Mar 11, 2011

`யாரை எங்கே வைப்பது '



என்ன ஆகும் என்கிற கவலை இருந்தது.தமிழகத்தில் நாடாளும் கோமான்களும், நாயன்மார்களும் கூட்டணி அமைத்து, தொகுதிகளை முடிவு செய்து, மனமொத்த`தம்பதி'களாய் வீதி உலா வரும்போது அது நடந்து விடக்கூடாதே என்று பயந்திருந்தேன்.

பயந்தது நடந்துவிட்டது.சீர் குலைக்க வந்துவிட்டது சிபிஐ. நாய்ன்மார்கள் பேச்சுவார்த்தை முடிவதற்குள், அறிவாலயத்திற்குள் கலைஞரின் அன்பாலயங்களான மனைவி தயாளு அம்மாளையும், மகள் கனிமொழியையும் விசாரிக்க சிபிஐ நுழைந்துவிட்டது,.

மார்ச் 8 ந்தேதி டெல்லியில் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டபின் திமுக மீதான `2ஜி புகழ்' பிரசாரம் சற்று மந்தமாகவே இருந்தது. சிபிஐ இந்த இரண்டு பெண்மணிகளையும் விசாரிக்க வந்தவுடன் மீண்டும் அகில இந்தியாவின் கவனத்திற்கு அறிவாலயத்தை கொண்டு சென்றன ஊடகங்கள்.

இன்று இரண்டு செய்திகள்தான் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றன.

ஜப்பானில் சுனாமி

தமிழகத்தில் பினாமி

இந்த விசாரணை, அதைத் தொடர்ந்து சிபிஐ வழக்குப் பதிவு வரப்போகும் நாட்களின் என்ன நடக்கப் போகிறது என்று நினைத்தாலே கலக்கமாயிருக்கிறது.

திமுக- காங் உறவு இம்முறை கட்டாயக் கல்யாணம் வேறு. என்னால் ப்ழங்கதைகளை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. நினைத்துப் பார்த்தால் திமுக காங்கிரஸ் உறவு பற்றி இளைஞர் காங்கிரஸிற்கு ஒரு கையேடு தயாரித்துக் கொடுத்தாலென்ன என்று கூட தோன்றுகிறது.

1967க்கு முன்பு திமுக குறிப்பாக இன்றைய தலைவர் கலைஞர் பேசிய பேச்சுகளை இன்றைய காங்கிரஸ் தலைவர்கள் பதவி சுகத்திற்காக மறந்து போயிருப்பார்கள். குறிப்பாக தமிழக காங்கிரஸில் பலம் வாய்ந்த சக்தியாக திகழம் ஜி.கே. வாசன் தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்போதைய தஞ்சை மாவட்டத்தைப் பற்றி திமுக என்ன சொன்னது ?

தஞ்சையை ஆள்வது யார் ? காங்கிரஸா ? இல்லை சில பணக்காரர்கள் மட்டுமே

தஞ்சையை ஆள்வது பூண்டி வாண்டையார், கபிஸ்தலம் மூப்பனார் (ஜி.கே. வாசனின் தந்தை) வடபாதி மங்கலம் தியாகராஜ முதலியார், குன்னியூர் சாம்பசிவ ஐயர் தானே ! என்றார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதே பஸ் முதலாளிகளின் தயவில் என்றார்கள். இது தவிர பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி தரக்குறைவான விமர்சனங்கள்.

இந்த காலக் கட்டத்தில்தான் எழத்தாளர் ஜெயகாந்தன் போன்றவர்கள் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தனர். அப்போது அவர் கம்யூனிச அனுதாபியாக இருந்தார். இப்போது திமுகவில் முயல்குட்டியாக இருக்கிறார் என்பது வேறு விஷயம்.

1972 ம் ஆண்டு அப்போது திமுகவின் தலைவர் கலைஞர்தான். துக்ளக் வார இதழில் ஜெயகாந்தன் ஒரு தொடர் எழதினார். அதன் தலைப்பு ` ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்'. பின்னர் புத்தகமாக வெளிவந்து அது இப்போதும் கடைகளில் கிடைக்கிறது. அதில் திமுகவைப் பற்றி அவர் சொன்னவை சிலவற்றை இங்கே தருகிறேன். அது இன்றைக்கு அந்த கட்சிக்கு பொருந்தாது என்று அவர்களோடு இருக்கும் ஜெயகாந்தன் நினைக்கலாம். ஆனால் இந்த தேர்தலில் வாக்களிக்க போகும் வாக்காளர்கள்தான் ஜெயகாந்தன் திமுகவைப் பற்றி செய்த விமர்சனங்கள் சரியா தவறா என்று சொல்லவேண்டும் .

`திமுகவினர் தங்களை அரசியல்வாதிகள் என்று அக்காலத்தில் சொல்லிக்கொள்ளவேயில்லை. இவர்கள் தங்களை அறிஞர்கள் என்றும், கலைஞர்கள் என்று,சிந்தனாவாதிகள் என்றும் பாமரர்கள் மத்தியில் கூறிக்கொண்ட போது, கற்றவர்களும், பண்டிதர்களும், அரசியல் அறிஞகளும்,கல்வியாளர்களும் இவர்களை மிகவும் அலட்சியமாகவும்,ஏளனமாகவும் சிரித்தும் அருவருத்தும் பேசினார்கள். (ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் பக்கம் 65)

திராவிட நாடு, தமிழ், தமிழர், பார்ப்பன் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, அரைவேக்காட்டு நாத்திகவாதன்ம், `ஸீடோ' சோஷலிஸவாதம், வறுமை வர்ணனை, காங்கிரஸ் எதிர்ப்பு, வடவர்-தென்னவர் பேதம், சினிமா நாடக மோகம் போன்றவற்றை நம்பி இயக்கம் நடத்திய திமுகவினரின் கூட்டங்களுக்கு அப்போது கும்பல் சேர்ந்தது. இவர்களும் அவர்களின் ரசனைக்கேற்ப வித்தை காட்டினார்கள்; மகிழ்வூட்டினார்கள்.(பக்கம் 66)

அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்கள் அரசியலை `ஸைடு' பிசினஸாகவே வைத்திருந்தார்கள். அதன் முக்கிய தலைவர்கள் சினிமா கதைகளிலும்,சீட்டு விளையாட்டிலும், சில்லறை ரஸானுபவங்களிலும் திளைத்துக்கொண்டிந்தார்கள் என்பதனை அவர்களது அந்தக் கால்ப் பேச்சும் எழத்தும் மக்களுக்கு எடுத்துக் காட்டிக்கொண்டிருந்தன் (பக்கம் 89)

தி.மு. கழகமென்பது ஓர் அரசியல் இயக்கம் அல்ல. அது மனித மரியாதைகளுக்கும், சமுதாய வளர்ச்சிக்கும், இந்திய நாகரீகத்திற்கும் நமது கலாசாரத்துக்கும் ஏற்பட்டிருக்கிற ஒர் பேரழிசின் அறிகுறி (a social cultural menace) (பக்கம் 127)

மக்களுடைய பலவீனமும் அறியாமையுமே திமுகழகத்தின் மூலதனம். பலம் (பக்கம் 146)

தமிழ்க் கலையுலக அறிவியல் உலகில் ஏற்கெனவே ஏற்பட்ட பண்பாட்டுச் சீர்குலைவின் விளைவே திமுகழகம் என்பது எனக்குப் புரிந்தது. (பக்கம் 152)

இந்த அசூர வளர்ச்சியை தடுக்கிற யோசனையே காங்கிரஸிற்கு இல்லாமல் போய்விட்டது என்பதும் ஜெயகாந்தனின் ஆதங்கம். 1967ல் இங்கே குப்புற விழந்தது காங்கிரஸ். சென்ற தேர்தல்வரையில் இரு திராவிட கட்சிகளுக்கும் பல்லக்கு தூக்கியாகவே இருந்துவிட்டது. இந்த முறைதான், நாங்கள் பல்லக்குத் தூக்கிகள் இல்லை. நீங்கள் மூலவர், நாங்கள் உற்சவர்கள் என்று தாங்களும் பல்லக்கில் ஏற முனைந்திருக்கிறார்கள். ஆனால் பாவம் காங்கிரஸிற்கு பல்லக்குத் தூக்கிகள்தான் இல்லை. திமுக தொண்டர்கள்தான் தூக்க வேண்டும்' அவர்கள் உற்சவர்களை கரை சேர்ப்பார்களா என்பதுதான் இப்போதுள்ள கேள்விக்குறி !

`இதை எழதி முடிக்கும்போது எங்கோ வானொலியில் ` யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே, அண்டைக்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலே' பாடல் காற்றில் மிதந்து வந்து கொண்டிருக்கிறது.!




2 comments:

  1. 1967 லிருந்தே நவசக்தி, கண்ணதாசனின் 'கடிதம்', நெடுமாறன், கிள்ளிவளவன் இன்னும் அப்போது நிறைய இளைஞர்களின் பேச்சுக்களை படித்து வந்தேன். அதையெல்லாம் படித்து விட்டு இப்போது இவர்கள் குலாவுவது மனதிற்கு மிகவும் வருத்தத்தை தருகிறது.

    ReplyDelete
  2. //தவிர பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி தரக்குறைவான விமர்சனங்கள்//
    சபாஷ் சுதாங்கன்..உங்கள் பத்திரிக்கை அனுபவம் அந்த விமர்சனங்களைத் தொடாமல் விட்டதிலிருந்தே பிரகாசிக்கிறது.


    திரு ஜெயகாந்தனின் பேனாவின் முனை மழுங்கி ரொம்ப நாளாகி விட்டது!- பழ. கருப்பையா ...ஒரு சினிமா வசனகர்த்தா தமிழ் இலக்கியவாதி என்று பொய்யாக பறை சாற்றிக்கொண்டு ஆட்சியையும் பிடித்தாகி விட்டது..அதைக் கூட எதிர்த்துப் பேச யாருக்கும் தைரியம் இல்லை.தமிழ்நாடு, காங்கிரஸ் கட்சியின் கையை விட்டுப்போனதிலிருந்தே தொடர்ந்து சினிமாக் காரர்களிடமே மாட்டிக் கொண்டு முழிக்கிறது. கவனிக்க:கருணாநிதி தவிர அண்ணாவோ,எம் ஜி ஆரோ, ஜெ வோ, ஆட்சிக்கு வந்தபின் சினிமாத் துறைக்குள் பெரிதாக பங்கு பெரும் ஆசை இல்லை. அவர்களுக் கெல்லாம் மனதில் ஒரு மூலையிலாவது மக்களிடம் சேவை செய்து (செய்தாற்போலாவது) நல்ல பெயர் வாங்கும் ஆசை இருந்தது.. இன்றைய முதல்வர் வெறும் புகழ்ப் பிரியர்..அது தானாகக் கிடைக்காததால் சினிமா வசனம் எழுதி (மற்ற வியாபாரம் தனி!) தமிழ்பித்தன், தமிழ் சித்தன்,தமிழ் தீவிரவாதி என்றெல்லாம் ரீல் விட்டுக் கொண்டு காலம் ஓட்டுகிறார்.
    ஏற்கெனவே விஷயம் அறிந்தவர் பெரும்பகுதி ஓட்டே போடுவதில்லை என்று சொல்கிறார்கள்!!கலைஞர் அன்று பேசியதை எல்லாம் ஒரு கையேடு தயாரித்துக் கொடுத்தால்,தமிழ் நாட்டில் யாரும் ஓட்டுப போடவே போக மாட்டார்களே.- உங்களுக்கு அந்தப் பாவம் தேவையா??

    --ரோமிங் ராமன்

    ReplyDelete