May 4, 2008

செய்திகள் விற்பனைக்கு



ஒரு செய்தியை படிக்க இன்று ரொம்பவும் சந்தோஷ்மாக இருந்தது.செய்தித்தாள்களின் ஜீவனை வியாபாரிகள் கொள்ளை அடித்துக்கொண்டிருக்கும் அவலத்தை எண்ணி பல நாட்கள் மனம் நொந்து போயிருக்கிறேன்.இதை யாராவது உரக்க சொல்ல மாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டிருந்தேன். இதற்கு மணி கட்டினார் இந்து நாளிதழின் கிராமப்புற ஆசிரியர் பி. சாய்நாத் தனது வருத்தத்தை தெரிவித்து இருந்தார்.`கடந்த பத்து வருடங்களில் நாம் உண்மையான செய்திகளைத் தராமல், வியாபாரிகளின் பொருட்களை மட்டுமே விற்றுக்கொண்டிருக்கிறோம். சமூக அவலங்களைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. கிராமப்புற செய்திகளை தரும் செய்தியாளர்களை மற்ற பத்திரிகையாளர்கள் ஒரு வினோத பிராணியாகவே பார்க்கிறார்கள்.இன்றைய செய்தி மற்றும் வாரப் பத்திரிகைகளில், பிசினஸ், மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை கவனிக்க ஒரு பத்து பதினைந்து நிருபர்கள் உண்டு. ஆனால் விவசாயம், சுகாதாரம், கல்வி பற்றிய விஷ்யங்களை கவனிக்க போதிய நிருபர்கள் இருப்பதில்லை. சமீபத்திய ஒரு அறிக்கையின்படி செய்தி ஊடகங்கள் பொழுதுபோக்கிற்கு மட்டுமே ஒன்பது மடங்கு அதிக கவனம் செலுத்துகிறது' என்றார் அவர்.இது எத்தனை சத்தியமான வார்த்தை. கடந்த இருபத்தி எட்டு வருடங்களாக பத்திரிகையாளனாக இருக்கிறேன்.கல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஸ்டேட்ஸ்மென் நாளிதழ் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கிராமப்புற ரிப்போர்ட்ங்கிற்காக செய்தியாளர்களுக்கு விருது வழங்குகிறது. இந்த விருதை பெற்ற ஒரே தென்னிந்திய பத்திரிகையாளன் என்கிற பெருமை எனக்குண்டு. 1986 ஆண்டு மறைந்த முதல்வர் எம்..ஜி.ஆர் அமெரிக்காவிலிருந்தபடியே வெற்றி பெற்ற ஆண்டிபட்டி தொகுதியின் அவலத்தை எழதியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.மக்களின் பிரச்னைகளை கையில் எடுக்கும்போது, அதை சொல்லும் பத்திரிகையின் ஆண்மை அதிகரித்தே வந்தது. அந்த செய்தியை கண்டு ஆட்சியாளர்கள் அஞ்சினார்கள். உடனடி நடவடிக்கை எடுத்தார்கள். ஆனால் இன்று புலனாய்வு செய்திகள் அதன் மதிப்பை இழந்து வருகிறது. தங்களைப் பற்றி தவறாக வரும் செய்திகளைக் கூட ஆட்சியாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற ஒரு விளம்பரமாகவே கருதுகிறார்கள்.வியாபார ஸ்தலங்களிடமு,. சமுக் அக்கறையற்றவர்களிடம் ஊடகங்கள் சென்றடைந்துவிட்டதால்,சமுக மதிப்பீடுகள் பின் தள்ளப்பட்டு, முறையற்ற வியாபார வெற்றிகள் மட்டுமே செய்திகளின் தரத்தை தீர்மானிக்கிறது.