May 5, 2008

இசை இல்லை என்ற நாளில்லை


இந்த வருடம் மே மாதம் 2 ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை. திருவான்மியூர் வால்மீகி நகரில் ஸ்ரீமயம் குடியிருப்பின் மூன்றாவது தளத்தின் மொட்டை மாடி. கடற்கரை காற்றுக்கு தடை போட்டுக்கொண்டிருந்தது கோடையின் சூடு. ஆனாலும் சூடு தெரியவில்லை. காரணம் எங்களுக்கு முன்பு இருந்தது ஒரு மெல்லிசை தென்றல்.அந்த தென்றலின் நெற்றியில் திருநீறு,நடுவில் வட்டமான குங்குமப் பொட்டு.அந்த வெண்மையான சட்டையிலிருந்து மணக்கும் அயல்நாட்டு வாசனை. கழத்தில் ரூத்திராட்சம். இடது கையில் பளபளக்கும் தங்க நிற கைகடிகாரம். உடல் மட்டும்தான் மெலிந்திருந்தது. அவரது கண்கள் காற்றில் கூட கானத்தை தேடிக்கொண்டிருந்தது.


எழத்தாளர் வாமனன் பாணியில் சொல்ல வேண்டுமானால்,` இசை மூலம் அமரத்துவம் நாடத்துடிக்கும் வித்தை அவருடையது! அது கோடிக்கணக்கான தமிழர்களின் நெஞ்சில் சங்கமித்த சங்கீத காவேரி,மெல்லிசை தாமிரவருணி, நல்ல தமிழக்கு ஸ்வரம் பிடித்த தென்மதுரை வைகை நதி!

மலர்ந்தும் மலராத பாதி மலர்களை மலரச்செய்த மணி இதழ்கள்... ஆர்மோனியத்தின் கறுப்பு வெள்ளைக் கட்டைகள் மீது நூறாயிரம் வண்ணங்களை நூறாயிரம் நடைகளில் காட்டி, நடனமாடிய வைர விரல்கள் ... நட்சத்திரக்கூட்டங்களை மெல்லிசைத் தோரணங்கள் ஆக்கிவிட, சங்கீதக் கனவுகள் கண்ட கந்தர்வனுக்குரிய மின்காந்த விழிகள்...'' புரிந்ததா அவர் யாரென்று?


அவர்தான் 9.2.1932ல் கேரளாவின் எலப்புள்ளி கிராமத்தில் பிறந்த மனையங்கத்து சுப்ரமணியன் நாயர் விஸ்வநாதன். நமக்கெல்லாம் பின்னாளில் எம்.எஸ். விஸ்வநாதனாக அறியப்பட்டவர்.எனது பள்ளி நாள் தோழர் சி.பி, ராம்மோகன் ஒரு சங்கீத ரசிகர். மெல்லிசை மன்னரின் பாடலையும் எடுத்துக்கொண்டு அதன் பின்னனியில் இருக்கும் இசையை வாத்ய சுத்தமாக கொண்டு வரக்கூடியவர்.கடவுளுக்குப் பிறகு தன்னில் உள்ள நவரச குணங்களையும் தட்டி எழப்பியவர் எம்.எஸ்.வி. என்று நம்பக்கூடியவர்.அந்த ஒரு மணிநேரம் உணர்வுகள் சில்லிட்டுப் போனது. இன்னுமும் அந்த ராக அலைகள் உடலுக்குள் ஊடுருவிய உணர்வு. இத்தனைக்கும் அவர் எங்களுக்காக பாடவில்லை. அவர் ராக ராஜாங்கத்தின் ஆளுமையை பற்றித்தான் விவாதித்துக்கொண்டிருந்தோம்.

பேசப்பேச அவர் கண்களில் இருந்து மறைந்துபோனார், காற்றோடு கலந்து போயிருக்கும் கானங்கள் செவிப்பாறைகளை வருடிக்கொடுத்தது.கானங்களை சுமந்த கதாபாத்திரங்கள் காட்சிகளாக விரிந்தார்கள்.எத்தனை விதமான பாடல்கள்.

தனது மூன்றாவது வயதில் தந்தையை இழந்து, அதற்கு ஆறு மாதத்தில் தன் தங்கையையும் இழந்தவர். தாய்தான் ஒரே ஆதரவு. தாய் வழித்தாத்தா கிருஷ்ணன் நாயர்,மீட்காவிட்டால் இந்த இசைக் கடல் ஏதாவது ஒரு குட்டையில் கரைந்துபோயிருக்கும்.


கேரளத்தின் வடகிழக்கில் இயற்கை எழில் கொஞ்சும் ஊர் கண்ணனூர். அங்கே கிருஷ்ணன் நாயருக்கு மாற்றலாகியது. அங்கேதான் நீலகண்ட பாகவதரின் வடிவிலே விஸ்வநாதனுக்காக இசை காத்துக்கொண்டிருந்தது.


மாதம் மூன்று ரூபாய் கொடுத்து இசைப்பள்ளியிலே சேர வசதியில்லாத விஸ்வநாதனை, தனது பள்ளியில் எடுபிடி வேலையாளாக சேர்த்துக்கொண்டார் நீலகண்ட பாகவதர்.

விஸ்வநாதனுக்கு கற்பூர புத்தி என்பதை அவர் புரிந்து கொண்டார் காசு வாங்காமலே சங்கீதம் கற்றுக்கொடுத்தார் நீலகண்ட பாகவதர்.நான்கு ஆண்டுகள் கர்நாடக சங்கீத பயிற்சிக்குப்பின் கண்ணனூர் டவுன் ஹாலில் மூன்று மணி நேரம் கச்சேரி செய்ய வைத்தார் நீலகண்ட பாகவதர்.

வாழ்க்கை திசை மாறியது, விஸ்வநாதன் திரை உலகில் சம்பாதிக்க தொடங்கியவுடன் தனது குரு தட்சிணையை எடுத்துக்கொண்டு கண்ணனூர் திரும்பினார். அதை ஏற்றுக்கொள்ள அப்போது நீலகண்ட பாகவதர் உயிரோடில்லை.இவருடைய இசையை ஏற்றுக்கொண்டவர் இசையமைப்பாளர் சி.ஆர், சுப்புராமன். இவருக்கு குருவாக இருந்தவர் மறைந்த இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு. ஜீபிடர் பிகசர்சில் அவர்தான் இவரை சிபாரிசு செய்தார். பிறகு எம்ஜீஆர் நடித்த ஜெனோவா படத்தில்தான் வாய்ப்பு வந்தது. முதலில் இவரை ஏற்றுக்கொள்ள மறுத்த எம்ஜீஆர் பின்னார் இவரது இசையில் மயங்கி, ` இனிமேல் என் படங்களுக்கு நீங்கள்தான் இசை' என்றார். தனது பாடல்களை தனது ஆசான் சுப்புராமன் கேட்கவேண்டுமென்று விரும்பினார் எம்.எஸ்.வி. அவருக்காக காத்திருந்தபோது, அவர் இறந்துவிட்ட செய்திதான் விஸ்வநாதனுக்கு கிடைத்தது.

அவர் இறக்கும் தருவாயில் அவர் இசையமைத்துக்கொண்டிருந்த படம் தேவதாஸ். அந்த பணியை முடித்துக்கொடுக்கும் வேலை அவரது உதவியாளர்களாக இருந்த விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு இருந்தது.தேவதாஸ் படத்தில் கண்டசாலா பாடிய ` உலகே மாயம்' பாலசரஸ்வதி பாடிய `சந்தோஷம் வேணும் என்றால்' பாராமுகம் ஏன் அய்யா ' ஆகிய மூன்று பாடலகளையும் மெட்டமைத்தது இந்த இரட்டையர்கள்தான்.


இருவரும் தனியாக இசையமைத்த முதல் படம் கலைவாணரின் பணம்.மெல்லிசை மன்னருக்கும். இளையராஜாவுக்கு ஒரு ஒற்றுமை உண்டு, ஐம்பதுகளின் இறுதியில் தமிழ்நாட்டை இந்தி பாடல்கள் ஆக்ரமித்துக்கொண்டிருந்தது. அதை விரட்டி ரசிகர்களை தமிழ் பாடல்களின் பக்கம் இழத்தவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி. அதே நிலை 1976ல் இளையராஜாவுக்கு இருந்தது. ஆராதனா, பாபி, யாதோன் கீ பாரத் வெற்றிப் படங்களின் பாடல்கள் தமிழக்த்தின் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது. அதிலிருந்து தமிழ் இசையை மீட்டவர் இளையராஜா.


1960 களுக்குப் பிறகு தமிழ் சினிமாவை கட்டி ஆண்டவர்கள் இந்த இரட்டையர்கள். எத்தனை விதமான பாடல்கள்.பீம்சிங், சிவாஜி கணேசன் கலப்பில் உருவான `பா' வரிசை ப்டங்கள்,. கூடவே எம்ஜீஆரின் படகோட்டி, தெய்வத்தாய். ஆயிரத்தில் ஒருவன், ஸ்ரீதரின் நெஞ்சில் ஒர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, காதலிக்க நேரமில்லை. என்று இரட்டையர்களின் சாம்ராஜ்யம் விரிந்து கொண்டே போனது. காலம் இரட்டையர்களை 1965ல் பிரித்தது. அதற்கு பிறகு விஸ்வநாதனின் நாத படைக்கு பலம் கூடியது என்றே சொல்லலாம்.அடுத்த பத்து ஆண்டுகள் தமிழ் சினிமாவிற்கு விலாசமே விஸ்வநாதன் என்றானது. அவர் பாடல்களில் பட்டியலை இங்கே கொடுப்பது நோக்கமில்லை.


பொதுவாக தமிழன் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் நிச்சயமாக கண்ணதாசன் விஸ்வநாதன் கலந்த பாடல்கள் நிச்சயமிருக்கும். உலகெங்கும் இன்று அவருக்கு கோடான கோடி ரசிகர்கள். சமீபத்தில் கோவையில் நடந்த சம்பவம் இது. ஒரு ரசிகர் கோமாவில் இருந்தார். எந்த மருத்துவ முயற்சியும் பலன் தரவில்லை. வேறு முயற்சியில் இறங்கலாம் என்று அவருக்குப் பிடித்த விஸ்வநாதனின் பாடல்களை போடுங்கள் என்றார்கள். அதிசயம் ஆனால் உண்மை. அவர் விழித்துக்கொண்டார். அதோடு ஏன் `சட்டி சுட்டதடா' பாடலை போடவில்லை என்று கேட்டார். அவருடைய உறவினர்கள் இதை விஸ்வநாதனுக்கே தெரிவித்தார்கள்.

இந்த இசைக்குள் வெளியே தெரியாத ஒரு இன்னிசை ஒளிந்திருக்கிறது. அதுதான் நன்றி உணர்ச்சி, அடக்கம், எளிமை, பணிவு. நன்றி உணர்ச்சிக்கு ஒரு உதாரணம். இவரது குருநாதர் எஸ். எம். சுப்பையா நாயுடுவிற்கு குழந்தைகள் இல்லை. அவர் படமில்லாமல் இருந்த காலத்தில், தமிழகத்தில் முதலமைச்சராக இருந்தவர் மறைந்த எம்.ஜீ.ஆர். அவரது தலைமையில் நடிகர் திலகத்தையும் வைத்து ஒரு நட்சத்திர இசை விழா நடத்தி அவருக்கு நிதி திரட்டி கொடுத்தார். பிறகு அந்த தம்பதிகள் நோய்வாய்ப்பட்டபோது அவர்களை தன் வீட்டில் கொண்டு வந்து தங்க வைத்தார். எஸ்.எம்.எஸ். இறந்தபோது அவருக்கு மகனாக இருந்து கொள்ளிவைத்தார். அதற்கு பிறகு ஒன்பது வருடங்கள் கழித்து அவரது மனைவி இறந்தார். அவரும் இறுதிவரை விஸ்வநாதனோடு இருந்தார். அவருக்கும் கொள்ளி வைத்தவர் விஸ்வநாதன். அவருடைய பண்பிற்கு ஒரு உதாரணம்., ஸ்ரீதர் படங்களுக்கு ஆரம்பத்தில் இசையமைத்துக்கொண்டிருந்தவர் ஏ.எம். ராஜா. அவருக்கும் ஸ்ரீதருக்கும் கருத்து வேறுபாடு. ஸ்ரீதர் விஸ்வநாதனிடம் வந்தார். உடனே விஸ்வநாதன் ராஜாவை சந்தித்து, அனுமதி பெற்ற பிறகே ஒப்புக்கொண்டார்.

கர்ணன் படத்தை இந்தியில் எடுக்க முடிவானது. நடிகர்கள் கூட முடிவானது. ஆனால் அந்த முயற்சி இறுதியில் கைவிடப்பட்டது. காரணம் இந்த இசையை கொடுக்க அங்கே ஆளில்லாததால்!

இத்தனை சாதனை படைத்த ஒரு கலைஞனுக்கு, இன்று வரை ஒரு தேசியவிருது கிடைக்கவில்லை.இன்று டெல்லியை தாங்கி பிடித்துக்கொண்டிருப்பது திமுக. முதல்வருக்கு நெருக்கமானவர்களுக்கு தேசிய விருதை தீர்மானிப்பதும் அக்கட்சியின் தலைவர்தான்.விஸ்வநாதன் உருவாக்கிய பாடல்களுக்கு குரல் கொடுத்தவர்களுக்கெல்லாம் தேசிய விருது கிடைத்துவிட்டது. ஆனால் விஸ்வநாதனின் நினைவு இங்குள்ள தன்மான தமிழர்களுக்கு வரவில்லையா? அல்லது எம்.ஜீ.ஆர் மீதுள்ள கோபம் அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் மீது காட்டப்படுகிறதா? அப்படியானால் ஆஸ்தான இசையமைப்பாளர் இசைக்கு வரி கொடுத்த கவிஞர் வாலிக்கு மட்டும் அதுவும் காலதாமதமாக எப்படி பத்மஸ்ரீ கிடைத்தது.


உண்மையில் சொல்லப்போனால், தனக்கு தாமதமாக வந்த விருதை கவிஞர் வாலி திருப்பிக்கொடுத்திருக்க வேண்டும். காரணம் கவிஞர் வாலி கண்ணதாசனுக்கே சவால் விட்டவர். இப்போது எனக்கொரு ஆசை. விஸ்வநாதன் வாழ்நாளைக்குள் உலகமெங்கும் உள்ள அவரது கானத்தினால் கட்டுண்ட தமிழர்கள் உரக்க கம்பீர குரல் எழப்ப வேண்டும். அந்த குரல் கோபாலபுரத்திலிருந்து, குடியரசு தலைவர் மாளிகை வரை எட்ட வேண்டும். அந்த விருதை விஸ்வநாதன் நிராகரித்து திருப்பி அனுப்ப வேண்டும். காரணம் இது வெறும் தேசிய விருதுதானே, அவருக்குத்தான் ரசிகர்கள் என்கிற சர்வதே விருது ஏற்கெனவே கிடைத்துவிட்டதே.இது நமது பெருமித திருப்தி.


அவரைப் பொறுத்தவரையில் அவர் அடிக்கடி சொல்வது இதுதான் `இல்லை என்ற நாளில்லை; இன்னும் என்னும் ஆசையில்லை'.