Nov 1, 2012

  வாழும் வரகவி வாலி


நேற்றோடு கவிஞர் வாலிக்கு 81 வயது முடிந்துவிட்டது. இன்று அவர் ஒரு நாள் முதிர்ந்த குழந்தை. எனக்கு கண்ணதாசனும் வாலியும், பெரியப்பா, சித்தப்பா முறையாவார்கள். எப்படி? என் தாய் வழிப் பாட்டனார் பிரபல தமிழறிஞர் பி.ஸ்ரீ. 1930 களிலேயே ஆனந்த விகடனில் கம்ப சித்திரம் எழதியவர். கம்பராமாயணத்தில் கரை கண்டவர். அவருடைய கம்ப ராமாயண பிரசங்கத்தின் பிரதான விசிறி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.

அந்தப் பாட்டனாரை கண்ணதாசனும், வாலியும் தங்களுடைய தமிழ் வழிப் பாட்டனாராக ஏற்றுக்கொண்டவர்கள். அதனாலேயே செட்டிநாட்டு கண்ணதாசனும், ஸ்ரீரங்கத்து வடகலை அய்யங்கார் வாலியும், எனக்கு பெரியப்பா, சித்தப்பா முறையாவார்கள்.

கண்ணதாசனுக்கும், வாலிக்கும் என்ன வித்தியாசம் ? கண்ணதாசன் `எடுப்பார் கை பிள்ளை’ வாலியோ ` எங்க வீட்டுப் பிள்ளை’ கண்ணதாசன் எதையும் பட்டுத் தெரிந்து கொள்வார். வாலி, கண்ணதாசன் பட்டதைப் பார்த்து தன்னை வழிநடத்திக்கொள்வார். பொய் சொல்லுவதில் இருவருமே வல்லவர்கள் தங்கள் பாடல்களில்!

உதாரணமாக, தேவிகா நல்ல நடிகைதான். ஆனால் அவரது இடை எப்படி இருக்கும் ? தெரிந்த விஷயம்தான். இடையா அது இடையா , அது இல்லாதது போலிருக்குது ‘ என்றார் கண்ணதாசன். வாலியோ ` ஒடிவது போல் இடையிருக்கும்’ என்பார். அதனால் கவித்துவமான பொய் சொல்லுவதில் இருவருமே மங்கைகளை மயக்கும் மாய ஜாலப் பொய்யர்கள்.
 .
வாலி ஒரு வரகவி. நாம் வாழம் நாட்களில் இப்படி ஒரு கவிஞன் இருக்கிறானே என்று பெருமைப் படக்கூடிய அளவிற்கு இன்று உயர்ந்து நிற்கிற ஒரு மகா கவிபுருஷன் வாலி.

ஒரு கவிஞனை இனம் காணாத ஒரு நாடு, அதன் மேன்மையின் மகத்துவத்தை இழந்து  பணம் தேடும் வெற்று மனிதர்களை கொண்ட ஒரு வறண்ட சவக்காடு.

இதற்கு உதாரணம் மகாகவி பாரதி. கம்யூனிஸம் – கிருஷ்ணத்துவம் இரண்டும் இரு வேறு துருவங்கள். இதை இரண்டையும் இணைத்துப் பார்த்தவன் மகாகவி பாரதி. ரஷ்யப் புரட்சியை கலியை அழித்து, கிருதாயுகத்தை கொணர்ந்த கிருஷ்ணத்துவம் என்றான் பாரதி.

`இலக்கியமும், அரசியலும்  இணைகிற பொழதுதான் இப்படிப்பாட்ட கவி மேன்மையின் சத்தியங்கள் வெளிப்படும். எந்த அரசியலில் இருந்து இலக்கியமும் கவிதையும் வெளி வராதோ அது மக்களுக்கு உகந்தது அல்ல ‘ என்பார் எழத்தாளர் ஜெயகாந்தன்.

இன்றைய அரசியலுக்கு, இலக்கியத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.. அரசியல் என்பது ஒரு வர்த்தக ஸ்தாபனம்.. அதில் வியாபாரிகள்தான் இருப்பார்கள். அங்கே இலக்கியம் தேடினால்  கழதைகளிடம் கற்பூர வாசனையை நுகர்கிற கதைதான். . ஆனால், நமக்குள் இருக்கும் மென்மையின் மேன்மைகளை காக்க வேண்டுமானால் கவிஞர் வாலியின் பெருமைகளை உணர்ந்தே இருக்க வேண்டும்.

 கண்ணதாசனா – வாலியா ? யார் சிறந்த கவிஞர் என்று சர்ச்சை இருந்த காலங்கள் ஒன்று உண்டு. அது வெட்டி வேலை. கண்ணதாசன் காலத்திலேயே அவருக்கு இணையாக பாடல் எழதி கொடி கட்டிப் பறந்தவர் வாலி. அதனாலேயே வாலியின் பல பாடல்களை இன்னும் பல பேர் கண்ணதாசன் பாடல்கள் என்று சொல்லுவார்கள்.

கண்ணதாசனுகே கூட சில சமங்களில் இது தன் பாடலா வாலியுடையதா என்று குழப்பம் வந்ததுண்டு. கண்ணதாசன் ஆனந்த ஜோதி படத்தில் ` நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா ‘ என்று ஒரு பாடல் எழதியிருப்பார். இதயத்தில் நீ படத்தில் `உறவு என்று சொல் இருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கு,ம் காதல் என்றொரு கதை இருந்தால் கனவு என்றொரு முடிவிருக்கும்’ `மன்னவனே அழலாமா, கண்ணீரை விடலாமா.’ ` மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள்’ ` அழகு தெய்வம் மெல்ல மெல்ல; ` கடவுள் தந்த இரு மலர்கள், கண் மலர்ந்த பொன்மலர்கள்’ ` மதுரையில் பறந்த மீன் கொடியை’ ` அன்புள்ள மான்விழியே. கண் போன போக்கிலே கால் போகலாமா ?’’ போன்ற பல வாலியின் பாடல்கள் அந்த நாளைய ரசிகர்களை குழப்ப வைத்த பாடல்கள்.

கண்ணதாசனின் பாடலினால்தான் தான் திரையுலகத்தில் நிலைத்து நிற்கிறேன் என்று வாலியே சொல்லியிருக்கிறார்.

கண்ணதாசன் பாடல்கள் மக்கள் மனதில் பதிந்தது. ஆனால் வாலியின் பாடல்களோ அந்த மக்களை கவர்ந்த மகோன்னத திரை நாயகனை அரசியல் சிம்மாசனத்திலேயே கொண்டு போய் சேர்த்தது.. வாலி என்கிற வாகனம்தான் எம்.ஜி.ஆர் என்கிற மூன்றெழத்தை கோட்டைக்கு கொண்டு போய் சேர்த்தது என்பேன்.

நல்ல பாடல்கள் ஒரு படத்திற்கு முகவரி.அன்றைய பாடல்கள், மக்களின் அன்றாட வழக்க மந்திரம். ` மூன்றெழத்தில் என் மூச்சிருக்கும்,. என்ற பாடல்தான், அன்றைய திமுகவிலிருந்த எம்.ஜி.அரையும், திமுகவையும் இணைத்து பார்க்க வைத்தது. உதயசூரியனின் பார்வையிலே, உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே, என்று பகிரங்கமாக திமுக சின்னத்தையே எம்ஜி.ஆர் மூலமாக மக்களிடம் 1965ல் கொண்டு சென்றது. ` கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்’ என்று எம்.ஜி.ஆர் பாடியபோது அவரை ஒரு கம்யூனிஸ்டாக மக்கள் பார்த்தார்கள்.
`ஏமாற்றாதே ஏமாற்றாதே,’என்று அவர் உச்சரித்தபோது, அவரை ஒரு ஏழைப்பங்காளனாக பார்த்தார்கள். `ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்’ என்றபோது  எம்.ஜி.ஆரை ஒரு இறைதூதராக கண்டார்கள். `அவன் வீட்டுக்கு கதவுகள் இல்லை – அந்த வாசலில் காவல்கள் இல்லை’ அவன் கொடுத்தது எத்தனை கோடி, அந்த கோமகன் திருமுகம் வாழி என்ற போது அங்கே ஒரு கொடை வள்ளலைக் கண்டார்கள்.

`உங்கள் பாடல்கள் எங்கள் வெற்றிக்கு பெரிது உதவி செய்தது’ என்று அண்ணாவே 67 வெற்றிக்குப் பிறகு வாலியிடம் ஒப்புக்கொண்டார்.
வாலி எம்.ஜிஆருக்கு எழதிய பாடல்கள் எல்லாமே அரசியல் கலந்த திரை இலக்கிய பாடல்கள்..`ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்’ என்ற போது தமிழகத்து மீனவ வாக்கு வங்கிகள் எம்.ஜி.ஆர் கணக்கில் வந்து சேர்ந்தது அதுவே இன்று அதிமுகவிற்கு வைப்பு தொகையாக மாறிவிட்டது.

கவிஞன் வாக்கு பொய்க்காது, என்பதை எம்.ஜி.ஆர் வாழ்க்கை மூலமாக உறுதி செய்தவர். வாலி ஒரு வாழம் வரகவி. தமிழ்ச் சொற்களின் விலாசம் எது என்று என்னை கேட்டால், `நம்பர் 20. கற்பகம் அவென்யூ, சென்னை 28 என்று வாலியின் வீட்டு விலாசத்தை கொடுக்கலாம்.
வாலியின் ` அவதார புருஷன்’ ` பாண்டவர் பூமி’ ராமானுஜ காவியம் இவையெல்லாம் இதற்கு உதாரணங்கள். `அழகு நிலாவை இடுப்பில் ஏந்தி – அழக்கு நிலாவை அழைத்தாள் கோசலை’ பிள்ளை நிலாவின் பொலிவைப் பார்த்து வெள்ளை நிலாவும் வெட்கப்பட்டது’ என்று குழந்தை ராமனை பற்றி சொல்லுவார்.

பாமரனைச் சென்று அடைவதே சிறந்த இலக்கியம் என்பார்கள். அதற்கு வாழம் வழிகாட்டி வாலி.

அவருடன் அன்றாட பழகும் பல நண்பர்களைவிடவும் நான் அவருக்கு நெருக்கம்.எப்படி? அவருக்கு நெருக்கமானவர்கள் பெயர்களை அடிக்கடி குறிப்பிடுவார். அந்த வரிசையில் என்றுமே நான் இருந்ததில்லை.` ஊரார் பிள்ளையைத்தான் ஊட்டி வளர்க்க வேண்டும். தன் பிள்ளை தானே வளரும்’ என்கிற தாயுள்ளத்தோடு என்னைப் பார்ப்பவர்.

நடிகர் சிவகுமாரை `கலையுலக மார்கண்டேயன் என்பார்கள். அதே கலையுலகத்தின் `கவியுலக மார்கேண்டேயன்’ எனலாம்.தனது 31 வயதில் பாட்டால் பவனி வரத் துவங்கிய வாலி, இன்று 21 வயது இளம் இசையமைப்பாளனுக்கு ஆங்கிலம் கலந்த தமிழிலும் எழதிக்கொண்டிருப்பதே அவர் மார்கண்டேயத்தனத்திற்கு எடுத்துக் காட்டு.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட இந்திய ஒருங்கிணைப்பின் சிற்பி வல்லபாய் படேல் பிறந்த அதே தினத்தில் பிறந்தவர் இந்த இசைந்த மனிதர் வாலி. இவரையும் நிச்சயம் வரலாறு குறித்துக்கொள்ளும். வாழ்க நீ எம்மான் !

1 comment:

There was an error in this gadget