Dec 25, 2008

இப்படியும் இருந்தார்கள்!


என்னவோ இந்த வாரம் சிலரை நினைப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இன்றைக்கு கிறிஸ்துமஸ் தினம் கூடவே மூதறிஞர்,இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல், சென்னை ராஜதானியின் முதல் அமைச்சராக இருந்த ராஜாஜியின் நினைவுநாள். 1972 டிசம்பரில் இதே நாளில் அவர் மறைந்தார்.

இந்திய சுதந்திர சரித்திரத்தில் மறைக்கப்பட்ட,மறக்கப்பட்ட பல தென்னிந்தியர்களில் அவர் முக்கியமானவர். இங்கே பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் பூர்ண மதுவிலக்கு வேண்டுமென்று தன் கூட்டணி சகாவான ஆளும் திமுக அரசை மிரட்டிக்கொண்டிருக்கிறார்.ஆனால் தமிழ்நாட்டில் மதுவிலக்கை ரத்து செய்த சாதனையாளர் தமிழக முதல்வர் கருணாநிதிதான் என்பது டாக்டருக்கு தெரியாததல்ல.

மதுவிலக்கை ரத்து செய்யப்போகிறார் கருணாநிதி என்றவுடன் அவருடைய கோபாலபுரம் வீட்டிற்கே சென்றார் ராஜாஜி.தலைமுறைகளையே அழிக்கப்போகும் இந்த காரியம் வேண்டாம் என்று கருணாநிதியிடம் கெஞ்சினார் ராஜாஜி.ஆனால் அடுத்த நாளே`முனிபங்கவரின் கால்களெல்லாம் இப்போது கோபாலபுரத்திற்கு யாத்திரை வருகின்றன’ என்று அன்று கருணாநிதி கேலி பேசினார். இம்முறை இவர் முதல்வரானபின் புட்டபர்த்தி சாய்பாபா இவருடைய கோபாலபுர வீட்டிற்கு வந்தபோது கருணாநிதி இப்படி பேசவில்லை. ஒரு தலைமுறை சீரழிவை தடுக்க வந்த ராஜாஜி குறித்து அன்று அப்படி பேசினார் கருணாநிதி.

இதைவிட வேடிக்கை, இன்று டாக்டர் ராமதாஸ் நடத்தவேண்டிய இந்த போராட்டத்தை உண்மையில் செய்ய வேண்டியவர்கள் காங்கிரஸ்காரர்கள்தான்.உண்மையான காங்கிரஸ்காரர்கள் என்ன செய்தார்கள் என்பதற்கு ராஜாஜியின் வாழ்க்கையை கொஞ்சம் திரும்பித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

1929ல் அவர் தீவிர மதுவிலக்கு பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்காக தனக்கு இரு தளங்களை அமைத்துக்கொண்டார் ராஜாஜி.முதலில் இந்திய மதுவிலக்குச் சங்கத்தின் கெளரவப் பொது செயலாளரானார். அடுத்து காங்கிரஸ் கட்சியின் மதுவிலக்கு பிரச்சார பொறுப்பும் அவரிடம் வந்தது. அதனால் அவருக்கு இரண்டு தளங்கள் கிடைத்தது.

பூரண மதுவிலக்கை அமல்படுத்த சட்டசபையிலும், வெளியேயும் எல்லாவித முயற்சிகளும் செய்யப்படவேண்டுமென்று அப்போது கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தில் மதுக்கடை மறியலும் ஒரு திட்டமாக இருந்தது. மதுவிலக்கிற்காக ராஜாஜி தயாரித்த ஒரு தேசியத் திட்டம் காங்க்ரஸ் நிர்வாகக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த திட்ட் செயல்பாட்டில் டாக்டர் அன்ஸாரி, வல்லபாய் படேல், டாக்டர் ராஜேந்திர பிரசாத், ராஜாஜி ஆகியோர் ஒரு குழவாக செயல்பட்டார்கள்.

இந்த திட்டபடி ஒவ்வொரு ராஜதானியிலும் காங்கிரஸில் ஒரு மதுவிலக்குக் குழ இருக்கும். ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு மதுவிலக்கு நிர்வாகி இருப்பர் இந்த சபைகள் கள்ளுக்கடை மறியல் செய்யலாம், மதுவிலக்கு லைசன்ஸ் வழங்கும்போது ஏலத்தில் பங்கு கொள்ள வேண்டாமென்று கடைக்காரர்களை தடுக்கலாம். இப்படியெல்லாம் காங்கிரஸ் அன்று செயல்பட்டது. மதுவுக்கு எதிரான சத்தியபிரமாணங்களை தயாரித்தார். பாடல்கள் இயற்றினார்; கொடி ஒன்றை உருவாக்கினார்; ஆர்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தார்.

இதையெல்லாம் அவர் காங்கிரஸில் இருந்தபோது ராஜாஜி செய்தார். அப்போது காங்கிரஸ் ஒரே கட்சியாக இருந்தது. இப்போது போல், டெல்லிக்கு ஒரு பத்து இருபது எம்பிக்களை அனுப்புகிற கிளை அலுவலகமாக தமிழக காங்கிரஸ் இருக்கவில்லை.