Jul 3, 2008

கணித `பாட'கர் டி.எம்.எஸ்.



`கவிஞன் நானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்'

என்று தன்னைப் பற்றி சொல்லிக்கொண்டார் கவிஞர் கண்ணதாசன்.சென்னையில் ஒரு மனிதக் கணிதம், பல காவிய காலங்களை உருவாக்கப்போகும் அடுத்த தலைமுறையை சரியாக செப்பனிட்டுக்கொண்டிருக்கிறது.

அவர் சென்னை மேற்கு மாம்பலம் அகோபில மடம் ஹையர் செகண்டரி பள்ளியின் தலைமையாசிரியர் டி.எம்.எஸ்.இவரது இரண்டு கண்களில் ஒரு கண் கணிதம். இன்னொரு கண் கருணை.

பொதுவாகவே எனக்கு இந்த ஆசிரிய இனத்தின் மீது கோபமுண்டு.உண்மையில் அவர்கள் ஆசிரியர்களாக இல்லாமல், புத்தகத்திற்கும் மாணவர்களுக்குமிடையே ஒரு `மொழிபெயர்ப்பாளர்களாகத்தான் இருக்கிறார்கள். அதனால் பல மாணவர்களால் பாடத்தில் லயிக்க முடிவதில்லை. பல வகுப்புகளில் மாணவர்கள் தூங்குவதற்கு இதுவும் ஒரு காரணம்.அப்பொதெல்லாம் எனக்கு அச்சு இயந்திரங்களை கண்டு பிடித்தவன் மீது கோபம் வரும். `கற்றலிற் கேட்டலே நன்று' என்கிற குரு குல கல்வி முறைக்கே நாம் போய் விடலாமோ என்று தோன்றும்.

ஆனால் சில ஆசிரியர்கள் தான் இந்த எண்ணத்தை மாற்றுகிறார்கள். உதாரணமாக எனக்கு திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் ஒரு தமிழ் ஆசிரியர் இருந்தார். வி.வி.நடராஜன். இன்றைக்கு எனக்கும் தமிழில் எழத துணிச்சல் உண்டென்றால் அதற்கு வித்திட்டவர் அவர். எங்கள் உறவினர் ஒருவர் உண்டு. அவர் பெயர் கி. குழைக்காதன். அவருடைய தமிழ் போதனையைப் பற்றி பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அவரை எல்லோரும் ஆசிரியர் கி.கு என்றுதான் அழைப்பார்கள்.அவரது பேத்தி ஜென்னிக்கு தமிழ் மீது இருந்த பயத்தைப் போக்கி அதை ரசிக்க வைத்தவர். அந்த வரிசையில் என் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த மாண்புமிகு மனிதர் இந்த கணித டி.எம்.எஸ்.

`கணித சூத்திரங்களை மனப்பாடம் செய்தால் உருப்படவே முடியாது' என்பது இவரது வாதம். அதன் அடிப்படையை புரிய வைப்பார்.இவரது பள்ளி வாழ்க்கை தவிர, ஏராளமான குழந்தைகளுக்கு அதுவும் ப்ளஸ் டூ வகுப்பு மாணவர்களுக்கு இலவச பயிற்சி. `ஏழை நான் ஆனால் படிக்க ஆசை' என்று இவர் எதிரே நின்று சொன்னால் போதும். அப்ப்டியே அரவணைத்துக்கொள்வார்.

இவருக்குள்ள அலாதியான வெறி தான் சொல்லிக்கொடுக்கும் கணித முறை ஏழை குழந்தைகளை சென்றடைய வேண்டும். வசதி படைத்த குழந்தைகளுக்கு பல வாய்ப்புகள் வசதி மூலமாக கிடைக்கும். அந்த ஏழைக் குழந்தைக்குள் இருக்கும் கணித திறனை யார் நீருற்றி வளர்க்கப்போகிறார்கள்' என்பதைத்தான் தூக்கத்திலும் புலம்பிக்கொண்டிர்ருப்பார்.

மேற்கு மாம்பலம் பகுதிக்கு இவரை ஒரு `சூப்பர் ஸ்டார்' என்றே சொல்லலாம்.அவருடன் நடந்து போனால், பல லட்ச ரூபாய் காரில் போகிறவர் கூட நிறுத்தி வணக்கம் சொல்லிவிட்டு போவார். காரணம் அவர் இவருடைய பழைய மாணவராக இருப்பார். அந்த மாணவரின் பூர்விக வாழ்க்கை குடிசையில் கூட துவங்கியிருக்கும்.

ஒரு சிறந்த உதாரணம். இவ்ரது வீட்டில் பாத்திரங்கள் தேய்த்து, துணி தோய்த்து கொடுக்கும் பெண் ஆண்டாள். பல வருடங்களாக இவரது வீட்டில் பணி புரிகிறார்.அந்தப் பெண் இவர் வீட்டில் வேலை செய்ய வந்தபோது அவரது மகனுக்கு சிறு வயது. விளையாட்டுத்தனமாக இருந்த அந்த பிள்ளை இன்று அமெரிக்காவில்.தன் தாய்க்கு மேற்கு மாம்பலம் பகுதியிலேயே பல லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள வீடு வாங்கிக்கொடுத்திருக்கிறான். ஆனால் ஆண்டாள் அம்மாள் இன்றும் வந்து இவர் வீட்டில் வந்து பணி புரிகிறார்.` எனக்கு கணிதம் மட்டுமா கொடுத்தார், படிக்க காசுமல்லவா கொடுத்தார்' என்கிறான் அமெரிக்காவில் உள்ள அந்தப் பிள்ளை.

தான் வாங்கும் சம்பள காசுக்காக கற்றுக்கொடுப்பதென்பது வேறு. கல்வியினால் ஒரு தலைமுறை தழைக்க வேண்டுமென்று ஒரு யாகமாக இந்தப் புனிதப் பணியை செய்பவர்கள் சிலர்.அதில் இவரும் ஒருவர். என்னுடைய வலைப்பதிவில் ஒரு விளம்பரம் இருக்கும். அந்த புத்தகத்திற்கு சொந்தக்காரர் டி.எம். எஸ். இந்த ஆண்டு ஜனவரி மாதம் இவர் மாணவர்களுக்காக ஒரு கணித கையேடு த்யாரித்தார். அதாவது மார்ச் 4 ந்தேதி ப்ள்ஸ் டூ பரீட்ச்சை எழதப்போகும் மாணவர்களுக்காக. புத்தகத்தில் விலை 70 ரூபாய். புத்தகம் தயாரானவுடம் யோசித்தார். இதை ஏழை மாணவர்கள் எப்படி வாங்குவார்கள்? உடனே வசதியாக இருக்கும் தன் மாணவக் கண்மணிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். அச்சடித்த 5,000 புத்தகங்களும் நன்கொடை மூலமாக ஏழைப் பள்ளிகளுக்கு வினியோகம் செய்யபட்டது.

இதில் இன்னொரு செய்தி. எந்த மாதிரியான கேள்விகள் வரும் என்று இவர் சொல்லியிருந்தாரோ அதுவே பரீட்சையிலும் வந்தது. பல பள்ளி தலைமை ஆசிரியர்கள் இப்போது தமிழகம் முழவதுமிருந்து கடிதங்கள் எழதுகிறார்கள் இலவச புத்தகம் கேட்டு!இப்போது அந்த மகத்தான பணியிலிருக்கிறார்.` நான் பணக்காரனாக இருந்திருந்தால், என் செலவிலேயே தமிழ்கம் முழவதும், தமிழ் மீடிய மாணவர்களுக்கும் கூட கொடுப்பேன். அதனால் இந்த வருடம் ஆங்கில மீடியத்துக்கும் மட்டும் நன்கொடை கேட்க போகிறேன். கணிதம் மேல் மோகம் கொண்ட `கர்ண'ர்கள் கொடுக்கும் நிதி குவிந்தால் தமிழக்கும் கொண்டு வ்ருவேன்' என்கிறார். ஒரு ஐந்து புத்தகத்தின் விலையை கொடுத்தால் கூட அது பெரிய நன்கொடை என்கிறார்.

ஜாதி, மத, இன வேறுபாடில்லாமல் இந்த `ஆரியர்' செய்யும் பணி இன்றைய காலம் கவனிக்காமல் போகலாம். ஆனால் பாடகர் டி.எம்.எஸ்ஸின் குரலில் ` நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற, இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற' என்று பல லட்சம் உள்ளங்கள் பாடிக்கொண்டேயிருக்கும்.