Jan 25, 2009

`இடி’ப்பார் வேண்டாத `மன்னர்’கள்




சத்யம் கம்யூட்டர் நிறுவன விவகாரங்கள் தொழிலதிபர்களுக்கு பல பாடங்களை புகட்டியிருக்கிறது. இதில் எத்தனை பேர் பாடம் கற்றுக்கொள்ள போகிறார்கள் என்பது தெரியாது.

என்ன செய்ய வேண்டும் என்பதை விட என்ன செய்யக்கூடாது என்பதை தெளிவாகச் சொல்லியிருக்கிறது சத்யம் விவகாரம்.

ஆறு மாதங்களுக்கு முன்பு வரை அமெரிக்காவில் போய் இறங்கி நீங்கள் ஆந்திராவிலிருந்து வருகீறீர்கள் என்று சொன்னால், ராமலிங்க ராஜீவின் ஊர்காரரா என்று உங்களை பெருமிதத்தோடு பார்ப்பார்கள். இன்றைக்கு அங்கே போய் நான் ஆந்திரக்காரன் என்று மார் தட்டிசொல்ல முடியுமா ?

ஒரு வருடத்திற்கு முன்பு வரை ஐடி தொழில் என்றாலே உங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்புதான். முன்பெல்லாம் ஹோட்டல்களின் வாசலில் `பெருவியாதியஸ்தர்கள் உள்ளே வரக்கூடாது’ என்று பலகையில் எழதிவைத்திருப்பார்கள். இப்போது தகவல் தொழில் நுட்ப காரர்களுக்கு அதே கதிதான் கல்யாணம் சந்தையில்.தகவல் தொழில்நுட்பத்தில் இருப்பவர்கள் ஜாதகத்தை அனுப்ப வேண்டாமென்கிறார்கள் வரன் தேடுபவர்கள்.

தீடிர்ப் பணம், தீடிர்புகழ் இவைகளெல்லாம் நோய்க் கிருமிகள். உள்ளிருந்து கொல்லும். இவை இரண்டும் வரும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை என்பதற்கு நிகழ்கால உதாரணம் தான் சத்யம் நிறுவன ராமலிங்க ராஜீவின் கதை.

தான் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக கருத்துச் சொல்லாதவர்களைத்தான் அவருக்கு பிடுக்குமாம்.ஆமாம் சாமிகளுக்குத்தான் அங்கே பெரிய பதவி. நிறைய சம்பளம். கூடவே அவருக்குள் எழந்துவிட்ட பேராசை.

ராமலிங்க ராஜீவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவர்கள் ஊடக முதலாளிகள் தான். தன்னம்பிக்கையற்றவர்கள் இவர்கள்தான். தங்கள் மூதாதையர்கள் சேர்த்து வைத்த சம்பிராஜ்யத்தின் தற்போதைய care taker களாக இருக்கும் இவர்களைப்போன்ற கோழைகளைப் பார்ப்பது கடினம். இவர்களின் சாம்பிராஜ்யத்தில் அவர்களுக்கு தேவை திறமையல்ல, தலையாட்டுகிற அடிமைகள். துதிபாடிகள். இதனால் இன்றைக்கு சுகமாக இருக்கும் வாழ்க்கை நாளை என்னவாகும் என்பதை அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.

பல பத்திரிகை உலக சாம்ராஜ்யங்களின் உள்ளே பல கரையான்கள்.முன்பு பத்திரிகைகளினால் பல எழத்தாளர்கள் உருவானார்கள். இன்று வெளியே ஏதாவது ஒரு வகையில் புகழ் அடைந்தவர்களை எல்லாம் எழத்தாளர்களாக்கி பிழைக்க வேண்டிய நிலை பத்திரிகைகளுக்கு.

படைப்புகளை பணம் சாகடித்துக்கொண்டிருக்கிறது. கார்பரேட்டுகள் தான் இன்று படைப்புகளை தீர்மானம் செய்கிறார்கள். பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா மூன்றிலும் இன்று ஆட்சி செய்து கொண்டிருப்பது கார்பரேட் கலாச்சாரம்.ஏதாவது ஒரு மானேஜ்மெண்ட கல்லூரியில் எம்பிஏ படித்திருந்தால் போதும், அவரிடம்தான் பணம் காய்ச்சி மரம் குத்தகையில் இருக்கிறது. அவர்கள் வைத்ததுதான் இன்று படைப்புலகின் வேதம்.

எஸ்.எஸ்.வாசன்,மறைந்த குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை, ராம்நாத் கோயங்கா நல்ல படைப்பாளிகளை நம்பி பணம் பண்ணினார்கள். அவர்கள் உருவாக்கிய சாம்ராஜ்யங்கள் ஒரு வல்லரசுக்கு நிகரானது.

பணம் சம்பாதிக்கிற வழியிலும் அவர்களிடம் ஒரு சமூக பார்வை இருந்தது, தேசப்பற்று இருந்தது. அதனால் அவர்களின் வேர்கள் ஆழமாக இருந்தது. நீருபூத்த நெருப்பாக இல்லை.

உலகத்தின் மிகப்பெரிய கோடிஸ்வரர் வாரன் பபே. அவர் சொல்வார்` பணம் சம்பாதியுங்கள். ஆனால் அது மட்டுமே சந்தோஷத்தை கொடுக்கும் என்று மட்டும் நினைக்காதீர்கள்’

பணத்தை வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கூடவே சிறைக்கும் போகலாம் என்பதை ராமலிங்க ராஜீவின் கதை அவர்களுக்கு பாடம் புகட்டினால் நல்லது. இடிப்பார் இல்லாமல் போனால், தவறுகளை தட்டிக்கேட்க ஆளிருக்க மாட்டார்கள். செய்வது எல்லாமே சிறப்பானது என்கிற நினைப்பு தலைக்குள் ஏறும். புகழ்ந்து கொண்டேயிருப்பவர்கள் நம்முடைய வளர்ச்சியின் முதல் எதிரி என்பதை இவர்களுக்கு யார் புரிய வைக்கப்போகிறார்கள்.

No comments:

Post a Comment