Jul 30, 2008

`ஆமாம். நம்மால் முடியும்!


எனது முப்பதாண்டு பத்திரிகை அனுபவத்தில் பல முக்கிய பிரமுகர்களை சந்திக்கிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரு பத்திரிகையாளனுக்கு இருக்கிற செளகரியமே பல தரப்பட்ட மனிதர்களை சந்தித்து அவர்களிடம் இருக்கும் குறையை தவிர்த்து நிறைகளை எடுத்துக்கொள்ள முடியும். அவர்கள் இந்த இடத்திற்கு வருவதற்கு அவர்களுக்குள்ள தனித்தன்மை என்ன என்பதை பார்க்க முடியும். அரசியல் தலைவர்களிடம் நாம் முரண்படலாம். கருத்து மாறுபாடு கொள்ளலாம். அவர்களின் பொது வாழ்க்கையின் தூய்மையை கூட நாம் சந்தேகப்படலாம். அந்த சந்தேகம் கூட அவர்கள் ஒரு பெரிய தகுதிக்கு வந்த பிறகு தான் ஏற்படும்.ஆனால் பலரிடம் பல விஷயங்களை நான் தெரிந்து கொண்டேன்.

மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோவை நான் முதன் முதலில் சந்தித்தது 1982ம் வருடம். அப்போது திருச்செந்தூர் முருகனின் வேல் திருடு போய் அது தொடர்பாக அறநிலையத்துறையை சேர்ந்த சுப்ரமணிய பிள்ளை மர்மமான முறையில் இறந்து போனார். அப்போது தமிழகத்தின் முதல்வர் எம்.ஜி.ஆர். அறநிலையத்துறை அமைச்சர் இன்று எல்லா விழாக்களிலும் கலைஞர் கருணாநிதியோடு இருக்கும் ஆர்.எம். வீரப்பன்.

இதை திமுக பெரிய விவகாரமாக்கியது. திமுக தலைவர் கருணாநிதி, மதுரையிலிருந்து திருச்செந்தூர்வரை நடைபயணம் போனார். அப்போது நான் ஒரு பகுதி நேர நிருபர். அப்போது நண்பர் ஞானி தீம்தரிகிட பத்திரிகை நடத்திக்கொண்டிருந்தார். அவருடைய பத்திரிகைக்காக நானும் பத்திரிகையாளனாக அந்த நடை பயணத்தில் கலந்து கொண்டேன். அப்போது கருணாநிதி நடந்து போகிற பாதையில் சிறு கல் இருந்தால், அதை அவருக்கு முன்னால் ஒடிப்போய் அதை அப்புறப்படுத்திக்கொண்டிருந்தார் ஒருவர். ரோஸ் கலர் சட்டை அதை தன்னுடைய கறுப்பு பேண்டுக்குள் தள்ளியிருந்தார். நல்ல உயரம். மிடுக்கான தோற்றம். விசாரித்தேன் அவர்தான் வை.கோபால்சாமி,(அப்போது வைகோ அல்ல)வழக்கறிஞர். மாநிலங்களவை உறுப்பினர். கலிங்கப்பட்டிக்காரர் என்றார்கள்.

அவரை கவனிக்கத்துவங்கினேன். பின்னார் 1983ம் ஆண்டு விகடனில் சேர்ந்த போது அப்போது நான் ஆனந்த விகடனில் சாண்ட்விச் என்றொரு பகுதி எழதிக்கொண்டிருந்தேன். அதாவது அரசியல் தலைவர்களில் அரசியல் இல்லாத இன்னோரு முகம்.அப்போதுதான் இன்றைய வைகோ எத்தனை ஆழ்ந்து படிக்கக்கூடியவர் என்பதை புரிந்து கொண்டேன். நாடாளுமன்றத்தில் அவர் முதல் முதலாக நுழைந்து போது, அவருக்கு கிடைத்த நண்பர்கள் பிலுமோடி,இந்திரஜித குபதா, இவர் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி, ஜோதிர்மாய் பாசு, (மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு அல்ல) இவரும் மார்க்ஸிஸ்ட கட்சி உறுப்பினர். மாநிலங்களவையின் மேன்மையையும், இதை கற்றவர்கள் சபை என்று சொல்வார்கள் (அன்றைக்கு அப்படித்தானிருந்தது மாநிலங்களவை) மாநிலங்களவையில் பேச ஒரு உறுப்பினர் எப்படி தன்னை தயார் செய்து கொள்ள வேண்டுமென்று வைகோவிற்கு சொன்ன்வர். இதை வைகோவே என்னிடத்தில் 1986ல் டெல்லியில் நான் அவருடைய 2, மீனா பாக் வீட்டில் இருந்தபோது சொல்லியிருக்கிறார்.விருந்தோம்பல், நாடாளுமன்ற கூட்டத்திற்கு போகுமுன் ஒரு உறுப்பினர் தன்னை எப்படி தயார் செய்து கொள்ள வேண்டுமென்பதையும் அவரிடம் தெரிந்து கொண்டேன்.

அடுத்தநாள் மாநிலங்களவை கூட்டத்திற்கு போகுமுன், விடியற்காலை நான்கு மணிவரையில் குறிப்பெடுப்பார். கடுமையான உழைப்பாளி. பிறகு அதே 1986ம் ஆண்டில் எங்கள் ஊர் தென்திருப்பேரையில் எங்கள் பெருமாள் கோயில் நகைகள் களவு போயிற்கு. அன்றைய அறநிலையத்துறை அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் முதல் முதலாக நெல்லை இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அதற்கு முன்பு அவர் எம்.எல்.சி.யாகி அமைச்சரானவர். அப்போது தமிழகத்தில் மேல்சபை இருந்தது. பின்ன்ர் எம்.ஜிஆர். வெண்ணிற ஆடை நிர்மலாவை மேல்சபை உறுப்பினராக்க நினைத்தார். அது முடியாமல் போகவே மேல்சபையையே எம்.ஜி.ஆர் கலைத்தார்.அதனால் ஆர்.எம்.வீ. மந்திரி பதவியில் நீடிக்க வேண்டுமென்றால் இடைத்தேர்தலில் நிற்க வேண்டிய கட்டாயம். இந்த சமயத்தில் நான் ஜீனியர் விகடன் நிருபராக நெல்லையில் முகாமிட்டிருந்தேன். அப்போதுதான் எங்கள் ஊரில் நகை கொள்ளை.

இதை பெரிதுபடுத்தாவிட்டால் ஏதோ ஒரு சின்ன கிராமத்தில் நடந்த ஒரு சாதாரண திருட்டாக இந்த சம்பவம் புதையுண்டு போயிருக்கும். ஒரு விடியற்காலை நேரத்தில், நெல்லையிலிருந்து திமுகவின் முக்கிய தலைவரான வைகோவை தென்திருப்பேரை அழைத்துப்போனேன்.பிறகு விவகாரம் பூதாகரமெடுத்தது. பிறகு வைகோ தேர்தல் பிரசாரத்திற்கு வந்த கருணாநிதியை தென் திருப்பேரை அழைத்து வந்தார்.பிறகு தென்ருப்பேரை செய்திகளில் இருந்தது. அந்த வழக்கு நடக்கும்போதெல்லாம், ஊள்ளூர் நாளிதழகள் அந்த செய்தியை தவிர்க்க முடியாமல் போனது.

இப்படித்தான் எனக்கு அவருக்கும் பழக்கம். நான் அவரோடு மேடையிலேயே பெரியார் திடலில் முரண்பட்டிருக்கிறேன். அவர் ரகசிய்மாக யாழ்ப்பாணம் பயணம் போனதை முதலில் உலகிற்கு சொன்ன பெருமை ஜீவிக்கும், எனக்கு உண்டு அது வேறு விஷயம்.வைகோ எழதிய பல புத்தகங்களை நான் இன்னும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். அவர் 19 மாதங்கள் `பொடா' சட்டத்திலிருந்தபோது தனது கட்சி பத்திரிகையான சங்கொலியில் தினமும் எழதி வந்தார். பின்ன்ர் அதுவே `சிறையில் விரிந்த மலர்கள்' என்கிற பெயரில் சுமார் 682 பக்க புத்தகமாக வந்தது.அது உண்மையிலேயே ஒரு சரித்திர பொக்கிஷம் எத்தனை தகவல்கள். நேருவின் `GLIMPSES OF THE WORLD HISTROY' தான் இவருக்கு உந்துதலாக இருந்திருக்க வேண்டும்.நேதாஜியைப் பற்றி அத்தனை குறிப்புகள் ஒரே புத்தக்கத்தில் வேறு எங்காவது கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அதே போல் ஆபிரகாம் லிங்கன், கரிபால்டி இப்படி பல விஷயங்கள்.

ஒரு 800 பக்க ஆங்கில நாவலை தமிழில் சுருக்குவது என்பது மிகவும் கடினம். இர்விங் வாலஸின் மிகச் சிறந்த நாவல் `தி மேன்' ஒரு கறுப்பர் அமெரிக்காவின் ஜனாதிபாதியானால் என்ன நடக்கும் எனப்துதான் கரு. அதை தன்னுடைய புத்தகத்தில் 17 பக்கத்தில் சுருக்கியிருந்தார் வைகோ. அருமையான மொழிபெயர்ப்பு. காரணம் உலகத்திலேயே அதிகமான இன கொடுமைகளுக்கு ஆளானவர்கள் கறுப்பர்கள் தான் என்பதில் வைகோவிற்கு தீவிர உறுதி உண்டு.

இப்படி அவர்கள் மீது ஆழ்ந்த பற்று கொண்ட வைகோ, அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஒபாமாவை சந்தித்துவிட்டு தாயகம் திரும்பியதும் அவரது இல்லத்தில் சந்தித்தேன்.

(தொடரும்)