Dec 20, 2008

`தர்ம’ தாய்


என்றக்கும் போல்தான் அன்றைக்கும் காலையிலேயே அலுவலகம் போயிருந்தேன். `SURE SUCCESS'அலுவலகத்தில் எனக்கும் ஒரு இடம் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் கல்வியாளர்கள். நானோ படிக்காத தற்குறி. அந்த நிறுவனம் வருடந்தோறும்,சென்னை மேற்கு மாம்பலம் அகோபில மடம் பள்ளியின் தலைமையாசிரியர் திரு டி.எம்.எஸ்.(அவரைப் பற்றி ஏற்கெனவே மாண்புமிகு மனிதர்கள் பகுதியில் எழதியிருக்கிறேன்) அவர்களை கொண்டு ஆங்கில மீடியம் +2 மாணவர்களுக்கு ஒரு கணித கையேடு தயாரித்து, ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக கொடுத்து வருகிறது. சென்ற வருடம் மட்டுமே 5,500 மாணவர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.பெரிய முதலாளிகளோ, அரசின் உதவியோ இல்லாமல் இந்த காரியத்தை செய்வது மிகவும் கடினம். சாதாரண நடுத்தர மக்களிடம் வாங்கியே இந்த காரியத்தை சாதித்தார்கள்.இதைத்தான் இந்த நிறுவனம் செய்து வருகிறது.

இந்த அலுவலகத்தில் நுழைந்த போது, வாசலிலிருந்த காவலாளி ` சார், ஒரு அம்மா, காலையிலிருந்தே உங்க அலுவலகத்தில யாரையாவது பாக்கணும்னு காத்திருக்காங்க’ அந்த பெண்மணி இருந்த இடத்தை காட்டினார்.வறுமையை பறைசாற்றும் உடை, தோற்றம். அந்த பெண்மணிக்கு நடுத்தர வயது. மற்றவர்கள் வராததால் அவரை வரவேற்பறையில் உட்காரச் சொன்னேன்.அவர் மற்றவர்களுக்காக காத்திருக்கவில்லை. தன் இடுப்பிலிருந்து ஒரு சுருக்கு பையை எடுத்து என் முன்னிருந்த மேஜை மீது வைத்தார். பிரித்தார். அதில் சில்லறையாகவும், நோட்டாகவும் இருந்த காசுகளை கொட்டினார். அவரது இடது கையில் சென்ற வருடம் இந்த நிறுவனம் கொடுத்த கணிதக் கையேடு.`ஐயா, எனக்கு இரட்டை பிள்ளைங்க. ஒண்ணு பொண்ணு, ஒண்ணு பையன். இரண்டும் போன வருஷம் +2 பரீட்சை எழதினாங்க. அவங்க படிக்கிற பள்ளிக்கு வந்து நீங்க புஸ்தகம் கொடுத்தீங்க. இரண்டு பேரும் நல்ல மார்க் வாங்கி அவங்க தகுதியிலேயே அண்ணா பல்கலைக்கழகத்தில இடம் கிடைச்சிருச்சு. நான் வேலை பாக்கற வீட்டுல அவங்க எங்க பிள்ளைங்க மார்க்கை பாத்துட்டு மேலே படிக்க வைக்கிறதா சொல்லிட்டாங்க.எங்க பிள்ளைங்களுக்கு கணக்குல நல்ல மார்க். அதுக்கு இந்த புஸ்தகம்தான் காரணம்னு சொல்றாங்க.இந்த தர்ம காரியத்தை நிறுத்திடாதீங்க. வருஷா வருஷம் கொடுங்க. என் பிள்ளைங்க மாதிரி எத்தனை குழந்தைங்க இருக்கும். இதில ஐயாயிரம் ரூபாய் இருக்குங்க. இப்போதைக்கு என்னால இவ்வளவுதான் இருக்கு. என் பிள்ளைங்க நல்ல வேலைக்கு போனா நிறைய கொடுப்பேன். இது சத்தியமுங்க’ சொல்லும்போதே நெகிழ்ந்தார்.

அவருடைய வருமானத்திற்கு அந்த பணம் லட்சங்களுக்கு சமம்.அந்த பணத்தை கூட தன் நகைகளை அடகு வைத்து கொடுத்திருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டேன்.தனக்கு விளம்பரமோ, பெயரோ தேவையில்லை என்று சொல்லிவிட்டு போனார்.

மனிதர்களின் மேன்மை பணத்தினாலும், புகழினாலும் வருவதில்லை என்பதை புரிய வைத்தார். என் அலுவலக நண்பர்களிடம் சொன்னேன். `புத்தக தானத்தை நிறுத்தாதீர்கள். அடுத்த வேளைக்கு சோறில்லாத பெண்ணே செய்யும்போது, பல நல்ல உள்ளங்கள் செய்ய மாட்டார்களா ?’ என்றேன். தயக்கத்தோடு ஏற்றுக்கொண்டார்கள்.

அவர்களுக்கே திகைப்ப்பு! சென்றவிடமெல்லாம் தங்களால் முடிந்ததை மனிதர்கள் இந்த தானத்திற்கு உதவ முன் வருகிறார்கள்.எனக்கு தெரிந்தவரையில் வெளியே தெரிந்த நபர்கள் அளித்த நன்கொடை என்பது முதலில் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா. கங்கா பவுண்டேஷன் செந்தில்.கோவை நண்பர் ராதாகிருஷ்ணன்,ஜெய மாருதி சாரிடபிள் ட்ரஸ்ட், டென்த் பிளானட் குமரன், அரசியல் பிரமுகர் கெளரிசங்கர், அடையாறு அருணாசலம், மதன் மோகன் என்று மனிதர்கள் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

இதில் `திருட்டுப் பயலே’ `சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் சென்ற வருடம் ஆயிரம் புத்தகங்களுக்கு பணம் கொடுத்தார். இந்த வருடம் இரண்டாயிரத்துக்கும் பணம் கொடுத்துவிட்டார். தமிழகம் முழவதும், மாநகராட்சி, முனிசிபில், ஏய்டட் பள்ளிகளில் படிக்கும் ஆங்கில மீடியம் ஏழை குழந்தைகளின் எண்ணிக்கை 18,000 அத்தனை பேருக்கும் இந்த தானம் சாத்தியமா என்பது தெரியவில்லை.

`எங்களுக்கு சாதாரண, படிப்பின் மேன்மை தெரிந்த நடுத்தர மக்கள் அவர்களால் இயன்றதைக் கொடுக்கட்டும். ஒரு புத்தகத்தின் விலை 95.அலுவலகத்துக்கு வந்த ஏழைத் தாயினால் ஐம்பது புத்தகங்களுக்கு கொடுக்க முடிகிறதென்றால், மற்றவர்களால் முடியாமலா போகும்.’ என்கிறார்கள்.

` என்னால் முடிந்ததை செய்கிறேன். கூடவே முடிந்தவர்கள் ஒரு பத்து பேரையாவது அறிமுகம் செய்கிறேன்’ என்று சொன்னேன்.

ஒரு நல்ல காரியம் தொடர இந்த வருடம் தூண்டிய அந்த பெண்மணிதான் என்னைப் பொருத்தவரையில் `தர்ம’தாய்