Dec 24, 2008

விந்தை மனிதர்இன்று அதாவது டிசம்பர் 24 பல முக்கியங்களை கொண்ட நாள்.முதல் முதலாக அமெரிக்க விண்வெளி வீரர்கள் 1968 டிசம்பர் 24ந் தேதிதான் சந்திரனில் கால பதிக்க முடியும் என்பதை உறுதி படுத்திவிட்டுத் திரும்பினார்கள்.பிராங்க் போர்மென்,ஜெம்ஸ் லோவல்,வில்லியம் ஆண்டர்ஸ் இந்த மூவரும்தான் முதலில் சந்திரனின் இருண்ட பகுதியைப் பார்த்துவிட்டு திரும்பினார்கள்.அதற்குப் பிறகு தான் 1969 ஜீலை 20ந் தேதிதான் நீல் ஆம்ஸ்ட்ராங்க் நிலவில் கால் பதித்தார்.

1994ம் ஆண்டு இதே நாளில் நான்கு தீவிரவாதிகள் ஏர் பிரான்ஸ் விமானத்தை கடத்தினார்கள். கடத்திய நான்கு இளைஞர்களும் இஸ்லாமியர்கள்.1979ல்தான் சோவியத் ரஷ்யாவிற்கு `சனி திசை' ஆரம்பமானது. ரஷ்ய துருப்புகள் ஆப்கானிஸ்தானில் நுழைந்தது. அந்த படையை விரட்ட அமெரிக்க எடுத்த அதிரடி நடவடிக்கைகளால், இன்றும் அமெரிக்கர்கள் அந்த புதை மணலிலிருந்து தங்கள் கால்களை எடுக்க முடியவில்லை. தீவிரவாதத்தின் தலைநகராக இந்த பகுதி இப்போது மாறிவிட்டது.

இந்த நாளில் உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி இப்போது நாம் ஏன் கவலைப்படவேண்டும்.நம் ஊர் விஷயத்திற்கு வருவோம்.இன்றைக்கு விந்தை மனிதர் மக்கள் திலகம்,புரட்சித்தலைவரென்றெல்லாம் அழைக்கப்பட்ட எம்.ஜீ.ஆரின் நினைவு நாள். இன்றைக்கு நினைவில் இருக்கிறது. முதல் நாள் டிசம்பர் 23ந் தேதி, இரவு 10 மணியிருக்கும். நண்பரும், திரைப்படத்தயாரிப்பாளருமான கலைப்புலி தாணு என்னைத் தொலைபேசியில் அழைத்தார். ` உனக்கு ஒரு விஷயம் தெரியும. மக்கள் திலகம், கொடை வள்ளல் எம்.ஜீ.ஆரை நாம் இழந்துவிட்டோம். இன்னும் அதிகாரபூரமான செய்தி வரவில்லை. விசாரித்துத் தெரிந்து கொள்' என்றார். அப்போது நான் ஜீனியர் விகடனின் தலைமை நிருபர். உடனே களத்தில் இறங்கினேன். அப்போது ஐஏஎஸ் அதிகார் கற்பூரசுந்தர பாண்டியன், தமிழக அரசின் செய்தித் துறை செயலர். அவர் புதிதாக திநகர் கிருஷ்ணா தெருவில், இயக்குனர் பாரதிராஜா வீட்டிற்கு எதிரே குடிவந்திருந்தார். அவருக்கு தொலைபேசி இணைப்பு வராத நேரம். பாரதிராஜா வீட்டு தொலைபேசியைத்தான் பயன்படுத்தி வந்தார். அப்போது இயக்குனர் பாரதிராஜா, எம்.ஜீ.ஆரின அதிகாரபூர்வமற்ற திரையுலக கொள்கை பிரசார பீரங்கியாகவே இருந்துவந்தார்.

உடனே நான் பாரதிராஜாவை தொலைபேசியில் அழைத்தேன். அவரது போன் தொடர்ந்து பிஸியாகவே இருந்தது. அந்த நேரத்தில் பாரதிராஜா தொலைபேசியில் அத்தனை நேரம் பேசமாட்டார் என்பது எனக்குத் தெரியும்.வெகுநேரம் கழித்து இணைப்பு கிடைத்தது. `ராமாவரம் தோட்டத்தில் என்ன நடக்கிறது ?' என்றேன். சொல்லத் தயங்கினார், நானே தொடர்ந்தேன்,` இந்த நேரத்தில் உங்கள் தொலைபேசி பிஸியாக இருக்காது. உங்கள் எதிர்வீட்டுக்காரர் செய்தித்துறை செயலர் உங்கள் போனை பயன்படுத்தி கொண்டிருக்கிறார் என்றால் என்ன நடக்கிறது ?' என்றேன். அதற்கு மேல் பாரதிராஜாவால் விஷயத்தை மறைக்க முடியவில்லை. ஒப்புக்கொண்டார். அப்போது மணி இரவு பதினொன்று. உடனே நான் அப்போதைய அமைச்சர்கள் அரங்கநாயகம், திருநாவுக்கரசு,,நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்த ஆலடி அருணாவிற்கு இந்த தகவலை சொன்னேன். அவர்க்ள் பறந்தடித்துக்கொண்டு தோட்டத்திற்கு ஒடினார்கள். இரவு ஒரு மணிக்கு எம்.ஜீ.ஆர் மறைந்த செய்தியை அமைச்சர் திருநாவுக்கரசர் உறுதி செய்தார்.

ஆனால் அதிகாரபூர்வமாக எம்.ஜீ.ஆர் மறைந்த நேரம் விடியற்காலை 3.30 மணி என்றுதான் இன்றும் இருக்கிறது. அந்த இரவில் அந்த தோட்டத்தில் நடந்ததெல்லாமே `ரகசியம் பரம ரகசியம்' எம்.ஜீ.ஆர் உடலை முதல் மாடியிலிருந்து கீழே கொண்டுவரும்போது லிப்ட் பழதாகி நின்றது. அவரது உடலை வெளியே கொண்டுவருவதற்கு முன் அந்த முகத்துக்கு கறுப்பு கண்ணாடியும், தொப்பியும் அணிவித்தவர் இயக்குனர் பாரதி ராஜா.இந்த செய்திகள் எல்லாமே ஜீனியர் விகடனில் மட்டுமே வெளிவந்தது. பின்னார் அரசியல் சூழல்கள் மாறியபோது, அன்றைய இரவு முழவதும் அந்த வீட்டு லிப்ட் தொடர்ந்து எதற்காக பயன்படுத்தப்பட்டது என்று சிபிஐ அதிகாரிகள் பின்னாளில் என்னிடம் விசாரணை நடத்தியது வேறு விஷயம்.

அன்று அந்த வள்ளலால் வாழ்வு பெற்று, அரசியல் முகவரி பெற்றவர்கள் பலர் இப்போது திமுக தலைவர் கருணாநிதியுடன் இருக்கிறார்கள். உள்ளூர விரும்பாவிட்டாலும் கூட இன்றும் அவரை புறக்கணித்துவிட்டு அரசியல் நடத்த முடியாது என்கிற நிலைதான அதிமுகவிற்கும் உள்ளது. எம்.ஜீ.ஆர். இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்று நம்பும் பல கிராமத்து விசுவாசிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவர் இறந்து ஐந்து ஆண்டுகள் கழித்து அவரை எம்.ஆர். ராதா சுட்ட வழக்கை நான் தினமணி கதிரில் நான் தொடராக எழதினேன். அது கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு, நேற்று கூட இலங்கையிலிருந்து ரமேஷ் என்கிற ஒரு வாசகர் அந்த புத்தகத்தை இலங்கை புத்தகக் கண்காட்சியில் வாங்கி படித்துக்கொண்டிருப்பதாக தொலைபேசியில் சொன்னார்.

அடிப்படையில் நான் சிவாஜி ரசிகன். எம்.ஜீ.ஆர் இருக்கும்போது தொடர்ந்து அவரது அரசுக்கு எதிராக எழதி வந்தவன்.இதனாலேயே அந்த கால கட்டத்தில் கருணாநிதியின் `குறுகிய கால' அன்பைப் பெற்றவன். ஆனாலும் அவரைப் பற்றிய புத்தகம் இன்றைக்கும் எனக்கு மரியாதையை தேடிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. அதுதான் எம்.ஜீ.ஆர் என்கிற மூன்றெழத்தின் மந்திரம்.

மனித உள்ளங்கள்தான் பெருங்கோவில் என்றார் வள்ளலார். அப்படியானால் எம்.ஜீ.ஆருக்குத்தான் எத்தனை லட்சம் கோவில்கள்!