இப்படித்தான் இருந்தது பல கடைகள். கல்கியின் பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும் பல கடைகளில் பார்க்க முடிந்தது.

2.ராமாயணம், மகாபாரதம், மத நூல்கள், தமிழ் இலக்கியங்கள் கொஞ்சம் தெரிந்த ஒரு ஒய்வு பெற்ற தமிழ் ஆசிரியரை பிடித்துக்கொள்ளுங்கள். பழைய நூல்களை கொஞ்சம் திருத்தம் செய்யச் சொல்லுங்கள். உடனே புத்தகம் தயார். நீங்களும் பதிப்பாளராகிவிட்டீர்கள். இந்த புத்தகங்களின் உரிமைக்காக உங்கள் மீது யாரும் வழக்கு போட முடியாது.

இந்த புத்தகங்களின் வெளியீட்டு விழாவை நீங்கள் அந்த பொருட்காட்சி மேடையிலேயே நடத்திக்கொள்ளலாம். இந்த விழாவிற்கான முக்கிய தேவை. புத்தக வாசனையே அறியாத ஒரு தொலைக்காட்சி, அல்லது ஒரு சினிமா பிரபலம்தான் இந்த வெளியீட்டு விழாவின் பிரதான விருந்தினராக இருக்க வேண்டும். உங்களுக்கு உதவியாக இருக்க இதோ சில பெயர்கள் அட்சர சுத்தமாக தமிழ் பேசி நடிக்கும், புத்தகப் புழக்களான அசின், நயன்தாரா, நமீதா இருந்தால் மிகவும் நல்லது.

இதுதான் பணம் சம்பாதிக்க சுலபமான வழி.

தமிழ் எழத்தளனாக இருப்பதை விட, பதிப்பாளராக இருப்பதுதான் பிழைக்கிற வழி.

எழத்தாளனாக இருந்தால் நிறைய யோசிக்க வேண்டும். படிக்க வேண்டும். பல அரிய தகவல்களை திரட்டி ஆய்வெல்லாம் செய்ய வேண்டும். பதிப்பாளருக்கு இது எதுவுமே தேவையில்லை. உங்களுக்கென்று ஒரு நிறுவன பேனர் இருந்தால் போதும். நான்கைந்து வருடங்களில் நீங்கள் எந்த குப்பையை போட்டாலும் விற்கும்.பதிப்பாளனாக இருந்தால் இன்னொரு செளகரியம். எழத்தாளனுக்கு ராயல்டியை உங்களுக்கு இஷ்டம் இருந்தால், அந்த எழத்தாளர் நச்சரித்தால் மட்டுமே கொடுத்தால் போதுமானது. எனக்கு தெரிந்தவரையில் இதில் விதிவிலக்கு, காந்தி கண்ணதாசனும், அல்லயன்ஸ் சீனுவாசனும்தான்.துரத்திவந்து எழத்தாளனுக்கு பணத்தைக் கொடுப்பார்கள். இது என் சொந்த அனுபவம்.

விகடன், குமுதம் பதிப்பக சமீபத்திய வெளியீடுகள் மிகப் பெரிய ஏமாற்றம்..

விகடனும், குமுதமும், தங்களுடைய பழைய பதிப்புகளில் உள்ள பல விஷயங்களை உருப்படியாக திரட்டினாலே போதும். அதுவே பல தகவல் களஞ்சியங்களை கொடுக்கும். ஆனால் அதைப்பற்றி யோசிக்கவோ அந்த நிர்வாகத்தினருக்கு நேரமில்லை. அதை நிர்வாகத்திடம் சொல்லுகிற தைரியமும் கூட அந்த ஆசிரியர் இலாக்காவிற்கு இல்லை. அவர்களை சொல்லியும் தவறில்லை. முன்பு பத்திரிகைகளில் ஆசிரியர் இலாக்காவிற்கு இருந்த சுதந்திரமும், மதிப்பும் இப்போது கிடையாது. இப்போது விளம்பர இலாக்காவினர்தான் உண்மையில் பத்திரிகையின் ஆசிரியர்கள். இப்போது அந்த வாரப் பத்திரிகைகளில் பல வார அட்டைப் படக் கட்டுரைகளை விளம்பர இலாக்காவும், விற்பனைப் பிரிவும்தான் முடிவு செய்கிறது. விளைவு பல விதமான குப்பைகளும், புத்தகங்களாய் நம் முன் விரிந்து கிடக்கிறது.

எல்லாமே ஒரு அவசரத்தில் ஒடுகிறது. விளைவு இன்னும் சில ஆண்டுகளில் நல்ல நூல்கள் படிக்க கிடைக்காமல் போகும். பழைய புத்தக கடைகளில்தான் தேட வேண்டிய நிலை வரும். நான் பேசாமல் ப்ளாட்பாரத்தில் பழைய புத்தக கடை துவங்கினால், நல்ல வாசிப்புக்கு நான் செய்யும் சேவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த மன உளைச்சலுக்கு நடுவே ஒரு ஆறுதலாக வந்திருப்பது, தமிழில் ஒரு நல்ல முயற்சியாக சங்கப்பலகை.காம் (sangapalagai.com)இந்த தளத்திற்கு போனால், நல்ல தமிழ் புத்தகங்களை நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் வாங்கலாம். ஆனால் நீங்கள் பிரதி எடுக்க முடியாத மாதிரியான ஒரு தொழில் நுட்பம். நீங்கள் கிரெடிட் கார்டு மூலமாக வாங்கினால் மட்டுமே முழவதுமாக படிக்க முடியும். இதில் ஒரு செளகரியம் அந்த புத்தகத்தை எழதிய எழத்தாளருக்கான ராயல்டி உடனடியாக போய் சேர்ந்துவிடும். இதற்கு ஆதாரம் வேண்டுமானால், எழத்தாளர் விக்ரமனிடம் நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.இதை நடத்தும் எம்.ஏ.பார்த்தசாரதி, விகடனில் புகைப்பட கலைஞராக இருந்தவர்.ராஜீவ் கொலையை அந்த களேபரத்தின் நடுவே துணிச்சலாக வண்ணப்படம் எடுத்த ஒரே புகைப்படக் கலைஞர். இன்று உலகம் பூராவும் ராஜீவ் காந்தி உடலை மூப்பனாரும், ஜெயந்தி நடராஜனும் அருகில் இருந்த பார்க்கிற புகைப்படம் இவர் எடுத்ததுதான். நல்ல ரசனையுள்ளவர். வீடு வீடாக போய் எழத்தாளரை சந்தித்து தன் தளத்திற்கு புத்தகம் வாங்குகிறார்.

இவருடைய இந்த விற்பனை யோசனையை இன்னும் பல பதிப்பாளர்கள் புரிந்து கொள்ளவேயில்லை. இப்போதுள்ள பதிப்பகத்தாருக்கு காகித, அச்சு செலவில்லை. அவர்களுடைய புத்தகங்களை இந்த தளத்தின் மூலமாக விற்பனை செய்தால் அவர்களுக்கு உண்டான பணம் உடனடியாக அவர்கள் கணக்கில் வந்து சேரும்.புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தலைவரும், கண்ணதாசன் பதிப்பக உரிமையாளருமான காந்தி கண்ணதாசனுக்கே இன்னும் இது விளங்கவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.

சங்கப்பலகைதான் எதிர்கால இணையதள புத்தக விற்பனைக்கூடமாக இருக்கும் என்பதை இப்போதே நான் உறுதியாக சொல்ல முடியும். அதே போல் இதன உரிமையாளர் பார்த்தசாரதி நிச்சயம கண்ட குப்பைகளையும் தளத்தில் வைத்து விற்கமாட்டார் என்கிற உறுதியையும் தர முடியும்.

Jan 17, 2009

சிறைச்சாலை ஒரு கல்லூரி`கண்ணன் பிறந்ததும் சிறைச்சாலை
அந்த காந்தி இருந்ததும் சிறைச்சாலை
சிறைச்சாலை ஒரு கல்லூரி’ என்று ஒரு பழைய சினிமா பாடல் உண்டு.

இப்போது நமது சிறைத்துறை பற்றி வருகிற செய்திகள், வெளியில் இருப்பதை விட உள்ளே போய்விடலாமா என்கிற ஆசையை எழப்புகிறது. தற்போதை சிறைத்துறை டிஜிபி நட்ராஜ்,எந்த வேலையை எடுத்துக்கொண்டாளும் அதை முனைப்பாக செய்யக்கூடியவர். அது மாநகர கமிஷனர் வேலையாக இருந்தாலும் சரி, மனித உரிமை கமிஷனாக இருந்தாலும் சரி, அவரை எந்த ஒரு மூலையில் தூக்கிப் போட்டாலும் அந்த மூலைக்கு ஒரு பிரகாசத்தை பாய்ச்சக் கூடியவர்.

சமீபத்தில் சிறையில் பட்டமளிப்பு விழா நடத்தினார். நேற்றைக்கு வந்த ஒரு செய்தி, சிறைக்கைதிகள் ஒரு பத்திரிகை கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த பத்திரிகைக்கு பெயர் `உள்ளொளி’. சுதந்திரமாக திரியும் மனிதன் எதையும் தெரிந்து கொள்ள, பார்க்க, மனிதர்களை சந்திக்க வாய்ப்புண்டு. ஆனால் கைதிகளில் நிலை அப்படியில்லை. ஒரு கூட்டுக்குள் இருந்து கொண்டு உலகை பார்க்க வேண்டும். மேலும் தனிமை ஒரு மனிதனை நிறைய யோசிக்க வைக்கும். உள் மனச் சோதனை செய்து கொள்ள அது அருமையான கூடம். அவர்களின் உள் மனம் பேசியதன் அச்சு வடிவம் தான் உள்ளொளி.

எத்தனை அருமையான கவிதைகள், கட்டுரைகள், ஒவியங்கள்.மெய்சிலிர்க்க வைக்கிறது. இன்னும் ஒவ்வொருவரையும் தனியே சந்தித்தால் அவர்களுக்குள் எத்தனை காவியங்கள் புதைந்து கிடக்குமோ.

அந்த `இல்ல’ வாசிகள். இப்போது அவர்களை கைதிகள் என்றழைப்பதில்லை. அவர்கள் இனி இல்ல வாசிகள்.வீடுகள் தான் கற்களால் கட்டப்படுகிறது. இல்லங்கள் இதயங்களினால் எழதப்படுவது என்பதற்கு தமிழகமெங்கும் உள்ள இந்த இல்லங்களே இனி சாட்சியாக இருக்கப்போகிறது.

Jan 16, 2009

கற்றுத் தெரிவதா காதல் ?ஒரு செய்தி படித்தேன். வியப்பாகவும், வேடிக்கையாகவும் இருந்தது. தெற்கு பெர்லினில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் Flirting அதாவது காதல் விளையாட்டு (இப்படித்தான் இதற்கு தமிழாக்கம் செய்திருக்கிறது சென்னை பல்கலைக்கழக அகராதி) இதை தங்களின் பாடத் திட்டத்தில் சேர்த்திருக்கிறார்களாம்.முதலில் இதைப் பார்த்தவுடன் சிரிப்பு தான் வந்தது. பிறகு யோசித்துப் பார்த்ததில் இதற்கான அவசரமும், அவசியமும் இப்போது வந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

இந்த கால இளம் வயதினருக்கு காமத்தின் உந்துதல் இருக்கிறது. அது தன்னால் வருவது.ஆனால் அதைத்தான் காதல் என்று அவர்கள் தவறாக புரிந்து கொண்டு, அவசரப்பட்டு அதை காதல் என்று தவறாக புரிந்து கொண்டு திருமணமும் செய்து கொண்டு விடுகிறார்கள். அது மாதிரி திருமணங்கள் சேர்ந்த முப்பதாவது நாளில் விவாகரத்து வரை யோசிக்க வைக்கிறது. `கட்டிய தாலியின் மஞ்சள் காய்வதற்கு முன்பே விவாகரத்திற்கு மனு செய்து விடுகிறார்கள். திருமணமாகி ஒரு வருடங்கள் கழித்துத்தான் விவாகரத்திற்கு மனு செய்ய முடியும் என்கிறது சட்டம். இப்படியொரு சட்டம் இல்லாவிட்டால், முப்பதாவது நாளே விவாகரத்து வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள் ‘ என்கிறார் குடும்ப நல நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவர்.

பாலியிலை பாடத்தில் சேர்ப்பது குறித்தே இந்தியாவில் இன்னமுன் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், அயல் நாட்டு பல்கலைக்கழகங்கள் இதற்காக ஒரு பாடத் திட்டமே கொண்டு வர நினைக்கிறது.

இதை பார்க்கும்போது நமது பாரத முன்னோர்கள் எத்தனை தீர்க்க தரிசிகள் என்பதை நினைத்து பெருமை படாமல் இருக்க முடியவில்லை. எல்லா துறைகளை பற்றியும் அவர்கள் எழதி வைத்து விட்டுத்தான் போயிருக்கிறார்கள்.இன்று உலக அரசியல், ஆட்சி முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்கு அரிச்சுவடி சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்தான். கணித வல்லமைக்கும் நாம் தான் முன்னோடி. வான்வெளி சாஸ்திரங்களுக்கும் நாம்தான் வழிகாட்டினோம். காதல், காமத்திற்கும் இங்கு தான் தெளிவு பெற வேண்டும். இனி அரசு விழாக்களில் புத்தகங்களை பரிசாக கொடுங்கள் என்று தமிழக முதல்வர் சொல்கிறார். இனி அந்த புத்தகங்களில் வாத்ஸாயனரின் காம சூத்திரத்தையும் கொடுங்கள் என்று அவர் சொல்லலாம்.காதல் கலையை அவர் என்னமாய் எழதி விட்டு போயிருக்கிறார்.

ஆண்,பெண் உறவை முழமையாய் விவரித்த முதல் நூல் காம சூத்திரம்தான். அதற்கு முன் பலரும் எழதினார்கள்.பலவற்றையும் எழதினார்கள். சிலர் விரிவாகச் சொன்னார்கள். தெளிவாகச் சொல்லவில்லை. தெளிவாக சொல்ல நினைத்தவர்களும் கூட அதை சுருக்கமாக சொல்லிவிட்டு போனார்கள்.வாத்ஸாயனர் மட்டுமே முழமையாகவும், தெளிவாகவும் சொன்னார்.

உடலுறவு பற்றி கூட மனிதர்களுக்கு ஒரு தெளிவு இல்லை. யாருடன், எந்தச் சூழ்நிலையில், எப்படி பழக வேண்டும் என்கிற கேள்விக்கெல்லாம் விடை தருகிறது அவருடைய காம சூத்திரம்.

காமம் என்பது என்ன ?

உடல், மனம், ஆன்மா இவை ஒரு சேர அடைகிற மகிழ்ச்சி. புலன்கள் காணும் நிறைவு.

வாத்ஸாயனர் வாழ்ந்த காலம் குறித்து இன்னும் ஒரு தெளிவுக்கு வரமுடியவில்லை. அவர் சமுத்திர குப்தர் காலத்தில் வாழந்ததாகவும் சொல்கிறார்கள். ஆனால் அவர் ஒரு யோகி என்பது மட்டும் தெளிவு.

நீங்கள் இன்பத்தை அறிந்து கொள்ளுங்கள், அதை முறையாக பயன்படுத்தி மகிழ்ச்சி அடையுங்கள். இதைத் தவிர வேறெந்த நோக்கத்துடனும் நான் இதனை எழதவில்லை’ என்கிறார் வாத்ஸாயனர்.

ஒரு இந்துவின் வாழ்க்கை சிறந்த மூன்று குறிக்கோள்களைக் கொண்டது.

அர்த்தம், தர்மம், காமம்.

தர்மத்தின் ஒரு பகுதிதான் காமம்

`தர்மத்துடம் இணைந்துதான் காமம். அதனால் நான் காமமாய் இருக்கிறேன்’ என்று கீதையில் கிருஷ்ணன் சொன்னார்.

ஒரு கணவன் மனைவியிடம் அன்பு வைப்பது கணவனின் தர்மம்.

ஒரு வீடு அழகாய இருப்பதற்கு காரணம் பெண் தான்.

ஒரு பெண்ணின் இருப்பில்தான் வாழ்க்கை மகத்துவம் பெறுகிறது.

ராகமும், தாளமும் பிரியாத ஒரு நல்ல சங்கீதத்தைப் போல் இருப்பதுதான் கணவந் மனைவியின் உறவு.

இசையும், பரதமும் பயிற்சி இல்லாமல் வராது.

அதைப்போலத்தான் உடலுறுவும் கூட என்கிறார் வாத்ஸாயனர்.

காமம் ஒரு கலை. ஒவ்வொரு கலைக்கு ஒரு இலக்கணம் உண்டு. அதைப்போலத்தான் காமக் கலைக்கும் ஒரு இலக்கணம் உண்டு. அந்த இலக்கணத்தை முறையாகப் பயின்றால் அது ஒரு காலத்தால் அழியாத இலக்கியம் ஆகிவிடும்.

போரும், காமமும் உண்டு. இரண்டிலும் அங்கஸ்திதிகள் (postures)ஒன்றுதான். மூச்சடக்கல்,கவனத்தை ஒரு முகப்படுத்துதல் இரண்டுக்குமே தேவை.

ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சொன்ன விஷயங்கள் இன்றையக்கும் புதிதாய இருக்கிறது. அதற்கு காரணம் உண்டு.

`எது மக்களின் மனதை தொட்டதோ
அது காலத்தை கடந்து நிற்கும்
எது காலங்களை கடந்து நிற்க முடிகிறதோ
அது சாசுவதமாகிவிடும்’

வாத்ஸாயனர் சொன்னதை இன்றைய பாலியில் நிபுணர்கள் யாரும் மறுக்கவில்லை

`உயிர்களைப் படைத்த பிரஜாபதியில் தொடங்கி இன்று வரையிலான பாரம்பர்யத்தைக் கொண்டது நான் உரைக்கு உண்மைகள்’ என்பார் வாத்ஸாயனர்.

நந்தி தேவர், ஸ்வேதகேது,பாப்ரவ்யர் என்று பலரும் சொன்ன பாலியல் விஷயங்கள் வாத்ஸாயனரின் காம சூத்திரத்தில் உண்டு. அவர்கள் உரைத்த சாரம்தான் காம சூத்திரம்.

காமம் என்கிற கலை, அறிவியலைத் தொட்டது வாத்ஸாயனரால்தான்.

வாத்ஸாயனரைத் தொட்டுத்தான் பின்னால் கொக்கோக் முனிவர் ரதி இரகசியத்தை எழதினார். அதுதான கொக்கோக சாஸ்திரம். தமிழில் அதிவீரராம பாண்டியர் பாடினர். பதிமூன்று நூற்றாண்டுகள் கழித்துத்தான் கல்யாண மல்லர் ஆனங்க ரங்காவைப் படைத்தார். வாத்ஸாயனரின் சாயல் இல்லாமல் யாரும் எழதவில்லை. ஆனால் யாருக்குமே வாத்ஸாயனரின் தடையற்ற சிந்தனை இருக்கவில்லை. சர். ரிச்சர்ட் பர்ட்டன் (1883)யின் இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

அதனால் காதலை கற்று தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அது ஒரு உணர்ச்சி. அந்த உணர்ச்சி மரத்துப் போயிருந்தால், அதை சரி செய்ய நாம் முயலுவோம். நேரமும், காலமும் அனுமதித்தார் எது காதல் என்று தொடர்ந்து பேசுவோம்.

Jan 6, 2009

விடை தெரியாத புதிர்கள்


என்னிடம் இப்போது இலங்கை விவகாரம் குறித்து நிறைய நண்பர்கள் கேள்வி கேட்கிறார்கள். இப்போது பேசுவதெல்லாமே ஏதோ புலிகளுக்கு ஆதரவு அல்லது இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான ஒரு `பார்ப்பன’னின் குரலாக பார்க்கப்படும். என்னைப் பொருத்தவரையில் ஒரு இந்தியனாக எனக்கு ராஜீவ் கொலை குறித்து பல கேள்விகள் மனதில் எழந்து கொண்டேயிருக்கின்றது.இது ஏதோ இந்த அரசியல்வாதிகளைப் போல இன்றைய சூழலுக்கேற்ப எழம் சந்தர்ப்பவாத கேள்விகள் இல்லை. இதை நான் தமிழன் எக்ஸ்பிரஸ்ஆசிரியராக இருந்த போது, ஜெயின் கமிஷன் முடிவுகளை வைத்து கிடைத்த ஆவணங்களைக் கொண்டு நவம்பர் 19, 1997ல் கட்டுரை எழதியிருக்கிறேன்.
புலம் பெயர்ந்த பல மெத்த படித்த மேதாவி தமிழர்கள் (இலங்கை அல்லாத) கூட இலங்கை விவகாரம் இது ஏதோ அவர்களின் உள்நாட்டு பிரச்னை என்று மேம்போக்காக பார்க்கிறார்கள்.

ராஜீவ் கொலை என்பது இந்தியாவை ஒருமுகப்படுத்தும் ஒரு வல்லமை வாய்ந்த ஒரு சக்தியின் அழிவு.

அது இந்தியாவிற்கு பல அச்சுறுத்தல்கள் இருப்பதற்கான அறிகுறிகளின் ஆரம்பம். எனக்கு காங்கிரஸோடு ஆயிரம் முரண்பட்ட கருத்துக்கள் உண்டு. ஆனால் ராஜீவ் காந்திக்கு பிறகு இந்திய பிரதமர் பதவி என்பது அழக்காகி பல காலம் ஆகிறது என்பது என் சொந்த கருத்து. இதோ நான் அப்போது எழதிய கட்டுரை.

________________________________________
ராஜீவ் காந்தி கொலை:

விடை தெரியாத வினாக்கள்: விடுபடாத புதிர்கள்:

நாடு முழுவதும் இன்று ஜெயின் கமிஷன் மீதே கவனம் செலுத்துகிறது. அதே சமயம் பூந்தமல்லியில் ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைகள் முடிந்து விட்டன.
இந்த நீதிமன்றத்தின் நீதிபதி, 'வழக்கின் தீர்ப்பு 1998 - ஆம் ஆண்டு ஜனவரி 28 அன்று வழங்கப்படும்' என்று அறிவித்திருக்கிறார்.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 26 பேரும், தேசத்தின் குடிமக்களும் இந்தத் தீர்ப்பை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வழக்கில் குற்றவாளிகளின் சார்பில் எதிர் தரப்பு வாதம், 50 நாட்கள் நடைபெற்றது. ரகசியமாக நடந்த இந்த வாதங்களின் பல முக்கியப் பகுதிகள் தமிழன் எக்ஸ்பிரஸுக்குக் கிடைத்தன. சொல்லப்படாத பல பின்னணிக் கதைகளை வாசகர்கள் முன் கொண்டு வருகிறோம்.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள், ராஜீவ் கொலையை விசாரித்த விசேஷ புலனாய்வுத் துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள் ஆகியோர் முன்னிலையில் தமிழக போலீஸின் பாதுகாப்புடன் எதிர்தரப்பு வாதம் நடந்தது.
1993 - ஆம் ஆண்டு துவங்கிய இந்த வழக்கு, 50 மாதங்கள் நடந்தது. 288 சாட்சியங்கள், 3000 அரசுத்தரப்பு ஆவணங்கள், 1000 எதிர்தரப்பு ஆதாரங்கள் ஆகிய அனைத்தும் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டன. எதிர் தரப்பு வாதத்தில் எழுந்த பல கேள்விகளுக்கு விடையில்லை. சிறப்பு புலனாய்வுத் துறையின் இந்த விசாரணைகள், அதிகாரத்திலுள்ளவர்களின் அன்பைப் பெறும் வகையில் தான் நடந்தது என்று சந்தேகப்பட வைக்கிறது.

ராஜீவ் கொலை ஒரு வி.ஐ.பி.யின் மரணம் மட்டும் அல்ல; தேசத்தை சிதறச் செய்யும் மிகப் பெரிய சதி. பல அந்நிய சக்திகள் இந்தப் பரந்த தேசத்தைக் காட்டியாள நினைக்கும் தந்திரம். அதனாலேயே இந்த வழக்கிலுள்ள பல திடுக்கிடும் சம்பவங்கள், விசாரணையின் ஓட்டைகள் ஆகியன நமக்குத் தெரிய வேண்டியது மிக முக்கியம்.

இந்த விசாரணையில் எதிர்தரப்பு வாதங்களைத் துவக்கி வைத்தவர் மூத்த வழக்கறிஞரான துரைசாமி. ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்த அந்த நீதிமன்ற அறையில் விசேஷ புலனாய்வுத் துறையின் 'முன் ஜோடிப்பு கதைகளை' போட்டு உடைத்தாராம் துரைசாமி. அதேபோல் எதிர்தரப்பு வழக்கறிஞர் ராமதாஸும் தன் 11 நாட்கள் வாதத்தில் குற்றப்பத்திரிக்கையில் புனையப்பட்டுள்ள பல கற்பனைக் கதைகளை சாட்சியங்களோடு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்.

இந்த எதிர் தரப்பு வாதங்களின் க்ளைமாக்ஸாக அமைந்தது வழக்கறிஞர் சந்திரசேகரின் கடும்வாதம். ஆதாரப்பூர்வமாகவும், உணர்ச்சிகரமாகவும் பேசிய சந்திர சேகர், விசேஷ புலனாய்வுத் துறை ஏற்கனவே முடிவு செய்து தங்கள் முடிவுகளுக்கு ஏற்ப வழக்கை ஜோடித்ததாக கடுமையாகக் குற்றம் சாட்டினார். 'நான் கேட்கிற சாட்சியங்களை புலனாய்வுத் துறை காட்டி விட்டால் என் கட்சிக்காரர்கள் தாங்கள் குற்றம் செய்ததாக தாங்களே முன்வந்து ஒப்புக் கொள்வார்கள்' என்று கூட சவால் விட்டார்.
இப்படி ஐம்பது நாட்கள் நடந்த எதிர்தரப்பு வாதங்கள் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. இதோ அந்த விடை கிடைக்காத கேள்விகள்:
1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் எப்படி ஒப்புக் கொண்டார்?
2. ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா?
3. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்?
4. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ்காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள். அவர்களுடைய வேலை, ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அப்படியானால் அவர்கள் உடன் வந்த காரணம் என்ன?
5. ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்திலிருந்து சர்க்யூட் ஹவுஸுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்?
6. சென்னையில் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா?
7. ராஜீவ் மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன் ராமாவரம் தோட்டம் அருகே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவர் காரில் ஏறினார்கள். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்குள்ளானதா? இன்றுவரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?
8. யார் அந்த பல்கேரியர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?
9. யார் அந்த இரண்டு அயல்நாட்டு பெண் பத்திரிகையாளர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?
10. அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் ராஜீவை பேட்டி கண்டார்கள். ஆனால் த. பாண்டியனும், மரகதம் சந்திரசேகரும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என்றார்கள். இவர்கள் எதை மறைக்க முயலுகிறார்கள்? ஏன்?
11. தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும் ? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா?
12. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வௌ¤நாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார்.
13. உள்துறை அமைச்சர் அப்படி சொல்லக்காரணம் என்ன என்பதை விசேஷ புலனாய்வுத்துறை ஏன் விசாரிக்கவில்லை?
14. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?
15. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அராபத், 'ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது' என்று அன்றைய பிரதமர் சந்திரசேகரிடம் தெரிவித்தார். 'அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல்?' என்பதை ஏன் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை?
16. மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தால் மட்டுமே அராபத்திற்கு இந்தப் பின்னணி தெரியவாய்ப்புண்டு.
17. மரகதம் சந்திரசேகர் ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் லதா பிரியகுமார் தன் கணவருடனும் வழக்கறிஞர் மகேந்திரனுடனும் அரக்கோணத்திலிருந்து வந்தார். அவரது மகன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்கவேயில்லை. வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை? சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் அவர்களை ஏன் விசாரிக்கவில்லை?
18. சிவராசனின் தாயாரும், வினோதினியின் தந்தையும் சிங்களர்கள் தான். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாஸாவுக்கு ராஜீவ் மீது கோபம் உண்டு. அந்தக் கோணத்தில் ஏன் விசாரணை செய்யப்படவில்லை?
19. விடுதலைப் புலிகள், இலங்கை அரசு இரண்டுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இந்திய அமைதிப் படை இலங்கையில் நுழையக் காரணமாக இருந்த ராஜீவ் மீது இரு தரப்பினருக்கும் கோபமுண்டு. இந்த விஷயத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் விசேஷப் புலனாய்வுத் துறைக்கு ஒரு சவால் விட்டார். 'வினோதினியின் பூர்வீகம் என்ன? அவரும், அவர் குடும்பத்தினரும் அப்பாவிகள் என்பதை நிரூபித்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தானாகவே தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள் என்றார். இறுதிவரை அவர் சவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை.
20. காமினி திசநாயகா, அதுலத் முதலி, விக்கிரம சிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?
21. சிவராசன், தனு, சுபா ஆகியோர் ஒரு அந்நிய சக்தியின் தூண்டுதலால் ஏன் இந்தக் கொலையை செய்திருக்கக் கூடாது? அந்த மூவரும் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்பதால் மட்டுமே அவர்களைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி விசாரணையை முடித்துவிட்டார்களா?
22. புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்த என்ன பலத்த ஆதாரம் புலனாய்வுத் துறையிடம் உள்ளது?
23. பிரபாகனும், சிவராசனும் ரேடியோ மூலம் பேசியதை விசேஷப் புலனாய்வுத் துறை கேட்டதாகச் சொல்லப்படுவது ஏன் ஒரு கற்பனையான ஆதாரமாக இருக்கக்கூடாது?
24. 'விசேஷ' லட்சியமுள்ள அரசியல்வாதிகள், ஏன் அவரது காங்கிரஸ் தோழர்களே கூட தங்கள் வளர்ச்சிக்கு ராஜீவ் தடையாக இருக்கிறார் என்பதால் கூலிப்படையினரை ஏவிவிட்டு ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?
25. பல்வேறு நாட்டு ஆயுத வியாபாரிகள், பிரதமர் என்கிற முறையில் ராஜீவுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். கூலிப்படைகள் மூலமாக அவர்கள் ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?
26. மறுபடியும் அமைதிப்படை தங்கள் நாட்டில் நுழையலாம் என்கிற எண்ணத்தில் இந்தியாவுக்கு வலுவான தலைவர் இருக்கக்கூடாது என்று இலங்கை அரசு ஏன் நினைத்திருக்கக்கூடாது?
27. மூன்றாவது உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்துவதில் சி.ஐ.ஏ. வுக்கு அதிக அக்கறை உண்டு. அந்த எண்ணம் ராஜீவ் விஷயத்தில் இருந்ததா?
28. புலிகளின் 'இந்துத்துவா' அபிமானம், இலங்கைத் தமிழர்களுக்கு உண்டான இந்து வெறி இரண்டையும் பயன்படுத்தி ஆர். எஸ்.எஸ். பிஜேபி இலங்கைத் தமிழர்கள் மூலமாக ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது? அவர்கள் ஆட்சியைப் பிடிக்க தடையாக இருக்கும் ஒரே தலைவர் ராஜீவ்தான். மகாத்மாவைக் கொன்றவர்கள் ஏன் ராஜீவைக் கொன்றிருக்கக்கூடாது?
29. வாழப்பாடி ஏற்றுக் கொள்ளவில்லை. மூப்பனார் அக்கறை காட்ட வில்லை. ஆனால் மரகதம் சந்திரசேகர் மட்டும் டெல்லி சென்று ஏன் ஸ்ரீபெரும்புதூருக்கு வரவேண்டும் என்று ராஜீவை வற்புறுத்தினார்? தன்னை அறியாமல் சிக்கி ராஜீவ் மரணப்படுக்கையில் விழக் காரணமாகி விட்டாரா?
30. யார் இந்த பொட்டு அம்மன்? இப்படி ஒரு நபர் இருக்கிறாரா? அம்மன் ஒரு மூத்த தலைவர். ஒரு போரில் இறந்துவிட்டார். பொட்டு மட்டுமே உள்ளார் என்கிறது எல்.டி.டி.ஈ. வட்டாரம். உயிருடன் இல்லாத ஒரு நபரை எப்படி இரண்டாவது குற்றவாளியயக புலனாய்வுத் துறை முத்திரை குத்தியது?
31. பத்மநாபா கொலை வழக்கையும், இந்த வழக்கையும் ஒப்பிட்டால் பல உண்மைகள் வெளிவருகின்றன. தமிழ்நாடு காவல்துறையின் 'க்யூ' பிராஞ்ச், பத்மநாபா வழக்கை விசாரித்தது. விசேஷப் புலனாய்வுத்துறை, ராஜீவ் கொலை வழக்கை விசாரணை செய்தது. இரண்டு விசாரணை அமைப்புகளும் சதி நடந்த இடம் யாழ்ப்பாணம் என்கின்றன. பத்மநாபா வழக்கில் குற்றவாளிகளில் சிவராசன். ராஜீவ் வழக்கில் அவர் முக்கிய குற்றவாளி.
அப்படியானால் ராஜீவ் கொலையில் குற்றவாளியாகக் கருதப்பட்ட பிரபாகரன் பத்மநாபா வழக்கில் ஏன் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை? ஆகவே பிரபாகரன் பெயரை நுழைப்பது அரசியல் முடிவே தவிர விசாரணையினால் கிடைத்த தெளிவே அல்ல. கடும் உள்நோக்கத்துடன் வழக்கிற்கு உயிர்கொடுக்க புலனாய்வுத்துறை செய்த முயற்சி இது.
32. விமான நிலையத்தில் ராஜீவை சந்தித்தார் கவிஞர் காசி ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டு வந்த தகவல் என்ன? 'ஈழ விடுதலைக்கு ராஜீவின் உதவி தேவை' என்று பிரபாகரன் காசி ஆனந்தன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தால் ஏன் அவரை பிரபாகரன் கொலை செய்ய வேண்டும்?
33. இந்தியா மற்றும் தமிழகத்தில் தான் தனக்கு அனுதாபமும், ஆதரவும் கிடைக்கும் என்பது பிரபாகரனுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இந்த மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிற தவறைச் செய்து, நாட்டைவிட்டே துரத்தப்பட்டு தடை செய்யப்படுகிற அளவுக்கான முட்டாள் தனத்தையா பிரபாகரன் செய்தார்?
34. லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனிதகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை? லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? காங்கிரஸ் மற்றும் அதன் தொண்டர்களின் மீது புலனாய்வுத் துறைக்கு ஏன் இத்தனைப் பரிவு?
35. ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லும் முன் இரண்டு தெருமுனைக் கூட்டங்களில் பேசினார் ராஜீவ். அந்தக் கூட்டங்களில் மேடை வரை உடன் வந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. ஸ்ரீபெரும்புதூரில் மட்டும் ஏன் தொலை தூரம் தள்ளிப்போனார்?
36. அப்பாவிப் பொதுமக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் பலர் ராஜீவுடன் உயிரிழந்தார்கள். ஆனால் காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கும் லேசான காயம் கூட இல்லையே. அது ஏன்?
37. தனு, சுபா, சிவராசன் மூவரையும் ஸ்ரீபெரும்புதூருக்கு அழைத்து வந்தவர் லதா பிரியகுமார் என்று கருதப்படுகிறது. குறிப்பாக பெண்கள் பகுதிக்கு அழைத்து வந்து லதா கண்ணனிடம் அவர்களுக்கு உதவும்படி சொன்னார். அவர் மீது ஏன் குற்றம் சுமத்தப்பட வில்லை?
38. பிரபாகரன், சிவராசன் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய படத்தை வைத்துக் கொண்டு பிரபாகரனுக்கு இதில் தொடர்பு உண்டு எப்படிச் சொல்லலாம்?
39. தனு, சுபா, சிவராசன் மூவரும் புலிகள் இயக்கத்திலிருந்து வௌ¤யேற்றப் பட்டு, மேற்கத்திய, ஐரோப்பா, இந்தியா கூலிப்படையின் கையாட்களாக ஏன் ஆகியிருக்கக்கூடாது?
40. மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?
41. சந்திராசுவாமி, சுப்பிரமணிய சுவாமி, சந்திரசேகர், ஆயுத விற்பனையாளர் கசோகி மூவருக்கும் இந்த வழக்கில் ஏதாவது தொடர்பு உண்டா என்கிற கோணத்தில் விசாரணை நடந்ததா?
42. புலிகள் இந்தக் கொலையை செய்ததின் மூலம் அவர்களுக்குக் கிடைத்த ஆதாயம் என்ன? அமெரிக்கா போன்ற மிகப் பெரிய வல்லரசுகள், சி.ஐ.ஏ. மூலமாக, ஏராளமான ஆயுத உதவிகளும் செய்து இந்தக் காரியத்தை செய்ய வைத்தார்களா?
43. யாரோ சிலரைப் பிடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.யும், விசேஷ புலனாய்வுத் துறையும் எதற்கு?
தீர்ப்பு விரைவில் வௌ¤வரப் போகிறது. குறிப்பாக ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையைத் தொடர்ந்து சட்ட வல்லுநர்கள் இந்தத் தீர்ப்பை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படி பல கேள்விகள் சிறப்பு புலனாய்வுத் துறையின் விசாரணையைப் பற்றி எழுந்திருக்கிறது.
கேள்விகள் எல்லாம் உண்மைகள் ஆகிவிடாது. ஆனால் பல சந்தேகங்கள் களையப்படாவிட்டால் உண்மைக்குற்றவாளிகள் பலம் வாய்ந்த சக்திகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு விடுவார்கள். மறைந்து நிற்கும் அவர்களால் பலம் வாய்ந்த இந்திய தலைவர்களுக்குத் தான் ஆபத்து.
'விசேஷப் புலனாய்வுத் துறை விசாரித்ததா, அல்லது வெறும் விசாரணை அறிக்கை தயார் செய்ததா?' என்கிற பில்லியன் டாலர் கேள்விக்கான விடை நிச்சயம் ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரியவேண்டும்.

- நன்றி: தமிழன் எக்ஸ்பிரஸ் -

Jan 2, 2009

வந்துவிட்டது வானவியல் வருடம்


இந்த வருடத்தை சர்வேதேச வானவியல் வருடமாக (international year of astronomy) ஐ.நா.சபை அறிவித்திருக்கிறது.கி.பி.121-141ம் வருடத்தில் மாவீரன் அலெக்ஸாந்தரின் நம்பிக்கைக்குரிய விஞ்ஞானி டாலமி (ptolemy)தான் முதலில் கிரகங்கள் நகர்வதைப் பற்றி குறிப்பு எழதினார். அதற்கு பிறகு வான்வெளி ஆராய்ச்சியில் பல முன்னேற்றங்கள். நானூறு வருடங்களுக்கு முன்பு கலிலியோ தொலைநோக்கு கருவியை(telescope) கண்டுபிடித்தார். அதற்கு பிறகு அந்தத்துறையில் பல்வேறு விதமான முன்னேற்றங்கள் நிகழ்ந்து சமீபத்திய சந்திராயன் வரையில் வந்திருக்கிறது.

இந்தத் துறைக்கு பண்டைய இந்தியாவின் கொடை ஏராளமானது. இதன் குறிப்புகளை ரிக் வேதத்திலேயே காணமுடியும். முதலில் கிரகங்கள் நகருவதை கண்டுபிடித்து அதை வைத்தே அதை ஜோசியத்தின் அடிப்படையாக மாற்றினார்கள். வானவியலை காகிதக் கட்டங்களுக்குள் திணித்து அதை ஜாதகமாக மாற்றினாலும் கூட பண்டை இந்தியாவின் வான்வெளி பங்களிப்பு என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. கி.பி 500 வருடத்திலேயே பூமியின் சுழற்சியைப் பற்றிய கணக்கை ஆர்யபட்டா எழதிவைத்தார்.பூமி சுழற்சியின் எண்ணிக்கையை முதலில் கணக்கிட்டவரும் அவர்தான். அதை பின்னால் விஞ்ஞானமும் அதை ஏற்றுக்கொண்டது. 598.668 வரை உஜ்ஜயனியில் வான்வெளி ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கியவர் பிரம்ம குப்தா. இவர் வான்வெளியைப் பற்றி எழதிய புத்தகம்தான் பிரும்மாஸ்புதசித்தாந்தம். இதை அவர் எழதிய வருடம் 628.

1114-1185 வரை உஜ்ஜயினின் இந்த ஆராய்ச்சி மையத்திற்கு தலைமை தாங்கியவர் பாஸ்கரா. இவர் பிரும்மபுத்தரரின் சீடர். கணிதத்திற்கும் பூஜ்யத்தை அளித்தவர் இவர்தான். இவர் எழதிய சித்தாந்தசிரோமணி இரண்டு பாகங்களைக் கொண்டது. கோளாதயாயா, கிரககணிதம் என்பது அது.1975,ஏப்ரல் 19ந் தேதி இந்திய தனது முதல் செயற்கை கோளை விண்ணில் செலுத்தியது அதற்கு அவர்கள் வைத்த பெயர் ஆர்யபட்டா.

இந்த ஆண்டு விண்வெளியின் நிறைய ஆராய்ச்சிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் யாரையும் `மல்லாக்க பாத்துக்கிட்டு கிடக்காதே’ என்று சொல்லாதீர்கள். ஒரு வேளை அவர் வான்வெளி விஞ்ஞானியாக கூட இருக்கலாம்.

(மேலே படத்தில் இருப்பவர் ஆர்யபட்டா)