Jan 11, 2013

இந்தியா விற்பனைக்குதரகு தலைவர்கள்‘அறிவாளிகள் விளைவுகளைப் பற்றி விவாதிப்பார்கள். முட்டாள்கள் அதைப் பற்றி முடிவெடுப்பார்கள்’ என்று சொல்வார்கள். அப்படித்தான் டெல்லியில் கடந்த 27-ம் தேதி நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.

தன்னை அவமானப்படுத்திவிட்டார்கள் என்று தமிழக முதல்வர் வெளிநடப்பு செய்தது இந்தக் கூட்டத்தில்தான். கூடவே குஜராத முதல்வர் மோடியும் வெளிநடப்பு செய்தார். இந்த வெளிநடப்பு விவகாரத்தினால் ஒரு முக்கியமான விஷயத்தை எல்லா ஊடகங்களும், ஏன் இந்த நாட்டு முக்கிய தலைவர்கள்கூட  கண்டுகொள்ளவில்லை.

நகர்ப்புற நடப்புகளும், அந்த நகர்ப்புற வளர்ச்சியில் மட்டுமே அக்கறை கொண்ட தொழிலதிபர்கள் கூட்டணியில் நடக்கும் ஒளி ஊடகங்கள் இதைக் கண்டுகொள்ளாதது நியாயம். அது அவர்கள் தொழில் தர்மம். பிழைப்பு போய்விடும். அச்சு ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் இடதுசாரிகளும் வாய்மூடி மௌனமாக இருந்ததுதான் வியப்பான விஷயம். காவிரி டெல்டா விவசாயிகளுக்கு ஆதரவாக தினமும் குரல் கொடுக்கும் தி.மு.க. தலைவரின் குரலையே ஒடுக்கும் பிரதமரின் அறிக்கையைப் பற்றி அவருமே கண்டுகொள்ளவில்லை.

அவரது கவனமெல்லாம் ஜெயலலிதா வெளிநடப்போடு முடிந்துவிட்டது. அப்படியென்ன ஒரு தலைபோகிற காரியம் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் நடந்தது? 
இந்திய பொருளாதார மேன்மையின் பிதாமகரான நமது பிரதமர் தனது திருவாயை திறந்து ஒரு திருவாய்மொழியை பாடியிருக்கிறார். அது என்ன தெரியுமா?

‘‘நான் இப்படி சொல்வது முரண்பட்டதாக இருந்தாலும், இது சரியான ஒன்று. அதாவது, விவசாயத்தில் அத்தனைபேரும் வேலை தேடுவதை குறிக்கோளாகக் கொள்ளக்கூடாது. உள்ளதைச் சொல்ல வேண்டுமானால், விவசாயத்தில் இருந்து வெளியேறி, பிற துறைகளில் வேலை வாய்ப்பினைத் தேட வேண்டும். விவசாயத்தை குறைவான மக்கள் சார்ந்திருக்கிற போதுதான், விவசாயத்தின் மூலம் வருகிற தனிநபர் வருமானம் குறிப்பிடத்தக்க அளவிலும், போதுமான அளவும் அதிகரிக்கும். அப்போதுதான் விவசாயத்தில் கூடுதலான வருமானம் வரும்’’ இதுதான் பிரதமர் டெல்லியில் வாய்மலர்ந்த மார்கழி மாத திருப்பாவை.
அவர் பேசியதன் விளக்கவுரை இதுதான். ‘நீங்கள் விவசாயத்திலேயே கிடந்தால், உங்கள் விளைநிலங்களை பிடித்துக்கொண்டு அழிவீர்கள். அதன் மீது ஒரு பாரம்பரிய பாசம் உங்களுக்கு கொட்டும். அதனால் உங்கள் விளைநிலங்களை நீங்கள் விற்க முன்வரமாட்டீர்கள். அதனால் அதைவிட்டு வெளியே வாருங்கள். உங்கள் நிலங்களுக்கு நல்ல விலை தர பணத்துடன் தயாராக இருக்கிறார்கள் வால்மார்ட் கோஷ்டியினர். காசை வாங்கி வங்கியில் போட்டுவிட்டு, வேறு வேலைக்கு போங்கள். வேறு வேலை கிடைக்காவிட்டால் கவலை வேண்டாம். அதற்கும் வழி இருக்கிறது. சென்னையில் நடக்கும் ரியல் எஸ்டேட் வியாபாரம் மாதிரிதான் இதுவும்
.
சென்னையில் தங்கள் வீடுகளை விற்பவர்கள், அதை வாங்கும் நிறுவனங்களிடம், தங்களுக்கு ஒரு ஃப்ளாட்டை வைத்துக் கொண்டுதான் மற்றவற்றை விற்பார்கள். அதேபோல் விவசாய பெருமக்களும், பெரிய நிறுவனங்களுக்கு நிலத்தை விற்கும்போது, ‘நாங்கள் நிலத்தை தருகிறோம். ஆனால், அதற்கு ஈடாக எங்கள் குடும்பத்தில், இத்தனை பேருக்கு வேலை தரவேண்டும்’ என்று நிபந்தனையோடு விற்கலாம். இதனால் பருவ மழைக்கோ, காவிரி நீருக்காக கர்நாடகத்தையோ நம்பியிருக்க வேண்டாம்.

பன்னாட்டு கூலிகளாக தயாராகிக் கொண்டிருக்கும், இந்திய பல்கலைக்கழக மாணவர்களும், எதிர்கால இந்தியர்களின் வேலை வாய்ப்பை பற்றி கவலைப் படும் ஒரே அரசு மன்மோகனுடையது என்று பாராட்டலாம். படித்தவன் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல்லக்கு தூக்குவான். படிக்காதவன் அவனுக்கு பாத பூஜை செய்தே பிழைத்துக் கொள்வான். அப்படியானால், இனி இந்தியாவில் நிலங்களே இருக்காதா? எல்லாமே கான்க்ரீட் காடுகள் தானா? என்று சில முட்டாள்கள், அதுவும் குறிப்பாக இந்த போக்கத்த இடதுசாரிகள் சத்தம் போடுவார்கள். போக்கற்றவர்கள். அந்த கவலை வேண்டாம். பச்சை பசேலென்று நிலங்கள் இருக்கும், எப்படி? அமெரிக்காவில் நிலங்கள் இல்லையா? இருக்கிறது ? எப்படி? இப்போது இந்திய நிலை என்ன? 1 ஏக்கரும், இரண்டு ஏக்கரும் வைத்துக்கொண்டு விவசாயி பிச்சை எடுக்கிறான். ஆனால், வரப்போகிறவர்களோ, கோடீஸ்வரர்கள். மொத்தமாக பத்தாயிரம், இருபதனாயிரம் ஏக்கர் என்று நிலங்களை வாங்குவார்கள். நவீன கருவிகள் மூலமாக, விளைச்சலை குவிப்பார்கள். வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் அவர்களிடமிருந்து மொத்தமாக பொருட்களை வாங்கி தங்கள் சில்லறை வியாபாரத்தை கவனித்துக் கொள்ளும், இதனால் வியாபார தங்குதடையில்லாமல் நடைபெறும். இப்போதிருக்கு நிலை நீடித்தால், அவர்கள் பல ஆயிரம் சில்லறை விவசாயிகளிடம், பேரம் நடத்த வேண்டிய தலைவலி கிடையாது. இதனால் தொழில் பெருகும். பொருளாதார நிலை மேன்மையடையும், பெரிய சாலைகள் வரும், விலை உயர்ந்த கார்களை இந்தியா முழுவதும் பார்க்க முடியும். 
இனி உங்கள் கையில் காசே இருக்க வேண்டாம். எல்லா தேவைகளுக்கு இருக்கவோ இருக்கிறது. ப்ளாஸ்டிக் அட்டைகள். அரை நிர்வாண பக்கிரிகளாக நிலத்தில் போராடிக் கொண்டிருந்த இந்திய விவசாயிகளோ, இப்போது, கடன் வாங்கிய காரில் போகலாம். கடன் வாங்கிய ப்ளாட்டில் சொந்த வீட்டுக்காரன் என்கிற பெருமையோடு வாழலாம். நுனிநாக்கு ஆங்கிலம் பேசலாம். வருகிற பன்னாட்டு நிறுவனங்களின் பூர்வீக ஊரிலுள்ள கலாசாரம் இங்கேயும் பரவும்.

பெற்றவர்களை பற்றி கவலை வேண்டாம். எங்கள் திட்டம் நிறைவேறினால், இந்தியப் பொருளாதாரம் மேன்மை அடைந்தால், முதியவர்களை கவனிக்கும் பொறுப்பை அமெரிக்காவை போல அரசே பார்த்துக் கொள்ளும், அதற்கு `சோஷியல் செக்யூரிட்டி’ என்று அங்கே பெயர். அதாவது சமூக பாதுகாப்பு
.
எங்கும் பணம், எங்கேயும் குதூகலம், எங்கேயும் மகிழ்ச்சி, இது போதாதா ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வேறென்ன வேண்டும் ?

இதுதான் பிரதமரின் அறிவுரைகளின் மூலமாக நான் புரிந்துகொண்டது. இந்திய விவசாயத்திற்கு ஒரு பெரிய சரித்திரம் உண்டு. பண்ணை உற்பத்தியில் இந்திய இரண்டாவது இடத்தில் இருக்கிறது. விவசாயமும், அதன் கூட்டாளிகளான வனத்துறை, மீன்பிடிப்புத்துறை மட்டுமே 2009ல் இந்திய உள்நாட்டு உற்பத்தியில் 1606 சதவீதம் கொடுத்திருக்கிறது. பழங்கள், காய்கறிகள், பால், அத்யாவசிய உணவுப் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. மீன், முட்டை, தேங்காய, கரும்பு உற்பத்தியில் உலகில் ஐந்து நாடுகளின் வரிசையில் இந்தியா இருக்கிறது
.


தேனீக்கள் இல்லாமலேயே தேன் கொடுக்கும் பறவைகள் இந்தியாவில் உண்டு. இந்த பறவைகளைக் கொண்டு போய்தான் மாசிடோனியர்கள் தங்கள் நாட்டு சக்கரை, கரும்பு விவசாயத்தை அதிகப்படுத்தினார்கள்.
இங்கே விவசாய பல்கலைக்கழகம் என்பது§ ரிக் வேதத்திலேயே துவங்கிவிட்டது. அதனால் பல நூதன தொழில்நுட்ப விளம்பர யுத்திகளை செய்யாமல் நீங்களும், உங்கள் சகாக்களும் இந்தியாவை விற்கும் ‘தரகு’ வேலையை வெற்றிகரமாகச் செய்யமுடியாது

.வரப்பு உயர நீர் உயரும்;
 நீர் உயர நெல் உயரும்;
 நெல் உயர குடி உயரும்;
 குடி உயர கோன் உயரும்;
 கோன் உயர கோல் உயரும்,

  என்று மன்னனின் மேன்மையையும்,

 ‘ஆறோடும் மண்ணில் என்றும் நீரோடும்,
 ஏரோடும் என்றும் எங்க தேரோடும்
, போராடும் வேலையில்லை
; யாரோடும் பேதமில்லை
. ஊரோடு சேர்ந்துண்ணலாம்’
 என்று மண்ணோடு, சகோதரத்துவத்தையும், பாசத்தையும் பிணைத்துப் போட்டுவிட்ட தேசமிது.


                                                                                               நன்றி? மீடியா வாய்ஸ் 12.01.2013

                                                               www.tamil.mediavoicemag.com/magazine.html