Jun 12, 2008

`இந்தியன்' படம் ஒரு ஃபாசிஸம்
(கமல்ஹாசன் எனக்கு 1996ல் அளித்த பேட்டி தொடரிது. ஆனால் இந்த பேட்டி எல்லா காலத்துக்கும் பொருந்தும்)


இந்த சந்தோஷம் போதுமா ? அதிக பட்சமா நீங்க செய்யக்கூடியது `இந்தியன்'படத்துல நூறும்,இருநூறும் லஞ்சம் வாங்குகிற குமாஸ்தாக்களைக் கொன்று, திருபதியடைஞ்சுக்கீறீங்க இல்லையா ?


ஒரு படத்தினால தீர்வுங்கறது நம்மை நாமே ஏமாத்திக்கிற விஷயம். படத்தையும், நிஜத்தையும் குழப்பிக்கக்கூடாது.` இந்தியன்' படம் மிகப்பெரிய வெற்றிப்படம்தான். ஆனா, படத்தில சொல்றதையெல்லாம் மக்கள் சீரியஸா எடுத்துக்கிறது இல்ல. அரசியல்வாதிகளும் கூட.
`இந்தியன்' படத்தில சொல்லப்பட்ட கருத்துக்கள் கூட ஃபாஸிஸம். நான் டைரக்டர் சங்கர் கிட்ட ` இது என்ன ஃபாஸிஸக் குரலா இருக்கே. எனக்கு பயமா இருக்குன்னு சொன்னேன்.இது ஹிட்லர் பேசின சாராம்சம்தான்.வேறு பட்டியல் போட்டு,மக்கள் குறைகளை லிஸ்ட் எடுத்து, வேற வாதங்களுடன். ஆனால், இதே கருத்தைச் சொன்னவர்தான் மிஸ்டர் அடால்ப் ஹிட்லர்.
சரித்திரத்தை பார்த்தா அவரும் கூட ஜெர்மன்காரர் கிடையாது. ஆஸ்திரியாவிலிருந்து ஜெர்மனிக்கு குடியேறியவர். இங்க எம்,ஜி,ஆர். மாதிரி.அதனால்தான் `ஃபாஸிஸ' வெறி இருக்கேன்னு சங்கர் கிட்ட கேட்டேன்.


`அதெல்லாம் மக்களுக்குத் தெரியாது. நீங்க ஏன் அப்பன் குதிருக்குள்ள இல்லேங்கிற மாதிரி அதையெல்லாம் தோண்டறீங்க?எண்ணம் எல்லாருக்கும் இருக்கும். யாராலயும் அதைச் செய்ய முடியலை.


எப்படி ஒரு `ரிக்ஸாகாரன்' எப்படி ஒரு ` அரசிளங்குமரி' யை காதலிக்கிறது ஒரு fantaasyயோ அதமாதிரி படம்தான் ஸார் இது இதுக்கு மேல எதுவும் சொல்லாதீங்க'ன்னு சொன்னார். அது எனக்கும் பிடிச்சிருந்தது. அதனால தான் எந்தக் கேள்வியுமே கேட்கல. இந்த விவாதம் எனக்கு நியாயமா பட்டுது'


இதப்பத்தி நான் கோவிந்த் நிஹாலனிகிட்ட கூட பேசிக்கிட்டிருந்தேன்.` என்னய்யா இது பயங்கரமான ஃபாஸிஸ ஃபிலிம்' அப்படின்னார். ஆனால், படம் யாருக்குமே இது பயங்கரமா தென்படலை. ஆடியன்ஸீக்கும் சரி, சென்ஸாருக்கும் சரி, ஒரு சில பத்திரிகைகளைத்தவிர, இதுக்கு பாராட்டுதான் கிடைச்சது.
ஒரு வேளை ஷங்கர் சொன்னது மாதிரி அந்த ஃபேண்டஸிதான் ஜெயிச்சதா?


ஆமாம், இந்தப் படம் பாதசாரிகளோட கனவு. கார்ல போறவனுக்கும் கனவு உண்டு.அவனுக்கு ஸ்விஸ் பாங்க்ல நமக்கு ஒரு கணக்கு இருக்கக்கூடாதங்கிற கனவு இருக்கும். இந்த பாதசாரிதான் சுவிஸ் வங்கியைப் பத்தி ந்னைக்காம, சுட்டுக் கொல்லணும்னு சொல்லுவான்.இவுங்களையெல்லாம் சுட்டுக் கொன்னுட்டா எல்லாம் சரியாயிடுமா ? ஆகாது. இவுங்களையெல்லாம் கத்தியக் காட்டியெல்லாம் மிரட்ட முடியுமா? எத்தனை பேர் தலைக்கு மேல டெமாக்களிஸ் கத்தி தொங்கிக்கிட்டிருக்கு? அவுங்க எல்லாம் திருந்திட்டாங்களா? யாருமே திருந்தினதா தெரியலை.


எல்லாருமே ஒருத்தரையொருத்தர் சுட்டிகாடிக்கிட்டு... ஒரு கை சுட்காட்டிக்கிட்டு இருக்கு; இன்னொரு கை கிம்பளம் வாங்கிக்கிட்டு இர்ருக்கு. அதுதான் இன்றைய நிலை.


குழந்தைக்கு பொய் சொல்லக்கூடாதுன்னு கத்து கொடுக்கிறவர் அப்பா. அதே அப்பா டெலிபோன்ல கடன்காரன் கூப்பிட்டா இல்லேன்னு சொல்லச் சொல்வாரு. அந்தக் குழந்தையோட குழப்பம்தான் இன்னைக்கு மக்களோட குழப்பம்.


ஒரு பக்கம் இதையுன்ம் சொல்றேன்;ஒரு பக்கம் அதையும் சொல்றேன். இதுல வந்து ரஜினிகாந்த பேசினது சரியா, நீங்களும் ஏன் போகலேங்கிறதெல்லாம் தேவையில்லாத கேள்விகள்.
கம்பராமாயணத்தி வரும் இந்த மரம் விழந்தது, அந்த மரம் விழந்தது, சரயு நதி வெள்ளம் இதையெல்லாம் அடிச்சுக்கிட்டு வந்தது'ன்னு வரும். அதுமாதிர்ரி இந்தமுறை வந்தது மக்கள் வெள்ளம். அதுல இந்த மரமும் விழந்தது, அந்த மரமும் விழந்தது. குங்கிலிய மரமும் விழந்தது, ரஜினி மரமும் விழந்தது.


நான் கரையிலிருந்து வெள்ளத்தை பாத்துக்கிட்டுருந்தேன். அவ்வளவுதான். நான் நின்றிருந்தது சரியான செளகரியமான மேடு. உள்ள இறங்கி நின்னு.` என்ன பெரிய வெள்ளம்'னு பாத்தா அது அடிச்சுக்கிட்டு போயிடும்.
ஆனா தேர்தல் நேரத்தில் நீங்க நின்றிருந்த மேட்டுல தனியா நின்னமாதிரி தெரிஞ்சுது. ஏன்னா உங்க சக கலைஞர்களெல்லாம் ஏதோ ஒரு விதத்தில அந்த வெள்ளத்துல் மிதந்து வந்தாங்களே. அப்ப உங்களுக்கு மட்டும் ஏன் ஒரு எச்சரிக்கை உணர்வு?
எச்சரிக்கை உணர்வெல்லாம் கிடையாது, நான் வெள்ளத்துல மூழ்கல, மிதக்கலங்கிறதனால் எனக்கு கலர் பூச முடியாது. இன்றைக்கு சிறையிலிருக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆதரவு என்றோ, இன்றைக்கு முதல்வராக இருக்கும் கருணாநிதி அவர்களுக்கு ஆதரவு இல்லை என்றோ சொல்ல முடியாது.


இன்றைய முதல்வருக்கே அது தெரியும். முதல்ல என்னைப் பார்த்ததும் அவர் சொன்னது` உன்னைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். இதிலிருந்த்தெல்லாம் தள்ளி இருப்பவன்னு தெரியும். அதுக்காக எனக்கு படம்கூடப் போட்டுக் காட்டக்கூடாதா?' அப்படின்னாரு.. அதை அவர் தெளிவா புரிஞ்சுக்கிட்டு இர்ருகாரு.. எல்லாரும் சொன்னாங்க. ` வேணும்னே அவாய்ட் பண்றார்ன்னு'
எனக்கு ஜாதி வர்ணம் பூசிப் பார்க்கிறதுல எல்ல ஜாதிக்காரங்களுக்கும் ஆசை, எனக்கு ஜாதி இல்லை. இல்லன்னு சொல்றது ஒரு நல்ல நாஸ்திகன் மாதிரி இருக்கிற தர்ம சங்கடம் நல்ல நாஸ்திகன் கடவுள் இல்லை, இல்லைன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருக்கமாட்டாம். நல்ல ஆஸ்திகன் ` கண்டிப்பா கடவுள் இருக்கார்'ன்னு சொல்லிக்கிட்டே இருப்பான். ஏன்னா அவனுக்கே எங்கேயோ சந்தேகம் இருக்கும்
தன் மேலே சந்தேகம் இருக்கிறவங்கதான் எனக்கு ஜாதி வர்ணம் பூசிப்பார்க்கிறாங்க. எனக்கு ஜாதியே கிடையாதுங்கறத என்னைத் தவிர வேறு யாருக்குமே நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. இனிமே இவங்க வர்ணம் பூசறதனால என்னாயிடும்> இனிமே இவன் நடிக்கக்கூடாது அப்படின்னு ஒதுக்கலாம்.


இதைவிட எப்படியும் என்னை பயமுறுத்த முடியாது. உயிரி பயம் எல்லாருக்கும் உண்டு. பெருந்தலைவர்லேருந்து பிச்சைக்காரன் வரைக்கும் துப்பாக்கிய எடுத்தா பயப்படுவான். ஸோ, அந்த மாதிரியான பயத்தை தவிர எனக்கு வேறு எந்த பயமும் கிடையாது.


மத்தவங்க யாரையும் புண்படுத்திவிடக்கூடாது, ஒரு குறிப்பிட்ட இனத்தை,ஒரு குறிப்பிட்ட இனத்தை,இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவரை, இந்து மதத்தை சேர்ந்தவரை தேவையில்லாமல், அர்த்தமில்லாமல் சாடிட்டேன் என்கிற ஒரு மன உறுத்தல் மட்டும் எனக்கே பயமான ஒரு விஷயம். அதனாலதான் நான் ஜாஸ்தி பேசறது இல்லை.'
இப்படி பேசாம ஒதுங்கறதும் ஒருவித கோழைத்தனம் தானே, மற்றவர்களுக்காக இல்லாவிட்டாலும், நாளை இந்த வணிக வியாபார உலகத்திலதானே உங்க குழந்தைகளும் வளரப்போறாங்க?
(தொடரும்)