May 28, 2008

உள்ளம் கவர்ந்த கள்வர்கள்


கோடைக்காலத்தில் பாட்டி கையில் தயிர் சாதத்தை பிசைந்து போட்டு அதில் கற்சட்டியில் வைத்த வத்த குழம்பை ஊற்றி சாப்பிட வைப்பது,

வளர்ந்த பிறகும் அம்மாவின் புடவையின் வாசனையை நுகர்ந்தபடி படுத்து தூங்குவது,

நண்பனாக கிடைக்கும் அப்பா,

வாழ்க்கையின் நிர்பந்தங்களினால் காணாமல் போன பால்ய நண்பனை மீட்டெடுப்பது,

ஒற்றுமையாக இருக்கும் சகோதர சகோதரிகள்,

உழைத்து கிடைத்த பணத்தை வைத்து பேராசை இல்லாமல் வாழ்வது

பிறருக்கு கொடுத்து மகிழ்வது,

பல வருடங்களுக்கு பிறகு சொந்த கிராமத்துக்கு போய் அந்த மண்ணின் வாசனையை நுகர்வது,

மனைவியை சினேகிதியாக நினைத்து, மகளிர் மசோதா இல்லாமலேயே அவளுக்கு இதயத்திலும், வாழ்க்கையிலும் சம உரிமை கொடுப்பது,

பக்தி இலக்கிய தமிழில் கரைந்து போவது,

வீணையாய் இதயத்தை மீட்டும் நல்ல வார்த்தைகள் கொண்ட வாக்கியத்தில் வசியப்படுவது,

நல்ல சங்கீதம்,நல்ல சினிமா.

கொடுப்பினை என்கிற வார்த்தையில் நம்பிக்கை இருந்தால் இவையெல்லாமே கொடுப்பினைகள்தான்.

எனக்கு சமீபத்தில் கிடைத்த கொடுப்பினை (வியாபார சினிமாவின் விமர்சகர்களைப் பற்றி கவலை வேண்டாம்)

திரையரங்கில் போய் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தை பார்த்தது.

ஒவ்வொரு காட்சியிலும் மனித வாழ்க்கையின் யதார்த்த பிரதிபலிப்பு. அறிவோடு பேசாமல், உணர்வுகளோடு உலாவும் கதாபாத்திரங்கள்.

தெலுங்கு படமான பொம்மரிலுவின் தழவல் என்றாலும், கதை தமிழ் மண்ணோடு, ஏன் ஒவ்வொரு நல்ல குடும்பத்தோடும் ஒன்றிப்போகிற விஷயம் இந்தப் படம்.

ஒவ்வொரு நல்ல தகப்பனும் பிரகாஷ்ராஜில் தன்னைப் பார்ப்பான். பொத்தி பொத்தி வளர்க்கப்படுகிற எந்த மகனும், ஜெயம் ரவியில் தன் பிம்பத்தை காண்பான்.மனைவியில்லாமல் பெண் குழந்தையின் தகப்பன் ஒவ்வொருவனுக்குள்ளும் ஷ்யாஜி ஷிண்டே இருப்பார்.


படத்தில் பெரிய வெற்றியே கதாநாயகி ஜெனிலியாதான். அவருக்காக பாத்திரம் உருவாக்கப்பட்டதா, அல்லது இயக்குனரின் சிறப்பான தேர்வா? பட்டி மன்றமே நடத்தலாம்.அந்த கதாபாத்திரத்தின் இயல்பான வெகுளித்தனத்தால் உள்ளத்தை நெருடுகிறார். சில பெண்களைப் பார்த்தால் கையெடுத்துக்கும்பிட தோன்றும்,. திரை பாத்திரமாக இருந்தாலும், இனி அந்த கதாநாய்கியை எங்கு பார்த்தாலும் கைகள் குவியும், நமஸ்கரிக்க.

இந்த மாதிரி படம் எடுக்கிற கொடுப்பினை சிலருக்குத்தான் கிடைக்கும். அது இந்த படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்திற்கு கிடைத்திருக்கிறது. ஆனாலும் கொடுப்பினையிலும், அவருக்கு ஏற்பட்டிருக்கிற ஒரே குறை. படத்தின் இசை. தேவி பிரசாத் இந்த விபரீத ஆசையை மறந்துவிடலாம். நல்ல படமெடுக்கும் ரசனையுள்ளவர்கள் கூட நல்ல இசைதான் ஒரு படத்திற்கான முகவரி என்பதை மறக்காமல் இருக்க வேண்டும்.


கொதிக்கும் எண்ணெய்


பணவீக்கம், ஏறிக்கொண்டே போகிறது விலைவாசி, இப்போது அடுத்த கத்தி இந்தியர்களின் தலையில் தொங்கிக்கொண்டிருக்கிறது. அதுதான் பெட்ரோல், டிசல் விலை உயர்வு.இந்த எண்ணெய் விலை உயர்வு மீண்டும் பல அத்யாவசிய பொருட்களின் விலையை கூட்டும். திருவாளர் பொதுஜனத்தின் வயிற்றில் அடிப்பது என்று இந்தியாவின் இரு பொருளாதார மேதைகளான பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப சிதம்பரமும் கங்கணம் கட்டி கொண்டு அலைகிறார்கள்.


இதை இடது சாரிக் கட்சிகள் தொடர்ந்து கண்டிப்பதாலேயே அதை படித்த மேதாவிகள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் அதிலுள்ள பொருளாதார உண்மைகளை இன்று வரையில் நிதியமைச்சர் மறுக்கவில்லை. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது.இதனால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு 2 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்படுகிறது. அதனால் இந்த விலை ஏற்றம் அவசியம் என்கிறது மத்திய அரசு.


ஆனால் உண்மையில் பெட்ரோல் விலையில் ஒரு ரூபாய் அதிகரித்தால், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு 90 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும், டிசல் விலையில் ஒரு ரூபாய் அதிகரித்தால் ஒவ்வொரு மாதமும் 360 கோடி கிடைக்கும். சமையல் காஸ் விலையை 10 ரூபாய் அதிகரித்தால் 58 கோடி கூடுதலாக கிடைக்கும்.


ஆனால் தற்போது உள்ள கலால் வரியில் ஒரு சத வீதத்தை குறைத்தால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு கிடைக்கப்போகும் வருமானம் 1.380 கோடி. டிசலுக்கு விதிக்கப்படும் கலால் வரியில் 1 சதவீதத்தை குறைத்தால் ஒராண்டுக்கு 5, ஆயிடத்து 270 கோடி வருமானம்.


கச்சா எண்ணெய்க்கு தற்போது 5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதை ரத்து செய்தால் ஆண்டு ஒன்றுக்கு 2 லட்சத்து 72 ஆயிரம் 699 கோடி வருமான இழப்பு மிச்சமாகும்.பெட்ரோல், மற்றும் டீசல் மீது இப்போது சுங்க வரி தற்போது 75 சதவீதமாக உள்ளது. இதையும் குறைத்தால் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களின் வருவாய் இழப்பு தவிர்க்கப்பட்டு, பொது மக்கள் காப்பாற்றப்படுவார்கள்.

தற்போது விகப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையில் 14.35-ம், ஒரு லிட்டர் டீசல் விலையில் 4.60-ம், கலால் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் இந்த குறைப்பை செய்ய மத்திய நிதியமைச்சர் தயாராக இல்லை. அவர் சொல்வதிலும் ஒரு வித நியாயம் உண்டு. இந்தியாவின் மக்கட் தொகையில் எழபது சதவீத மக்கள் வருமான வரி வரம்புக்கு கீழே தான் உள்ளார்கள். வருமான வரி வரம்பில் உள்ளவர்கள் நேர்மையாக வரி செலுத்துவதில்லை. இப்போது உள்ள வருமான வரி கெடுபிடிகளால், வரி கட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் வருமானத்தை மூடி மறைத்து ஒரு சம்பிரதாயமாகத்தான் வரியை கட்டுகிறார்கள். அதே நிலைதான் பெரிய வியாபார நிறுவனங்களிலும் நடக்கிறது. இது ஒரு புறமிருக்க, இந்தியாவ பாதுகாப்பு பட்ஜெட் ஒரு லட்சம் கோடியை தாண்டிவிட்டது.நிலைமை இப்படியிருக்க வருமானத்திற்கான ஒரு வழி பெட்ரோலிய பொருட்களின் மீது கைவைப்பதுதான் என்பது நிதியமைச்சரின் வாதம்.


இடது சாரிகளின் பார்வை வேறு மாதிரியானது. பங்குச் சந்தை என்பது ஒரு யூக வியாபாரம். அதில் ஒரு லட்சம் மூதலீடு செய்து பங்கை வாங்குகிற ஒருவர் அதை மறுநாளே நான்கு லட்சத்திற்கு விற்று விடுகிறார். ஆனால் இந்த பணம் கணக்கில் வராது. அது கறுப்புச் சந்தையில் புழங்கும். அந்த பணத்தை வங்கியில் செலுத்தினால் மட்டுமே அது வருமான வரியை ஈர்க்கும். அதே போல் பன்னாட்டு நிறுவங்கள், பங்குச்சந்தையில் வந்து கோடிக்கணக்கில் விளையாடுகிறார்கள். நல்ல விலை வரும்போது தங்கள் பங்கை விற்றுவிட்டு தங்கள் நாட்டுக்கு போய்விடுகிறார்கள். இந்த யூகச்சந்தையில் புழங்குகிற பல கோடி ரூபாய்களுக்கு வரியே கிடையாது. மாதச் சம்பளம் வாங்குபவருக்கு சம்பளத்திலேயே வரியை பிடித்துக் கொடுப்பது போல இங்கேயும் செய்தால், அரசுக்கு நல்ல வருமானம். ஆனால் அப்படி செய்தால், அந்நிய மூதலீடு நமக்கு வராது என்பது நிதியமைச்சரின் கவலை. இந்த நிலையில் இன்னும் ஒராண்டுக்குள் சர்வதேச கச்சா எண்ணெய் விலை 200 டாலர்களைத் தொடும்.


அதற்கும் திருவாளர் இந்தியன் தயாராக இருக்க வேண்டும்.1967க்கு முன் தமிழகத்தில் அரிசி தட்டுப்பாடு வந்தபோது, அப்போது முதல்வராக இருந்த பக்தவத்சலம் மக்களை எலி கறி சாப்பிடச்சொன்னாராம். அதையே தான் இப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள். இப்போது நிதியமைச்சர் இனி மக்கள் கார் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தாமல் பொது போக்குவரத்து பஸ்களில் பயணம் செய்து, செலவை மிச்சப்படுத்துங்கள் என்று அறிவுரை சொல்லலாம். அதற்கு பிறகு நமது மாந்கர போக்குவரத்து பஸ்களில் உங்கள் பக்கத்தில் நிதியமைச்சர் அவ்ரது குடும்பம், தமிழக முதல்வரின் வாரிசுகள், ஜெயலலிதா, சசிகலா போன்ற பிரபலங்களும் உங்களோடு பயணம் செய்து சிக்கனத்திற்கு முன் உதாரணமாக திக்ழவார்கள் என்று நாம் இப்போதே பகல் கனவு காணலாம்.

May 27, 2008

பக்திக் காதல்


பக்தியோடு வளர்ந்தவள் ஆண்டாள்.அவள் தந்தை பெரியாழ்வாருக்கோ பக்தி என்பது உண்ணும் உணவும் பருகும் நீரும் போல.தன் மகளுக்கு பக்தி கலந்த பாலையும், தேனையும் ஊட்டினார் பெரியாழ்வார். தன் மகளுக்கு கதை சொல்லும்போது கூட ஹரி கதைகளையே சொல்லுவார். யானைக்கு அன்று அருள் புரிந்தான் அவன் என்பார். துஷ்ட அசுரரை அருளால் அழித்தான் என்பார். மானிட பண்பு விளங்க ராமனாய்ப் பிறந்து வீரனாகவும், அதிவீரனாகிய தியாகியாகவும், அடைக்கலம் புகுந்தவரை உயிர் கொடுத்து காக்கத் துணிந்த கருணைக் கடலாகவும் விளங்கியதை கதை கதையாக சொல்லுவார்.


முக்கியமாக கண்ணனின் கதையை கண் முன் நடப்பது போல் சொல்வார். கல்வியோடு கலைகளையும் கற்றவளாக வளர்ந்தாள் ஆண்டாள். இளமை காலம் தொட்டே பாகவதர்கள்தான் அவளுக்கு சினேகிதர்கள். பகவானுடைய கல்யாண குணக் கடலில் ஆடுவாள். திருவருளிலேயே மூழ்கி இருப்பாள். நந்தவனத்திலேயே பெரும்பாலும் பொழதைப் போக்குவாள். இவள் மனம் மலரோடு மலராய் மலர்ந்தது.


சொல்நயம், பொருள் நயம் மிகுந்த பாடல்களை சிறு பருவம் தொட்டே பாடத்துவங்கினாள்.ஆண்டாள் ஞானப் பூங்கோதையாக வளர்ந்தாள். சிற்றில் இழைத்து அதாவது சிறு வீடு கட்டி விளையாடும்போதே கண்ணனுடைய நினைவுதான் அவளுக்கு. மணலை சிறு சொளகில் இட்டு குழைத்து, வண்டல் மண்ணும் கலந்து தண்ணீர் விட்டு மிதித்து, சிறு வீட்டிலேயே சின்னஞ்சிறு முற்றம், நீளமாகிய கூடம், அழகிய அறைகள் எல்லாம் முதுகு நோக அமைக்கும்போதே, கண்ணன் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து, அந்த இல்லத்தை சிதைத்து விடுகிறானாம் பிறகு புன்முறுவலோடு நிற்கிறானாம். இது அவனுக்கு ஒரு விளையாட்டு.


மறுபடியும் ஆண்டாள் தோழிகளோடு சேர்ந்து வீடு கட்டத் துவங்குவாள். அவளுக்கு கண்ணம் மீது கோபமே வராது.


`கண்ணா, இச்சிற்றிலோடு எங்கள் சிந்தையையும் அழிப்பாய் போலிருக்கிறதே ! என்கிறாள் கோதை ஆண்டாள். ` பித்தேற்றி எங்களை மயக்குகிறாய் என்ன மாயம்! ஆயன் பெருமானே ! என்கிறாள்


இப்படி சிறு வீடு கட்டிய நினைவுகளும் மனோபாவத்தில் வளர்ந்து ` நாச்சியார் திருமொழி' என்ற கோதையார் பிரபந்தத்தில் இடம் பெற்றது.


பெய்யுமாமழை போல் வண்ணா ! உன் தன்

பேச்சும் செய்கையும் எங்களை

மையல் ஏற்றி மயக்க, உன்முகம்

மாய மந்திரம் தான்கொலொ?

என்பது திருமொழியில் ஆண்டாள் வாக்கு.

ஒரு கட்சி, இரு தூதர்கள்


சமீபத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம். இவர்களுடைய சந்திப்பு ஒன்று புதிதல்ல. ஆனால் இம்முறை அவர் வந்தது பிரதமரின் தூதுவராக என்கிற செய்திகள் ஆளுங்கட்சி வட்டாரத்தில் பேச்சு. முதலில் உத்திரபிரதேசம், குஜராத், சமீபத்தில் கர்நாடகத்தில் காங்கிரஸ் படுதோல்வியை தழவியிருக்கிறது. நேரு குடும்பத்தின் கவர்ச்சி முகங்கள் களையிழந்து கொண்டிருக்கிறது. சோனியா, ராகுல் இருவருக்குமே ஈர்ப்பு சக்தி இல்லை என்பதை இந்த தேர்தல்கள் நீருபித்து விட்டன். அடுத்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சடிஸ்கர், டெல்லி ஆகிய நான்கு மாநிலங்களுக்கு தேர்தல் வரப்போகிறது. இந்த நான்கு மாநிலங்களிலும் காங்கிரஸ் மண்ணை கவ்வினால், அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலில் நிலமை பரிதாபமாகிவிடும். அதனால் அந்த நான்கு முன்பு தேர்தலுக்கு முன்பே நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டுமென்பது சோனியாவின் விருப்பம். ஆனால் பிரதமரோ இந்த ஆட்சி முழ ஐந்தாண்டுகள் நீடிக்க வேண்டுமென்று நினைக்கிறார். அவரது இந்த எண்ணத்தை தெரிவிக்கும் தூதுவராகத்தான் நிதியமைச்சர் தமிழக முதல்வரை சந்தித்தாராம். ஆனால் இம்மாதம் 28ந் தேதி மத்திய அமைச்சர் அர்ஜீன் சிங் தமிழக முதல்வரை சோனியாவின் தூதுவராக சந்திக்க இருக்கிறாராம். தேர்தலை இந்தாண்டுக்குள் நடத்த வேண்டுமென்கிற சோனியாவின் விருப்பத்தை கருணாநிதியிடம் தெரிவிப்பார் என்று தெரிகிறது.


தேர்தலில் தோல்வியை தழவினால், கட்சி தலைமையை மாற்றுவது என்பது காங்கிரஸ் கலாச்சாரம். நரசிம்ம ராவிற்கு அந்த நிலைமை வந்தது. பிறகு அவரை தூக்க போர்க்கொடி தூக்கிய சீதாராம் கேசரியின் நிலை என்ன என்பதையும் பார்த்துவிட்டோம். அந்த நிலை சோனியாவுக்கு வருவதை தடுக்க அவரது விசுவாசிகள் தீவிர திட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.நான்கு மாநில தேர்தல்களுக்கு முன்பாகவே நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டுமென்பது இவர்களது முதல் செயல் திட்ட்ம்

May 25, 2008

வணக்கம்

என்னுடைய வலைப்பதிவில் சில மாற்றங்கள் செய்துள்ளேன். இனி தொடர்ந்து செய்திகளும், நிறைய தகவல் பரிமாற்றங்களும் இருக்கும். நெல்லை மாவட்டத்தில் இருக்கும் என்னுடைய சொந்த கிராமத்திறகு சென்று வந்தேன். ஊர் மண்ணில் கால் வைக்கும்போது இருந்த சந்தோஷம் கிளம்பும்போது காணாமல் போய்விட்டது. நகரத்தின் அவசர நரகத்திற்கு வருகிறோம் என்பதே மனதில் வலியைத் தருகிறது. அமைதியும் மகிழ்ச்சியும் பணத்தில் மட்டுமே இல்லை என்பதை அந்த மனிதர்களின் இயல்பு காட்டிக்கொடுத்தது.

மீண்டும் சந்திப்போம்.

May 6, 2008

இப்படை தோற்கும்


ஒரு நாட்டை கைப்பற்ற வேண்டுமானால் முதலில் அந்த நாட்டின் கலாச்சாரத்தை, அடிப்படை மதிப்பீடுகளை களைந்து போடு. அவர்கள் சிந்தனையின் நீ புகுந்து விடு. உன்னைப் பற்றியே நினைக்க வை.உன் நடை உடை பாவனைகளை அவர்கள் பின்பற்ற செய். உன் தேசத்தின் மீது அவர்களை பற்று கொள்ள வை.உள்நாட்டில் பிழைக்க முடியாது, உன் நாட்டில்தான் செல்வச் செழிப்பு என்கிற நம்பிக்கையை விதை. பிறகு அந்த நாட்டிற்குள் நீ போர் தொடுத்தாலும் தேசப்பற்றோடு போர் புரிய அங்கே வீரன் இருக்க மாட்டான். இது பொதுவான் விதி.


இதைத்தான் இன்று அமெரிக்கா வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறது. உலகமயமாக்கலின் விளைவுகளை இப்போதுதான் நாம் உணரத்துவங்கியிருக்கிறோம்.எல்லாமே அமெரிக்க மயமாகிவிட்ட பாரதத்தில் இன்னொரு மறைமுக ஆபத்தும் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை பரவலான வெகுஜன ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் வீபரீதம்.


இந்த ஆபத்து இந்திய ராணுவத்தில் உருவாகிக்கொண்டிருக்கிறது.இந்த வருடத் துவக்கத்தில் இந்திய ராணுவ தலைவர் ஜெனரல் தீபக் சோப்ரா தன் கவலையைத் தெரிவித்து இருந்தார். அதைப் பற்றி மத்திய அரசு கூட பெரிதாக கவலைப்படவில்லை. இந்திய ராணுவத்தில் 11,238 அதிகாரிகள் பற்றாக்குறை. அதிகாரபூர்வமான ஏற்றுக்கொள்ளப்பட்ட எண்ணிக்கை 46,615. இதில் 600 அதிகாரிகள் தங்களின் ஒய்வு காலத்திற்கு முன்பாகவே ஒய்வு பெற எழதிக்கொடுத்துவிட்டார்கள். இந்த நிலையில் ராணுவத்தில் சேர முன்பு போல ஆர்வம் இல்லை. 2008ல் தேசீய பாதுகாப்பு அகாடமி கடக்வாச்லார் தேவையான வீரர்கள் 300பயிற்சிக்கு வந்தவர்கள் 190 பேர் மட்டுமே. டெஹ்ராடூனில் நிலைமை இன்னும் மோசம். அங்குள்ள இந்திய ராணுவ அகாடமியில் தேவை 250 வந்தவர்கள் 86 பேர் மட்டுமே


ராணுவத்தின் பலம் 1980களிலிருந்து வீழ்ந்து கொண்டுதானிருக்கிறது.காரணம் வெளிப்படை. குறைந்த சம்பளம்,பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் குறைவு, சிதைந்த குடும்ப வாழ்க்கை, வசதி இல்லாமை, கடினமான, சுகாதாரமற்ற வாழம் சூழல், அவர்கள் வாழ்க்கை நிலையைப் பற்றி அக்கறை கொள்ளாத அரசு.


தனியார் நிறுவனங்களில் ஒரு இளம் அதிகாரியின் மாதச் சம்பளம் 75,000 ரூபாய். இந்த தொகை ஒய்வு பெறும் ராணுவ தலைவருக்கு கூட கிடையாது.ஊருக்கு ஊர் மாற்றலாகிப்போகும்போது குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. முன்பு போல பெண்கள் ராணுவ அதிகாரிகளை திருமணம் செய்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் அவர்களுடைய தொழில் திறன் பாதிக்கப்படுகிறது. இதில் இன்னொரு சுவாரஸ்யம் ராணுவ பலத்தை விட ஒன்றரை மடங்கு நாட்டின் போலீஸ் படை உள்ளது. ஆனாலும் சுதந்திரத்திற்குப்பின் உள்நாட்டு கலவரம், இயற்கை சீற்றங்கள் போன்ற விஷயங்களுக்கு நான் இன்னுமும் ராணுவ உதவியைத்தான் நாடுகிறோம்.

ராணுவத்தில் அவலத்தை உணராவிட்டால் நிச்சயம் இப்படை தோற்கும். காரணம் படை இருந்தால்தானே வெற்றி பெறமுடியும்.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி 3


பல வலைப்பதிவு வாசகர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க பக்தி மூலமாக தமிழ் பரப்பிய ஆண்டாளைப்பற்றிய செய்திகள் தொடர்கிறது.ஆண்டாளின் வாழ்க்கை என்பது வித்தில் அடங்கிய விருட்சம் என்று பொதுவாக சொல்லுவார்கள். காதல் துறையில் பெரியாழ்வார் தமது பக்தியை தாய் சொல்லும் பாசுரமாகவே வெளியிட்டிருக்கிறார் என்பது அந்த பாடல்களை படித்தாலே புரியும்.


ஆண்டாளை ஒரு கற்பனை கதாபாத்திரமாகவே பலரும் பார்த்தார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் ராஜாஜி, ரசிகமணி டிகேசி. தன் பாடல்கள் மூலமாக பெரியாழ்வார் ஆண்டாள், அவள் வாழ்க்கைப் பற்றி ஒரு தீர்க்க தரிசனமாக முன்கூட்டியே உணர்ந்துகொண்டார் என்று நினைப்பவர்களும் உண்டு.


`பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்' என்று ஒரு பாடலில் வருகிறது. ஆண்டாள் தன்னைப் பற்றி சொல்லும்போது ` பட்ட்ர்பிரான் கோதை' என்கிறாள்.` ஒரு மகள் தன்னையுடையேன்' என்கிறார் பெரியாழ்வார். இவற்றை வைத்து ஆண்டாளை சிலர் பெரியாழ்வாரின் சொந்தப் பெண் என்றே கருதுகிறார்கள்.


குருபரம்பரைக் கதைகளோ எல்லாம் ஒரு முகமாக ஆண்டாளை வளர்ப்புப் பெண்ணாகவே சொல்கின்றன். ` இவளுக்கு துளசியே தாய், பெரியாழ்வார் தந்தை' என்கிறார் ஒரு கவிஞர். இவள் பூமித்தாயின் புதல்வி என்று சொல்பவர்களும் உண்டு. பக்திக்கும், பணிக்கும் ஒரு இலக்கிய உதாரணமாக தோன்றியவள் என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் நம்புகிறார்கள்.


சூரியோதயத்திற்கு முன்பு பெரியாழ்வார் நந்தவனத்திற்குப் போனார், திருத்துழாய் செடியின் `மடி' யில் குழந்தை கோதையை கண்டாராம், ஒரு ஜோதி ரூபமாக,


ஜோதிமேல் ஜோதியாகித்

துலங்குதல் தொண்டர் கண்டார்

என்கிறார் வடிவழகிய நம்பிதாசர்


பசுமையாக இருந்த அந்த நந்தவனத்திலே ஒரு பகுதியிலே ! அங்கே பெரியாழ்வார் அதிசயமாக குழந்தை கோதையை கண்டாராம்


புதுமதுப் பொங்கும் பச்சைப்

பசுந்துழாய்ப் பூட்டினூடே

கதுமென விழியால் நோக்கி,

கருணையின் கொழந்தைக் கண்டார்


இந்தக் கருணை கொழந்தை பக்திக் கொழந்தாக பெரியாழ்வார் வளர்த்தார்,தத்துக்கொண்டதைப் போலே.ஏற்கெனவே, பெரியாழ்வாரின் பரம பக்தி மானசீகமாக கண்ணனைப் பெற்று வளர்த்தது. யசோதை தாய் போல், தேவகி தாய் போல், பெரியாழ்வாரும் தாயாகிவிட்டார்

பெரியாழ்வார் மானசீகமாகப் பெற்று வளர்த்த மகள் பாலகோபாலனுக்கே வாழ்க்கைப்பட்டாள் கோதை. அவனையே காதலித்தாள்; அவனுக்கே பித்தானாள்; அவன் காதலியாகவே வளர்ந்து வந்தாள். வளர்ப்புப் பெண் மானசீகப் புத்திரனை மணந்தாள் என்பது ஆண்டாளின் ரத்தினச் சுருக்கமான கதை.
கன்னித்தமிழ் தேவி மைக்கண்ணன் அவள் ஆவி
தன் காதல் மலர் தூவி மாலையிட்டாள் ' என்பார் கண்ணதாசன்.May 5, 2008

இசை இல்லை என்ற நாளில்லை


இந்த வருடம் மே மாதம் 2 ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை. திருவான்மியூர் வால்மீகி நகரில் ஸ்ரீமயம் குடியிருப்பின் மூன்றாவது தளத்தின் மொட்டை மாடி. கடற்கரை காற்றுக்கு தடை போட்டுக்கொண்டிருந்தது கோடையின் சூடு. ஆனாலும் சூடு தெரியவில்லை. காரணம் எங்களுக்கு முன்பு இருந்தது ஒரு மெல்லிசை தென்றல்.அந்த தென்றலின் நெற்றியில் திருநீறு,நடுவில் வட்டமான குங்குமப் பொட்டு.அந்த வெண்மையான சட்டையிலிருந்து மணக்கும் அயல்நாட்டு வாசனை. கழத்தில் ரூத்திராட்சம். இடது கையில் பளபளக்கும் தங்க நிற கைகடிகாரம். உடல் மட்டும்தான் மெலிந்திருந்தது. அவரது கண்கள் காற்றில் கூட கானத்தை தேடிக்கொண்டிருந்தது.


எழத்தாளர் வாமனன் பாணியில் சொல்ல வேண்டுமானால்,` இசை மூலம் அமரத்துவம் நாடத்துடிக்கும் வித்தை அவருடையது! அது கோடிக்கணக்கான தமிழர்களின் நெஞ்சில் சங்கமித்த சங்கீத காவேரி,மெல்லிசை தாமிரவருணி, நல்ல தமிழக்கு ஸ்வரம் பிடித்த தென்மதுரை வைகை நதி!

மலர்ந்தும் மலராத பாதி மலர்களை மலரச்செய்த மணி இதழ்கள்... ஆர்மோனியத்தின் கறுப்பு வெள்ளைக் கட்டைகள் மீது நூறாயிரம் வண்ணங்களை நூறாயிரம் நடைகளில் காட்டி, நடனமாடிய வைர விரல்கள் ... நட்சத்திரக்கூட்டங்களை மெல்லிசைத் தோரணங்கள் ஆக்கிவிட, சங்கீதக் கனவுகள் கண்ட கந்தர்வனுக்குரிய மின்காந்த விழிகள்...'' புரிந்ததா அவர் யாரென்று?


அவர்தான் 9.2.1932ல் கேரளாவின் எலப்புள்ளி கிராமத்தில் பிறந்த மனையங்கத்து சுப்ரமணியன் நாயர் விஸ்வநாதன். நமக்கெல்லாம் பின்னாளில் எம்.எஸ். விஸ்வநாதனாக அறியப்பட்டவர்.எனது பள்ளி நாள் தோழர் சி.பி, ராம்மோகன் ஒரு சங்கீத ரசிகர். மெல்லிசை மன்னரின் பாடலையும் எடுத்துக்கொண்டு அதன் பின்னனியில் இருக்கும் இசையை வாத்ய சுத்தமாக கொண்டு வரக்கூடியவர்.கடவுளுக்குப் பிறகு தன்னில் உள்ள நவரச குணங்களையும் தட்டி எழப்பியவர் எம்.எஸ்.வி. என்று நம்பக்கூடியவர்.அந்த ஒரு மணிநேரம் உணர்வுகள் சில்லிட்டுப் போனது. இன்னுமும் அந்த ராக அலைகள் உடலுக்குள் ஊடுருவிய உணர்வு. இத்தனைக்கும் அவர் எங்களுக்காக பாடவில்லை. அவர் ராக ராஜாங்கத்தின் ஆளுமையை பற்றித்தான் விவாதித்துக்கொண்டிருந்தோம்.

பேசப்பேச அவர் கண்களில் இருந்து மறைந்துபோனார், காற்றோடு கலந்து போயிருக்கும் கானங்கள் செவிப்பாறைகளை வருடிக்கொடுத்தது.கானங்களை சுமந்த கதாபாத்திரங்கள் காட்சிகளாக விரிந்தார்கள்.எத்தனை விதமான பாடல்கள்.

தனது மூன்றாவது வயதில் தந்தையை இழந்து, அதற்கு ஆறு மாதத்தில் தன் தங்கையையும் இழந்தவர். தாய்தான் ஒரே ஆதரவு. தாய் வழித்தாத்தா கிருஷ்ணன் நாயர்,மீட்காவிட்டால் இந்த இசைக் கடல் ஏதாவது ஒரு குட்டையில் கரைந்துபோயிருக்கும்.


கேரளத்தின் வடகிழக்கில் இயற்கை எழில் கொஞ்சும் ஊர் கண்ணனூர். அங்கே கிருஷ்ணன் நாயருக்கு மாற்றலாகியது. அங்கேதான் நீலகண்ட பாகவதரின் வடிவிலே விஸ்வநாதனுக்காக இசை காத்துக்கொண்டிருந்தது.


மாதம் மூன்று ரூபாய் கொடுத்து இசைப்பள்ளியிலே சேர வசதியில்லாத விஸ்வநாதனை, தனது பள்ளியில் எடுபிடி வேலையாளாக சேர்த்துக்கொண்டார் நீலகண்ட பாகவதர்.

விஸ்வநாதனுக்கு கற்பூர புத்தி என்பதை அவர் புரிந்து கொண்டார் காசு வாங்காமலே சங்கீதம் கற்றுக்கொடுத்தார் நீலகண்ட பாகவதர்.நான்கு ஆண்டுகள் கர்நாடக சங்கீத பயிற்சிக்குப்பின் கண்ணனூர் டவுன் ஹாலில் மூன்று மணி நேரம் கச்சேரி செய்ய வைத்தார் நீலகண்ட பாகவதர்.

வாழ்க்கை திசை மாறியது, விஸ்வநாதன் திரை உலகில் சம்பாதிக்க தொடங்கியவுடன் தனது குரு தட்சிணையை எடுத்துக்கொண்டு கண்ணனூர் திரும்பினார். அதை ஏற்றுக்கொள்ள அப்போது நீலகண்ட பாகவதர் உயிரோடில்லை.இவருடைய இசையை ஏற்றுக்கொண்டவர் இசையமைப்பாளர் சி.ஆர், சுப்புராமன். இவருக்கு குருவாக இருந்தவர் மறைந்த இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு. ஜீபிடர் பிகசர்சில் அவர்தான் இவரை சிபாரிசு செய்தார். பிறகு எம்ஜீஆர் நடித்த ஜெனோவா படத்தில்தான் வாய்ப்பு வந்தது. முதலில் இவரை ஏற்றுக்கொள்ள மறுத்த எம்ஜீஆர் பின்னார் இவரது இசையில் மயங்கி, ` இனிமேல் என் படங்களுக்கு நீங்கள்தான் இசை' என்றார். தனது பாடல்களை தனது ஆசான் சுப்புராமன் கேட்கவேண்டுமென்று விரும்பினார் எம்.எஸ்.வி. அவருக்காக காத்திருந்தபோது, அவர் இறந்துவிட்ட செய்திதான் விஸ்வநாதனுக்கு கிடைத்தது.

அவர் இறக்கும் தருவாயில் அவர் இசையமைத்துக்கொண்டிருந்த படம் தேவதாஸ். அந்த பணியை முடித்துக்கொடுக்கும் வேலை அவரது உதவியாளர்களாக இருந்த விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு இருந்தது.தேவதாஸ் படத்தில் கண்டசாலா பாடிய ` உலகே மாயம்' பாலசரஸ்வதி பாடிய `சந்தோஷம் வேணும் என்றால்' பாராமுகம் ஏன் அய்யா ' ஆகிய மூன்று பாடலகளையும் மெட்டமைத்தது இந்த இரட்டையர்கள்தான்.


இருவரும் தனியாக இசையமைத்த முதல் படம் கலைவாணரின் பணம்.மெல்லிசை மன்னருக்கும். இளையராஜாவுக்கு ஒரு ஒற்றுமை உண்டு, ஐம்பதுகளின் இறுதியில் தமிழ்நாட்டை இந்தி பாடல்கள் ஆக்ரமித்துக்கொண்டிருந்தது. அதை விரட்டி ரசிகர்களை தமிழ் பாடல்களின் பக்கம் இழத்தவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி. அதே நிலை 1976ல் இளையராஜாவுக்கு இருந்தது. ஆராதனா, பாபி, யாதோன் கீ பாரத் வெற்றிப் படங்களின் பாடல்கள் தமிழக்த்தின் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது. அதிலிருந்து தமிழ் இசையை மீட்டவர் இளையராஜா.


1960 களுக்குப் பிறகு தமிழ் சினிமாவை கட்டி ஆண்டவர்கள் இந்த இரட்டையர்கள். எத்தனை விதமான பாடல்கள்.பீம்சிங், சிவாஜி கணேசன் கலப்பில் உருவான `பா' வரிசை ப்டங்கள்,. கூடவே எம்ஜீஆரின் படகோட்டி, தெய்வத்தாய். ஆயிரத்தில் ஒருவன், ஸ்ரீதரின் நெஞ்சில் ஒர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, காதலிக்க நேரமில்லை. என்று இரட்டையர்களின் சாம்ராஜ்யம் விரிந்து கொண்டே போனது. காலம் இரட்டையர்களை 1965ல் பிரித்தது. அதற்கு பிறகு விஸ்வநாதனின் நாத படைக்கு பலம் கூடியது என்றே சொல்லலாம்.அடுத்த பத்து ஆண்டுகள் தமிழ் சினிமாவிற்கு விலாசமே விஸ்வநாதன் என்றானது. அவர் பாடல்களில் பட்டியலை இங்கே கொடுப்பது நோக்கமில்லை.


பொதுவாக தமிழன் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் நிச்சயமாக கண்ணதாசன் விஸ்வநாதன் கலந்த பாடல்கள் நிச்சயமிருக்கும். உலகெங்கும் இன்று அவருக்கு கோடான கோடி ரசிகர்கள். சமீபத்தில் கோவையில் நடந்த சம்பவம் இது. ஒரு ரசிகர் கோமாவில் இருந்தார். எந்த மருத்துவ முயற்சியும் பலன் தரவில்லை. வேறு முயற்சியில் இறங்கலாம் என்று அவருக்குப் பிடித்த விஸ்வநாதனின் பாடல்களை போடுங்கள் என்றார்கள். அதிசயம் ஆனால் உண்மை. அவர் விழித்துக்கொண்டார். அதோடு ஏன் `சட்டி சுட்டதடா' பாடலை போடவில்லை என்று கேட்டார். அவருடைய உறவினர்கள் இதை விஸ்வநாதனுக்கே தெரிவித்தார்கள்.

இந்த இசைக்குள் வெளியே தெரியாத ஒரு இன்னிசை ஒளிந்திருக்கிறது. அதுதான் நன்றி உணர்ச்சி, அடக்கம், எளிமை, பணிவு. நன்றி உணர்ச்சிக்கு ஒரு உதாரணம். இவரது குருநாதர் எஸ். எம். சுப்பையா நாயுடுவிற்கு குழந்தைகள் இல்லை. அவர் படமில்லாமல் இருந்த காலத்தில், தமிழகத்தில் முதலமைச்சராக இருந்தவர் மறைந்த எம்.ஜீ.ஆர். அவரது தலைமையில் நடிகர் திலகத்தையும் வைத்து ஒரு நட்சத்திர இசை விழா நடத்தி அவருக்கு நிதி திரட்டி கொடுத்தார். பிறகு அந்த தம்பதிகள் நோய்வாய்ப்பட்டபோது அவர்களை தன் வீட்டில் கொண்டு வந்து தங்க வைத்தார். எஸ்.எம்.எஸ். இறந்தபோது அவருக்கு மகனாக இருந்து கொள்ளிவைத்தார். அதற்கு பிறகு ஒன்பது வருடங்கள் கழித்து அவரது மனைவி இறந்தார். அவரும் இறுதிவரை விஸ்வநாதனோடு இருந்தார். அவருக்கும் கொள்ளி வைத்தவர் விஸ்வநாதன். அவருடைய பண்பிற்கு ஒரு உதாரணம்., ஸ்ரீதர் படங்களுக்கு ஆரம்பத்தில் இசையமைத்துக்கொண்டிருந்தவர் ஏ.எம். ராஜா. அவருக்கும் ஸ்ரீதருக்கும் கருத்து வேறுபாடு. ஸ்ரீதர் விஸ்வநாதனிடம் வந்தார். உடனே விஸ்வநாதன் ராஜாவை சந்தித்து, அனுமதி பெற்ற பிறகே ஒப்புக்கொண்டார்.

கர்ணன் படத்தை இந்தியில் எடுக்க முடிவானது. நடிகர்கள் கூட முடிவானது. ஆனால் அந்த முயற்சி இறுதியில் கைவிடப்பட்டது. காரணம் இந்த இசையை கொடுக்க அங்கே ஆளில்லாததால்!

இத்தனை சாதனை படைத்த ஒரு கலைஞனுக்கு, இன்று வரை ஒரு தேசியவிருது கிடைக்கவில்லை.இன்று டெல்லியை தாங்கி பிடித்துக்கொண்டிருப்பது திமுக. முதல்வருக்கு நெருக்கமானவர்களுக்கு தேசிய விருதை தீர்மானிப்பதும் அக்கட்சியின் தலைவர்தான்.விஸ்வநாதன் உருவாக்கிய பாடல்களுக்கு குரல் கொடுத்தவர்களுக்கெல்லாம் தேசிய விருது கிடைத்துவிட்டது. ஆனால் விஸ்வநாதனின் நினைவு இங்குள்ள தன்மான தமிழர்களுக்கு வரவில்லையா? அல்லது எம்.ஜீ.ஆர் மீதுள்ள கோபம் அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் மீது காட்டப்படுகிறதா? அப்படியானால் ஆஸ்தான இசையமைப்பாளர் இசைக்கு வரி கொடுத்த கவிஞர் வாலிக்கு மட்டும் அதுவும் காலதாமதமாக எப்படி பத்மஸ்ரீ கிடைத்தது.


உண்மையில் சொல்லப்போனால், தனக்கு தாமதமாக வந்த விருதை கவிஞர் வாலி திருப்பிக்கொடுத்திருக்க வேண்டும். காரணம் கவிஞர் வாலி கண்ணதாசனுக்கே சவால் விட்டவர். இப்போது எனக்கொரு ஆசை. விஸ்வநாதன் வாழ்நாளைக்குள் உலகமெங்கும் உள்ள அவரது கானத்தினால் கட்டுண்ட தமிழர்கள் உரக்க கம்பீர குரல் எழப்ப வேண்டும். அந்த குரல் கோபாலபுரத்திலிருந்து, குடியரசு தலைவர் மாளிகை வரை எட்ட வேண்டும். அந்த விருதை விஸ்வநாதன் நிராகரித்து திருப்பி அனுப்ப வேண்டும். காரணம் இது வெறும் தேசிய விருதுதானே, அவருக்குத்தான் ரசிகர்கள் என்கிற சர்வதே விருது ஏற்கெனவே கிடைத்துவிட்டதே.இது நமது பெருமித திருப்தி.


அவரைப் பொறுத்தவரையில் அவர் அடிக்கடி சொல்வது இதுதான் `இல்லை என்ற நாளில்லை; இன்னும் என்னும் ஆசையில்லை'.


வணக்கம்


இனிய வாசகர்களே

என்னுடைய வலைப்பதிவைப் பற்றி உங்களோடு பேச வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன்.ஏராளமான எழத்தாளர்கள் இப்படி இணையதளத்தில் தங்கள் எழத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்.அதற்கும் என்னுடைய வலைப்பதிவிற்கும் வேறுபாடுகள் உண்டு.. அவர்கள் படைப்பாளிகள், நான் சாதாரண பத்திரிகையாளன். அவர்கள் நிறைய படித்தவர்கள். நான் ஒரு பாமர நிருபனாக இருந்து கால ஒட்டத்தில் பத்திரிகை ஆசிரியனாக உயர்த்தப்பட்டேன்.அது என் தகுதிக்கு கிடைத்த உயர்வா அல்லது சூழலின் கோலமா என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் ரஜினிகாந்த்தை வைத்து பிரும்மாண்டமாய் சிவாஜி எடுத்துக்கொண்டிருக்கிற நேரத்தில், நான் இன்றைக்கும் அவரை வைத்து அவள் அப்படித்தான் எடுக்கலாமா என்று யோசிக்கிறவன்.அவர்கள் லாங் சைட் என்றால் நான் ஷார்ட் சைட் .நான் என் வலைப்பதிவில் என் அறிவைத்திறனை பறைசாற்றி கொள்வதை விட கண்டதையும் கேட்டதையும் எல்லா தரப்பினரும் விரும்பும் வகையில் கொடுக்க நினைக்கிற ஒரு வெகுஜன பத்திரிகையாளன். என்னுடைய எழத்துக்களுக்கு இலக்கிய அந்தஸ்தோ, தரமோ, உலகளாவிய பார்வையோ இருக்காது. நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை மட்டுமே எனக்குண்டு.பல பெரிய ஊடக ஸ்தாபங்களில் கிடைக்காத சுதந்திரம் எனக்கு இங்கே கிடைக்கும். வியாபார நிர்பந்தங்கள் இல்லை. என்னுடைய எழத்துக்களை நானே தீர்மானிக்கிறேன். விளம்பர பிரிவின் மேலதிகாரி அல்ல.

மனதில் பட்டதை துணிச்சலாக சொல்லுவேன். பொழதுபோக்கும், சினிமாவும்தான் தமிழர்களின் ஜீவாதார பிரச்னையாக ஊடகங்கள் பார்க்கத்துவங்கிவிட்டன. காரணம் இந்து நாளிதழின் கிராமப்புற ஆசிரியர் சாய்நாத் சொன்னதைப் போல இப்போது செய்தி ஊடகங்கள் வியாபார ஸ்தாபங்களின் கைக்குள் சிக்கிவிட்டது.செய்திகளின் தரத்தை வைத்து வாசகர்களின் எண்ணிக்கை பெருகி அதன் மூலமாக விளம்பரங்கள் கிடைக்கவேண்டும் என்கிற நிலை மாறி, விளமபரங்களுக்கு நடுவே, கு நடுவே, அந்த விளம்பர தாரர்களின் வியாபார நலன்கள் பாதிக்காத வகையில் செய்திகள் என்கிற நிலை வந்துவிட்டது.சமீபத்தில் ஒரு கல்லூரியின் இதழியில் துறையின் மாணவர்களோடு பேச நேர்ந்தது. அதில் நூற்றுக்கு தொண்ணூத்தி ஒன்பது பேர் பொழதுபோக்கு, சினிமா,சமையல் துறைகளில்தான் நிருபர்களாக வேண்டும் என்று துடிக்கிறார்கள். அரசியல், நீதித்துறை,கிராமப்புற அவலங்கள், சமூக சீர்கேடுகள் குறித்த துறையில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. ஒரு பத்திரிகையாளனுக்கு தேவையான ஒரு சமூக பார்வை அவசியமற்றது என்பது இளம் தலைமுறையினருக்கு ஆழமாக பதிந்துவிட்டது. எந்த கதவுகளையும் திறக்க வைக்கும் அதிகார சாவியாகத்தான் இந்த துறையை பார்க்கிறார்கள். இன்னும் பலருக்கு இது புகழம், பணமும் கொடுக்கும் சினிமாவிற்கு போகும் வழித்தடமாகவே தெரிகிறது.


தினமணியில் பொறுப்பாசிரியராக இருந்தபோது தேதியில்லாத டைரி என்று ஒரு தொடர் எழதினேன். அதன் கடைசி அத்தியாயத்தில் எழதியதை மீண்டும் இங்கே பதிவு செய்ய நினைக்கிறேன்.


`பிரும்மாண்ட அரங்கும், செழமையான காட்சிகளும் அமைக்கும் திறன் கொண்ட எழத்தாளர்களுக்கு நடுவே,இந்த பாமர நிருபனும் புகுந்து வர ஆசைப்பட்டதன் விளைவும் கூட இந்த வலைப்பதிவுக்கு ஒரு காரணம்'.


சுதாங்கன்

May 4, 2008

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி - 2


ஆண்டாளைப் பற்றிய இந்த சிந்தனைகள் ஆன்மிகப் பிரசாரம் அல்ல.நாத்திகம் என்கிற பெயரால் எப்படி நல்ல தமிழ் பக்திக்குள் கிடந்ததால், தமிழகத்தை விட்டே விரட்டி அடிக்கப்பட்டது என்பதற்கான ஒரு வரலாற்று பதிவேடுதான். பக்தி இலக்கியங்களிலிருந்த நல்ல தமிழை நினைவுபடுத்தும் ஒரு முயற்சி.

ஒரு ராணி இருந்தாள். அவள் கடவுளுக்காக வைத்திருந்த மலரை நுகர்ந்து பார்த்தாள். அதற்காக அவளுக்கு தண்டனை கிடைக்கிறது.பக்திக்கு ஆசாரம் மிகவும் அவசியமானது என்பது மரபு.இதே கதை சைவத்திலும் உண்டு. இந்தச் செய்தியை உலகத்திற்கு சொன்னவர் சேக்கிழார் பெருமாள்.கண்ணப்பன் கதையில் வேடனின் எச்சிலை கூட சிவபெருமான் விரும்பிய்தாக பாடியுள்ளார்.இக்கதையில் அவர் ஆசாரம் பக்திக்கு மேலானது என்று காட்டுகிறார்.


ஆண்டாளின் கதையில் பெரியாழ்வார் நறுமலர் கொயது பூமாலை தொடுத்துக் கூடையில் வைத்திருந்தார். அந்த பூக்களின் நறுமணம் தன் தந்தையாரின் கைவண்ணம் என்று நினைத்தாள். பிறகு அந்த மலரை தன் தலையில் சூடிக்கொண்டு தானும் அதற்கு நறுமணம் சேர்ப்பதாக நினைத்தாள். தினமும் ஆண்டாள் சூடிய மலர்களே பெருமாளுக்கு போனது. ஒரு நாள் மாலையில் ஒரு உரோமம் தென்பட்டது. அதைக் கண்ட அர்ச்சகர் `மாலைகள் அசுத்தமாகிவிட்டன' என்று திருப்பி கொடுத்துவிட்டார். இதற்கு காரணம் யார் என்று தெரிந்து ஆண்டாளை கடிந்து கொண்டார். நல்ல மாலையை கொண்டு போனார் கோவிலுக்கு. அன்று இரவு பெரியாழ்வாரின் கனவில் பெருமாள் தோன்றி `பூவின் இயற்கை மணத்தோடு உம்முடைய புதல்வியின் கூந்தல் மணமும் எனக்கு பிடிக்கும்' என்றார்.இதே போல் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்த பலரும் கனவு கண்டார்கள்,` தன் மகள் தன் பரமபக்தியால் என்னை ஆண்டு கொண்டாள்' என்றார் பெரியாழ்வார். அன்றுவரை கோதையாக இருந்த்வள் ஆண்டாளாக ஆனாள்.இது பரமபக்தியின் உச்ச நிலை.ஆண்டாளின் காதலை பரமபக்தியாக எடுத்துக்கொண்டார் ஆண்டவன்


`ஒரு மகள் தன்னை உடையேன்:

உலகம் நிறைந்த புகழால்

திருமகள் போல் வளர்த்தேன்'

செங்கண்மால்தான் கொண்டு போனான். என்பது பெரியாழ்வார் வாக்கு.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடிசூடிகொடுத்த சுடர்க்கொடி என்றாலே ஆண்டாளின் நினைவுதான் நமக்கு வரும். ஒரு முறை நாராயணனிடம் லட்சுமி கேட்டாள். ` உங்கள் பக்தர்களிலே உங்களுக்கு யாரை அதிகம் பிடிக்கும்?'


`எனக்கு பூமாலை சூடுபவர்களைப் பிடிக்கும். ஆனால் அதை விட எனக்கு பாமாலை சூடுபவர்களை இன்னும் அதிகம் பிடிக்கும் ' என்றார். அதாவது அவரைப்பற்றி பாடல்கள் புனைபவர்களை அதிகம் பிடிக்குமாம். இதற்காக பெருமாள் கூட புகழ்ச்சியை விரும்பியிருக்கிறார் என்பது பொருளல்ல. ஒருவர் மீது காதல் கொள்ளும்போதுதான், ஒரு மனிதனின் படைப்பாற்றல் அதிகம் வளம் பெறும். அதன் மூலமாக அந்த மொழியும் செழிப்புறும். ஆண்டாளை பெருமாளின் மகளிர் அணித் தலைவியாக மட்டும் பார்த்து நாத்திக செம்மல்கள் கொதிப்படைய வேண்டிய தேவையில்லை. பெரியாழ்வாரின் புதல்வியும் தமிழ் வளர்த்த சிந்தனையாளர்களில் ஒருவராக கொள்ளலாம்.

ஆண்டாள்தான் ஆண்டவனுக்கு பாமாலையும், பூமாலையையும் சூடிக்கொடுத்தவள். இதன் பொருள் என்ன ?அன்புக்காதல் தொலைதூரத்தையும் சமீபமாக்கிவிடுகிறது. அன்னியனையும் சகோதரனாக்குகிறது.


பக்திக்காதல் என்பது பரமபதத்தையும் மண்ணில் கொண்டு வந்து விடுகிறது.ஆண்டவனையும் அருட்காதலனாக தழவிக்கொள்கிறது. ஆண்டவன் காதலியைத் தழவி கொள்வது போல் பக்தனை அணைத்துப் பாதுகாக்கிறான் என்று நம்புகிறது.

அன்பின் மூலமாகத்தான் ஆண்டவன் பக்தர்களுக்கு அடியவன் ஆகிறான். அன்பனாகிறான்; காதலனாகிறான். பரமனே பரம பக்திக்கு கட்டுப்படுகிறான்.. பக்தன் விரும்புவதை தானும் விரும்புகிறான். பரத்வம் பரம பக்தியால் எளிமையிலும் எளிமையாகிவிடுகிறது.காதல் வெள்ளம் கரை புரண்டு ஒட அதில் ஆசாரம் முதலிய மரபுகள் எல்லாம் கரைந்து போகின்றன. அன்பு தழவியே ஒன்றே ஆசாரமாகிறது. மரபுகளாகிறது.

செய்திகள் விற்பனைக்குஒரு செய்தியை படிக்க இன்று ரொம்பவும் சந்தோஷ்மாக இருந்தது.செய்தித்தாள்களின் ஜீவனை வியாபாரிகள் கொள்ளை அடித்துக்கொண்டிருக்கும் அவலத்தை எண்ணி பல நாட்கள் மனம் நொந்து போயிருக்கிறேன்.இதை யாராவது உரக்க சொல்ல மாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டிருந்தேன். இதற்கு மணி கட்டினார் இந்து நாளிதழின் கிராமப்புற ஆசிரியர் பி. சாய்நாத் தனது வருத்தத்தை தெரிவித்து இருந்தார்.`கடந்த பத்து வருடங்களில் நாம் உண்மையான செய்திகளைத் தராமல், வியாபாரிகளின் பொருட்களை மட்டுமே விற்றுக்கொண்டிருக்கிறோம். சமூக அவலங்களைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. கிராமப்புற செய்திகளை தரும் செய்தியாளர்களை மற்ற பத்திரிகையாளர்கள் ஒரு வினோத பிராணியாகவே பார்க்கிறார்கள்.இன்றைய செய்தி மற்றும் வாரப் பத்திரிகைகளில், பிசினஸ், மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை கவனிக்க ஒரு பத்து பதினைந்து நிருபர்கள் உண்டு. ஆனால் விவசாயம், சுகாதாரம், கல்வி பற்றிய விஷ்யங்களை கவனிக்க போதிய நிருபர்கள் இருப்பதில்லை. சமீபத்திய ஒரு அறிக்கையின்படி செய்தி ஊடகங்கள் பொழுதுபோக்கிற்கு மட்டுமே ஒன்பது மடங்கு அதிக கவனம் செலுத்துகிறது' என்றார் அவர்.இது எத்தனை சத்தியமான வார்த்தை. கடந்த இருபத்தி எட்டு வருடங்களாக பத்திரிகையாளனாக இருக்கிறேன்.கல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஸ்டேட்ஸ்மென் நாளிதழ் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கிராமப்புற ரிப்போர்ட்ங்கிற்காக செய்தியாளர்களுக்கு விருது வழங்குகிறது. இந்த விருதை பெற்ற ஒரே தென்னிந்திய பத்திரிகையாளன் என்கிற பெருமை எனக்குண்டு. 1986 ஆண்டு மறைந்த முதல்வர் எம்..ஜி.ஆர் அமெரிக்காவிலிருந்தபடியே வெற்றி பெற்ற ஆண்டிபட்டி தொகுதியின் அவலத்தை எழதியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.மக்களின் பிரச்னைகளை கையில் எடுக்கும்போது, அதை சொல்லும் பத்திரிகையின் ஆண்மை அதிகரித்தே வந்தது. அந்த செய்தியை கண்டு ஆட்சியாளர்கள் அஞ்சினார்கள். உடனடி நடவடிக்கை எடுத்தார்கள். ஆனால் இன்று புலனாய்வு செய்திகள் அதன் மதிப்பை இழந்து வருகிறது. தங்களைப் பற்றி தவறாக வரும் செய்திகளைக் கூட ஆட்சியாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற ஒரு விளம்பரமாகவே கருதுகிறார்கள்.வியாபார ஸ்தலங்களிடமு,. சமுக் அக்கறையற்றவர்களிடம் ஊடகங்கள் சென்றடைந்துவிட்டதால்,சமுக மதிப்பீடுகள் பின் தள்ளப்பட்டு, முறையற்ற வியாபார வெற்றிகள் மட்டுமே செய்திகளின் தரத்தை தீர்மானிக்கிறது.