Jun 19, 2008

மாண்மிகு மனிதர்கள்





ஆர்.நட்ராஜ் IPS





பத்திரிகையாளனாக வாய்ப்பு கிடைப்பது, ஆன்மிக மொழியில் சொல்ல வேண்டுமானால் ஒரு பூர்வ ஜென்ம புண்ணியம். எப்போதுமே செய்தி தேடலில் அலையும் நிருபனுக்குத்தான் மானுடத்தின் பல பரிமாணங்களைப் பார்க்கிற ஒரு வாய்ப்பு கிடைக்கும். என்னுடைய பத்திரிகை அனுபவத்தின் வயது இருபத்தியெட்டு. இந்த ஆண்டுகளில் பல மனிதர்களை கண்டு வியந்திருக்கிறேன். அவர்களிடமிருந்து பல நல்ல விஷயங்களை அவர்களுக்கு தெரியாமல் `திருடி'க் கொண்டு அதன் மூலமாக என்னை நானே திருத்திக்கொண்டிருக்கிறேன்.என் படிக்கும் பாணியைக் கூட செப்பனிட்டிக்கொண்டிருக்கிறேன். நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிகளுக்கு மாண்புமிகு என்கிற அடைமொழி பொருந்தாது. ஆனால் தன் வாழ்க்கை தரத்தால் நம்மிடையே உண்மையான மாண்புமிகு மனிதர்கள் இருக்கிறார்கள். என்னை பாதித்த அந்த மாண்புமிகு மனிதர்களைப் பற்றி இந்த பகுதியில் தொடர்ந்து எழதுவேன். அதன் முதல் பகுதி இது.

அப்போது 2001ம் வருட இறுதி என்று ஞாபகம். நான் ஜெயா தொலைக்காட்சியில் நாட்டு நடப்பு (current affairs) நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்த நேரம். அப்போதுதான் ஆர். நட்ராஜ் புதிதாக சென்னை பெருநகர காவல் துறை ஆணையராக பொறுப்பேற்றிருந்த நேரம். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்க அவருடன் தொலைப்பேசியில் பேசி, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.
அப்போதுதான் அவர் வீரப்பனைப் பிடிக்கும் விசேஷ அதிரடப் படைக்கு தலைவராக சத்தியமங்கலத்தில் இருந்து விட்டு சென்னை நகர கமிஷனராக வந்திருந்தார். என்னைப் பற்றிய சுய அறிமுகத்தை ஒரிரு நிமிடங்கள் கேட்டார். `என்ன, மிஸ்டர் சுதாங்கன்,சத்தியமங்கலம் காட்டுக்கு இப்பதான் போனேன். அதுக்கு முன்னாடி சென்னையில தான் இருந்தேன், உங்களை எனக்குத் தெரியாதா? ஜீனியர் விகடன் காலத்திலிருந்து நான் உங்கள் வாசகன்' என்றார். அப்படித்தான் நான் அவருக்கு அறிமுகமானேன்.அவர் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னால் அவரைப் பற்றிய தகவலை திரட்ட துவங்கினேன்.

குணசித்திர நடிகர் பூர்ணம் விஸ்வநாதனின் அண்ணன் பூர்ணம் ராமசந்திரனின் புதல்வர்.இவர் தந்தை அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். உமா சந்திரன் என்கிற பெயரில் பல நாவல்களை எழதியவர். ரஜினிகாந்துக்கு திருப்பு முனையாக இருந்த படம் `முள்ளும் மலரும்' அந்த படத்தின் கதை இவர் தந்தையுடையது.

ஆனால் என்னுடைய கவனத்தை அவர் 1984ம் ஆண்டே கவர்ந்தவர். அந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 2ந் தேதி, வியாழக்கிழமை இரவு 10.52க்கு சென்னை விமான நிலையத்தில் ஒரு குண்டு வெடிப்பு. இதில் சுமார் 92 பேர் உயிரிழந்தார்கள். இந்தியாவே பீதிக்குள்ளானது. அப்போது மாநில காவல் துறையின் உளவுத்துறை டிஜிபியாக இருந்தவர் மோகன்தாஸ். மாநில முதல்வர் எம்.ஜி.ஆர். குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை பிடிக்கும் பொறுப்பை மோகன்தாஸ் ஏற்றுக்கொண்டார். அப்போது க்ரைம் பிராஞ்ச் சிஐடி பிரிவின் எஸ்பியாக இருந்தவர் ஆர்.நட்ராஜ். இவரிடம் அந்த வழக்கை ஒப்படைக்க விரும்பினார்.`எனக்கென்று ஒரு படையை நானே தேர்ந்தெடுத்துக்கொள்வேன். எனக்கு சுதந்திரம் கொடுத்தால் நான் பத்து நாட்களில் குற்றவாளிகளை பிடிப்பேன்' என்றார்.

`உங்களுக்கு 11 நாட்கள் தான் தருவேன் அதற்குள் நீங்கள் குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டும்'என்றார். மோகன்தாஸ்.சவாலை ஏற்றுக்கொண்டார் நட்ராஜ். இந்த சம்பவம் நடந்த ஐந்தாவது நாள் செய்தியாளர்களுக்கு மோகன்தாஸிடமிருந்து அழைப்பு. அவரை சுற்றி பல அதிகாரிகள் இருந்தார். நட்ராஜீம் ஒருவர்.க்ரைம் பிராஞ்ச் சிஐடி பிரிவிலுள்ள அதிகாரிகளெல்லாம் எங்கள் பார்வையில் விழ மாட்டார்கள். மக்களோடு தொடர்புடைய பதவிக்காரர்கள் பக்கம்தான் நிருபர்கள் சுற்றி வருவார்கள். செய்திகளுக்காக. அதனால் நட்ராஜ் செய்தியாளர்களிடம் அப்போது அத்தனை பிரபலமில்லை.

அந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை காவல் துறை கண்டுபிடித்துவிட்ட செய்தி எங்களுக்கு சொல்லப்பட்டது. அதற்கு காரணம் நட்ராஜ் தலைமையில் இயங்கிய படைதான் காரணம் என்று பெருமையோடு சொன்னார். `அவரது படைக்கு மத்திய அரசிடமிருந்து நற்சான்றிதழ் வாங்கித் தருவேன்' என்றார். அது இன்றுவரை நடக்கவில்லை என்பது வேறு விஷயம்.

அப்போது இந்த செய்தி ஜீனியர் விகடனிலும் வெளியானது. பிறகு 2001ல்தான் எனக்கு நேரடி அறிமுகம்.நேரில் பேசும்போது அளந்து பேசுவார். மேடையில் பேசும்போது பிளந்து கட்டுவார்.நிறைய படிப்பார். மெல்லிசை, கர்நாடக இசை, பாப் இசைப் பிரியர்.அவரை என்னுடன் சகஜமாக பேச வைக்க எனக்கு இரண்டு ஆண்டுகள் பிடித்தது. பண்டிகை காலங்களில் பெரிய பதவிகளில் இருப்பவர்கள், அதுவும் சென்னை கமிஷனர் பதவியில் இருப்பவர்களுக்கு பரிசுகள் குவியும். இவர் எந்தப் பதவியில் இருந்தாலும், இனிப்பு பெட்டிக்கு கூட அவரது அறையில் அனுமதி இல்லை.நன்றாக வயலின் வாசிப்பார். ஒரு பரம ரசிகர்.பல மொழிகள் தெரியும். குறிப்பாக நேபாள மொழி நன்றாக பேசுவார்.களத்தில் இறங்கி வேலை செய்ய மிகவும் பிடிக்கும். காவல் துறையில் சில பதவிகளை `தண்டனை' பதவிகள் என்று கருதப்படுவது உண்டு. அதை அவரிடம் சொன்னால் ஒப்புக்கொள்ளவே மாட்டார். `அரசாங்கத்தில் எல்லா பதவியுமே முக்கியமான பதவிதான். நாம் அரசாங்கத்துக்குத்தானே வேலை செய்ய வந்திருக்கோம். கமிஷனர் பதவியிலதான் இருப்பேன்னா வந்தோம்' என்பார்.

விஜயகுமார் வீரப்பனின் படைக்கு தலைமையேற்குமுன் அதன் தலைவராக இருந்த்வர் நட்ராஜ்.அந்த படையின் மீது பல குற்றச்சாட்டுகள். அதிரடிப் படை என்பது ஆட்சியாளர்களுக்கு பிடிக்காதவர்களை தூக்கி அடிக்கும் பகுதியாக அது கருதப்பட்ட காலம். பகுதி மக்களிடம் கூட கேலிக்கும், பழிக்கும் ஆளாகியிருந்தது படை. இவர் தலைமை பொறுப்பேற்றதும் தன் படைக்கு கொடுத்த முதல் உத்தரவு. `இனி கொஞ்ச காலத்திற்கு நாம் வீரப்பனை மறப்போம். நாம் இந்த பகுதி மக்களுக்கு உதவி செய்யத்தான் வந்திருக்கிறோம். கிராமங்களுக்கு போய் அந்த பகுதி மக்களுக்கு என்ன தேவையோ அதை கொடுப்பதுதான் நம் வேலை' என்றார். அதற்குப்பிறகு அதிரடிப் படையின் போக்கே மாறியது. ரேஷன் பொருட்களை வண்டியில் வைத்து கிராமங்களுக்கு கொண்டு சென்றார்கள். மருத்துவ வசதி இல்லாத கிராமங்களுக்கு மருத்துவமனைகள், ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளுக்கு இந்த படையில் படித்த இளைஞர்களே போய் வகுப்புகள் எடுப்பார்கள். பல மருத்துவ முகாம்கள் என்று மக்களோடு ஒன்றிப் போனது படை. மக்கள் உதவி இல்லாமல் வீரப்பனை பிடிக்க முடியாது என்பதை தெரிந்தே வைத்திருந்தார். அதை செய்ய வேண்டுமானால் அந்தப் பகுதி மக்கள் அதிரடிப் படையை நேசிக்க செய்ய வேண்டும் என்பதுதான் இவர் நோக்கம்.

இவர் தளம் அமைத்தார். விஜயகுமார் காரியத்தை முடித்தார். இதை வீரப்பனை வீழ்த்திய பிறகு சத்தியமங்கலத்தில் நடந்த ஒரு விழாவில் நட்ராஜ் முன்பாகவே இதை ஒப்புக்கொண்டார் விஜயகுமார். இவர் அளித்த பேட்டி ஒன்றை பத்திரிகையாளர்கள் திரித்து எழத, அதனால் கமிஷனர் பதவியிலிருந்து மாற்றப்பட்டார்.மனித உரிமை கழகத்தின் இயக்குனரானார். அதுவரையில் அப்படி ஒரு கழகம் இருப்பதே மக்களுக்கு, ஏன் பத்திரிகையாளர்கள் பலருக்கே தெரியாது. அது ராயப்பேட்டையில் ஒரு கட்டடத்தில் நாற்றமடித்த கொண்டிருந்த ஒரு கூடத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. இவர் பதவியேற்றதும்தான் மனித உரிமை கழகத்திற்கு அமைச்சர்கள் வசிக்கும் க்ரீன்வேஸ் சாலையில் ஒரு பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதற்கு முன்பு இருந்தவர்கள் யாரும் அதைப் பற்றி கவலைப்படவேயில்லை. காரணம் அந்த பதவி அவர்களைப் பொருத்தவரையில் `தண்டனை' பதவி.உடனே களத்தில் இறங்கினார். ஒரு வாரத்திற்குள் அவரது அலுவலகம் க்ரீன்வேஸ் சாலையில் அமைச்சர்கள் வீடுகளுக்கு நடுவே ஒரு பிரும்மாண்ட நீல நிற பலகையோடு மாறியது. இன்றைய ஆட்சியாளர்களுக்கு இவரை பிடிக்கவில்லையென்றாலும், திமுகவின் வருங்கால தலைவர் மு.க.ஸ்டாலின் பங்களாவிற்கு பக்கத்து வீடு இவருடைய அலுவலகமாக மாறியது.

நட்ராஜ் ஒரு ஆன்மிகவாதி. தினமும் பூஜை செய்யாமல் வீட்டை விட்டு கிளம்ப மாட்டார். அந்த பகுதியிலிருந்த மற்ற வீடுகளின் பெயர்கள், குறிஞ்சி, முல்லை,மல்லிகை, பொதிகை என்றெல்லாம் இருக்கும். பக்தரான இவரது அலுவலகத்தின் பெயர் மட்டும் திருவரங்கம்.ஒவ்வொரு நாளும் மனித உரிமைகள் மீறப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இதை பற்றி எந்த ஆட்சியாளர்களும் கவலைப் படுவதில்லை. அவர்கள் பகவானைத்தான் நம்ப வேண்டும்.` எங்கும் சுற்றி ரங்கனைத்தான் சேவிக்க வேண்டும்' என்பதைப் போல,பாதிக்கப்பட்ட மனித உரிமைகளுக்கு அடைக்கலமானது இந்த `திருவரங்கம்'.

மூன்று மாதங்களுக்கு முன்னால் இவர் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். சேர்ந்த நாளிலிருந்து இங்கும் களத்தில் சுறுசுறுப்பு. சில ஆண்டுகளுக்கு முன் பல நிதி நிறுவனங்கள் நடுத்தர மக்களுக்கு அதிக வட்டி ஆசை காட்டி பல கோடிகளை கொள்ளையடித்தது. முதல் கட்ட நடவடிக்கையாக இரண்டு பெரிய நிதி நிறுவன அதிபர்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவை பெற்றார்.இழந்த பலருக்கு பணத்தை திருப்பி பெற்றுக்கொடுத்தார். இது யாருக்கோ பொறுக்கவில்லை. சென்ற வாரம் அங்கிருந்தும் இவர் மாற்றப்பட்டு சிறைத்துறை ஏடிஜிபியானார்.

இந்த காலகட்டத்தில் நாங்கள் வேறு மாதிரி நெருக்கமானோம். நானும், அவரும் படித்தது திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர் நிலைப் பள்ளி. அவர் அந்தப் பள்ளியில் எனக்கு சீனியர். அங்குள்ள பழைய மாணவர் சங்கத்திற்கு இந்த ஆண்டு நூற்றாண்டு. அந்த அமைப்பில் அவர் கெளரவ தலைவர். நான் செயலாளர்.

சிறைத்துறை பதவியேற்பதற்கு முன் அன்று காலையில் கூட பணம் இழந்த பலருக்கு சுமார் இரண்டு கோடி மீட்டு கொடுத்துவிட்டுத்தான் போனார். அப்போது அவருக்கு போன் செய்தேன்.ஒரு பத்திரிகையாளன் கைது செய்யப்பட்டால் அது போன்ற விளம்பரம் அந்த பத்திரிகையாளனுக்கு ஆயுளில் கிடைக்காது. பல புலனாய்வு செய்திகளையும், ஆட்சிக்கு எதிரான கட்டுரைகள் எழதியும் கூட எனக்கு அந்த `பாக்கியம்' கிடைக்கவில்லை.` எனக்கு அப்ப்டி ஒரு வாய்ப்பை நீங்களாவது கொடுக்க கூடாதா?' என்றேன் வேடிக்கையாக. `அப்படித்தான் வரணுமா என்ன? வாருங்கள், நீங்கள் நிறைய படிப்பவர், நன்றக பேசக்கூடியவர். அங்கு வந்து கைதிகளுக்கு நல்ல விஷயங்களை சொல்லலாமே' நெகிழ்ந்து போனேன். சில பதவியால் பலருக்கு பெருமை. வெகு சிலரால்தான் அந்த பதவிகளுக்கு பெருமை. சிறைத்துறை ஏடிஜிபி பதவி இனியும் கூழாங்கல்லாக இருக்காது. மன்னர்களின் மகுடத்திலிருக்கும் வைரக்கல்லாக மாறும் என்பது மட்டும் நிச்சயம்.

`கண்ணன் பிறந்ததும் சிறைச்சாலை, அந்த காந்தி இருந்ததும் சிறைச்சாலை. சிறைச்சாலை ஒரு கல்லூரி' இந்தக் கட்டுரையை முடிக்கும் போது எங்கிருந்தோ காற்றலையில் இந்த பாடல் வந்து காதில் விழகிறது.