Oct 30, 2012

அண்ணனுக்கு`ஜே’                            அண்ணனுக்கு`ஜே’ 

                                  உலக முதலாளியான அமெரிக்காவில் 'எஜமானர்' தேர்தல் நவம்பர் 6 ம் தேதி நடக்கிறது. ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஒபாமா மீண்டும் களத்தில் இருக்கிறார். குடியரசுக் கட்சி சார்பில் மிட் ரோம்னே இருக்கிறார். அமெரிக்க தேர்தலில் நமக்கென்ன அக்கறை என்று இந்தியர்கள் அலட்சியமாக இருந்துவிட முடியாது.
நமது வருங்கால 'முதலாளி' அமெரிக்க அதிபர்தான் என்கிற பயம் இந்தியனுக்கு வேண்டும். வருங்காலத்தில் நம்மை யாரும் இந்தியன் என்று சொல்லப்போவதில்லை. 'பழுப்பு அமெரிக்கர்'கள் என்றுதான் அழைப்பார்கள். அமெரிக்காவின் பூர்வ குடிகளான செவ்வந்தியர்களைப்போல. அமெரிக்காவில் சிவப்பு இந்தியர்களா? என்று அப்பாவிகள் கேள்வி கேட்கலாம். அவர்களுக்காக கொஞ்சம் அமெரிக்க சரித்திரத்தை இந்த நேரத்திலே திரும்பிப் பார்ப்பது மிகவும் அவசியம்.
அமெரிக்கா என்பது குடியேறிகளின் தேசம். 'மண்ணின் மைந்தர்கள்' என்பது அங்கே கிடையாது. இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் அடிப்படையில் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டுமே பிரிட்டிஷ் ஆளுமையிலிருந்த தேசங்கள். இங்கே தனது வியாபாரத்தை பெருக்க பிரிட்டிஷ் முதலில் கிழக்கிந்திய கம்பெனியை அனுப்பியது. அதேபோல் அமெரிக்கா என்கிற நீண்ட நிலப்பரப்பில் பிரிட்டிஷ்காரர்கள் வந்து குடியேறினார்கள். அமெரிக்காவில் முதலில் பிரிட்டன் குடியேறிய பகுதி வர்ஜீனியா.
சரி, நகரம் உண்டாயிற்று. அங்கே மக்கள் வேண்டாமா? மக்கள் வேண்டுமென்றால், அந்தப் பகுதியில் மக்களுக்கு ஏதாவது பிழைக்க வழி வேண்டாமா? அதனால் மன்னரின் யோசனைப்படி அந்தப் பகுதியில் ஏராளமான புகையிலைத் தோட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. அந்த 'க்ளைமேட்'டிற்கு புகையிலைதான் நன்றாக வளரும். இதை வாங்கி நிர்வாகம் செய்ய இங்கிலாந்திலிருந்து பல பணக்காரர்கள் (அதாவது பிரபுக்கள்) அமெரிக்காவிற்கு போனார்கள். கூடவே கூலி வேலை செய்ய ஆப்ரிக்காவிலிருந்து ஏராளமான அடிமைகளையும் அங்கே இறக்குமதி செய்தார்கள்.
உண்மையில் அந்த மண்ணின் மைந்தர்கள் செவ்விந்தியர்கள்தான். அவர்களுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? யாருக்குமே தெரியாது. அவர்கள் சிவப்பர்களும் இல்லை, இந்தியர்களும் அல்ல. யாரோ எப்போதோ அவர்களுக்கு கொடுத்த அடை பெயர் அப்படியே நிலைத்துவிட்டது. ஆனால், உண்மையில் அவர்கள்தான் அந்த மண்ணின் பூர்வ குடிகள். இன்றைய அமெரிக்காவிற்கு உண்மையில் செவ்விந்தியா என்றுதான் பெயர் வந்திருக்க வேண்டும். செவ்விந்தியர்களும், அடிமைகளும்தான் அமெரிக்க சரித்திரத்தின் அவமானச் சின்னங்கள். அடிமைகளை வைத்திருப்பது ஒரு பணக்கார அங்கீகாரமாக அமெரிக்க முதலாளிகள் நினைத்தார்கள். அந்த அடிமைகள்தான் கருப்பர்கள். அதாவது நீக்ரோக்கள்.
ஆப்ரகாம் லிங்கன் என்கிற ஜனாதிபதி வந்த பிறகுதான் இந்த அடிமைத்தனத்தை அடியோடு ஒழித்தார். ஒரு கருப்பர் என்பவர் அங்கே ஒரு பன்றிக்கு சமானம். எந்த அளவுக்கு கேவலப்படுத்தப்பட்டார்கள் என்றால், அவர்களின் உயர்வு என்பது ஒரு கற்பனை கதையின் கதாபாத்திரமாகவே இருந்தது. அதை வைத்துதான் பல வருடங்களுக்கு முன்னால் இர்விங் வாலஸ் என்கிற பிரபல எழுத்தாளர் 'தி மேன்' என்று ஒரு நாவல் எழுதினார். அதன் கதைச்சுருக்கமே ஒரு கறுப்பர் அமெரிக்க ஜனாதிபதி ஆனால், அதன் விளைவுகள் என்ன என்பதுதான். அந்த கற்பனைக் கதாபாத்திரத்தின் உண்மை வடிவம்தான் அமெரிக்காவில் நான்காண்டுகளுக்கு முன்னால் அதிபரான பராக் ஒபாமா. அவர் ஒரு கருப்பர், அவர் இப்போது மீண்டும் போட்டியிடுகிறார்.
உலகமயமாக்கல் என்கிற சொல் இன்றைக்குத்தான் நம்மை வந்து சேர்ந்திருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவிலேயே அது அமெரிக்காவில் புழக்கத்துக்கு வந்துவிட்டது. அருமையான பலனும் கொடுக்கத் தொடங்கியதில்தான் அமெரிக்காவின் வெற்றி ஒளிந்திருக்கிறது. அடிமைகளின் உழைப்பு, நாடெங்கும் போடப்பட்ட இருப்புப் பாதைகள், குடியேற்ற நடைமுறையில் எளிமை இவை மூன்றும்தான் அமெரிக்க வெற்றியின் ஃபார்மூலாக்கள்.
அமெரிக்கா என்பது ஜனநாயகப் போர்வையில் ஒளிந்திருக்கும் ஒரு சர்வாதிகார நாடு. அந்தப் பாதையில்தான் இப்போது நம்மை இந்தியப் பிரதமரும், மாண்டக் சிங் அலுவாலியாவும், நமது சிவகங்கை சீமான் சிதம்பரமும் அழைத்துப் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதை பாமரன் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும்.
அங்கே போன தொழிலதிபர்களுக்காக அவர்கள் ஆதிவாசிகளான செவ்வந்திர்களின் நிலத்தை பல நூறு ஆண்டுகளாக பறித்தார்கள். உள்ளூர்வாசிகளை பஞ்சப் பராரிகளாக்கினார்கள். இதற்கும் இப்போது இந்தியாவில் மாவோயிஸ்டுகள் உருவாவதன் பூர்வ கதையும் அமெரிக்காவிலிருந்து வந்ததுதானா என்று யாராவது யோசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அது ஒரு தற்செயலான மன்மோக மந்திரம். அதாவது தொழில் வளர்ச்சிக்காக விளைநிலங்களை விற்கலாம் என்பதுதான் அமெரிக்காவின் அடிப்படை சித்தாந்தம்.
அந்த முயற்சியில் அவர்கள் இறங்கியபோதுதான் செவ்விந்தியர்களுக்கும், அங்கு குடியேறிய தொழிலதிபர்களுக்கும் சண்டை வந்தது. இந்த யுத்தம் 1847&ல் துவங்கியது. அதுதான் இப்போது இந்தியாவில் தொடங்கியிருக்கிறது என்று நினைப்பதற்கும் எனக்கும் தொடர்பில்லை.
ஒரு வல்லரசாக அல்லாமல் வேறெந்த விதமாகவும் தன்னால் இருக்க முடியாது என்று முழு விழிப்புணர்வுடன் யோசித்து முடிவு செய்து, அதற்காகவே தன்னைத் தயார்படுத்திக்கொண்ட ஒரு தேசம் அமெரிக்கா. இதை பல போர்களின் மூலமாக உறுதிப்படுத்திக்கொண்டார்கள். அமெரிக்கா மேற்கொண்ட ஒவ்வொரு போருமே அதன் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கே உதவி செய்ததது. உலக யுத்த காலத்தில் நடந்தது மாதிரி நேரடி பொருளாதார வளர்ச்சி. மற்ற நாடுகளுக்கு போர்க்காலத்தில் ஆயுத, பண, பொருள் உதவிகள் செய்து பின்னால் வட்டியுடன் வசூலிப்பது அல்லது பின்னால் வளைகுடா நாடுகளில் அமைந்தது மாதிரி மறைமுக பொருளாதார உயர்வு. அதாவது முதலில் முதலீடு செய்து போரைத் தொடக்கி, இருக்கும் ஆட்சியை ஒழிப்பது, பிறகு தனது கைப்பாவையாக அங்கே ஒரு அரசை நியமிப்பது. அதற்குப் பிறகு அங்கே வர்த்தக ஒப்பந்தம் போட்டுக்கொள்வது. இந்த முயற்சியில் க்யூபா, வியட்நாம் இரண்டில் மட்டுமே அவர்கள் தோல்வி அடைந்தார்கள்.
இதுதான் அமெரிக்காவின் சரித்திர சுருக்கம். இனி அவர்கள் சொல்வதுதான் நமக்கு வேதம். அதனால் அடுத்த அதிபர் யார் என்பதை கைகட்டி, வாய் பொத்தி, நவம்பர் 6-ம் தேதி வரை ஒரு தேசப்பற்றோடு கவனிப்போம். இனி நாம் பழுப்பு அமெரிக்கர்கள் என்கிற உணர்வோடு.

                           நன்றி: மீடியா வாய்ஸ் தமிழ் வார இதழ் 3.11.2012

No comments:

Post a Comment