Jun 23, 2008

கார்க்கிக்கு கல்யாணம்


ஜூன் 22 ந்தேதி சென்னையில் கவிப்பேரரசு வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கிக்கும், நந்தினிக்கும் சென்னை கத்திப்பாரா சந்திப்பில் உள்ள லே மெரிடியன் ஹோட்டலில். திருமணம் நடந்தது.நான் `தினமணி' ஆசிரியனாக இருந்த போது `வள்ளுவர் முதல் வைரமுத்துவரை' என்று ஒரு தொடரை தினமணி சுடரில் கொண்டு வந்தேன்.அந்த நாளை மறக்காமல் எனக்கும் அழைப்பு அனுப்பியிருந்தார். போயிருந்தேன்.

அருமையான திருமணம், நெகிழ்ந்து போய் பேசினார் கவிஞர். நெஞ்சிருக்கும் வரை படத்தில் கவியரசர் கண்ணதாசன் எழதிய `பூ முடிப்பாள் இந்த பூங்கழலி' பாடலின் சரணத்தைச் சொல்லி தன் பேச்சை துவக்கினார். நிறைய உணர்ச்சி வயப்பட்டார்.வளம் தந்த வலிமைதான் அந்த மேடை என்றாலும், வடுகபட்டியிலிருந்து நடந்து இந்த உயரத்திற்கு வந்த வலியை பிள்ளையின் திருமணம் நினைவு படுத்தாமலா போகும்!அந்த உணர்ச்சியில் உண்மை இருந்தது.

கவிஞர்கள் குழந்தை மாதிரி. அவர்களின் கால்கள் மண்ணில் இருக்காது. அதனால் பல கவிஞர்களுக்கு ஒரு பிடி மண் கூட சொந்தமாக இருக்காது. `சேர்ந்தே இருப்பது வறுமையும்,புலமையும்' என்பதை உடைத்து காட்டிய பெருமை இரண்டு கவிஞர்களுக்கு உண்டு. ஒன்று கவிஞர் வாலி, இன்னொன்று வைரமுத்து.

வைரமுத்துவின் வரிகளில் சொல்லவேண்டுமானால், அவர் எழதிய கவிதையைத்தான் நினைவு படுத்தவேண்டும்.

வீடு பேறு

அரசாங்கத்திற்கு ஏழைக் கவிஞன் இருமிக்கொண்டே எழதினான் இப்படி:

``வாடகை தர முடியாமல்
வருகிற சண்டையால்
இப்போது நானிருப்பது
இருபத்தேழாவது வீடு
இன்றோ
நாளையோ
நான்
இருமிச் செத்ததும்...
நீங்கள் எனக்கு
`நினைவகம்'அமைக்க
எத்தனை வீட்டைத்தான்
வாங்கித் தொலைப்பீர்கள்.
(நன்றி: 1977 வைரமுத்து கவிதைகள் பக்கம் 141)

இந்த நிலை வைரமுத்துவிற்கு இல்லை.பொன்மணி வைரமுத்து மாளிகையில் 270 வீடுகளை உள்ளடக்கலாம்.கவிஞர்கள் வளமாக இருப்பது ஒரு வகையில் தமிழக்கு நல்லது. பொருளாதார நிர்பந்தங்களினால் பல நல்ல கவிஞர்கள் கருவிலேயே கருகிப் போகிறார்களே!.

திருமண விழா ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்த ஒரு சர்வ கட்சி மாநாடு. மைனஸ் அதிமுகவாக இருந்தது.நாளைக்கு யாருடன் கூட்டணி சேர்ந்தாலும், அன்றே எங்கள் அரசியல் நட்பு தொடர்ந்தது என்று கலைஞர் சொல்லிக்கொள்ளலாம். `மத'சார்புள்ள பா.ஜ,கவின் சார்பில் திருநாவுக்கரசரும் மேடையில் இருந்து பேசினார்.எல்லா கட்சி தலைவர்களையும் கொண்ட ஒரு மேடை. அதிமுகவும் சேர்ந்திருந்தால், தமிழக அரசியலிலேயே ஒரு திருப்பு முனை ஏற்படுத்திய மேடையாக இருந்திருக்கும்.
வியாபார காங்கிரஸ்காரர்களான தங்கபாலுவும், ஜே.எம். ஆருணும்தான் பிள்ளை வீட்டுக்காரர்கள் மாதிரி வலம் வந்து கொண்டிருந்தார்கள்.வைரமுத்து பேசும்போது கடைசி வரிசையில் வந்து அமர்ந்தார் ஏ.ஆர். ரஹ்மான். அவரை உபசரிக்க ஆரூணும், கவிக்கோ அப்துல் ரஹ்மானும் போட்டி போட்டார்கள்.

1979ம் வருடம் `விசிட்டர்' பத்திரிகையில் வைரமுத்து எழதிய கவிதை இது.
தீக்குச்சிக்கு தின்னக் கொடுப்போம்

நம்மூர் ஜனங்கள்
வாழ்க்கையை வெளியே தொலைத்துவிட்டு
சினிமாக் கொட்டகையின்
செயற்கை இருட்டில் தேடுகிறார்கள்
நம்மூர் ஜனங்கள்
வேறேங்கினும் வடித்த
வேர்வையை விடவும்
சினிமா டிக்கெட்டுக்குச்
சிந்தியதே அதிகம்
சினிமா என்னும் இந்த
ராட்சச இருட்டின்
கைகளைப் பிடித்துக்கொண்டு
இன்னும் நாம் நடப்பது
எத்தனை தூரம்?
இன்று
படத்துக்கு பாட்டெழதக்
கம்பனே வந்தாலும் கதை வேறு.
சீதையைப் பற்றிச்
சிலேடையில் சொன்னால்தான்
கம்பனுக்குச் சினிமாக்
கம்பெனியில் இடமுண்டு
இங்கே வசனம் எழத
சிறுகதை சூரியன் செகாவ் வந்தாலும்
அவன் பேனாவை
`மஞ்சள்' மையால்தான் நிரப்பிக்
கொடுப்பார்கள்.
இளைஞர்கள் கைகளிலேனும்
இந்த அழக்குத் திரை
ச்லவை செய்யப்படுமா?
சற்றுப் பொருத்திருப்போம்
இல்லையெனில்
மக்களை சுருள வைக்கும்
திரைப்பட சுருளையெல்லாம்
ஒரு தீக்குச்சிக்கு தின்னக்கொடுப்போம்.

(வைரமுத்து கவிதைகள் பக்கம் 235)

இப்படி சினிமா வாய்ப்பு கிடைக்காத காலத்தில் வைரமுத்து எழதிய கவிதைகளையெல்லாம் படித்த பாரதிராஜா அவரை அழைத்து `நிழல்கள்' படத்திற்கு பாட்டெழத சென்னை எக்மோரிலுள்ள அட்லாண்டிக் ஹோட்டலில் வைரமுத்துவை இளையராஜாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் சில நிமிடங்களிலேயே எழதிய பாடல்தான் `இது ஒரு பொன்மாலைப் பொழது' அதில் சரணத்தில் வரும் `வானம் எனக்கு ஒரு போதி மரம்,நாளும் அது நாளும் எனக்கொரு சேதி தரும்' வரிகள் அன்றைய இளைஞர்களை அவர் பக்கம் திரும்ப வைத்தது .ஆனால் அன்றைய நாட்களை வைரமுத்து திரும்பி பார்க்கவில்லையா என்பது தெரியவில்லை. காரணம் இசைஞானி இளையராஜாவை காணவில்லை. ஒரு வேளை வைரமுத்து காணாமல் போகட்டும் என்று ஒரு காலத்தில் நினைத்த இளையராஜா மீதான் காழ்ப்புணர்ச்சி இன்னும் கவிஞருக்கு போகவில்லையா என்பது தெரியவில்லை.விஷயம் அறிந்த வட்டாரங்களில் இருந்து வந்த செய்தி. இளையராஜாவின் `திருவாசக' பாடல் வெளியிட்டின்போதே இருவரையும் இணைக்க பாரதிராஜா முயன்றார். ஆனால் ராஜாதான் மனம் இறங்கவில்லை என்றும் ஒரு தகவல் உண்டு.

கனிமொழி தன் தாயாருடன் வந்திருந்தார். 1987 ஆகஸ்ட மாதத்தில் அவர் சென்னை எத்திராஜ் கல்லூரியில் எம்.ஏ. பொருளாதாரம் படித்துக்கொண்டிருந்தபோது முதலில் நான் பேட்டி எடுத்தேன். அப்போதிருந்த அப்பழக்கற்ற கவிஞர் கனிமொழியிடமிருந்த வெகுளித்தனத்தை காலமும், அரசியலும் கடத்தியிருந்ததை பார்க்க முடிந்த்து.

எழத்துலக சிங்கம் ஜெயகாந்தன் பூப்போட்ட சட்டையில் முயலாகியிருந்தார்.


அரைகுறை தமிழை தெரிந்து கொண்டு சில்லறை சல்லாபங்களில் ஈடுபட்டு. தமிழ் சினிமாவையும். அரசியலையும் கெடுத்துக்கொண்டிருக்கும் பொறுக்கிகள் நிறைந்த கூட்டம் திராவிட முன்னேற்றக்கழகம்'(1972ல் `ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்' துக்ளக் பத்திரிகையில் எழதிய தொடர். பின்ன்ர் அது புத்தகமாக வந்தது)


இந்த ஜெயகாந்தனுக்கு திமுக சார்பில் முரசொலி விருது வழங்கப்பட்டது. அவரது மகனுக்கு அரசாங்க வேலை. அவருக்கு சரியான மருத்துவ கவனிப்பு. ஒரு அரசு அந்த மாபெரும் எழத்தாளனுக்கு செய்ய வேண்டிய மரியாதைதான். ஆனால் சுயமரியாதைக்காரர்களின் ஆட்சி காலத்தில், பலரின் சுயமரியாதை பறிக்கப்படும்போதுதான் வருத்தமாக இருக்கிறது. `சிங்க' ஜெயகாந்தனை நினைவில் கொண்டு அவரிடம் ஆசி பெற்றேன்.

ஆச்சி மனோரமா மணமேடையை விட்டு இறங்கும்போதே `மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு' என்ற கந்தன் கருணை பாடலை பாடிக்கொண்டே இறங்கினார். நான் அவரை நெருங்கி ` வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு' என்று முணுமுணுத்தபடி நெருங்கினேன். தாயன்போடு அணைத்துக்கொண்டார்.உடலை மதிமுகவிற்கு அர்பணித்தாலும், மனதை கலைஞரிடம் பறிகொடுத்து மயங்கி போயிருக்கும் மதிமகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் `கலைப்புலி' தாணு, கலைஞர் கண்களில் படாமல் மூன்றாவது வரிசைக்கு போய் அமர்ந்து கொண்டார்.அனேகமாக மதிமுகவின் ஒரே பிரதிநிதி இவர்தான்.வைகோ திமுகவை விட்டு வெளியேற-யேற்ற இருந்த சமயம், அவரை சமாதானப்படுத்தும் தூதுவர்களில் ஒருவர் வைரமுத்து.

வைரமுத்துவின் நெருங்கிய நண்பர், சென்னை வடபழனியில் பழைய திரைப்படப்பாடல்கள் ஆராய்ச்சி மையம் வைத்திருக்கும் அலிகான் உணர்ச்சி பொங்க வீற்றிருந்தார் (இவரைப் பற்றி பின்ன்ர் விவரமாக எழதவேண்டும். தமிழ் சினிமாவின் அனைத்து பாடல்களும் இவரிடம் ஒலி, ஒளி நாடாக்களாக உள்ளது.)

மூன்று பெண்களுக்கு வைரமுத்து நன்றி சொன்னார். ஒன்று " கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் - அது காலத்தின் கட்டாய நிர்பந்தம். அடுத்தவர் மணப்பெண்ணை பெற்ற - ஜெயம்மாள் ஈஸ்வரமூர்த்தி - இது சம்மந்தி மரியாதை. மூன்றாவதாக முக்கியமானவர் - பொன்மணி வைரமுத்து - இது பாவ மன்னிப்பு.குடும்பத்தை மறந்து தொழிலிலேயே கவனமாக இருக்கும் ஒவ்வொரு கணவன்மார்களும் ஒரு கட்டத்தில் செய்ய வேண்டிய கட்டாய மண்டியிடுதல்.அவசியம்தான். கவிப்பேராயினி' பொன்மணி அவர்கள் துரும்பாய் இளைத்திருந்தார். பிள்ளைகளை செப்பினிட ஒடாய்த் தேய்திருந்த தேகம்.கைகூப்பி வணங்க வேண்டிய ஒரு தாய், ஒரு ஆசிரியை.

அதிமுகவின் பிரதிநிதியா அல்லது தேவர் இன தூதுவரா என்று புரிந்து கொள்ள முடியாத வருகை எம். நடராஜன்(சசிகலாவின் கணவர்) கருணாநிதி அரங்கை விட்டு வெளியேறியவுடன் உள்ளே வந்தார்.

பின்னர் பாரதீய ஜனதாவின் இல. கணேசன் வந்தார். தமிழக அரசியல் வரலாற்றில் திருமணங்கள் பல அரசியல் திருப்பங்களை நடத்தியிருக்கிறது.கருணாநிதி ஒன்றை கூடாது என்று சொன்னால் அது கூடும் என்று பொருள். உதாரணமாக `எனக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம்' என்றால் வேண்டும் என்று அர்த்தம். ` மத சார்புள்ள கட்சிகள் கூடாது' என்றால் அது கூடுகிற வாய்ப்பு உண்டு என்று அர்த்தம்.

நாடெங்கும் காங்கிரஸ் எதிர்ப்பு அலை. இப்போது நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வந்தால், திமுகவிற்கு காங்கிரஸ் ஒரு பாரம். அதனால் அரசியலில் எதுவும் நடக்கலாம். வைரமுத்து பேசும்போது, ` கலைஞர் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்று வரலாறு பதிவு செய்துகொள்ளும்'என்றார். அரசியலில் இந்த திருமணத்தின் மூலம் ஏதாவது திருப்பம் நேர்ந்தால் அதையும் வரலாறு பதிவு செய்து கொள்ளும்.

இந்த திருமணத்தின் எனக்கொரு ஆத்ம திருபதி. 2001- 2003 ஜீன் வரை நான் ஜெயா டிவியில் இருந்தேன். நான் தொலைகாட்சியில்தான் சேர்ந்தேன். ஆனாலும் எனக்கு விமர்சகர்களால், இரட்டை இலை முத்திரை குத்தப்பட்டது. ஆனால் இந்த விழாவில் கனிமொழி,விஜயா தாயன்பன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பரிதி இளம்வழதி, ஆயிரம் விளக்கு உசேன். தமிழச்சி, அவரது கணவரும் ஐபிஸ் அதிகாரியாக முதல்வரின் பாதுகாப்பு பிரிவிலிருக்கும் சந்திரசேகர்,வாகை சந்திரசேகர், இராம நாராயணன் போன்றவர்கள் என்னை `கரை'படாத பத்திரிகையாளனாக வரவேற்றதில் ஒரு ஆத்ம திருபதி.

`தசாவதாரம்' படம் எப்படி? என்று ஆர்வத்தோடு என்னிடம் கேட்டார் கமல்ஹாசன்.எளிமையின் சின்னங்களான கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களான நல்லகண்ணுவும், வரதராஜனும் வந்திருந்தார்கள். கூட்ட நெரிசலில் உள்ளே வரமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான டி. ராஜா. அதிமுகவிலிருந்து வந்த ஒரே பிரதிநிதி மலைச்சாமிதான்.நான் பிறந்த சமூகயியத்தின் மீது கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், என்னை அன்போடு அணுகுவார். திக வீரமணி. மிகவும் அன்போடு குசலம் விசாரித்துவிட்டு போனார்.

விழாவிற்கு மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் வந்திருந்தார். தினமும் காலையில் வைரமுத்துவுடன் தொலைபேசியில் பேசுவதாக முதல்வர் சொன்னார். வைரமுத்துவிற்கு ஒரு வேண்டுகோள். விஸ்வநாதனுக்கு முதல்வரிடம் சொல்லி ஒரு தேசீய விருது வாங்கிக்கொடுக்கக்கூடாதா ? இப்போது விருதுகள் சிபாரிசினால் வாங்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியாததல்ல. நீங்கள் அதைச் செய்தால், திரைஇசை சரித்திரத்தில் நிச்சயம் நீங்கள் இடம் பெறுவீர்கள்.
ஒன்று மட்டும் மணமக்களுக்கு சொல்லுவேன். அதுவும் மருமகளுக்கு மாமனாக இருக்க மாட்டேன். தந்தையாகவே இருப்பேன் என்று மணமேடையில் வாக்குறுதி கொடுத்த வைரமுத்து வரிகளில் சொல்வேன்.

தெயவத்தை தேடாத ஞானம் வேண்டும்
தெய்வங்கள் நாமென்று தெளிய வேண்டும்
பொய்சொன்னால் சுடுகின்ற நாவும் வேண்டும்
போராடி வெல்கின்ற புலமை வேண்டும்
கையிரண்டும் உழைக்கத்தான் கவனம் வேண்டும்
காலத்தின் மாற்றத்தை மதிக்க வேண்டும்
மெய்யிந்த வாழ்வென்று நம்பவேண்டும்

பலரோடு ஒன்றாக பழக வேண்டும்
பனித்துளிக்குள் உலகத்தை பார்க்க வேண்டும்.
வாழ்க மணமக்கள்.