Jul 23, 2008

கணித `பாட'கர், ஒரு காலப்பெட்டகம்


தங்களின் வலைப் பதிவில் என் குருநாதர் திரு டி.எம்.எஸ். அவர்களைப் பற்றி எழதியிருந்ததை படித்தேன்.. நன்றி பெருக்கோடு, ஆனந்த கண்ணீரோடு உங்களுக்கு எழதுகிறேன். அவரைப் பற்றி எழதியதற்காக உங்களுக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

நான் தற்போது சென்னை விப்ரோவில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்.இன்று நான் இந்த இடத்தில் இருப்பதற்கு இருவர் காரணம். ஒன்று என் தாய், இரண்டாவது என் குருநாதர் திரு டி,எம்.எஸ்.இளமையில் வறுமையும், முதுமையில் தனிமையும் கொடுமை என்பார்கள். அந்தக் கொடுமையை இளமையில் அனுபவித்தவன் நான். நான் மறைந்த நடிகர் எம்.ஆர்.ஆர். வாசுவின் மகன், நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் பேரன்.
எனக்கு முன்றரை வயது இருக்கும்போது என் தந்தையை இழந்தேன். என் தாயின் அரவணைப்பில் வளர்ந்தேன்.

நான் எட்டாவது வகுப்பு படிக்கும்போதுதான் எனக்கு படிப்பில் நாட்டம் ஏற்பட்டது. கலைமகளின் அருள் என் மீது படர ஆரம்பித்தது. நன்கு படிக்க துவங்கினேன். எப்போதுமே நான் படிப்பில் முன்னேற வேண்டுமென்கிற வெறி என் தாய்க்கு இருந்தது.. பத்தாம் வகுப்பு வரை நான் மேற்குமாம்பலம் அஞ்சுகம் பள்ளியில் படித்தேன். பத்தாம் வகுப்பில் 447/500 எடுத்தேன். இந்த மதிப்பெண் எனக்கு அகோபில மடம் பள்ளியில் இடம் வாங்கி கொடுத்தது. அப்போது அங்கு நான் சந்தித்த முதல் மனிதர்தான் என் குருநாதர் திரு டி.எம்.எஸ். எனக்கு உந்துசகதியாகவும், கிரியாஊக்கியாகவும் அவர் விளங்கினார். அவர் கொடுத்த உற்சாகத்தில் எனக்கு படிப்பில் முழ ஈடுபாடு வந்தது. கல்வியை நேசிக்க துவங்கினேன்.

வீட்டிலோ கடும் பொருளாதார நெருக்கடி. என்னை படிக்க வைக்க என் தாய் போராடினார். என் குரு எனக்கு ஸ்காலர்ஷிப் வாங்கித்தந்தார். என் நண்பர்கள் அசோக்குமார்,செந்தில்,பிரஸாத்,செந்தில்குமார் வீரமணி, அசோக் சுகுமார், விஷ்ணு, இந்த ஆறு பேரும் முருகப் பெருமானை காத்த ஆறு கார்த்திகை பெண்களை போல என்னைக் காத்தார்கள். பள்ஸ் டூவில் 96% சதவீதம் மதிப்பெண்கள் பெற்றேன்.பொறியற் கல்லூரியில் படிக்க நினைத்தேன். வறுமையோ துரத்தியது. பிலானியிலுள்ள பிர்லா இன்ஸ்டிட்டியூட்டின் சேர்ந்து இரண்டு வருடங்கள் படித்தேன். சொந்த காரணங்களினால் படிப்பை தொடர முடியவில்லை.என்னை நானே நொந்து கொண்டேன். சொந்த சகோதர, சகோதரிகளும், நெருங்கிய நண்பர்களும் கூட என்னை புறக்கணித்தார்கள். இந்த சோதனையான காலங்களிலெல்லாம் என்க்கு உற்சாகமூட்டியவர்கள், என் தாயும், குருவும்தான்.

அந்த கால கட்டத்தில் ஒரு ஸ்கீரீன் பிரிண்டிங் நிறுவனத்தில் 1,500 ரூபாய சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். வேலை வருபவர்களுக்கு டீ வாங்கிக்கொடுப்பது.நரக வேதனையென்றாலும், என் நிலையை உணர்ந்து அதையும் ஏற்றுக்கொண்டேன். பிறகு விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் சேர்ந்தேன். குடும்பத்தினர் நான் வேலைக்கு போய் தாய்க்கு உதவியாக இருக்க வேண்டுமென்றார்கள். ஆனால் என் தாயாரோ பிடிவாதமாக நான் படிக்க வேண்டுமென்றார்.

அந்த தாயின் லட்சியத்தை நிறைவேற்ற பட்டப்படிப்பில் 96.5% வாங்கி தங்கப் பதக்கம் வென்றேன்.அப்போதுதான் விப்ரோ பெங்களூரிலிருந்து நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. என்னுடன் என் தாயும் வந்திருந்தார். தங்குவதற்கு கூட வசதி இல்லை. அங்கிருந்த உறவினர்கள் என்னை தன் போல் பார்த்துக்கொண்டதை இன்று நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன். அங்கேயே முதலில் HR பிரிவில் வேலை கிடைத்தது. பிறகு சாப்ட்வேர் பிரிவுக்கு வ்ந்தேன். அந்தப்பிரிவில் வாரம் ஐந்து நாட்கள் வேலை, இரண்டு நாட்கள் அங்கேயே எம்.எஸ்(சாப்ட்வேர்) படிப்பு. இது துவங்கியது 2004ம் ஆண்டு. வாழ்க்கையில் வசந்தம் வீசத்துவங்கியபோது என் தாய் 2005 மே 5ந்தேதி என் கண்முன்னே மாரடைப்பினால் காலமானார்கள்.பலனை கூட அனுபவிக்காமல் அந்த புண்ணியவதி போய் சேர்ந்தது இன்னும் என்னை வாட்டிக்கொண்டிருக்கிறது.

தாயின் அரவணைப்பு, தந்தையின் கண்டிப்பு. எனக்கு தாயின் அரவணைப்பு கிடைத்தது, நான் என் தந்தையை கண்டது என் நினைவிலில்லை. ஆனால் எனக்கு தந்தையாக இருந்து என்னை அரவணைத்துக்கொண்டவர் என் குரு டி.எம்.எஸ். ஒரு ஆசானாக, தந்தையாக, ஒரு நடமாடும் தெய்வமாக இருக்கிறார் திரு டி.எம்.எஸ். அவர் என்னைப் போல பல மாணவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்தவர். அவர் மாணவர்களுக்கு செய்கிற பல உதவிகளை அவர் அனுமதியில்லாமல் சொல்ல முடியாது. அவர் கணித `பாட' கர் மட்டுமல்ல், அவர் ஒரு கால பெட்டகம்.

இப்படிக்கு

மதன் மோகன்