Jun 1, 2008

புயல் ஒன்று புறப்பட்டது


சர்வதேச அளவில் புகழ் பெற்றிருந்த சந்தன கடத்தல் வீரப்பனின் வதத்தை முடித்தவர் தமிழக காவல்துறையின் ஏடிஜிபி விஜயகுமார்.விசேஷ அதிரடி படை (special task force-STF) பலராலும் விமர்சிக்கப்பட்ட காலத்தில் அந்த படையின் தலைமை பொறுப்பை ஏற்றார். பல மாதங்கள் வீரப்பன் உலவிய காடுகளில் உலவித் திரிந்தார். நட்ட நடுசியில், செங்குத்தான மலைகளில் தனியே போய்விட்டு வருவார் என்று இவரைப் பற்றி அவரது படையினர் சொல்வார்கள்.

அதிரடிப் படைக்கு பலவிதமான பயிற்சிகள் கொடுத்ததில் இவருக்கும் பங்குண்டு. சமீபத்தில் நாளிதழ்களில் செய்தி வந்தது. பல மாநிலங்களில் ஊடுருவி இருக்கிற தீவிரவாத படைகளை ஒடுக்க மத்திய அரசு ஒரு போலீஸ் படையை உருவாக்கப்போகிறது. அதற்கு விஜயகுமார் தலைமையேற்கப்போகிறார். அவருக்கு டெல்லிதான் தலைமையிடமாக இருக்கும். ஆனால் அவரது பணிகள் சடிஸ்கார் மாநிலத்தில் இருக்கும் என்றது செய்தி.

ஜீன் ஒன்றாம்தேதி ஞாயிற்றுக்கிழமை டிஜிபி அலுவலகத்தில் விஜயகுமாரை சந்தித்தேன். இப்போது அவர் காவல்துறையின் சட்டம் ஒழங்கு பிரிவின் ஏடிஜிபி.அவர் ஒய்வு பெற இன்னும் சுமார் நான்கரை வருடங்கள் இருக்கிறது. அவருக்கு பின்னால் வங்கக்கடல் காலை சூரியனில் ஜொலித்துக்கொண்டிருந்ந்தது.பரந்த அந்த அறையின் ஏராளமான புத்தக குவியல்கள். நிறைய படிப்பது அவருக்கு மிகவும் பிடித்தமான விஷயம். ஜெஃப்ரி ஆர்ச்சரின் சமீபத்திய புத்தகமான A PRISONER OF BIRTH வரை படித்து முடித்திருந்தார். இயல்பாக, அதே நேரத்தில் தன் தொழிலில் அவர் வைத்திருக்கும் ஒரு வெறியோடு சாந்தமாக பேசினார்.
நீங்கள் பல பதவிகளில் இருந்திருக்கீறீர்கள். குறிப்பாக வீரப்பனை பிடிக்கிற முயற்சி என்பதில் ஒரு சரித்திர சாதனையை படைத்திருக்கீறீர்கள். வீரப்பன் வேட்டை துவங்குவதற்கு முன்னும், அதை சாதித்த பின்னும், இப்போதும் உங்கள் மனநிலை என்ன?


வீரப்பன் வேட்டை என்பது ஒரு கடினமான வேலை. ஆனால் நம் காவல்துறையின் திறமையில் எனக்கு நம்பிக்கை இருந்தது. தங்கள் பணியில் அவர்களுக்கு இருக்கும் ஈடுபாடும் நம்பிக்கையும் காரணமாகத்தான் அந்த சவாலை நான் எதிர்கொண்டன். அதில் கிடைத்த அந்த முடிவு, எங்களுக்குள் ஒரு உற்சாகத்தையும், தமிழக காவல்துறைக்கு ஒரு மரியாதையும் தேடிக்கொடுத்தது என்பதில் ஒரு மகிழ்ச்சி.

அதிரடிப்படைக்கு நீங்கள் பொறுப்பேற்பதற்கு முன்பு, அதாவது வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திக்கொண்டு போய் காட்டில் வைத்திருந்த கால கட்டத்தில், தில்லியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ஆசிரியர் சேகர் குப்தா தமிழக காவல்துறையை மிகவும் கேவலமான முறையில் விமர்சித்திருந்தார். அப்போது டெல்லியிலிருந்த நீங்கள் அவருக்கு ஒரு கடிதம் எழதினீர்கள். அதில் ` எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் சாதித்து காட்டுவேன்' என்றீர்கள். அதை அந்த நாளிதழம் வெளியிட்டது. உங்களுக்கு முன்னால் இருந்த அதிகாரிகள் தோற்றுப்போன ஒரு விவகாரத்தில் எப்படி அத்தனை உறுதியாக சொன்னீர்கள்.?நான் சொன்னதைப் போல எனக்கு தமிழ்க காவல்துறையின் மீது எனக்கு அசாத்திய நம்பிக்கை உண்டு. அந்த கட்டுரையில் அவர் தமிழக காவல்துறையை கடுமையாக விமர்சித்து எழதியிருந்தார். மற்ற மாநில உயர் போலீஸ் அதிகாரிகளை தமிழகத்திற்கு அனுப்பி வீரப்பன் விவகாரத்தை முடிக்க வேண்டும் என்று எழதியிருந்தார். எனக்கு அதில் உடன்பாடில்லை. நம்முடைய திறமை யாருக்கும் குறைந்ததல்ல. அதனால்தான் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் சாதிப்பேன் என்று உறுதியாக சொன்னேன்.

1991 வருடம் நீங்கள் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் புதிய பாதுகாப்பு படையான SSG படையை உருவாக்கினார்கள். அதில் பல அதிரடி வீரர்கள் உருவானார்கள். அந்த படை உருவாக்கிய பயிற்சிதான் வீரப்பன் விவகாரத்தை எடுக்க வேண்டுமென்கிற துணிச்சலை கொடுத்ததா?


அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம.அப்போது நமது அண்டை நாடுகளிலிருந்து அதுவும் பாக் ஜலசந்தி பகுதிகளிலிருந்து நமக்கு ஏராளமான அச்சுறுத்தல்கள் இருந்தது. நான் இந்த படையை உருவாக்க பொறுப்பு எடுத்துக்கொண்ட போது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நேரம். அது என்னை மிகவும் பாதித்தது. நான் 1988-1991 வரை பிரதமரின் பாதுகாப்பு படையான spgயின் இருந்தேன். அதில் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தது.குறிப்பாக spg,nsg ஜெர்மானிய அதிரடிப் படையின் அனுபவங்கள் எங்களுக்கு கிடைத்தது. நல்ல யோசனைகள் எங்கிருந்து கிடைத்தாலும் அதில் எடுத்துக்கொள்வதில் தவறில்லை என்று நினைப்பவன் நான். அவையெல்லாம் எனக்கு அந்த படையை உருவாக்க ஒரு உந்துதலாக இருந்தது. அந்த அனுபவமே பின்னால் வீரப்பன் வேட்டைக்கும் ஒரு உந்துசக்தியாக இருந்தது என்று சொல்லலாம்.

வீரப்பன் வேட்டை என்பது ` இல்லாத கறுப்புப் பூனையை இருட்டறையில் ஒரு குருடன் தேடிய கதை' யாகவே இருந்தது. அந்த பொறுப்பை ஏற்றபோது உங்களுக்கு நம்பிக்கை இருந்ததா?

நான் பொறுப்பேற்றபோது முதலில் தட்டக்கரை என்கிற முகாமிற்கு போயிருந்தேன். அங்குதான் வீரப்பனால் கொல்லப்பட்ட 44 காவல்துறை அதிகாரிகளின் கல்லறை இருந்தது. எனக்கு முன்னால் அந்த பொறுப்பிலிருந்த என் நண்பர் ஏடிஜிபி ஆர். நட்ராஜ் அந்த கல்லறைகளை நன்கு பராமரித்து வந்தார். அங்கு போய் என் வண்டியை விட்டு கீழே இறங்கிய போது என் கால் தடுமாறி விழப்போனேன். ஆனாலும் சுதாரித்துக்கொண்டேன். அதை மற்றவர்கள் ஒரு அபசகுனமாக எடுத்திருப்பார்கள். எனக்கு சடங்குளில் நம்பிக்கை இருந்தாலும், மூட நம்பிக்கைகளில் நம்பிக்கை கிடையாது. அந்த முதல் தடையையே எங்கள் முயற்சியின் முதல் படிக்கல்லாக எடுத்துக்கொள்ள மனதில் உறுதி எடுத்துக்கொண்டேன். என்னுடன் இருந்த படையினரும் அதே வெறியோடு இருந்தார்கள்.வீரப்பன் விவகாரம் என்பது ஒரு அற்புதமான கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. என் பங்கு என்பது நான் அந்த அருமையான படையின் தலைவனாக இருந்ததுதான்.


வீரப்பனை வீழ்ந்த்தியது என்பது உளவு வேலை அதாவது intelligence க்கு கிடைத்த வெற்றி என்பார்கள். ஆனால் மாநிலத்தை பொருத்தவரையில் பொதுவாக உளவுத்துறை பலவீனமாகிக் கொண்டு வருகிறது என்கிற விமர்சனம் இருக்கிறதே ?


வீரப்பன் விவகாரத்தில் எங்கள் அதிரடிப் படையின் உளவுப் பிரிவுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.ஆனால் உளவுத்துறை பலவீனமாகிவிட்டதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.இன்றைக்கும் நமது உளவுத்துறை அபாரமான பணிகளை செய்து கொண்டிருக்கிறது.அவர்கள் உதவி இல்லையென்றால் சமீபத்தில் கொடைக்கானல் மலைப் பகுதியில் எங்களால் அங்கு ஊடுருவியிருந்த தீவிரவாதிகளை பிடித்திருக்க முடியாது. அதே போல் நமது கைரேகை பிரிவினரின் பணி என்பதி வியக்க வைக்க கூடியது.ஆனால் உளவுத்துறையின் சாதனைகளை அவர்களால் வெளிப்படையாக கொண்டாட முடியாது.அவர்கள் மீது விழகிற கற்களை மட்டுமே பார்க்க முடியும், கிடைக்கிற மலர்கொத்துக்களை அவர்களால பகிரங்கமாக வாங்கிக்கொள்ள முடியாது.மேலும் தீவிரவாதகளை பிடித்தபின், இத்தனை நாள் உளவுத்துறை என்ன செய்துகொண்டிருந்தது என்று கேட்கலாம். எந்த தீவிரவாத அமைப்பும் முதலில் பொதுமக்களோடு கலக்கிறார்கள். பிறகு தங்களை ஸ்திரப்படுத்திக்கொண்டுதான் தங்கள் கைவரிசையை காட்டுகிறார்கள். அப்போதுதான் உளவுத்துறை தங்கள் பணியை துவங்க முடியும்.

வீரப்பனை வீழ்த்தி ஒரு சாதனையை செய்த நீங்கள், அதற்கு பிறகு ஒரு முக்கியத்துவம் இல்லாத ஒரு கமாண்டோ படைக்கு தலைமை தாங்கத்தான் அனுப்பப்பட்டீர்கள் இதில் உங்களுக்கு வருத்தமுண்டா ?இல்லை அப்போது எங்களுக்கு இரு முக்கிய பணி இருந்தது. தேசிய டிபென்ஸ் அகாடமியைப் போல இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்களை நேரடியாக ஒரு விசேஷ பயிற்சி மூலம் தேர்ந்தெடுப்பது. அதே போல் போலீஸ்காரர்களின் வாரிசுகளுக்காக ஒரு பள்ளி துவங்குவது என்று இரண்டு முக்கிய பணிகள் இருந்தது. அதை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் இருந்தது. என்னைப் பொருத்தவரையில் எல்லாப் பொறுப்புகளுமே முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.

வீரப்பனை பிடிக்கத்தான் விசேஷ அதிரடிப் படை துவங்கப்பட்டது. இன்னமும் அதிரடிப் படை சத்தியமங்கலத்தில் இயங்கிக்கொண்டுதானிருக்கிறது.அதற்கு அவசியம் ?


இப்போது அச்சுறுத்தல்கள் பல ரூபங்களில் வரத்துவங்கிவிட்டது. குறிப்பாக வனப் பகுதிகளில். அதன் அடையாளம்தான் சமீபத்தில் நடந்த கொடைக்கானல் மலைப் பகுதி சம்பவங்கள். அதிரடிப் படையில், காட்டில் எப்படி வாழ்வது என்கிற பயிற்சியை நாங்கள் கொடுக்கிறோம். ஒரு ஐந்து பேராக காட்டில் போய் யாருக்கும் தெரியாமல், தங்கள் நடவடிக்கையால் யார் கவனத்தையும் ஈர்க்காமல் இருப்பது என்பது சுலபமான காரியமல்ல.இதை நாங்கள் ஐந்து நாள் பயிற்சி என்று சொல்கிறோம். அந்த பயிற்சியில் அவர்கள் ஐவர் குழவாக சென்று ஐக்கியமாக, அமைதியாக, பிறகு அதிரடியாக மாறுகிற பயிற்சியை கொடுக்கிறோம். அதே சமயம் காடுகளிலுள்ள சுற்றுப்புற சூழலையும் கெடுக்காமல் இருக்க பயிற்சி கொடுக்கிறோம். ஒரு பிளாஸ்டிக பொருளையும் உள்ளே விட்டுவிட்டு வரக்கூடாது. ஒரு வீரர் உள்ளே போய்வரும்போது எத்தனை பிளாஸ்டிக பொருட்களை கொண்டு வருகிறார் என்பதற்கு கூட பயிற்சி உண்டு. அவர் அதில் வெற்றிகரமாக இருந்தால் அதற்கு கூடுதல் மதிப்பெண்கள் அவருக்கு உண்டு. இது தவிர காடுகளில் மிருகங்களை, பாம்புகளை எப்படி சமாளிப்பது என்பதற்கு பயிற்சி அந்தந்த துறைகளின் வல்லுனர்களை கொண்டு பயிற்சி கொடுக்கிறோம்.இதற்கெல்லாம் வீரர்களுக்கு அசாத்திய திறன் வேண்டும். வரப்போகிற காலங்களில் இது போன்று பயிற்சிகள் காவல்துறையினருக்கு அவசியம் தேவை.


நீங்கள் எப்போதுமே மத மற்றும் நக்ஸ்லைட் தீவிரவாத அமைப்புகள் மீது கவனமாக இருப்பதாக சொல்லப்படுவதுண்டே?
நான் கமாண்டோ பிரிவில் இருந்த போது அண்டை மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதை கவனத்திக்கொண்டே இருப்பேன். அது ஒரு நெருப்பு பொறி மாதிரி. எங்கும் சுலபமாக பரவி விடும். அதனால் அண்டை மாநிலங்களான, குறிப்பாக வடக்கு ஆந்திரா, ஒரிசா, ஜார்கண்ட், சடிஸ்கர் எல்லைகளில் வளர்ந்து வரும் தீவிரவாத அமைப்புகள் குறித்து தெரிந்து வைத்துக்கொள்வது நம்மை நாம் பாதுகாத்து கொள்ள உதவிகரமாக இருக்கும்.
தமிழகத்தில் இந்த தீவிரவாத அமைப்புகளின் ஊடுருவல் எந்த அளவிற்கு உள்ளது ?


நம் ஊரில் இது மிகுந்த கட்டுப்பாட்டில் இருக்கிறது. நக்ஸ்லைட் தீவிரவாதம் தோன்றுவதற்கு சமூக பொருளாதார காரணங்களும் பின்னனியில் இருக்கும். மற்ற மாநிலங்களில் சில ஜாதியினருக்கு சரியான உரிமைகள் மறுக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் எந்த ஜாதியினரை எடுத்துக்கொண்டாலும், அவர்களுக்கு ஏதாவது ஒரு கட்சியில் அவர்களுக்கு உரிமையும் ஈடுபாடும் இருக்கும். . அதனால் இங்கு அதற்கு வாய்ப்பில்லை.

நீங்கள் டெல்லி செல்லப்போவதாக செய்திகள் வருகிறதே ?


அதற்கான வாய்ப்பு இருக்கிறது. தமிழக அரசும் அதற்கு அனுமதி கொடுத்துவிட்டது. இனி மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். குறிப்பாக சடிஸ்கார், ஜார்கண்ட் மாநிலங்கள் பெருகி வரும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த நினைக்கிறது மத்திய அரசு. ஆனால் எனக்கு என்ன பொறுப்பு என்பதை இனி மத்திய அரசுதான் முடிவு செய்யும். அதுவரையில் எனக்கு அது பற்றி தெரியாது.

முன்பு நீங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு வேண்டியவராக கருதப்பட்டிர்கள், இப்போதும் நல்ல முக்கியமான பதவியில் இருக்கிறீகள். தமிழகத்தில் இது எப்படி சாத்தியமாயிற்று ?இப்படி பார்ப்பதே ஒரு தவறான கண்ணோட்டம். நாங்கள் அரசு அதிகாரிகள். எந்த அரசு வந்தாலும் எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை நேர்மையாக செய்வதுதான் எங்களுக்கு பணி. நாம் வேலை செய்யும் முறையை வைத்து அந்தந்த அரசுகள் தக்க பணியில் அமர்த்துகிறார்கள் அவ்வளவுதான்.

உங்களுக்கு முன்னோடி என்று யாரை சொல்வீர்கள் ?நான் பல முன்னோடிகளை உதாரணமாக எடுத்துக்கொள்வேன். இந்தியா சுதந்திரமடைந்தபின் தமிழகத்தில் முதல் காவல்துறை அதிகாரி திரு சி.வி நரசிம்ம்ன். அவர் அசாத்திய திறமைசாலி. அதே போல் ஐஜி அருள், வி. ஆர். லட்சுமிநாராயணன், வால்டர் தேவாரம். அதே போல் டெல்லியிலிருந்த போது வேத் மார்வா, ரிபெய்ரோ, கில் போன்றவர்களின் திறமைகளை கண்டு வியந்து அவர்களை கூர்ந்த கவனித்து என்னை செப்பனிட்டுக்கொள்வேன்.

வீரப்பன் வேட்டை முடிவதற்கு முன்பு ஊடகங்கள் அதிரடிப் படையை கடுமையாக விமர்சித்தன. அந்த சாதனையை செய்து முடித்தபின் நீங்களும், அதிரடிப் படையும் வேகமாக மறக்க பட்டுவிட்டதை கண்டு உங்களுக்கு வருத்தமுண்டா ?நிச்சயமாக இல்லை. எங்களுக்கென்று ஒரு வேலை கொடுக்கப்பட்டது. அதை முடித்தோம். அவ்வளவுதான். அந்த பணியை வெற்றிகரமாக முடித்த திருப்தியும், மகிழ்ச்சியும் எப்போதுமே எங்களுக்கு உண்டு.