Nov 19, 2012

மேற்கிந்திய கம்பெனி பராக் பராக்

சரித்திர புருஷர்தலைநகரிலிருந்து திரும்பி வேறு விஷயத்திற்கு வரலாம் என்றுதான் ஆசை. ஆனால், விட மறுக்கிறார்கள் இந்த காங்கிரஸ்காரர்கள்.
              'கிழக்கிந்திய கம்பெனி என்பது சரித்திரம்'
              'சில்லறை வர்த்தகம் என்பது எதிர்காலம்'
இது சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு கூட்டத்தில் பாரத பிரதமர் உதிர்த்த பொன்மொழிகள். இதை வருங்கால இந்தியாவைப் பற்றிய ஒரு ஒப்புதல் வாக்குமூலமாகவே (confessional statement) எடுத்துக்கொள்ளலாம். சாத்தியமில்லாததையெல்லாம் சாத்தியம் என்று சொல்லி இந்தியர்கள் தலையில் மிளகாய் அரைப்பதுதான் எங்கள் வேலை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் பிரதமர்.
நம்மில் பலருக்கு சரித்திரம் என்றாலே வேப்பங்காய். சரித்திரம் தெரிந்தால்தானே, நம் எதிர்காலம் புரியும்.?
முதலில் கிழக்கிந்திய கம்பெனி என்கிற சரித்திரத்தைப் புரட்டிப் பார்ப்போம். அப்போதும் சில்லறை வர்த்தகத்தில்தான் நாடு பிடிக்கிற வேலை நடந்தது என்கிற உண்மை புரியும்.
காலம். 16&ம் நூற்றாண்டு.  பிரிட்டிஷ் வியாபாரிகள். தங்களுக்கு வேண்டிய மிளகு, லவங்கம், ஏலக்காய் போன்ற பொருட்களை டச்சுக்காரர்களிடம் வாங்கி வந்தார்கள். டச்சுக்காரர்கள் திடீரென்று விலையை ஏற்றிவிட்டார்கள். அதுவும் ஒரே நாளில் 5 ஷில்லிங். இனி இவர்களிடம் வியாபாரம் கூடாது என்று 24 லண்டன் வியாபாரிகள் முடிவெடுத்தார்கள். 1549 செப்டம்பர் 24&ம் தேதி 75 ஆயிரம் பவுண்டுகள் மூலதனத்துடன் லண்டனில் ஒரு கம்பெனி ஆரம்பித்தார்கள். அதே ஆண்டில் பிரிட்டிஷ் முதலாம் அரசி, இந்த கம்பெனி 'தன்னம்பிக்கை முனைக்கு' அப்பால் கீழ்த்திசை நாடுகளில் வியாபாரம் செய்து கொள்ளவும் அனுமதி அளித்தார். அந்த கம்பெனிக்கு பெயர்தான் கிழக்கிந்தியக் கம்பெனி.
உடனே கிளம்பினார் வியாபாரி 'வில்லியம் ஹக்கின்ஸ்' 500 டன் எடை கொண்ட 'ஹெக்டர்' என்கிற கப்பலில் 1600 ஆகஸ்ட் 24-ம் நாள் பம்பாய்க்கு வடக்கே உள்ள சூரத் துறைமுகத்தில் வந்து இறங்கினார். சரி, இங்கே வியாபாரம் செய்ய அரசு அனுமதி வேண்டுமே? அதனால் அப்போது இந்தியாவை ஆண்டது மொகலாய மன்னர் ஜஹாங்கீர். அவரைப் பார்க்க ஆக்ராவை நோக்கி புறப்பட்டார். ஜஹாங்கீரின் தர்பார் மண்டபத்தை கண்டு மிரண்டு போனார் ஹாக்கீன்ஸ். உலகிலேயே செல்வம், வலிமை மிகுந்த, மிகப்பெரிய நிலப்பரப்பும், மக்களும் கொண்ட தேசம் இந்தியா. அதன் சக்ரவர்த்தி ஜஹாங்கீருக்கு முன்னால் இங்கிலாந்து ராணியே ஒரு சிற்றரசிதான் என்கிற எண்ணம் அவருக்கு உறுதியாயிற்று.
ஜஹாங்கீரும் அவரை உபசரித்து, அனுமதியும் அளித்தார். பம்பாய்க்கு வடக்கே உள்ள பகுதிகளில் வியாபாரம் நடத்தலாம். பொருட்களைக் குவிக்க பண்டகசாலை அமைத்துக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது. மிகக்குறுகிய காலத்தில் வியாபாரம் பன்மடங்கு பெருகிறது. மாதத்திற்கு இரண்டு கப்பல்கள் இங்கே வந்தன. இங்கேயிருந்து பட்டுநூல், வாசனை திரவியங்கள், மிளகு போன்ற பொருட்கள், அவர்கள் நாட்டில் கொண்டுபோய் மலைபோல் குவித்தன. எல்லா செலவும் போக பல மடங்கு லாபம் கொழித்தது.
'எங்களுக்கு தேவை வியாபாரம். நாடு பிடிப்பது எங்கள் நோக்கமல்ல' என்றுதான்  கிழக்கிந்திய கம்பெனி முதலில் பிரகடனப்படுத்தியது.
இங்கே இருந்த சிற்றரசர்களும், நவாபுகளும் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வதை கண்டார்கள். ஆளுக்கொரு பக்கமாக ஆட்சி செய்யும் இவர்கள் எப்போதும் போருக்கு தயாராகயிருப்பார்கள். அந்நியர்களுக்காவது தங்கள் நிலங்களை விட்டுக்கொடுப்பார்கள். தங்களுக்குள் சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள் என்கிற உண்மையை புரிந்து கொண்டார்கள்.
தங்களுக்கு அடங்காத ஒரு நவாபை 1757 பிளாசிப் போரில், ராபர்ட் க்ளைவ் தலைமையில் கைப்பற்றினார்கள். வட இந்தியா அவர்கள் வசமாயிற்று. 250 ஆண்டுகள் இங்கே ஆண்ட கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து, விக்டோரியா மகாராணி ஆட்சியை ஏற்றுக்கொண்டார். அவருடைய ராஜ பிரதிநிதியாக வைஸ்ராய் என்பவர் இந்தியாவை ஆண்டு வந்தார். அப்படிப்பட்ட ஒரு வைஸ்ராய்தான் நமக்கு சுதந்திரம் வந்தபோது இங்கே இருந்த மவுண்ட்பேட்டன். அந்த வைஸ்ராய்க்காக, கட்டப்பட்ட மாளிகையின் நிலப்பரப்பு மட்டுமே இரண்டு லட்சம் சதுர அடிகள். அதன் இன்றைய பெயர் ரெய்சினா ஹில்ஸ். இப்போது அங்கே இருப்பவர் வைஸ்ராய் அல்ல. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.

 

அப்படி ஆண்ட பிரிட்டிஷாருக்கும். இந்திய பாமர மக்களுக்கும் ஒரு ஒற்றுமை பாலம்  தேவை என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் காங்கிரஸ் கட்சி. முதலில் பம்பாயிலும், அடுத்தது கல்கத்தாவிலும், மூன்றாவது சென்னையிலும் மகாசபை கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் பேச அழைக்கப்பட்ட இந்தியர்கள் அனைவரும் பிரிட்டிஷ் ஆட்சியையும், ஆட்சியாளர்களையும் எஜமான விசுவாசத்துடன்தான் பாராட்டிப் பேசினார்கள். காங்கிரஸ், முஸ்லீம் லீக் இரண்டுமே 'MADE IN ENGLAND' ரகம்தான்.
அன்றைக்கு பிரிட்டிஷார் அவர்களாக மிளகு வாங்க வந்துதான் நம்மை மிளகாய் அரைத்தார்கள். இன்று நிலை அப்படியில்லை. நாமே அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறோம். அன்று கிழக்கிலிருந்து வந்த பிரிட்டிஷ், இன்று மேற்கிலிருந்து வரும் அமெரிக்கா இது ஒன்றுதான் வித்தியாசம். அன்று வந்தது கிழக்கிந்திய கம்பெனி. இன்று வரப்போவது, அமெரிக்கா சார்ந்த பன்னாட்டு நிறுவனங்கள். அதைச் சுருக்கமாக பழைய நினைவாக மேற்கிந்திய கம்பெனி என்று அழைக்கலாம்.
இந்த மேற்கிந்திய கம்பெனி, மகாராணியின் கட்டுப்பாட்டில் இருக்காது. அதற்குப் பதிலாக அமெரிக்க அதிபர் வசம் இருக்கும். அவர்தான் உண்மையில் வைஸ்ராய், அவரை ஆட்டி வைப்பது பன்னாட்டு நிறுவனங்கள். வேண்டுமானால், இந்தியா பெரிய நாடு என்பதால், நம் நாட்டு பிரதமரையும் வருங்காலத்தில் வைஸ்ராய் என்றே அழைக்கலாம்.


                                                                                நன்றி: மீடியா வாய்ஸ் 24.11.12Nov 1, 2012

  வாழும் வரகவி வாலி


நேற்றோடு கவிஞர் வாலிக்கு 81 வயது முடிந்துவிட்டது. இன்று அவர் ஒரு நாள் முதிர்ந்த குழந்தை. எனக்கு கண்ணதாசனும் வாலியும், பெரியப்பா, சித்தப்பா முறையாவார்கள். எப்படி? என் தாய் வழிப் பாட்டனார் பிரபல தமிழறிஞர் பி.ஸ்ரீ. 1930 களிலேயே ஆனந்த விகடனில் கம்ப சித்திரம் எழதியவர். கம்பராமாயணத்தில் கரை கண்டவர். அவருடைய கம்ப ராமாயண பிரசங்கத்தின் பிரதான விசிறி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.

அந்தப் பாட்டனாரை கண்ணதாசனும், வாலியும் தங்களுடைய தமிழ் வழிப் பாட்டனாராக ஏற்றுக்கொண்டவர்கள். அதனாலேயே செட்டிநாட்டு கண்ணதாசனும், ஸ்ரீரங்கத்து வடகலை அய்யங்கார் வாலியும், எனக்கு பெரியப்பா, சித்தப்பா முறையாவார்கள்.

கண்ணதாசனுக்கும், வாலிக்கும் என்ன வித்தியாசம் ? கண்ணதாசன் `எடுப்பார் கை பிள்ளை’ வாலியோ ` எங்க வீட்டுப் பிள்ளை’ கண்ணதாசன் எதையும் பட்டுத் தெரிந்து கொள்வார். வாலி, கண்ணதாசன் பட்டதைப் பார்த்து தன்னை வழிநடத்திக்கொள்வார். பொய் சொல்லுவதில் இருவருமே வல்லவர்கள் தங்கள் பாடல்களில்!

உதாரணமாக, தேவிகா நல்ல நடிகைதான். ஆனால் அவரது இடை எப்படி இருக்கும் ? தெரிந்த விஷயம்தான். இடையா அது இடையா , அது இல்லாதது போலிருக்குது ‘ என்றார் கண்ணதாசன். வாலியோ ` ஒடிவது போல் இடையிருக்கும்’ என்பார். அதனால் கவித்துவமான பொய் சொல்லுவதில் இருவருமே மங்கைகளை மயக்கும் மாய ஜாலப் பொய்யர்கள்.
 .
வாலி ஒரு வரகவி. நாம் வாழம் நாட்களில் இப்படி ஒரு கவிஞன் இருக்கிறானே என்று பெருமைப் படக்கூடிய அளவிற்கு இன்று உயர்ந்து நிற்கிற ஒரு மகா கவிபுருஷன் வாலி.

ஒரு கவிஞனை இனம் காணாத ஒரு நாடு, அதன் மேன்மையின் மகத்துவத்தை இழந்து  பணம் தேடும் வெற்று மனிதர்களை கொண்ட ஒரு வறண்ட சவக்காடு.

இதற்கு உதாரணம் மகாகவி பாரதி. கம்யூனிஸம் – கிருஷ்ணத்துவம் இரண்டும் இரு வேறு துருவங்கள். இதை இரண்டையும் இணைத்துப் பார்த்தவன் மகாகவி பாரதி. ரஷ்யப் புரட்சியை கலியை அழித்து, கிருதாயுகத்தை கொணர்ந்த கிருஷ்ணத்துவம் என்றான் பாரதி.

`இலக்கியமும், அரசியலும்  இணைகிற பொழதுதான் இப்படிப்பாட்ட கவி மேன்மையின் சத்தியங்கள் வெளிப்படும். எந்த அரசியலில் இருந்து இலக்கியமும் கவிதையும் வெளி வராதோ அது மக்களுக்கு உகந்தது அல்ல ‘ என்பார் எழத்தாளர் ஜெயகாந்தன்.

இன்றைய அரசியலுக்கு, இலக்கியத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.. அரசியல் என்பது ஒரு வர்த்தக ஸ்தாபனம்.. அதில் வியாபாரிகள்தான் இருப்பார்கள். அங்கே இலக்கியம் தேடினால்  கழதைகளிடம் கற்பூர வாசனையை நுகர்கிற கதைதான். . ஆனால், நமக்குள் இருக்கும் மென்மையின் மேன்மைகளை காக்க வேண்டுமானால் கவிஞர் வாலியின் பெருமைகளை உணர்ந்தே இருக்க வேண்டும்.

 கண்ணதாசனா – வாலியா ? யார் சிறந்த கவிஞர் என்று சர்ச்சை இருந்த காலங்கள் ஒன்று உண்டு. அது வெட்டி வேலை. கண்ணதாசன் காலத்திலேயே அவருக்கு இணையாக பாடல் எழதி கொடி கட்டிப் பறந்தவர் வாலி. அதனாலேயே வாலியின் பல பாடல்களை இன்னும் பல பேர் கண்ணதாசன் பாடல்கள் என்று சொல்லுவார்கள்.

கண்ணதாசனுகே கூட சில சமங்களில் இது தன் பாடலா வாலியுடையதா என்று குழப்பம் வந்ததுண்டு. கண்ணதாசன் ஆனந்த ஜோதி படத்தில் ` நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா ‘ என்று ஒரு பாடல் எழதியிருப்பார். இதயத்தில் நீ படத்தில் `உறவு என்று சொல் இருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கு,ம் காதல் என்றொரு கதை இருந்தால் கனவு என்றொரு முடிவிருக்கும்’ `மன்னவனே அழலாமா, கண்ணீரை விடலாமா.’ ` மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள்’ ` அழகு தெய்வம் மெல்ல மெல்ல; ` கடவுள் தந்த இரு மலர்கள், கண் மலர்ந்த பொன்மலர்கள்’ ` மதுரையில் பறந்த மீன் கொடியை’ ` அன்புள்ள மான்விழியே. கண் போன போக்கிலே கால் போகலாமா ?’’ போன்ற பல வாலியின் பாடல்கள் அந்த நாளைய ரசிகர்களை குழப்ப வைத்த பாடல்கள்.

கண்ணதாசனின் பாடலினால்தான் தான் திரையுலகத்தில் நிலைத்து நிற்கிறேன் என்று வாலியே சொல்லியிருக்கிறார்.

கண்ணதாசன் பாடல்கள் மக்கள் மனதில் பதிந்தது. ஆனால் வாலியின் பாடல்களோ அந்த மக்களை கவர்ந்த மகோன்னத திரை நாயகனை அரசியல் சிம்மாசனத்திலேயே கொண்டு போய் சேர்த்தது.. வாலி என்கிற வாகனம்தான் எம்.ஜி.ஆர் என்கிற மூன்றெழத்தை கோட்டைக்கு கொண்டு போய் சேர்த்தது என்பேன்.

நல்ல பாடல்கள் ஒரு படத்திற்கு முகவரி.அன்றைய பாடல்கள், மக்களின் அன்றாட வழக்க மந்திரம். ` மூன்றெழத்தில் என் மூச்சிருக்கும்,. என்ற பாடல்தான், அன்றைய திமுகவிலிருந்த எம்.ஜி.அரையும், திமுகவையும் இணைத்து பார்க்க வைத்தது. உதயசூரியனின் பார்வையிலே, உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே, என்று பகிரங்கமாக திமுக சின்னத்தையே எம்ஜி.ஆர் மூலமாக மக்களிடம் 1965ல் கொண்டு சென்றது. ` கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்’ என்று எம்.ஜி.ஆர் பாடியபோது அவரை ஒரு கம்யூனிஸ்டாக மக்கள் பார்த்தார்கள்.
`ஏமாற்றாதே ஏமாற்றாதே,’என்று அவர் உச்சரித்தபோது, அவரை ஒரு ஏழைப்பங்காளனாக பார்த்தார்கள். `ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்’ என்றபோது  எம்.ஜி.ஆரை ஒரு இறைதூதராக கண்டார்கள். `அவன் வீட்டுக்கு கதவுகள் இல்லை – அந்த வாசலில் காவல்கள் இல்லை’ அவன் கொடுத்தது எத்தனை கோடி, அந்த கோமகன் திருமுகம் வாழி என்ற போது அங்கே ஒரு கொடை வள்ளலைக் கண்டார்கள்.

`உங்கள் பாடல்கள் எங்கள் வெற்றிக்கு பெரிது உதவி செய்தது’ என்று அண்ணாவே 67 வெற்றிக்குப் பிறகு வாலியிடம் ஒப்புக்கொண்டார்.
வாலி எம்.ஜிஆருக்கு எழதிய பாடல்கள் எல்லாமே அரசியல் கலந்த திரை இலக்கிய பாடல்கள்..`ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்’ என்ற போது தமிழகத்து மீனவ வாக்கு வங்கிகள் எம்.ஜி.ஆர் கணக்கில் வந்து சேர்ந்தது அதுவே இன்று அதிமுகவிற்கு வைப்பு தொகையாக மாறிவிட்டது.

கவிஞன் வாக்கு பொய்க்காது, என்பதை எம்.ஜி.ஆர் வாழ்க்கை மூலமாக உறுதி செய்தவர். வாலி ஒரு வாழம் வரகவி. தமிழ்ச் சொற்களின் விலாசம் எது என்று என்னை கேட்டால், `நம்பர் 20. கற்பகம் அவென்யூ, சென்னை 28 என்று வாலியின் வீட்டு விலாசத்தை கொடுக்கலாம்.
வாலியின் ` அவதார புருஷன்’ ` பாண்டவர் பூமி’ ராமானுஜ காவியம் இவையெல்லாம் இதற்கு உதாரணங்கள். `அழகு நிலாவை இடுப்பில் ஏந்தி – அழக்கு நிலாவை அழைத்தாள் கோசலை’ பிள்ளை நிலாவின் பொலிவைப் பார்த்து வெள்ளை நிலாவும் வெட்கப்பட்டது’ என்று குழந்தை ராமனை பற்றி சொல்லுவார்.

பாமரனைச் சென்று அடைவதே சிறந்த இலக்கியம் என்பார்கள். அதற்கு வாழம் வழிகாட்டி வாலி.

அவருடன் அன்றாட பழகும் பல நண்பர்களைவிடவும் நான் அவருக்கு நெருக்கம்.எப்படி? அவருக்கு நெருக்கமானவர்கள் பெயர்களை அடிக்கடி குறிப்பிடுவார். அந்த வரிசையில் என்றுமே நான் இருந்ததில்லை.` ஊரார் பிள்ளையைத்தான் ஊட்டி வளர்க்க வேண்டும். தன் பிள்ளை தானே வளரும்’ என்கிற தாயுள்ளத்தோடு என்னைப் பார்ப்பவர்.

நடிகர் சிவகுமாரை `கலையுலக மார்கண்டேயன் என்பார்கள். அதே கலையுலகத்தின் `கவியுலக மார்கேண்டேயன்’ எனலாம்.தனது 31 வயதில் பாட்டால் பவனி வரத் துவங்கிய வாலி, இன்று 21 வயது இளம் இசையமைப்பாளனுக்கு ஆங்கிலம் கலந்த தமிழிலும் எழதிக்கொண்டிருப்பதே அவர் மார்கண்டேயத்தனத்திற்கு எடுத்துக் காட்டு.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட இந்திய ஒருங்கிணைப்பின் சிற்பி வல்லபாய் படேல் பிறந்த அதே தினத்தில் பிறந்தவர் இந்த இசைந்த மனிதர் வாலி. இவரையும் நிச்சயம் வரலாறு குறித்துக்கொள்ளும். வாழ்க நீ எம்மான் !