Feb 28, 2011

சோனியாவிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்


மதிப்புக்குரிய சோனியாஜிக்கு ,

வணக்கம். சோனியா - ஜி. ஜி உங்களுக்கு இப்போது அலர்ஜிதான். நான சொல்வது மரியாதை கலந்த ஜி.

உங்களுக்கு இன்று ஆயிரம் பிரச்னைகள். தமிழகத்தின் ஒரு மூலையிலிருக்கும் இந்த `சாமான்ய' னின் குரல் உங்களை எட்டுமா ? நம்பிக்கை தானே வாழ்க்கை.

எங்கள் தமிழகத்தின் `சாமான்ய சீமான்'களால்தான் காங்கிரஸிற்கு எத்தனை அவமானம் என்கிற குற்ற உணர்ச்சி என் போன்ற் தமிழர்களுக்கு உண்டு.அதனாலேயே இந்த கடிதம்.

தமிழக நிலை முழமையாக உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. தெரியாததின் விபரீதத்தை இப்போது உணர்ந்திருப்பீர்கள்.

தமிழக அரசியலைப் பற்றி பதவி ஆசை இல்லாத, உங்கள் கட்சி வளர்ச்சி மீது அக்கறை கொண்ட, ஏதாவதொரு தமிழ்நாட்டு காங்கிரஸ்காரரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். (அப்படி ஒரு காங்கிரஸ்காரர் தமிழகத்தில் கிடைப்பாரா என்பது சந்தேகம்தான்.)

நேற்றைய நிலை தெரிந்தால்தான்,உங்களுக்கு இன்றைய ஆபத்து புரியும். 1967ல் உங்கள் கட்சி தமிழகத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. புதைத்தவர்கள் திமுகவினர். மேன்மை பொருந்திய உங்கள் கணவரின் தாத்தா பண்டித நேரு,உங்கள் மாமியார் இந்திரா காந்தி, உங்கள் கணவர் ராஜீவ் காந்தி, கர்ம வீரர் காமராஜர் உட்பட யாருமே திமுகவினரின் விரசமான விமர்சனத்திலிருந்து தப்பியதில்லை.


எமர்ஜென்ஸி முடிந்து உங்கள் மாமியார் தமிழகம் வந்தபோது அவர் மீது மதுரையிலும், சென்னையிலும் தாக்குதல் நடந்தது. அப்போது உங்கள் மாமியார் நெற்றியில் வழிந்த ரத்தத்திற்கு திமுகவினர் என்ன விளக்கம் கொடுத்தார்கள் என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களோடு கூட்டணி முறிந்தால் உங்களையும் கடுமையாக, விரசமாக விமர்சிக்க திமுகவில் பேச்சாளர்கள் `ஸ்டாக்' நிறையவே உண்டு.


மேடை விமர்சனங்களை விடுங்கள். கலைஞரின் சட்டமன்ற உரைகளின் தொகுப்பு வந்திருக்கிறது. அதை வாங்கி மொழிபெயர்த்து உங்களுக்கு கொடுக்கச் சொல்லுங்கள்.


`நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக' என்று உங்கள் மாமியாரோடு கூட்டணி கைகுலுக்குகிறவரையில் இங்கே காங்கிரஸ் தலைவர்கள் சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எத்தனை விமர்சனங்களுக்கு ஆளானார்கள். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி மீது என்ன குற்றங்கள் சுமத்தினார்களோ, அதே குற்றங்களை விரிவுபடுத்தி, விஞ்ஞான பூர்வமாக்கி `சாமான்ய'ர்கள் செல்வ சீமான்களான கதையையும் தெரிந்து கொள்ளுங்கள்.


காங்கிரஸில் இரண்டு வகை உண்டு.


தியாகிகள் காங்கிரஸ்.


வியாபாரிகள் காங்கிரஸ்.


இந்த இரண்டாவது வகையை சமாளிக்க வேண்டிய உங்கள் நிலை கண்டு நான் பரிதாபப்படுகிறேன்.


பழைய கதையை விடுங்கள். நீங்கள் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பேற்ற பிறகு தமிழக காங்கிரஸின் கதை என்ன ? உங்கள் கட்சியின் குறிப்பிட்ட சிலர் தொடர்ந்து பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பதவியை பிடிக்க திமுக-அஇஅதிமுக இரண்டு கட்சிகளுக்கும் பல்லக்கு தூக்குகிற யோசனையைத்தான் உங்களுக்கு சொல்வார்கள். அவர்கள் பதவியில் நீடிக்க !


2000ம் வருடத்தில் காங்கிரஸ் அவிழ்த்துவிடப்பட்ட மூட்டை நெல்லிக்காய்களாக சிதறிக்கிடந்தது. பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐந்து ஆண்டுகள் சுகமாக பதவி அனுபவித்தது திமுக.


பிறகு நீங்கள் சிதறிக்கிடந்த காங்கிரஸை சீராக்கி உச்சியில் கொண்டு வந்தீர்கள். உடனே தேசிய ஜனநாயக கூட்டணியை உதறிவிட்டு உங்களோடு ஒட்டிக்கொண்டது திமுக. 2006 சட்டமன்ற தேர்தலில் உங்கள் கூட்டணியோடு 96 இடங்களையே பெற்ற திமுக, உங்கள் 34 பேரின பலத்தோடு தொடர்ந்து ஐந்தாண்டுகள் ஒட்டிவிட்டது.


எல்லாத் தொழில்களையும், சினிமா உட்பட, `தேசியமயம்' மாதிரி கருணாநிதி குடும்ப மயமாக்கிவிட்டார்கள். நன்றி : தமிழக ஆட்சியில் பங்கு கேட்காத காங்கிரஸின் பெருந்தன்மை:


அதே சமயம் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு மத்தியில் உங்களை ஆட்டிப்படைத்தது திமுக. உங்களை மிரட்டியே வேண்டிய பதவியை `கூட்டணி தர்ம'த்தால் பெற்றார்கள். `ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதையாக அவர்களால் நாடாளுமன்றத்தில் நீங்கள் நிலைகுலைந்து போனீர்கள். குளிர்காலக் கூட்டத் தொடரே முடங்கியது. யாரால் உங்கள் கட்சிக்கு இத்தனை அசிங்கம்.?


அங்கே உங்களை அசிங்கப படுத்தியவர்களோடு தமிழக தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை துவக்கிவிட்டீர்கள். உங்கள் `பஞ்ச பாண்டவர்'கள் அதுதான் நீங்கள் நியமித்த ஐவர் குழவை, கேலி பேசி, கிண்டல் செய்து அனுப்பி விட்டது திமுகவின் கெளரவர் சேனை. இதுதான் `நவீன மகாபாரதக் கதையா ?


ஒருத்தி சிரித்தாள் அது மகாபாரதம்.


ஒருத்தி அழதாள் அதுதான் ராமாயணம் என்பார்கள்.


அப்போது பாண்டவர்களின் திரெள்பதி சிரித்தாள். இப்போதோ உங்கள் பாண்டவர்கள் முன்னால் `நவீன கெளரவ திரெளபதி' சிரித்து சிதம்பரம் தலைமையிலான ஐவர் குழவை அசிங்கப்படுத்தி அனுப்பிவிட்டார்கள்.


அசிங்கப்படுத்தியது திமுகவல்ல, அசிங்கப்பட்டது நீங்கள். உங்களை பெரிய கட்சியாகவோ, மத்தியில் ஆளுகிற கட்சியாகவோ திமுக பார்க்கவில்லை. பா.ம.கவிற்கு கொடுக்கப்பட்ட மரியாதை கூட உங்களுக்கு இல்லை. அதிக இடங்கள் கேட்கும் உங்கள் உரிமைக்கு, சீல் வைத்துவிட்டுத்தான் உங்களோடு பேசவே வந்தார்கள்.


அதிமுகவின் கதவுகளும் மூடப்பட்டுவிட்டது. முதலிலேயே சுயகெளரவம் பார்க்காமல் உங்களுடைய இயற்கையான கூட்டணி கட்சியான அதிமுக பக்கம் போயிருந்தால் கேட்கிற இடம் கிடைத்திருக்கும்.


தமிழகத்தை இப்போது இந்தியாவே கவனித்துக்கொண்டிருக்கிறது. காரணம் 2 ஜி கதாநாயகர்கள் இங்கே தான் இருக்கிறார்கள். இன்றைய நிலையில் ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால் `laughing stock'ஆக நிற்கிறது காங்கிரஸ்.


நான் காங்கிரஸின் பரம வைரி. ஆனால் சமீபத்தில் ஒ.வி. அளகேசன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் உங்கள் கட்சியினரால காஞ்சீபுரத்தில் நடத்தப்பட்டது. அப்போது பேசிய உள்துறை அமைச்சரின் பேச்சில் நானே கொஞ்சம் கிரங்கித்தான் போனேன். ஒரு வினாடி உங்கள் கட்சியின் புதிய 11 லட்சம் உறுப்பினர்களோடு, 11 லட்சத்தி ஒன்றாக ஆகிவிடலாமா என்று கூட சலனப்பட்டேன். தேர்தல் நேரத்து இந்த உணர்ச்சி ஏன் முன்கூட்டியே உங்கள் உள்துறைக்கு வரவில்லை. கூட்டத்தை விரட்டியடிக்காமல், மக்களை கட்டிப்போட்டு பேசுகிற திறன் கொண்ட ஒரு சில ஒரு சில காங்கிரஸ்காரர்களில், ப.சி.யும் ஒருவர். இத்தனை நாள் என்ன செய்து கொண்டிருந்தார்?


ஒன்று தன்மானத்தோடு நீங்கள் தனியாக நிற்க வேண்டும்? அல்லது திமுக தூக்கி உங்கள் பாத்திரத்தில் போடுகிற பிச்சையை எடுத்து கொண்டு 2 ஜி அலைக்கற்றை பாவ கரையோடு மக்கள் முன் நிறக வேண்டும்.வாக்குகளுக்கு `கற்றை'களை வாக்காளர்களுக்கு அள்ளி வீச வேண்டுமானால் திமுகவிற்கு நீங்கள் தேவை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.


உங்களின் `முடமான வாத்து' (lame duck) பிரதமர் ஒரு பொருளாதார மேதை. இந்திய பொருளாதாரம் தழைக்க ஸ்திரமான ஆட்சி வேண்டும். ஸ்திரமான் ஆட்சிக்கு நம்பத்தகுந்த கட்சிகள் கூட்டணியில் வேண்டுமா இல்லையா என்பதை அவ்ரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.


லண்டனிலிருந்து வரும் ஒரு பொருளாதார பத்திரிகை ` இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் (GDP) 20 சதவீதம் 50 பில்லியனர்கள் வசமுள்ளது. பங்கு சந்தையின் மூதலீட்டின் 60 சதவீதம் 50 பில்லியனர்களிடம் உள்ளது. இது இந்திய பொருளாதாரத்திற்கும், சமூகத்திற்கும் நல்லதல்ல. இந்தியாவில் அரசியல்வாதிகளும், புதிய தொழிலதிபர்களும் மேலும் மேலும் பணக்காரர்களாகிறார்கள். ஏழைகள், பரம ஏழைகளாகிறார்கள். இந்த நிலை நீடித்தால் இந்த பஞ்ச பராரி மக்கள் வீதிக்கு வந்து போராடும் நாள் வெகுதூரத்திலில்லை' என்கிறது.


சரிந்து கிடக்கும் காங்கிரஸின் செல்வாக்கை கொஞமாவது தூக்கிப் பிடிக்க, நீ வரப்போகும் கூட்டணி பேரத்தில் ந்நிங்கள் எடுக்கப்போகும் முடிவுதான் உதவும்.


நன்றி


இப்படிக்கு


தமிழக வாக்காளன்.Feb 25, 2011

குடும்ப கும்மாளங்கள்
குடும்ப கும்மாளங்கள்

ன் அருமை நண்பர் கோபாலரத்னம். அவருக்கு `மின்னஞ்சல் மன்னன்' என்று பட்டமே கொடுக்கலாம். வேலை மெனக்கெட்டு மின்னஞ்சல் அனுப்பித் தள்ளுவார்.அதில் அவருடைய தொடர்புகள் ஏராளம். காலையில் ` மெயிலை' திறந்தால் அவர் அனுப்பியதைப் படித்து முடிக்கவே அரை நாள் ஆகும். மிகச் சிறந்த ஆங்கில எழத்தாளர். நேரில் சந்தித்தால், ஒரு `ஜோக்' சொல்லாமல் பேச்சை ஆரம்பிக்கவே மாட்டார்.

நாவலரை முன்பு திமுகவில் `நடமாடும் பல்கலைக்கழகம்' என்பார்கள்.
கோபாலரத்னம் ஒரு `நடமாடும் நகைச்சுவை' . அவர் என்னுடைய பதிவுகளைப் படித்துவிட்டு ஒரு கேள்வி எழப்பியிருக்கிறார். அதுதான் இன்று நான் எழதுவதற்கான தூண்டில்!

`கருணாநிதி குடும்பம் போகவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை (அதை ரசிக்கிறேன்). ஆனால் இந்தக் குடும்பம் போனால் இன்னொரு குடும்பம் வந்துதானே சூறையாடப்போகிறது?' இதுதான் அவருடைய கேள்வி.

நல்ல கேள்வி. யோசித்துப் பார்த்தேன். தமிழக அரசியலை ஆட்டிப் படைப்பது கட்சிகளா ? இல்லை குடும்பங்கள்தானே!

கருணாநிதி குடும்பம்.

ஜெயலலிதா சுவீகரித்துக் கொண்ட சசிகலா குடும்பம்.

டாக்டர் ராமதாஸ் குடும்பம். ( நல்ல வேளை திருமாவளவனுக்கு குடும்பம் இல்லை)

காங்கிரஸ் குடும்பம் ஸாரி நேரு குடும்பம். இந்தியாவிலேயே பெரிய குடும்பம்.

அதன் கிளைக் குடும்பங்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் விரிந்து, பரந்து கிடக்கிறது.

தமிழக காங்கிரஸை எடுத்துக் கொள்ளுங்கள். மூப்பனார் குடும்பம்,
ப. சிதம்பரம் குடும்பம், தங்கபாலு குடும்பம். கிருஷ்ணசாமி குடும்பம், அன்பரசு குடும்பம், சேலம் ராமசாமி உடையார் குடும்பம்

இதில் `சூப்பர் ஸ்டார்' கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் தான்.

`புரட்சிகரமாக அரசியல் களத்தில் இறங்கிய உண்மையான புரட்சிப் புயல் இவர்தான். எல்லா தலைவர்களும் அரசியல் களத்தில் தாங்கள் ஒரு இடத்தை பிடித்தவுடன் தான் தங்கள் குடும்பத்தை வாரிசுகளை
அரசியலுக்குக் கொண்டு வருவார்கள்.

களத்திற்கு வரும்போதே மனைவி, மைத்துனர் என்று குடும்பத்தோடு வந்தார் ' என் குடும்பம்தான் தேமுதிக. இஷ்டமிருந்தால் என்னோடு இரு என்று பகிரங்கமாக வந்தவர்.

விஷயத்திற்கு வருவோம். கிராமத்தில் கேட்பார்கள். `எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி?' இதுதான் நண்பர் கோபாலரத்ன கேள்வியின் அடிப்படை.

புராண ம்கிஷாசுரனின் நிகழ்கால வார்ப்பு கருணாநிதி. மிகிஷாசுரன் சிந்தும் ரத்தத்திலிருந்து இன்னொரு மகிஷாசுரன் முளைப்பான்.அதனால்
கருணாநிதி ரத்தம் சிந்திக் கொண்டே இருப்பார்.

ஜெயலலிதா விஷயத்தில், சசிகலா அப்படியல்ல. தனக்கு வேண்டுமென்றால் ரத்தம் சிந்தாமலேயே தன் ரத்த சொந்தங்களை உள்ளே கொண்டு வருவார். பிறகு அவர்கள் தூக்கியும் எறியப்படுவார்கள்.

போதுமென்கிற கட்டுப்பட்டி மனம் கருணாநிதிக்கு கிடையாது. அங்கிங்கெனாதபடி கோட்டையில் துவங்கி, கோடித் துணி விற்கிற க்டை வரையில் தன் வாரிசுகளை முதலாளியாக்கி பார்க்க துடிப்பார்.

சசிகலா கிடைக்கிற பணத்தையும், மறைமுக பதவியிலும் திளைத்து, மகிழ்ந்து திக்குமுக்காடி, புதையல் காக்கும் பூதமாக மயங்கி கிடப்பார்.

கருணாநிதி சினிமாவையே தன் குடும்பமாக்க நினைப்பார்.
தங்களுக்கு சொந்தமான தொலைக்காட்சிக்குக் கூட உருப்படியான சினிமா வாங்க தெரியாதது போயஸ் குடும்பம்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்காக சூறாவளி சுற்றுப் பயணம் போகும் கோபாலபுரம்.

தன் வீட்டுத் தோட்டத்து மலர்களின் மணத்தைக் கூட நுகராமல் சோம்பிக் கிடக்கும் போயஸ் தோட்டம்.

எதிர்க் கட்சியாக இருந்தாலும், அழகு தமிழால் அலங்கரிக்கப்பட்ட அராஜக அரசியல் கோபாலபுரம்.

ஆட்சியில் இருந்தால் மட்டுமே பிரகாசமாக ஜொலிக்கும் லாந்தர் விளக்கு போயஸ் தோட்டம்.
தாயத்தை தான் பெற்றுக்கொண்டு, தண்டனையை ஆ.ராசாவிற்கு வாங்கிக்கொடுப்பார்.

ஆதாயத்தை சசிகலா குடும்பத்தினர் அனுபவிப்பார்கள். தண்டனையை தோழிகளே பெற்றுக்கொள்வார்கள்.

வாரிசுகள் என்ன செய்தாலும் காக்க்கும் குணமும், இன்னும் செய்ய மாட்டார்களா என்று ஏங்குகிற பாசமலர்தான் கோபாலபுரம்.

வாரிசுகள் செய்வதற்காக வருந்தி, வாரிசில்லா நமக்கு ஏன் இந்த வாட்டம் என்று மனம் திருந்திய நிலையில் இன்று போயஸ் தோட்டம் என்று தெரிகிறது.

இந்த மன நிலை போயஸ் தோட்டத்தில் தொடர்ந்தால் நாட்டுக்கு நல்லதா என்பதை கோபாலரத்னம் போன்ற படித்த நடுத்தர அறிவிஜிவிகள் யோசிக்கட்டும்.


Feb 23, 2011

அரசியல்


`ராகு (ல்) காலம் ?


ஒரு நாளில்,மூன்று மணி நேரம் ராகு காலம், எம கண்டத்திற்கு போகும். இன்னும் ஒண்ணரை மணி நேரம் குளிகையில் கழியும். பயணமாக இருந்தால் அன்றைக்கு எந்த திசையில் சூலம் என்று பார்த்து கிளம்புவார்கள். இந்த மாதம் 20 ந்தேதி, அண்ணா அறிவாலயத்தில் காங்- திமுக கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை 4'30 - 6 ராகு காலம். 3.30 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை 5 மணிக்கு ராகு காலத்தில் முடிந்தது.
போன காங் தூதுவர்கள் புன்னகையோடு திரும்பினாலும் அதற்கு பிறகு திமுகவிற்கு தொடர் ராகு காலம். காங்கிரஸிற்கு ` ராகு' ல் காலம் எனப்து தெளிவாகிவிட்டது. காரணம் காங் வைத்துள்ள கடுமையான நிபந்தனைகள்.
90 இடங்கள், ஆட்சியில் பங்கு, குறைந்த பட்ச செயல் திட்டம்' காங்கிரஸ்
கோரிக்கை என்று இரண்டு நாட்களுக்கு பின் செய்திகள் கசிய ஆரம்பித்தது. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் வார்த்தைகளில் சொன்னால் ` தமிழக காங்கிரஸ் என்பது இரண்டு கழகங்களுக்கும் மாறி மாறி `குங்குமம் சுமக்கும் கழதை' யாகத்தான் காங்கிரஸ் கடந்த முப்பது ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. அந்தக் ` கழதை' இப்போது பொதி சுமக்க மறுக்கிறதா ? அரசியல் பார்வையாளர்களால் நம்ப முடியவில்லை. `கழதைகளை விரட்டி விட்டு பாய்ந்து செல்லும் குதிரைகளை கொண்டு தமிழக அரசியலை நடத்த வேண்டுமென்று நினைக்கிறார் ராகுல் காந்தி' என்பதுதான் டெல்லியின் உயர் மட்டத் தகவல்கள்.

திமுகவின் `கூட்டணி' தர்ம மிரட்டல்கள், ஊழல்கள் அகில இந்தியாவிலும், ஏன் உலக அளவில் காங்கிரஸின் மதிப்பை குழி தோண்டி புதைத்துவிட்டது. ராசா என்கிற இரண்டெழத்தும், திமுக என்கிற மூன்றெழத்தும் தேசிய அவமானத்தின் குறீயிடுகளாக மாறிவிட்டது. தொலைக் காட்சி பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்த பிரதமர் `பாவ மன்னிப்பு' கூண்டில் ஏறிய `பாவி' யாக தோன்ற வேண்டிய அவலம்.

`பொறுத்த்து போதும் பொங்கியெழ' என்று காங்கிரஸை பொங்க வைத்துவிட்டது திமுக. கலைஞரின் சகுனி தந்திர அரசியல் சித்து விளையாட்டுகள் இந்த முறை காங்கிரஸிடம் எடுபடவில்லை என்பதுதான்
யதார்த்த நிலை.

அதிக இடங்களை பெற வேண்டும் என்கிற முடிவு காங்கிரஸ் இப்போது எடுத்ததல்ல. 2010 ஜனவரியிலேயே இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ராகுலின் அபிமானத்திற்குரிய கார்த்திக் சிதம்பரம். அதற்கான காரண காரியங்களையும், அவசியத்தை மின்னஞ்சல் மூலமாக ராகுலுக்கு தெரிவித்து விட்டார். அதில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டுமென்கிற எண்ணம் காங்கிரஸின் இளைஞர்களுக்கு இருப்பதை ராகுல் புரிந்து கொண்டார். இளைஞர் காங்கிரஸ் தேர்தல்களும் அதை உறுதி செய்தது.

காங்கிரஸ் அதிக இடம் கேட்பதற்கான காரணங்களையும் அடுக்கினார்கள் டெல்லி வட்டாரத்து காங்கிரஸ் முக்கிய புள்ளிகள்.

2006 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸுக்கு 48 இடங்கள் கிடைத்தது. அதில் 34 இடங்களில் வெற்றி பெற்றார்கள். அதற்கு பிறகு தொண்டாமுத்தூர், மதுரை மேற்கு இடைத்தேர்தலில் அந்தத்
தொகுதிகள் காங்கிரஸிற்கு கிடைத்தது. அதனால் அவர்கள் அவர்கள் பலம் 36 ஆனது.

இப்போது தமிழகம் முழவதும் தொகுதி சீரமைப்பு முடிந்துவிட்டது. இதில் பல தொகுதிகள் காணாமல் போனது. அதில் பள்ளிப்பட்டு, தொட்டியம், சேரன்மாதேவி, சாத்தான்குளம் நான்கும் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகள். இது தவிர மூன்று பொதுத் தொகுதிகள், தனித் தொகுதிகள் ஆனது. ஒரு தனித் தொகுதி பொதுத் தொகுதியானது. உதாரணமாக மதுராந்தகம் பொதுத் தொகுதியில் வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சியின் டாக்டர் காயத்ரி தேவி. மதுராந்தகம் இப்போது தனித் தொகுதி. அதனால் காயத்ரி வேறு தொகுதியை பார்க்க வேண்டும். நாமக்கல் தனித் தொகுதி இப்போது பொதுத் தொகுதியாகிவிட்டது. அங்கு வெற்றி பெற்ற, காங்கிரஸின் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை குழ உறுப்பினரான ஜெயக்குமார், வேறு தொகுதியைப் பார்க்க வேண்டும்.

தங்களுடைய ஆறு தொகுதிகளை இழந்த காங்கிரஸுக்கு இப்போது 28 இடங்கள். இதில் செங்கம், குளச்சல் வேட்பாளர்கள் இறந்து போனதால் இப்போது இருக்கும் காங் சட்டமன்ற உறுப்பினர்கள் 26 தான். இருக்கும் 26 பேர்களுக்கு சீட் நிச்சயமாம். காரணம் அவர்களிடம் தான் செலவழிக்கும் `திராணி' இருக்கும் என்பது மேலிட கணிப்பு. பழைய 48 இடங்களையே திமுக ஒதுக்கினால் இன்னும் 22 பேருக்கு மட்டுமே காஙகிரஸ் வாய்ப்பு அளிக்க முடியும்.

மேலும், தமிழகத்தில் மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகள். ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்குள்ளும் 6 சட்டமன்ற தொகுதிகள். இதில் 15 நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் சுவடே இல்லை. உதாரணமாக மத்திய, தென் சென்னை. இந்த இரு நாடாளுமன்ற தொகுதிகளில் ஒரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கூட கிடையாது.

இதன் அடிப்படையில்தான் `கார்த்தி சிதம்பரம்' ஃபார்முலா ஒன்று ராகுலிடம் கொடுக்கப்பட்டது. அதாவது ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் காங்கிரஸிற்கு 2 சட்டமன்ற தொகுதிகள்.அதனால் காங்கிரஸ் இம்முறை கேட்பது 78 இடங்கள். கூடவே ஆட்சியில் பங்கு.

இது தவிர காங்கிரஸிற்கு இன்னொரு பயமும் உண்டு. தொகுதி ஒதுக்கீடு செய்யும்போதும் திமுக கையே ஒங்கி நிற்கும். திமுக வெற்றி பெற்ற தொகுதியை காங்கிரஸிற்கு கொடுக்காது. அதிமுகவின் கோட்டைதான் காங்கிரஸிற்கு கிடைக்கும்.

இப்போது இருக்கும் 26 சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் எதிர்ப்பு அலையையும் சமாளிக்க வேண்டி வரும். இந்த நிலையில் காங்கிரஸ் வளரவேண்டுமானால் 78 அவசியம் என்பது அவர்கள் கருத்து.
காங்கிரஸில் தொகுதிப் பதவி என்பது அரசாங்க அலுவலக வாயிலில் கட்டிய கழதை கதைதான். அதற்கு பணி நீக்கமே கிடையாது. ஆனால் 25 வருடங்கள் கழித்து அது சூப்பிரண்டெண்ட் என்று கணைக்கும். அதே போல்தான் சிலருக்கு மட்டுமே அந்த பதவிகள். சட்டமன்றத்தை எடுத்துக்கொண்டால் பீட்டர் அல்போன்ஸ், யசோதா, வேலூர் ஞானசேகரன்.க பதவிக்கே பிறந்தவர்களாக இவர்களை காங்கிரஸ் சுவீகரித்துக்கொண்டுவிட்டது. இது தவிர முன்னாள், இந்நாள் எம்பிக்களின் வாரிசுகளுக்குத்தான் முன்னுரிமை.

இதை வைத்துக்கொண்டு இங்கே கட்சியை எப்படி வளர்ப்பது? பதவியிலிருப்பவர்களுக்கு கட்சியைப் பற்றி கவலையில்லை. தங்களின் சுயநிதிக் கல்லூரிகளையும், தொழில்களையும் காத்துக் கொள்ள, உறுப்பினர் அட்டையில்லாத திமுகவாக செயல்பட அவர்கள் தயார். அதை செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் இருக்கும் மேஜை நாற்காலிகளுக்கு கூட கோஷ்டி உண்டு. அதே போல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் கூட்டணியிலிருக்கும் `ஆளுங் கட்சி கோஷ்டி'எப்போதுமே உண்டு.

`கருணாநிதி குடும்பத்து ரூவா நோட்டுகளை காய வைக்க கூட தமிழ்நாட்டில நிலம் கிடையாது' என்று வயலில் வேலை செய்யும் பெண்கள் கூட பேச ஆரம்பித்துவிட்டார்கள் என்பதும் காங்கிரஸிற்கு தெரியும்.

`2 ஜி குற்றத்தின் கூட்டாளி' என்று சோனியா காந்தியையே பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார் சுப்ரமணிய சாமி. இப்போது தொகுதியும் இல்லாமல், உண்மைக் குற்றவாளியின் தோளில் கை போட்டு வலம் வந்தால், கட்சி தாங்குமா என்கிற கவலையும் காங்கிரஸ் மேலிட இளைஞரான ராகுலுக்கு உண்டு.

இந்திய பொருளாதார ஸ்திரத் தன்மைய்யே தமிழ்க கூட்டணியைப் பொறுத்தே அமையும் என்பதை காங்கிரஸில் சிலர் உணரத் துவங்கிவிட்டார்கள்.

திமுக- காங் விவகாரத்தை அதிமுகவு உன்னிப்பாக கவனித்து வருகிறது. உதிரிக் கட்சிகளுடன் உடன்பாடு செய்து கொண்ட ஜெயலலிதா, தேசீய கட்சிகளான இடது சாரிகளுடம் இன்னும் உடன்பாட்டுக்கு வரவில்லை. ராஜ விசுவாசி வைகோ நிலையும் அதுதான். விஜய்காந்த நிலையும் அங்கே இழபறி.

காங்கிரஸின் முடிவுக்காக காத்திருக்கிறது தமிழக அரசியல் களம். இப்போது திமுகவிற்கு வடக்கே சூலம். வடக்கே டெல்லியில் சூலத்தை எடுத்து கையில் எடுத்து நம் கையில் கொடுப்பார்களா அல்லது மார்பில் குத்துவாரா என்று பயம் கலந்த ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறது திமுக.

விருத்தாச்சல விருதகிரி விஜய்காந்தும் வீம்போடு காத்துக்கொண்டிருக்கிறார். காங்கிரஸின் கடைக்கண் அங்கேயும் இருக்கிறது.

அரசியல் என்பது பந்தயக் குதிரை. அதை ஒட்டுபவர் குறைந்த அளவு காயங்களோடு வெளிவரத் தெரிய வேண்டும் என்பது ராகுலுக்கு தெரியும் என்பது அவருக்கு நெருக்கமானவர்களின் கருத்து.


Feb 22, 2011

மீண்டும் நான்
மீண்டும் நான்

என் தளத்தில் எழதி வெகு நாட்கள் ஆகிவிட்டது. எழதத் தோன்றவில்லையா அல்லது எழத வேண்டிய அவசியமில்லையா? எது காரணம் என்பது எனக்குத் தெரியவில்லை.

கற்றது கையளவு கல்லாதது உலகளவு, ஸாரி 2 ஜி அளவு. இன்னும் 4ஜி,5ஜி அளவு கற்ற பின் கொஞ்சம் விஷயத்தோடு எழதலாம் என்கிற அடக்கமா? அல்லது சோம்பலுக்கு நானே கொடுத்துக்கொள்ளும் புனைப் பெயரா?

எது எப்படியோ, இப்போது இரண்டு நாட்களாக எழத வேண்டுமென்கிற உந்துதல் வந்ததற்கு காரணம் உலகத் தரத்திற்கு தமிழன் உயர்ந்து விட்டானே என்கிற உற்சாக பெருமிதம்தான்.
எனக்கு பக்தி கிடையாது. ஆனாலும் பாசுரங்கள் பிடிக்கும். அதுவும் கோதை நாச்ச்சியாரின் திருப்பாவை எனக்கு ரொம்பவே பிடிக்கும்.
`மாதமெல்லாம் மார்கழியாக இருக்ககூடாதா?!' என்று ஏங்குகிறவன் நான் '

பக்தர்கள் போற்றுகிற பகவான் கண்ணனே கூட `மாதங்களில் நான் மார்கழி' என்கிறான்.

பகவானுக்கும், கலைஞருக்கும் இரண்டு விஷயங்கள் ரொம்பவே பிடிக்கும். இருவருமே புகழ்ச்சிக்கு ஆட்பட்டவர்கள். அதனால் கருணாநிதியை நாத்திகர் என்று சொன்னால் நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன்.

பூமாதேவியிடம் மகாவிஷ்ணு சொல்வார்,`எனக்கு பூமாலை சூடுபவர்களை விட பாமாலை சூடுபவர்களைத்தான் பிடிக்கும்' என்பார். அதே போல்தான் கலைஞருக்கும் தனக்கு புகழ்மாலை சூடுபவர்களை மிகவும் பிடிக்கும்.

ஆண்டவனும், ஆள்பவர்களும் ஒன்று தானே. ஆட்சி போனால் ஆள்பவனும், கடந்த காலமாகி `ஆண்டவன்' ஆகி விடுகிறானே.

அதனால் அந்த மாயக் கண்ணனை பாடுகிற திருப்பாவையிலிருந்தே துவங்குகிறேன்.

திருப்பாவை பாட்டு, திருக்குவளைக்கும் பொருந்துபடியாக க்டவுள் கலைஞருக்கு அருள் பாலித்திருக்கிறார்.
திருப்பாவையின் இரண்டாவது பாட்டு என்ன ?
`ஒங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி .... அந்த பாட்டின் கடைசி வரி

`நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்'

ஆஹா என்ன பொருத்தம். நீங்காத செல்வத்தோடு, உலகலாம் உயர்ந்து நிற்கிறான் தமிழன். அது யாரால் தமிழினத்தலைவர் டாக்டர் கலைஞரால்!

எகிபது நடந்தது, லிபியாவில் நடப்பது மக்கள் புரட்சி.

தமிழகத்தில் நடந்திருப்பதோ செல்வப் புரட்சி.

தமிழகத்தின் 2ஜி செல்வப் புரட்சியை இன்று உலகமே கண்டு வியக்கிறதே.

ஒரு காலத்தில்` வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்றோம்.
இன்று வடக்கு அவமானத்தால் வாடி நிற்கிறது.

தெற்கு தியாகச் சுடராய் திகார் சிறையில் ஜொலிக்கிறது.

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்றோம். இந்த கோஷத்தை முன் வைத்து பேரறிஞர் அண்ணா திமுகவை துவக்கினார்

அண்ணா சொன்னார், கலைஞர் செய்து காட்டினார்.


மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் கழகம் என்கிற கலைஞர் குடும்பத்தின் சுயாட்சி.

வடவர்கள் மரியாதைக்குரிய தனி நபர்களை பார்த்தால் அவர் பெயருக்கு பின்னால் `ஜி' போட்டு பேசுவது வழக்கம். அது தனி நபர் துதியாகி விடாதா? பிறகு தமிழனின் சுயமரியாதையும், தன்மானமும், பகுத்தறிவும் என்னாகும்.?

அதை முறிக்கத்தான் இன்று ஒரு `ஜி' வேண்டாமென்று அதை ` 2 `ஜி' ஆக்கியிருக்கிறோம்.

இப்படி தமிழன் உலகத்தரத்திற்கு வளர்ந்த பிறகும் கூட நான் எழதாமலிருந்தால், கலைஞர் ஆட்சியின் குடிமகன் என்று சொல்லிக் கொள்ள நான் வெட்கப்படவேண்டாமா ?