Mar 10, 2011

தனிக் கூட்டில் `ராசா'















மிரட்டல், உருட்டல் நாடகங்கள் முடிந்து 63 நாயன்மார்கள் - அறுபத்திமூவர் திருவிழா காங்கிரஸில் துவங்கிவிடும். காங்கிரஸ் தங்களுடன் இருப்பதினால் திமுக தலைமை இப்போது நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும்.

இங்கே திமுக காங்கிரஸிலிருந்து விலகல் நாடகத்தை மார்ச் 6ந் தேதி அரங்கேற்றியதுமே தில்லியில் தங்கள் நாடகத்திற்கு கதை வசனத்தை காங்கிரஸ் ஒரே நாளில் அதாவது மார்ச் 7 ந்தேதி எழதி முடித்துவிட்டது. மார்ச் 8 ந்தேதி மகளிர் தினம் உண்மையில் சோனியாவின் தினம்தான். வீராவேசமாக கிளம்பிய கழக கண்மணிகளை, கலைஞர் குடும்பத்து பொன்மணிகளை தில்லி வீதியில் பீதியோடு அலையவிட்டது காங்கிரஸ்.

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்கிற கதையோடு கேட்ட இடத்திற்கு ஒப்புக் கொண்டு அறுபத்தி மூன்று நாயன்மார்களை சென்னையில் வரவேற்க சேக்கிழார் பிரான் கருணாந்தி உத்தரவிட்டார். இந்த `பெரிய புராண' காலட்சேபங்கள் இரண்டு நாட்களில் முடிந்தது.

இந்த இரண்டு நாட்களும் டெல்லி ஊடகங்கள், திமுக - காங்கிரஸ் மோதல்கள் எத்தனை இடங்களுக்காக என்பதில் இல்லை. கருணாநிதி குடும்பத்தினர் மீது சிபிஐ பாயக்கூடாது என்பதற்காகத்தான் வெளிச்சம் போட்டுக்காட்டியது.

ஆனால் அங்கே திகார் சிறையில் `கண்ணன் பிறந்ததும் சிறைச்சாலை; அந்த காந்தி இருந்ததும் சிறைச்சாலை. சிறைச்சாலை ஒரு கல்லூரி' என்று பழைய சினிமா பாடலை முணுமுணுத்து புலம்பிக்கொண்டிருக்கிறதே அதைப் பற்றி திமுகவினர் யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

ஆ. ராசா. அந்த தலித் இளைஞன் தன்னந்தனியாக தவிப்பதைப் பற்றி இப்போது திமுக தலைவருக்கே மறந்துவிட்டது. ராசா என்ன கட்சிக்காக கல்லக்குடி போராட்டத்தில் கலந்து கொண்டு தியாக மறவராக சிறையில் இருக்கிறாரா? அல்லது இலங்கையில் தமிழ் இனத்தை பூண்டோடு அழித்து விட்ட காட்சிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த திமுக- காங்கிரஸின் முற்போக்கு ஜனநாயக கூட்டணியை எதிர்த்து சிறைக்கு போயிருக்கிறாரா?

அலைக் கற்றைகள் மூலமாக கற்றையாக வாங்கி தலைவர் குடும்பத்திற்கு அர்பணித்த தொண்டன் அங்கே சிறையில் வாடுகிறார். கலைஞர் குடும்பத்தினர் மீது 2 ஜீ கறை படியக் கூடாது என்று கவலைப்பட்ட திமுக தலைமை, ராசா மீது தேசீய பாதுகாப்பு சட்டம் பாயக்கூடாது என்கிற குரலை எழப்பியதாகக் கூட பேச்சில்லை.

திமுகவைப் பொறுத்தவரையில் இனி 2 ஜி அடுத்தபடியான அலர்ஜி ` ராசா' என்கிற பெயர்தான். இனி ராசாவுக்கு என்ன ஆகும்? என்று கவலைப்பட வேண்டியது அவரது குடும்பத்தினர்தான்.

நரசிம்மராவ் இந்தியப் பிரதமராக இருந்த நேரமிது. பிரிட்டானிய பிஸ்கெட் கம்பெனி அதிபர் ராஜன் பிள்ளை திகார் சிறையிலிருந்தார். அவரை பொருளாதார குற்றத்திற்காக சிங்கப்பூர் அரசு அவரை கைது செய்ய உத்தரவிட்டிருந்தது. அவர் இங்கே சிறையிலிருக்கிறார் என்றதும் அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி சிங்கப்பூர் அரசு, இந்திய அரசை கேட்டது. இந்த கோரிக்கை வந்த அடுத்த நாளே ராஜன் பிள்ளை இறந்துவிட்டதாக, அவரது மரணச் சான்றிதழ் தான் அனுப்பி வைக்கப்பட்டது. அவர் எப்படி இறந்தார் என்பது அந்த `ஆண்டவனுக்கே' (நான் அன்று நாட்டை ஆண்டவரை சொல்லவில்லை) எல்லாம் வல்ல இறைவனைச் சொல்கிறேன்.

ராஜன் பிள்ளை, ராசா இந்த பெயர் ஒற்றுமை ஏதோ என் மனதில் அல்லாடிக் கொண்டிருக்கிறது. ஏன் என்று எனக்கே புரியாத மர்ம புதிராக இருக்கிறது.

2 comments:

  1. உங்களது சந்தேகம் நியாமானது தான். செய்திகள் வரும்போது தெரியும். தேர்தல் முடியட்டும்.

    ReplyDelete
  2. நீங்கள் பொதுவாக பின்னூட்டங்கள் பிரசுரிப்பதில்லை என்று எண்ணுகிறேன்!! ஆனாலும்

    சொந்த லாபங்களுக்காக எதையும் செய்யும் கூட்டம் இங்கே இருக்கிறது.தேர்தல் நெருங்கினால் வோட்டுக்காக, சக்கரங்களில் சுழல்பவர்கள் மருத்துவக் கட்டிலில் படுத்துகொண்டு பிச்சை எடுப்போர் வாழும் காலத்தில் வாழ்கிறோம்..அப்படியிருக்க

    //ராஜன் பிள்ளை, ராசா இந்த பெயர் ஒற்றுமை ஏதோ என் மனதில் அல்லாடிக் கொண்டிருக்கிறது. ஏன் என்று எனக்கே புரியாத மர்ம புதிராக இருக்கிறது.//
    என்று படிக்க.. சக இந்தியனுக்காக (சக இந்தியன் என்பதற்காக மட்டும்) கண்ணில் நீர் வருகிறது...

    ReplyDelete