Mar 9, 2011

வஞ்சம் தீர்த்ததா `வங்கம்'?!
`நான் குடும்பம் என்று கருதுவதும் என்னையும் ஒரு அங்கமாகப் பிணைத்துக்கொண்டிருப்பதும் இந்த இயக்கம் ஒன்றைத்தானே தவிர வேறில்லை' (கலைஞரின் சுயசரிதை `நெஞ்சுக்கு நீதி' இரண்டாம் பாகம் பக்கம் 1)

இந்த சுயசரிதை வெளியானது 1987ம் வருடம். 24 ஆண்டுகள் ஓடிவிட்டது. காலமும், கட்டாயமும் பல மாய ஜாலங்களை செய்துவிட்டது. இப்போது இயக்கத்தையே தன் குடும்பமாக்கி, அதை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார் கலைஞர். திமுகழகத்தின் ` சரணாகதி படலம்' மார்ச் 8 ந்தேதி மகளிர் தினத்தன்று டெல்லியில் அரங்கேறிவிட்டது.

இது கலைஞரின் ராஜதந்திரம் என்கிறார்கள் அப்பாவி கழக கண்மணிகள். எதற்காக இந்த ராஜதந்திரம்? கட்சியின் நலனுக்காகவா? உச்ச நீதிமன்ற உத்திரவினால் துரத்தும் சிபிஐ விசாரணைக்காகவா? சீறும் சிபிஐதான் இந்த சரணாகதிக்கு காரணம் என்பது இந்தியத் திருநாட்டிற்கே தெரியும். மேலும் காங்கிரஸ் தயவில்லாமல் தேர்தலில் திமுக `திருமங்கல' வேலைகளை களத்தில் செய்ய முடியாது.

60 இடங்கள் கொடுக்க ஒப்புக்கொண்டோம். அதற்கு பிறகு மீண்டும் 63 இடங்கள் வேண்டுமென்றும், அதுவும் நாங்கள் கேட்கும் தொகுதிகள் வேண்டும் என்று நிர்பந்தம் செய்வது எந்த வகையில் நியாயம்? திமுகவின் உயர் மட்டக்குழ கூடி முடிவெடுக்கும்.

இப்படி அறிவித்துவிட்டு, மார்ச் 6 ந்தேதி காங்கிரஸோடு தன் உறவை முறித்துக்கொண்டது திமுக.மத்திய அரசிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்கிறோம் என்று அறிவித்து, அமைச்சர்கள் ராஜினாமா கடிதத்தோடு டெல்லி செல்வார்கள் என்றும் அறிவித்தது.

சென்னையில் `பொறுத்தது போதும் பொங்கியெழ' என்று வீர வசனம் பேசினார்கள். அமைச்சர்கள் டெல்லி போனதும் ` மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏந்தினேன்' என்று சோனியாவிடம் மண்டியிட்டதன் பின்னனிதான் என்ன ?

ராஜினாமா கடிதம் கொடுக்க பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை என்று ஒரு காரணம். அன்று அதாவது மார்ச் 7ந்தேதி பிரதமர் நாடாளுமன்றம் வந்தாகவேண்டும். ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை தலைவர் தாம்ஸின் நியமனத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். அதற்கு தானே பொறுப்பேற்றுக்கொண்டு, நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார் பிரதமர். அங்கே போய் அவரிடம் ராஜினாம கடிதங்களை கொடுத்துவிட்டுவர வேண்டியதுதானே இந்த தன்மானத் தமிழர்களின் வேலை. அதை விடுத்து ஏன் பிரணாப் முகர்ஜியின் தூதுக்கு மண்டியிட்டார்கள் ? பின்னர் அவர் கேட்டுக்கொண்டதின் பேரில் ராஜினாமாவை இருபத்தி நாலு மணி நேரம் ஏன்ஒத்திப்போட்டார்கள். ?

`மக்கள் நலன், மக்கள் நலன் என்றே சொல்லுவார்.
தம் மக்கள் நலன் ஒன்றேதான் மனதில் கொள்வார்' என்று வாலி எம்ஜிஆருக்காக எழதிய பாடல் வரிகள்தான் டெல்லியில் வேலை செய்தது.

அகில் இந்தியாவிலும், ஏன் உலக அளவில் காங்கிரஸை படுகேவலத்தில் தள்ளியது திமுக. அந்தக் கட்சியை காங்கிரஸ் கூட்டணியில் வைத்துக்கொள்ள `வங்க' த்து பிரணாப்பிற்கு ஏன் இத்தனை அக்கறை. அங்கேதான் திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த பிரணாப் முகர்ஜியின் பழிவாங்கும் படல நாடகம் அரங்கேறியது.

தன் சொந்த மாநிலத்தில் மார்க்ஸிஸ்ட கட்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல் தலைநகர் வந்து ஒட்டிக்கொண்டவர் பிரணாப் முகர்ஜி.இவரால்தான் மம்தா பானர்ஜி காங்கிரஸைவிட்டு வெளியேறி திரிணாமுல் காங்கிரஸை உருவாக்கி, மேற்கு வங்கத்தில் இன்று காங்கிரஸையே மிரட்டிக்கொண்டிருக்கிறார் மம்தா.`பிரணாப் முகர்ஜி இருக்கும்வரையில் காங்கிரஸ் பக்கம் திரும்பவே மாட்டேன்' என்று சூளூரைத்தர் மம்தா.

பிரணாப்பிற்கு பிரதமராகும் கனவு உண்டு. அவரது கனவை சுக்குநூறாக்கி மன்மோகனை பிரதமராக்கினார் சோனியா. வஞ்சம் தீர்க்கும் வாய்ப்பை எதிர் நோக்கி காத்திருந்தார் பிரணாப்.

இதற்கிடையில் நம் சிவகெங்கை செல்வன் ப. சிதம்பரத்திற்கும், பிரணாப் முகர்ஜிக்கு பனிப் போர் உச்ச கட்டத்திலிருக்கிறது. இந்த போரை பற்றி ` `இந்தியா டுடே' ஆங்கில இதழ் சென்ற வாரம் அட்டைப் படக் கட்டுரையே வெளியிட்ட்து.சென்னையில் நடந்த திமுக- காங் பேச்சுவார்த்தை முறிவுக்கு காங்கிரஸின் பஞ்ச பண்டவர் குழவிலிருந்த ப.சிதம்பரம்தான் காரணம் என்கிற வதந்தி ஏற்கெனவே உண்டு.

2 ஜி விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே முக்கியமான ஆவணங்களை மீடியாக்களுக்கு கசிய விட்டதே பிரதமர் அலுவலகம்தான் என்று வருந்திக் கொண்டிருக்கிறது திமுக. பிரதமரை மாற்றவேண்டும் என்கிற எண்ணமும் திமுகவிற்கு உண்டு. அப்படி ஒரு நிகழ்வு நடந்தால், நீங்கள் பிரதமராவதற்கு எங்களது ஆதரவு எப்போதும் உண்டு. என்று திமுக பிரணாப்பிற்கு ஆசை காட்டியிருக்கிறது. அதனால் திமுக- காங் கூட்டணியில் பிரணாப்பிற்கு அதிக மோகம்.

ப. சிதம்பரம் - பிரணாப் பனிப்போரில் இருவருக்குமே வெற்றி தோல்வியில்லாமல் பார்த்துக்கொண்டார் சோனியா. கூட்டணி நீடிப்பதில் வெற்றி பெற்றார் பிரணாப். அதே சமயம் அதிக இடங்கள் என்கிற ப். சிதம்பரத்தின் உறுதியை நிலை நாட்டி 63 இடங்களை பெற்றுவிட்டது காங்கிரஸ்.இதில் பிரணாப்பும், ப்.சியும் வெற்றி பெற்றார்கள். தமிழ்க காங்கிரஸ் தொண்டர்கள் தோல்வியுற்றார்கள். அவர்கள் விரும்பிய கூட்டணி அமையவில்லை.

கூட்டணி உறுதியான இரவே பிரணாப்பிற்கு நன்றி கடன் செலுத்தியது திமுக எப்படி ? .தாமஸ் விவகாரத்தில் தான் பொறுபேற்பதாக நாடாளுமன்றத்தில் பரிதாபமாக ஒப்புக்கொண்டார் பிரதமர். அப்போது அவருக்கு பக்கத்தில் ஒரு மத்திய அமைச்சர் கூட இல்லை. தன்னந்தனியாக இருந்த பிரதமர் மன்மோகன்சிங்கை குடைந்தெடுத்தார் பாரதீய ஜனதாவின் அருண் ஜேட்லி. பிரதமர் மன்மோகன் சிங் ஒரு குற்றவாளியை போல அப்போது நாடாளுமன்றத்தில் காட்சியளித்தார். அதை இரவு முழவதும் பலமுறை சன், மற்றும் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

கூட்டணி முடிந்தது. வெற்றி நமக்குத்தான் என்று திமுக- காங் இரண்டு கட்சிகளும் வெளியே மார்தட்டிக்கொண்டு பவனி வருகிறது. ஆனால் நடந்திருப்பது ஒரு கட்டாயக் கல்யாணம். கடந்த காலங்களைப் போல இரண்டு கட்சிகளும் மனமொத்த தம்பதிகளாக வீதியில் பவனி வரப்போவதில்லை.

தொகுதிகள் முடிவாகி இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்கிற நேரத்தில் சிபிஐயின் கிடுக்கிப்பிடிகள் தொடரும். அது கலைஞர் குடும்பத்தின் மீது பாய்ந்தால் திமுக தொண்டர்களின் கோபமெல்லாம் காங்கிரஸ் மீது பாயும். களம் ரண களமாகிற வாய்ப்பும் உண்டு.

தேர்தல் சூடு பிடிக்கும்போது 2 ஜீ விவகாரமும் சூடு பிடிக்கும்.
அது திமுகவை தமிழகத்தில் பாதிக்கும்.காங்கிரஸை அகில இந்தியாவிலும் தாக்கும். அது கேரள, மேற்கு வங்க, ஆசாம் தேர்தல்களிலும் எதிரொலிக்கும். அந்த பயமும் காங்கிரஸிற்கு இல்லாமலில்லை.

காங்கிரஸ் அதிக இடங்களை கேட்டுப் பெற்றதில் இன்னோரு தந்திரமும் உண்டு. இப்போது திமுக வசமுள்ள தொகுதிகள் 121 மட்டுமே. பெரும்பான்மை பலம் பெற 117 இடங்கள் நிச்சயம் தேவை. 2006 தேர்தலின் போது திமுக ஆட்சியிலில்லை. அதனால் அந்த கட்சிக்கு அப்போட்து எதிர்ப்பு அலை கிடையாது. அப்படி இருந்துமே 90 இடங்களில்தான் திமுக வெற்றி பெற்ற்து.இப்போது திமுக எதீர்ப்பு அலை என்பது அகில இந்திய புகழ் பெற்றுவிட்டது. அதை மீறி எத்தனை இடங்களை பெறப்போகிறது என்பது பெரும் கேள்விக் குறி. அப்படி ஒரு நிலை வந்தால் திமுக ஆட்சிக்கு வால் பிடிக்காது காங்கிரஸ்.

அதிக இடங்களை காங்கிரஸ் பெற்றால் ஆட்சியைப் பிடிக்கிற ஆசை காங்கிரஸிற்கு உண்டு. அதற்கு திமுக நேசக்கரம் நீட்டாவிட்டால், மற்ற கட்சிகளை வளைக்கும் யுக்தி காங்கிரஸிற்கு தெரியும்.

63 இடங்களை காங்கிரஸிற்கு மனமுவந்து கலைஞர் கொடுக்கவில்லை.மிரட்டலுக்கு பணிய வேண்டிய கட்டாயம். தங்கள் கூட்டணியிலிருக்கும் காங்கிரஸ் எத்தனை இட்ங்களில் வெற்றி பெறுகிறது என்பதை விட, எத்தனை இடங்களில் காங்கிரஸை நாம் தோற்கடிக்க முடியும்
என்று திமுக கணக்குப் போட்டு வேலை பார்க்கும். திமுக தொண்டர்கள் பலமில்லாமல் காங்கிரஸ் வெற்றி பெற அந்த கட்சிக்கு களப் பணி செய்ய ஆட்கள் கிடையாது.

திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க அதிமுக இம்முறை அதிகம் கஷ்டப் பட வேண்டியதில்லை. அந்த இரு கட்சிகளுமே அதைப் பார்த்துக் கொள்ளும். மேலே நடக்கும் சதி வேலைகள் தெரியாமல் திரியப் போவது இரு கட்சிகளின் அப்பாவித் தொண்டர்கள்தான்.

தங்கள் கட்சியின் வெற்றிக்காக உழைத்த இந்த இரு கட்சி தொண்டர்களும், இந்த தேர்தலுக்குப் பிறகு நடக்கப்போகும் குடுமிச் சண்டைக்காக பாடுபடப் போகிறார்கள்.

அதற்கு உதாரணம் கலைஞரும், பிர்ணாப்பும் பிரதமரைச் சுற்றி ஒரு சக்ரவியூகம் அமைத்திருக்கிறார்கள். பாரதப்போரில் யுதிஷ்ட்ரன் சக்ரவியூகத்தில் சிக்கிக்கொண்டபோது, அவரை மீட்ட அபிமன்யூ இருந்தான். இப்போது எந்த அபிமன்யூ வரப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
4 comments:

 1. எப்படி இருந்தாலும் காங்கிரஸ் போட்டியிடும் இடங்களில் திமுக, கூட்டணி காங்கிரசை மண்ணைக் கவ்வ வைக்கும் என்பது கடந்த கால சரித்திரம்.குறிப்பாக பெரிய தலைகளை வெல்ல விடாது. சுப்ரீம் கோர்ட்டை மீறியும் காங்கிரஸ் (எ) சோனியா, சிபிஐ மீது ஆதிக்கம் செலுத்தி
  2G காரர்களைக் காப்பாற்ற இயலும் என்று நம்ப முடியவில்லை. ஒருவேளை எல்லாவற்றையும் மீறி ஒருவேளை திமுக -காங் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியையும் அமைந்து விட்டால் (நினைக்கவே பயமாகத்தான் இருக்கிறது!!), விரைவில் எகிப்து,லிபியா போல இங்கும் ஒரு மாபெரும் மக்கள் புரட்சி நடக்கும் என்றுமட்டும் எதிர் பார்க்கலாம். -ரோமிங் ராமன்.

  ReplyDelete
 2. உண்மைகள்தான்..

  //திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க அதிமுக இம்முறை அதிகம் கஷ்டப் பட வேண்டியதில்லை. அந்த இரு கட்சிகளுமே அதைப் பார்த்துக் கொள்ளும். //

  இதுதான் பஞ்ச்

  ReplyDelete
 3. நல்ல பதிவு. மே 13 தேதிக்கு அப்புறம் நிறைய யுத்தகளம் இருக்கிறது.

  ReplyDelete
 4. நல்ல ஒரு பதிவு அய்யா - அதிலும் `மக்கள் நலன், மக்கள் நலன் என்றே சொல்லுவார்.
  தம் மக்கள் நலன் ஒன்றேதான் மனதில் கொள்வார்' இந்த பாடல் மிகவும் அருமை

  ReplyDelete