Dec 30, 2012

பாகிஸ்தான்:பகைக்கு கட்டிய பரிவட்டம்


இந்தியாவிற்குள் படுவேகமாக நுழைந்து கொண்டிருக்கும் பயங்கரத்தை ஊடகங்களும், படித்த அறிவுஜீவிகளும் உணர்ந்து கொண்டிருக்கிறார்களா? என்கிற கேள்வியே இந்த தேசத்தின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பீதியை எழுப்புகிறது. 
ஒரு பக்கம் அமெரிக்க வர்த்தகத்திற்கு இந்தியாவை திறந்துவிட்டாகிவிட்டது. வர்த்தகத்தகர்கள் ‘நாடு பிடிக்க’ வர்த்தக வேடத்தில்தான் வருவார்கள் என்பதை நாம் 1600 ஆண்டிலேயே உணரத் துவங்கிவிட்டோம்.
வர்த்தகர்கள் எப்போதுமே நேசக்கரத்தோடுதான் வருவார்கள். ஆனால், அவர்களது அடிவருடிகள், அடிமைகள் மூலமாகத்தான், தாங்கள் வர்த்தகம் செய்யப்போகும் தேசத்தின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பார்கள். 
முதலில் வந்தது சில்லறை வர்த்தக அனுமதி. அடுத்து இந்தியாவிற்கு வந்தார் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக். 26/11 மும்பையில் நடந்த தாக்குதலை தடுக்க இந்திய உளவு அமைப்புகள் தவறிவிட்டன என்று பகிரங்கமாக குற்றம்சாட்டிவிட்டு, அரசு விருந்தினராக எல்லா உபசாரங்களையும் பெற்றுக்கொண்டு தன் நாடு திரும்பிவிட்டார். 
எத்தனை துணிச்சல்? இதை அந்த நாட்டு அமைச்சர் 9/11 சம்பவத்திற்குப் பிறகு அமெரிக்காவிற்குப் போய், அங்குள்ள உளவுத்துறை ஸ்தாபனங்களான எஃப்.பி.ஐ.யும், சி.ஐ.ஏ.வும்தான் காரணம் என்று சொல்லிவிட முடியுமா?
சரி! அவர்கள் அப்படியே சொல்லியிருந்தாலும் கூட, பின்லேடன் கொல்லப்பட்டது எங்கே? எந்த நாட்டில்? பாகிஸ்தானிலுள்ள அபோட்டாபாத்தில்தான், பின்லேடனை நிலத்தில் சுற்றி வளைத்து அமெரிக்க கப்பற் படையினர் கொன்றார்கள்.
எங்கள் உளவுத்துறையை குற்றம் சுமத்திவிட்டும், நாங்கள் தேடிக் கொண்டிருக்கும் ஒரு சர்வதேச தீவிரவாதியை உங்கள் நாட்டிலேயே வைத்திருந்தீர்களா? என்ன செய்கிறோம் பாருங்கள் என்று அமெரிக்கா, பாகிஸ்தானை குர்மா செய்திருக்காதா? அல்லது ரஷ்யாவை ஆப்கானிஸ்தான் எல்லையிலிருந்து அழிக்க நீங்கள் உருவாக்கிய அவதாரம்தானே பின்லேடன். நீங்கள் வளர்க்கலாம், நாங்கள் புகலிடம் கொடுக்கக்கூடாதா என்று கேட்கிற தைரியம்தான் பாகிஸ்தானுக்கு இருந்திருக்குமா?
‘பாகிஸ்தான் அமெரிக்க பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, அல்&கொய்தா பயங்கரவாதி இலியாஸ் காஷ்மீரியுடனும் இணைந்து அபுஜிண்டால், ஜபியுல்லா, பாஹிம் அன்சாரி மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டினார்கள். அவர்கள் இந்தியாவில் சுதந்திரமாக சுற்றித் திரிந்துள்ளார்கள். ஆகவே மும்பை தாக்குதல் என்பது ஒரு அரசு ஆதரவு பெற்ற நாச வேலை அல்ல. இவையனத்தும், புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்திற்கு வந்திருக்க வேண்டும். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை. கூடவே இரு நாடுகளுக்கிடையே தகவல் பரிமாற்றமும் இருந்திருந்தால் மும்பை தாக்குதலை தடுத்திருக்க முடியும்’ இதுதான் அவர் பேச்சின் சாராம்சம்.
கூடவே மும்பை தாக்குதலில் ஈடுபட்டு, சவுதி அரேபியாவிற்கு ஓடிய அபு ஜிண்டால். இந்திய உளவு அமைப்புக்காக வேலை செய்தார் என்று சொல்லியிருக்கிறார். இதை  மத்திய உள்துறை செயலர் ஆர்.கே. சிங், ‘அபத்தம்’ என்று சொல்லிவிட்டார்.
இந்திய தலைமையும், இங்கே ஆளுகிற வர்க்கமும் இந்த தேசத்தை கூறு போடத் துணிந்துவிட்டார்கள் என்பதை உணர்ந்த துணிச்சலோடு பேசியிருக்கிறார் மாலிக் என்றே தெரிகிறது.
அபுஜிண்டாலைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டால்தான், பாக். அமைச்சரின் திமிரின் ஆழம் புரியும். 
அபு ஜிண்டால், சவுதி அரேபியாவிற்குள் தஞ்சம் புகுந்தான். அந்த நாடு அங்கிருந்து, அபு ஜிண்டாலை நாடு கடத்தி, இந்தியாவிற்கு அனுப்பியது. அபு ஜிண்டாலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இந்த ஆண்டு ஜூன் 21-ம் தேதி டெல்லி போலீஸார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரின் தங்கள் பிடிக்குள் வைத்து ஜூலை 5-ம் தேதி வரை விசாரித்தார்கள். அபு ஜிண்டாலுக்கு 26/11 தாக்குதலில் தொடர்புண்டு என்பதை சொன்னது, சமீபத்தில் தூக்கிலிடப்பட்ட கசாப்.
அபு ஜிண்டால் ஹம்சா என்கிற அபு ஜிண்டால், 26/11 போலவே இந்தியாவில் மேலும் சில தாக்குதல்களை நடத்த இந்தியாவிலுள்ள முஜாஹிதீன்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தான். 
டெல்லி போலீஸார் அவனிடம் நடத்திய 15 நாள் விசாரணையில், தான் சார்ந்த இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவிற்கும், இந்தியாவிலுள்ள முஜாஹிதீன்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. லஷ்கர்.இ.தொய்பா. ஆதரவுடன் இவர்கள் இந்தியாவில் பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டார்கள். 
இந்திய அமைப்புக்கு உதவியாக இருந்து அவர்களுக்கு ஆயுதங்கள், வெடிகுண்டுகள் வாங்கிக் கொடுத்து உதவ நியமிக்கப்பட்டவன்தான் அபு ஜிண்டால். அபு ஜிண்டால் கைதானாலும், அந்தத் திட்டம் இன்னும் சிறைபடவிலை என்று உறுதியாக நம்புகிறார்கள் விசாரணை அதிகாரிகள். 
26/11க்குப் முன்பு, பாகிஸ்தானிலுள்ள முரிட்கே பகுதியில் இந்திய தாக்குதலுக்காக 12 தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்தான் அபு ஜிண்டால். அதேசமயம், மும்பையின் மையப்பகுதிகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உடனுக்குடன் அவனுக்கு சொல்லிக்கொண்டிருந்தான் டேவிட் கோல்மென் ஹெட்லி. இந்த தகவல் லஷ்கர்-இ-தொய்பா தலைவனான ஸகி&உர்&ரஹ்மான் லக்விக்கும் சென்று கொண்டிருந்தது.
அபு ஜிண்டாலின் பயிற்சி 2007லேயே துவங்கிவிட்டது. தாக்குதல் நடந்தது 26.11.2008. இந்தியாவில் கைதான சயத் சகியுதீன் என்கிற அபு ஜிண்டாலிடம் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் என்று பல்வேறு பாதுகாப்பு, உளவு அமைப்புகள் விசாரணை நடத்தியது. ல.இ.தொ.ம், பாகிஸ்தான் ராணுவம் அதிகாரிகளும் சேர்ந்தேதான் இந்த தாக்குதலுக்கு திட்டம் திட்டினார்கள் என்று ஒப்புக் கொண்டிருக்கிறான் அபு ஜிண்டால். 
‘அபு ஜிண்டாலுக்கு, பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டையையும் வழங்கியது பாகிஸ்தான் அரசு. மும்பை தாக்குதலுக்காக ஜிண்டால் தொடர்பு கொண்ட கராச்சியிலிருந்த கட்டுப்பாட்டு அறை முழுவதும் பாக் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது இப்போது உறுதியாகியிருக்கிறது’ என்று அப்போது இந்திய உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் கொச்சியில் உறுதி செய்தார். 
அபு ஜிண்டால் கைது, அதன் மூலமாக மும்பை தாக்குதலில் பாக்.கிற்கு தொடர்பு வெளியானதும் ஒரு திடுக்கிடும் திருப்பம் பாக். போக்கில் ஏற்பட்டது. 
அமிர்தசரஸைச் சேர்ந்த சரப்ஜித் சிங் 22 வருடங்களாக பாகிஸ்தான் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு அங்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின் சரப்ஜித் சிங்கை திருப்பி அனுப்புவதாக ஒப்புக்கொண்டது. சரப்ஜித் சிங்கின் குடும்பமே ஆனந்த வெள்ளத்தில் மிதந்தது. அபு ஜிண்டால் கைதுக்கு பிறகு அப்படியே பல்டி அடித்தது பாக் அரசு. நாங்கள் சரப்ஜித் என்று சொல்லவில்லை சுர்ஜித் சிங் என்பவரைத்தான் விடுதலை செய்வதாகச் சொன்னோம் என்று அப்படியே பச்சையாக உல்டா ஆனார்கள். 
அபு ஜிண்டால் வெளியிட்ட உண்மைகள் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை குற்றவாளிக்கூண்டில் ஏற்றிவிட்டது. இந்த அவமானத்திற்கு பழிவாங்கவே சரப்ஜித் சிங் விவகாரத்தை கையிலெடுத்துக்கொண்டது பாகிஸ்தான். இத்தனையும் நடந்த பிறகு, இந்தியாவில் பாகிஸ்தானின் இரட்டை வேடம் பற்றி எந்த ஒரு உரத்த குரலும் எழவில்லை. 
26/11&ல் உயிரிழந்த 166 பேர்களின் உயிரை விட, பீதியிலுறைந்த இந்தியாவின் அதிர்ச்சியெல்லாம், சில்லறை வர்த்தக விவகாரத்தில் கரைந்துபோனது. 
இன்னும் பாகிஸ்தானில் பதுங்கிக்கொண்டிருக்கும் மும்பை தாக்குதல் ‘வில்லன்கள்’ அங்கே கதாநாயகர்கள். அங்கே சுதந்திரமாக உலவிக்கொண்ட்டுதான் இருக்கிறார்கள். பாகிஸ்தானில், கொடிகட்டிப் பறக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளைப் பற்றி அவர்கள் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. 
புகலிடமும், பாதுகாப்பும் கொடுத்தால்கூட,  தீவிரவாத அமைப்புகள் இப்போது பாகிஸ்தான் அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறது. கோபத்திற்கு என்ன காரணம்? அபு ஜிண்டால் வாக்குமூலத்திற்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு சர்வதேச நெருக்கடி அதிகமாகிவிட்டது. அதனால் பாகிஸ்தானின் உளவு ஸ்தாபனமான ஐ.எஸ்.ஐ. மும்பை தீவிரவாதிகளை காட்டிக்கொடுக்க, அமெரிக்காவுடன் சேர்ந்து ஜால்ரா போடுகிறது என்பதே கோபத்திற்குக் காரணம். 
இந்த கோபத்தை இப்போது அவர்கள் வெளிப்படையாகவே காட்டிக்கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, சரப்ஜித் சிங்கின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து, அவர் விதிக்கப்பட்ட தண்டனை காலத்தை அனுபவித்திருந்தால் அவரை விடுதலை செய்யலாம் என்று அறிவித்தார். 
இந்த முடிவை மாற்ற வேண்டும் என்று தீவிரவாத அமைப்புகளும், பாகிஸ்தானின் உளவுத்துறையும் அரசுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானின் அவாமி லீக் கட்சியும் இந்த நெருக்கடி போராட்டத்தில் உடன் நிற்கிறது. சரப்ஜித் சிங் பாகிஸ்தானின் எதிரி, அவரை விடுதலை செய்யக்கூடாது என்கிற எதிர்ப்பு குரல் அங்கே அதிகமாகிக் கொண்டிருக்கிறது. குரல்களை அதிகரிப்பதில் தீவிரமாக இருக்கிறது பாகிஸ்தானின் உளவுத்துறை. 
உண்மை நிலை இப்படியிருக்க, அரசு ஸ்தாபனமான உளவுத்துறை நமக்கு எமனாக இருக்கும்போது, அவர்களுடன் நாம் எப்படி தகவல்களை பறிமாறிக்கொள்ள முடியும்?
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, நம்மை அழிக்க அல்லும்பகலும் பாடுபடும் பகைவர்களுக்கு கூட, விருந்து உபசாரமும் கொடுத்து, பரிவட்டம் கட்டி அனுப்புவோம்.
பகைவர்களுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே குணம் நீடிக்கட்டும், கூடவே 26/11ம்


                                                                                                   நன்றி : மீடியா வாய்ஸ் 29.12.2012

                                                                                                 www.mediavoicemag.com/magazine.html               .


Dec 12, 2012

ஒரு ஃப்ளாஷ்பேக் பிரளயம்                                             பிரதமரிடமே பிளாக்மெயில்!


தி.மு.க. தலைவர் எத்தனையோ புத்தகங்கள் எழுதிவிட்டார். சுயநல சந்தர்ப்பவாதத்தினால் முன்னேறுவது எப்படி என்று அவர் அடுத்த தலைமுறைக்கு ஒரு தன்னம்பிக்கை நூல் எழுதலாம். சமீபத்தில் அந்தக் கட்சி நடத்திய டெசோ மாநாட்டில் ‘தி.மு.க. இளைஞர்கள் திராவிடக் கொள்கைகளில் தீவிர நம்பிக்கை வைக்க வேண்டும்’ என்று கருணாநிதி கோரிக்கை வைத்தார். திராவிடக் கொள்கைகள் என்ன என்று அவர் குடும்பத்து வாரிசுகளுக்கே தெரியாது. கட்சி என்பது பதவி + அதிகாரம் = பணம்  என்கிற கணக்கோடு வருபவர்களுக்கு எப்படி திராவிடம், பகுத்தறிவு என்பதெல்லாம் புரியும்? அதற்கு பதில் சந்தர்ப்பவாத அரசியலை கற்றுக் கொடுத்தால் கட்சியிலுள்ள நாலு பேராவது பிழைத்துக் கொள்வார்கள்.
அதுபோகட்டும். நாமாவது தி.மு.க. பாணி முன்னேற்ற பாதை அரசியல் என்ன என்பதை விளக்குவோம். அது சுலபம். எளிதாக புரிய வைத்துவிடலாம்.
நவம்பர் மாதம் 30-ம் தேதி மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் அவர்கள் எப்ரல் 21, 1997லிருந்து 1998 மார்ச் 19 வரை சுமார் ஒன்பது மாதங்கள் இந்திய பிரதமராக இருந்தார். அவர் தலைமையிலான ஜனதா தள ஆட்சி கவிழ்ந்ததன் பின்னணியை பார்க்கும் முன் கொஞ்சம் குஜ்ராலை பற்றி தெரிந்து கொள்வோம்.
எளிமைக்கு குஜ்ரால் என்றே சொல்லலாம். 86-ம் வருடம் விகடனில் நிருபராக இருந்தபோது டெல்லியில் குஜ்ராலை சந்தித்து வியந்திருக்கிறேன். ஒரு தமிழனைவிட இலங்கை விஷயத்தில் அதிக தீவிரம் காட்டியவர். அந்த தீவிரத்தை பிரதமராக இருந்தபோது, செயலில் காட்டியவர். இவர் பிரதமராக இருந்த காலகட்டத்தில், இலங்கையில் அதிபராக இருந்தவர் சந்திரிகா குமாரதுங்கா. 1997, மே மாதம் 13-ம் தேதி இந்திய பிரதமர் குஜ்ராலும், இலங்கை அதிபர் சந்திரிகாவும் இலங்கையில் சந்தித்தார்கள். அப்போது இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்களை விற்க தடை விதித்திருந்தது. இந்திய தடையை நீக்க வேண்டும் என்று சந்திரிகா கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கை இந்தியாவை இலங்கையில் ‘சுழலில்’ சிக்க வைக்கும் என்பதை உணர்ந்திருந்தார் குஜ்ரால். ‘நீங்கள் பாகிஸ்தானிடமிருந்தும், அதைவிட அதிகமாக சீனாவிடமும் ஆயுதம் வாங்குகிறீர்கள். இரண்டு தேசங்களுமே இந்தியாவுடன் நட்பாக இல்லை. அதனால் எங்கள் தடையை நீக்க முடியாது’ என்று உறுதியாக சொன்னவர். மேலும் அந்த ஆயுதங்கள் அங்கே தமிழர்களுக்கு எதிராக பயன்படும் என்பதையும் உணர்ந்தேயிருந்தார் குஜ்ரால்.
இப்போது விஷயத்திற்கு வருவோம். குஜ்ராலின் அமைச்சரவையில் தி.மு.க.வும் இருந்தது. குஜ்ரால் பதவி ஏன் பறிபோனது? அதற்கு போகுமுன், குஜ்ரால் மறைவுக்கு தி.மு.க. தலைவர் முரசொலியில் செலுத்திய அஞ்சலியைப் பார்ப்போம். அதில் ‘அவரை பிரதமராக முன்மொழிந்தபோது, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த என்னை நள்ளிரவு 12 மணிக்கு வந்து உறக்கத்திலிருந்த என்னை எழுப்பி பொன்னாடை அணிவித்ததையும், அதன்பிறகு நன்றி மறவாமல் நாட்டுக்கும், நமது கூட்டணிக்கும் விசுவாசமாக பணியாற்றியதையும் மறக்க முடியாது’ என்று சொல்லியிருக்கிறார் கருணாநிதி.
நன்றியும், விசுவாசமும் என்ன ஒருவழிப் பாதையா?
தி.மு.க.வைப் பொறுத்தவரையில் இந்த இரண்டு வார்த்தைகளுமே ‘ஒன் வே டிராபிக்’தான். அவர்களுக்கு எப்போதுமே தங்கள் காரியம்தான் முக்கியம். பொது நலன் என்பது இரண்டாம் பட்சம்தான். இதை குஜராலின் எழுத்து பூர்வமாகவே பார்க்கலாம். குஜ்ரால் தன்னுடைய சுயசரிதையை 519 பக்கங்கள் கொண்ட புத்தகமாக எழுதியிருக்கிறார். புத்தகத்தின் தலைப்பு MATTERS OF DISCRETION
அதில் அவர் தி.மு.க.வைப் பற்றி சொன்னது என்ன?
‘நான் பிரதமராக இருந்தபோது, பல பேரின் பெயர்களை பரிசீலித்து, எம். கலைவாணன் என்கிற ஐ.ஏ.எஸ். அதிகாரியை சென்னை துறைமுகத்தின் தலைவராக நியமித்தோம். அப்போது கப்பல் துறைக்கு அமைச்சராக இருந்தவர் தி.மு.க.வின் டி.ஜி. வெங்கட்ராமன். அவருடைய ஒப்புதலின்பேரில்தான் இந்த நியமனம் நடந்தது.
அப்போது தமிழகத்தில் தி.மு.க. அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தவர் ஆலடி அருணா என்கிற அருணாச்சலம். இவர் என்னை 1997, நவம்பர் மாதம் 7-ம் தேதி சந்திக்க வந்தார். அவர் வந்த நோக்கம், காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தவேண்டும் என்று கேட்பதற்காக என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால், உண்மையான நோக்கம் அதுவல்ல. சென்னை துறைமுக தலைவராக நியமித்தவரை மாற்ற வேண்டும் என்றார். நியமித்த சில நாட்களிலேயே அவரை மாற்றுவது அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்று நான் அருணாச்சலத்திடம் (ஆலடி அருணா) விளக்கினேன். மேலும் அது தேவையில்லாத சட்ட சிக்கல்களை உருவாக்கும் என்று விளக்கினேன்.
அடுத்து என்னை வியப்பில் ஆழ்த்திய சம்பவம் நடந்தது.  இந்த நியமனத்தை மாற்ற வேண்டும் என்று கருணாநிதி, சந்திரபாபு நாயுடுவை அணுகினார். நாயுடு என்னை அழைத்தபோது, அந்த உத்தரவை மாற்றினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று நான் அவரிடம் விளக்கினேன். நாயுடு என்னை வற்புறுத்தினார். அதற்கு காரணம் இதைச் செய்யாவிட்டால், தி.மு.க. அமைச்சர்கள் என்னுடைய ஐக்கிய முன்னணி அரசிலிருந்து பதவி விலகுவதாக கருணாநிதி அவரிடம் சொன்னாராம்.
அன்று மாலையில் வழக்கமான அமைச்சரவை கூட்டம் நடந்தது. அப்போது கருணாநிதியின் மருமகன் முரசொலி மாறன் அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்தார். கூட்டம் முடிந்ததும். நான் மாறனை சில நிமிடங்கள் இருக்கச் சொன்னேன். அப்போது ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக நீதிபதி ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கை வெளியாகியிருந்தது. ராஜீவ் கொலைக்கு தி.மு.க. தலைவர்களையும், வி.பி. சிங்கையும் ஜெயின் குற்றம் சாட்டியிருந்தார். முதலில் இதைப்பற்றி மாறனிடம் பேசினேன். பிறகு அவர் சார்ந்த துறையான கார் தயாரிப்பு பற்றி பேசினேன். அப்போது மாருதி கார் தயாரிக்கும் இந்திய கம்பெனிக்கும், அதன் கூட்டாளியான ஜப்பானின் சுசிக்கு கம்பெனிக்கு இடையேயிருந்த பிரச்னை குறித்து அவருடன் பேசினேன். அதற்கு பிறகு கலைவாணன் நியமன விவகாரம் குறித்து, ஏன் அந்த உத்தரவை திரும்ப பெறமுடியாது என்பதை விளக்கினேன். ஆனாலும். அவருடைய மாமா கருணாநிதியின் கருத்தையே அவரும் வலியுறுத்தினார். சென்னை துறைமுகத்திற்கு வேறு ஒரு தலைவரை நியமிக்க வேண்டுமென்றார். முடிவாக மாறன் நான் சொன்னதை ஏற்றுக்கொண்டார் என்றுதான் நான் நினைத்தேன்.
அன்றிரவு வனத்துறை மற்றும் சுற்றுப்புறச் சூழல் அமைச்சராக இருந்த சய்புதீன் சாஸ் கொடுத்த விருந்தில் கலந்துகொண்டு வீடு திரும்பினேன். ராம் விலாஸ் பஸ்வான் என்னை அழைத்தார். கருணாநிதி அவரை தொலைபேசியில் அழைத்து, கலைவாணன் விவகாரத்தில் தான் அதிருப்தியாக இருப்பதாக தெரிவித்ததாகச் சொன்னார்.
அப்போது எங்கள் அமைச்சரவையில், விமானப் போக்குவரத்துறை ராஜாங்க அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜனை அழைத்தேன். கருணாநிதியின் இந்த போக்கை பற்றி மூப்பனாரின கருத்தை அறிய விரும்புவதாகச் சொன்னேன். சென்னையிலிருந்த மூப்பனாரை, ஜெயந்தி நடராஜன் போனில் அழைத்து பேசினார். மூப்பனார், மறுநாள் காலை என்னுடன் போனில் பேசுவார் என்று ஜெயந்தி  சொன்னார். பிறகு அன்றிரவு ஜெயந்தி என்னை போனில் அழைத்தார். காவிரி விவகாரத்தை காரணம் காட்டி, அமைச்சரவையிலிருந்து விலகி, வெளியிலிருந்து ஆதரவு தர யோசிப்பதாக கருணாநிதி பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுத்திருப்பதாக ஜெயந்தி சொன்னார். ஆனால், உண்மையான காரணம் காவிரி விவகாரம் அல்ல. சென்னை துறைமுகத் தலைவர் பதவி என்பது பணம், அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவி, அதனால்தான் அந்தப் பதவியை கருணாநிதி தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புகிறார்’ என்று ஜெயந்தி என்னிடம் தெரிவித்தார்.
நான் சந்திரபாபு நாயுடுவிற்கு போன் செய்து நிலைமையை விளக்கினேன். கருணாநிதியின் போக்கு குறித்து நாயுடு மிகவும் வேதனைப்பட்டார். அவருடன் போனில் பேச முயன்றார் நாயுடு. ஆனால், கருணாநிதி கிடைக்கவில்லை. தமிழ்நாடு முதல்வருடன் தான் மறுநாள் பேசுவதாக நாயுடு என்னிடம் தெரிவித்தார். சென்னைக்கு கிளம்பிக்கொண்டிருந்த மாறனிடம் நான் பேசினேன். கருணாநிதியுடன் பேசவில்லை. அவரது அறிக்கை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றார் அவர். ஆனால், மாறன் இனிமையாகப் பேசினார். எனக்கு ஒத்துழைப்பதாகச் சொன்னார். அதிர்ஷ்டவசமாக கலைவாணன் அந்த பதவியை ஏற்றுக்கொள்ளாததால் பிரச்னை சுமூகமாக முடிந்தது.
அதற்குப் பிறகு ஜெயின் கமிஷனை காரணம் காட்டி, தி.மு.க. அமைச்சர்களை நீக்க வேண்டுமென்று காங்கிரஸும், அதன் தலைவர் சீதாராம் கேசரியும் முரண்டு பிடித்தார்கள். விலக்காவிட்டால், ஆதரவை வாபஸ் வாங்குவோம் என்று மிரட்டினார்கள். இடைக்கால அறிக்கையை வைத்துக்கொண்டு தி.மு.க அமைச்சர்களை நீக்கமாட்டேன் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
காங்கிரஸ் ஆதரவை வாபஸ் வாங்கிக்கொண்டதும். பெரும்பான்மை இல்லாததால் நான், தார்மீகப் பொறுப்பேற்று என் பதவியை ராஜினாமா செய்தேன். ஆட்சி கவிழ்ந்தது. அதற்குப்பிறகு தேர்தல் வந்தது எல்லோருக்கும் தெரிந்ததே.’
இதுதான் குஜரால் சுயசரிதையில் உள்ள முக்கிய குறிப்புகள்.
‘ராஜீவ் கொலையில் தி.மு.க.விற்கு தொடர்புண்டு. அந்த தி.மு.க. அமைச்சர்கள் இருக்கும் ஆட்சிக்கு நாங்கள் ஆதரவு தரமாட்டோம்’ என்று பிடிவாதமாக குஜ்ரால் ஆட்சியை அன்று கவிழ்த்தது காங்கிரஸ்.
ஆனால், அதே காங்கிரஸோடு தி.மு.க. கூட்டணி போட்டுக்கொண்டதுவோ இன்று.

           நன்றி : மீடியா வாய்ஸ்  15.12.2012