May 6, 2008

இப்படை தோற்கும்


ஒரு நாட்டை கைப்பற்ற வேண்டுமானால் முதலில் அந்த நாட்டின் கலாச்சாரத்தை, அடிப்படை மதிப்பீடுகளை களைந்து போடு. அவர்கள் சிந்தனையின் நீ புகுந்து விடு. உன்னைப் பற்றியே நினைக்க வை.உன் நடை உடை பாவனைகளை அவர்கள் பின்பற்ற செய். உன் தேசத்தின் மீது அவர்களை பற்று கொள்ள வை.உள்நாட்டில் பிழைக்க முடியாது, உன் நாட்டில்தான் செல்வச் செழிப்பு என்கிற நம்பிக்கையை விதை. பிறகு அந்த நாட்டிற்குள் நீ போர் தொடுத்தாலும் தேசப்பற்றோடு போர் புரிய அங்கே வீரன் இருக்க மாட்டான். இது பொதுவான் விதி.


இதைத்தான் இன்று அமெரிக்கா வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறது. உலகமயமாக்கலின் விளைவுகளை இப்போதுதான் நாம் உணரத்துவங்கியிருக்கிறோம்.எல்லாமே அமெரிக்க மயமாகிவிட்ட பாரதத்தில் இன்னொரு மறைமுக ஆபத்தும் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை பரவலான வெகுஜன ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் வீபரீதம்.


இந்த ஆபத்து இந்திய ராணுவத்தில் உருவாகிக்கொண்டிருக்கிறது.இந்த வருடத் துவக்கத்தில் இந்திய ராணுவ தலைவர் ஜெனரல் தீபக் சோப்ரா தன் கவலையைத் தெரிவித்து இருந்தார். அதைப் பற்றி மத்திய அரசு கூட பெரிதாக கவலைப்படவில்லை. இந்திய ராணுவத்தில் 11,238 அதிகாரிகள் பற்றாக்குறை. அதிகாரபூர்வமான ஏற்றுக்கொள்ளப்பட்ட எண்ணிக்கை 46,615. இதில் 600 அதிகாரிகள் தங்களின் ஒய்வு காலத்திற்கு முன்பாகவே ஒய்வு பெற எழதிக்கொடுத்துவிட்டார்கள். இந்த நிலையில் ராணுவத்தில் சேர முன்பு போல ஆர்வம் இல்லை. 2008ல் தேசீய பாதுகாப்பு அகாடமி கடக்வாச்லார் தேவையான வீரர்கள் 300பயிற்சிக்கு வந்தவர்கள் 190 பேர் மட்டுமே. டெஹ்ராடூனில் நிலைமை இன்னும் மோசம். அங்குள்ள இந்திய ராணுவ அகாடமியில் தேவை 250 வந்தவர்கள் 86 பேர் மட்டுமே


ராணுவத்தின் பலம் 1980களிலிருந்து வீழ்ந்து கொண்டுதானிருக்கிறது.காரணம் வெளிப்படை. குறைந்த சம்பளம்,பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் குறைவு, சிதைந்த குடும்ப வாழ்க்கை, வசதி இல்லாமை, கடினமான, சுகாதாரமற்ற வாழம் சூழல், அவர்கள் வாழ்க்கை நிலையைப் பற்றி அக்கறை கொள்ளாத அரசு.


தனியார் நிறுவனங்களில் ஒரு இளம் அதிகாரியின் மாதச் சம்பளம் 75,000 ரூபாய். இந்த தொகை ஒய்வு பெறும் ராணுவ தலைவருக்கு கூட கிடையாது.ஊருக்கு ஊர் மாற்றலாகிப்போகும்போது குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. முன்பு போல பெண்கள் ராணுவ அதிகாரிகளை திருமணம் செய்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் அவர்களுடைய தொழில் திறன் பாதிக்கப்படுகிறது. இதில் இன்னொரு சுவாரஸ்யம் ராணுவ பலத்தை விட ஒன்றரை மடங்கு நாட்டின் போலீஸ் படை உள்ளது. ஆனாலும் சுதந்திரத்திற்குப்பின் உள்நாட்டு கலவரம், இயற்கை சீற்றங்கள் போன்ற விஷயங்களுக்கு நான் இன்னுமும் ராணுவ உதவியைத்தான் நாடுகிறோம்.

ராணுவத்தில் அவலத்தை உணராவிட்டால் நிச்சயம் இப்படை தோற்கும். காரணம் படை இருந்தால்தானே வெற்றி பெறமுடியும்.