Jun 10, 2008

அரசியல்வாதிகளை நம்புவது மூட நம்பிக்கை - கம்ல்ஹாசன்







சில பேட்டிகள் எந்த காலத்திற்கும் பொருந்தும். இந்த பேட்டி கமல்ஹாசன் 1996ல் நான் தமிழன் எக்ஸ்பிரஸ் ஆசிரியனாக இருந்த போது அளித்த பேட்டி.சினிமா, கலை இலக்கியம் என சகலகலவல்லவனாக மூன்று மணி நேரங்கள் பொங்கினார். அந்த பொங்கலின் சில துளிகள்.











1996ம் வருடம் தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. இதில் திரைப்பட கலைஞர்கள், மற்றும் கலையுலகின் பங்கு முக்கியமானது. ஆனால், நீங்க பங்கு கொள்ளாமல் வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்தீர்கள். சற்று விலகியே நின்றீர்கள் ஏன் ?











நான் பார்வையாளனாக இருந்தேன். உண்மை. முதலில் நான் பார்த்ததை சொல்கிறேன். அதற்கு முன்.. என் பார்வைகளைச் சொல்வதற்கு எனக்கென்ன அருகதை என்பதை நான் உணரவேண்டும். அதுவும் நான் சாராத அரசியல் பற்றி சொல்ல எனக்கு எந்தளவுக்கு அருகதை உண்டு?


எந்த அளவுன்னா வெற்றிலைப் பாக்குக் கடை வாசல்ல நின்னுக்கிட்டு ` இந்தியன் எக்ஸ்பிரஸ்' தலையங்கத்தை விமர்சனம் பண்ற சாதாரண குடிமகனுக்குள்ள அருகதை தான் எனக்கும். விமர்சனம் பண்றவனுக்கு பத்திரிகை நடத்த தெரியாது.






இப்படித் தெருமுனையில் இருந்து விமர்சனம் பண்றவந்தான் ஒரு சென்சஸ் மூலமாக ஒரு பொது ஜனக் கருத்தை உருவாக்குகிறான். இவன் அமீபா (amoeba) மாதிரி - ஒரு கிருமி.






இந்தக் கிருமி அதிகமாயிடுச்சுன்னா வயித்து வலி வரும். இத்தகைய எதிர் விமர்சினங்கள் அதிகரித்தால் அது பத்திரிகையைப் பாதிக்கும்.ஒரு நடிகனைப் பற்றி இப்படி கருத்துக்கள் புறப்பட்டால், அது அவன் மார்க்கெட்டை பாதிக்கும்.






இந்த விமர்சகன் நிலையில் இருந்துதான் நன் அரசியலை விமர்சனம் பண்ணணும். அந்த உரிமை கூட என் விரலில் விழகிற வாக்குச்சாவடி புள்ளி கொடுத்ததுதான்.அதுதான் என் முகவரி அங்கிருந்துகொண்டு நான் யாரையும் திட்டலாம்: யாரையும் நிராகரிக்கலாம்.






நான் நிராகரித்தது யாருக்கும் தெரியவும் தெரியாது. இதை வெளிப்படையா சொல்றதுனால சில அசெளகரியங்கள் வரலாம். கலைஞர் - நான் ஒரு சாதாரணன்னு சொல்றாரு. அவர் ராஜ கீரிடத்தை தலையில் வைத்துக்கொண்டு நான் சாதாரணமானவன்னு சொல்றாரு. நானோ உண்மையிலேயே மிகச் சாதாரணமானவன். சாதாரண மக்களின் சரியான பிரதிநிதி,representative நான் தான்.






எந்தச் சார்பும் இல்லாம, கிட்டப்பாவுடைய கச்சேரி, ராப் ம்யூசிக் ரெண்டையும் கேட்டுக்கிட்டு இருக்கிற ஒரு சாதாரணன் நான். என்னுடைய பார்வையில் ஒண்ணே ஒண்ணேதான் தெரியுது. மக்கள்தான்எல்லாவித ஊழலுக்கும் காரணம்.









அப்ப அரசியல்வாதிகளெல்லாம் யோக்யமானவங்கன்னு சொல்றீங்களா ?









நோ, நான் அரசியல்வாதிகளுக்கு சப்பைக் கட்டு கட்டலை. அவங்க எல்லாருமே crooks தான். அதுவும் சமீபகாலமாக பத்திரிகைகளைப் பாத்துக்கிட்டித்தானே இருக்கோம்.எத்தனை அரசியல்வாதிகள் மீது ஊழல் வழக்கு, வக்கீல் நோட்டிஸ்னு வந்துகிட்டு இருக்கு.


இப்ப ஊழல்ல சிக்காத அரசியல்வாதி, ஜாதியில்லாத மனிதர் மாதிரி. அவுங்களுக்கு என்னவெல்லாம் சிக்கல் வருமோ, அதெல்லாம் வழக்கில்லாத, குற்றங்களில்லாத அரசியல்வாதிகளுக்கும் வரும். என் அப்பாவுடைய நண்பரா இருந்தவர் முன்னாள் அமைச்சர் கக்கன். அவரு கடைசி வரைக்கும் ரிக் ஷாவிலதான் போயிக்கிட்டிருந்ந்தாரு. அந்த மாதிரி அரசியல்வாதிகள் இன்னிக்கு இல்லே. இருந்தால்கூட அவங்க அரசியலை விட்டு விலகிப் போயிருப்பாங்க. அதனால நம் ஜனநாயக நாட்டை அரசியல்வாதிகள் நடத்திக்கிட்டிருக்காங்கற நம்பிக்கை பொய் என்று எனக்குப் புரிய பல வருஷங்களாச்சு.









அப்ப யார் நடத்தறாங்க ?









இப்போது உலகத்தையே இயக்கிக்கிட்டிருபது வியாபாரம். வியாபாரிகள்,traders தான் நடைமுறையில் நடத்திக்கிட்டிருக்காங்க. அந்த வியாபரத்தில ஒரு நேர்மை வேணும்னு எதிர்பார்க்கலாம். இதுதான் இன்றைய அர்த்த சாஸ்திரம்.



அதுக்காக இவர் இவ்வளவுதான் லஞ்சம் வாங்கலாமென்று பட்டியல் போட முடியாது. இது ஒரு (moral domain) தனி உலக - தனி பரிமாணம். இந்த பரிமாணம் காலத்துக்கு காலம் மாறிக்கிட்டிருக்கு.






நேற்றைய விதவை கலயாணத்தைப் பற்றி யோசித்தால் அவள் விலைமகளுக்கு நிகரானவள். அதற்கு முந்தைய காலத்தில் அதே பெண் தேவருக்கு அடியாள். அப்போ அது தப்பில்லை! இப்படிக் காலத்துக்கு ஏற்ற மாதிரி சட்ட திட்டங்கள் மாறிகிட்டு வருது.






இதில நான் ஒரு வழிப்போக்கனாக, பாதசாரியாக குழம்பிப் போய் உட்கார்ந்திருக்கேங்கிறதுதான் உண்மை.எது moral எது moral இல்லேங்கிறதுதான் என்னுடைய `மகாநதி' படம்.இது தவறு, இது நேர்மைன்னு சொல்லி என்னை வளர்த்திட்டாங்க. அதெல்லாம் உண்மையில்லைன்னு அப்பட்டமாகத் தெரிகிறது. அப்ப நான் அசடுதானே?



என்னுடைய முப்பது நாப்பது வருஷத்தை இப்படி நம்பியே வீணாக்கியிருக்கேன்.



இப்படிச் சொல்றவங்க என்னைப் போல நிறைய பேர் இருக்காங்க. அந்த செளகரியத்துலதான் நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்.இது வணிக உலகம் என்பதுதான் நிஜம்.



இதுல அரசியல்வாதிகள் வந்திருக்காங்க,அவ்வளவுதான். இவங்க நடத்தல. வணிகத்துனால உலகம் நடந்துகிட்டு இருக்கு.



வணிகத்தினாலதான் ராஜராஜனுடைய சோழ சாம்ராஜ்யமே இருந்தது..போர், பிரகதீஸ்வரர் கோயில் இதெல்லாம் மேல்பூச்சுதான். வணிகம்தான் அவர்களையும் நடத்திக்கிட்டிருந்தது. இதை நான் இப்ப தெளிவா சொல்றேன். ஏன்னா, இப்ப என் அடுத்த படத்திற்காக சோழர் காலத்தைப் பத்தி ஒர்க் பண்ணிக்கிட்டிருக்கேன். அதனாலதான் நான் ரொம்ப தெளிவா இருக்கேன் வணிகம்தான் நிஜம்.



இதுல இப்பா நாம் நம்பிக்கிட்டு இருக்கிற அரசியவாதிங்க நமக்கு ஏதாவது செய்வாங்கங்கிறது கூட வெறும்- மூட நம்பிக்கைதான்.சமூகப் பொறுப்பு `சிவிக் சென்ஸ்'தான் நம்மை பரிபாலனம் செய்யும்.



இன்றைய அரசியல்வாதிங்கள் குற்றம் சொல்றது எனக்கு இப்ப வந்த சிந்தனை இல்லை. அரசியல்வாதிய குற்ற்ம் சொல்றதுக்கு நமக்கு எந்த அருகதையும் கிடையாது. ஏன்னா உனக்குத் தலைவன் ஒரு திருடனாகத்தான் இருக்க முடியும் ஏன்னா ` நீயே ஒரு திருடன்'


நம்மில் எத்தனை பேர் நேர்மையானவங்க?நேர்மைக்காக எத்தனை முறை தூக்கம் இழந்திருக்கோம்? எத்தனை முறை சினிமா பாக்காம திரும்பியிருக்கோம்?






நேர்மையா இருக்கணுங்கிறதுக்காக எத்தனை முறை சினிமா தியேட்டர்ல பிளாக்ல டிக்கெட் வாங்காம திரும்பியிருக்கோம்?ரொம்ப குறைவு. நான் வந்திருக்கேன். ஆனா என்னுடைய நேர்மை சினிமா டிக்கெட் வாங்கறதுல மட்டும்தான்.



சுயமா பரீட்சித்துப் பார்க்கும்போது, எனக்குள்ள ஒரு திருடன் உட்கார்ந்திருக்கான். சிறுதுளிதானே பெருவெள்ளம் அந்த பெருவெள்ளத்தைத்தான் நாம பாக்கறோம்.


சுவீஸ் பாங்குக்கு அடிச்சிகிட்டு போகுதில்லையா. அந்தப் பெருவெள்ளம் இங்கிருந்து வந்து சிறுதுளிதான். நான் ஒரு பைசா லஞ்சம் வாங்கறேன். திருட்டுத்தனம்ங்கிறது பரவலா இருக்கிற விஷயம். வணிக உலகத்தில் கூட அது நேர்மையற்ற செயல்தான். அதனால அது தண்டிக்கப்படும்போது எல்லோருக்கும் சந்தோஷமா இருக்கு.







(பேட்டி தொடரும்)