Feb 23, 2011

அரசியல்


`ராகு (ல்) காலம் ?


ஒரு நாளில்,மூன்று மணி நேரம் ராகு காலம், எம கண்டத்திற்கு போகும். இன்னும் ஒண்ணரை மணி நேரம் குளிகையில் கழியும். பயணமாக இருந்தால் அன்றைக்கு எந்த திசையில் சூலம் என்று பார்த்து கிளம்புவார்கள். இந்த மாதம் 20 ந்தேதி, அண்ணா அறிவாலயத்தில் காங்- திமுக கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை 4'30 - 6 ராகு காலம். 3.30 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை 5 மணிக்கு ராகு காலத்தில் முடிந்தது.
போன காங் தூதுவர்கள் புன்னகையோடு திரும்பினாலும் அதற்கு பிறகு திமுகவிற்கு தொடர் ராகு காலம். காங்கிரஸிற்கு ` ராகு' ல் காலம் எனப்து தெளிவாகிவிட்டது. காரணம் காங் வைத்துள்ள கடுமையான நிபந்தனைகள்.
90 இடங்கள், ஆட்சியில் பங்கு, குறைந்த பட்ச செயல் திட்டம்' காங்கிரஸ்
கோரிக்கை என்று இரண்டு நாட்களுக்கு பின் செய்திகள் கசிய ஆரம்பித்தது. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் வார்த்தைகளில் சொன்னால் ` தமிழக காங்கிரஸ் என்பது இரண்டு கழகங்களுக்கும் மாறி மாறி `குங்குமம் சுமக்கும் கழதை' யாகத்தான் காங்கிரஸ் கடந்த முப்பது ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. அந்தக் ` கழதை' இப்போது பொதி சுமக்க மறுக்கிறதா ? அரசியல் பார்வையாளர்களால் நம்ப முடியவில்லை. `கழதைகளை விரட்டி விட்டு பாய்ந்து செல்லும் குதிரைகளை கொண்டு தமிழக அரசியலை நடத்த வேண்டுமென்று நினைக்கிறார் ராகுல் காந்தி' என்பதுதான் டெல்லியின் உயர் மட்டத் தகவல்கள்.

திமுகவின் `கூட்டணி' தர்ம மிரட்டல்கள், ஊழல்கள் அகில இந்தியாவிலும், ஏன் உலக அளவில் காங்கிரஸின் மதிப்பை குழி தோண்டி புதைத்துவிட்டது. ராசா என்கிற இரண்டெழத்தும், திமுக என்கிற மூன்றெழத்தும் தேசிய அவமானத்தின் குறீயிடுகளாக மாறிவிட்டது. தொலைக் காட்சி பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்த பிரதமர் `பாவ மன்னிப்பு' கூண்டில் ஏறிய `பாவி' யாக தோன்ற வேண்டிய அவலம்.

`பொறுத்த்து போதும் பொங்கியெழ' என்று காங்கிரஸை பொங்க வைத்துவிட்டது திமுக. கலைஞரின் சகுனி தந்திர அரசியல் சித்து விளையாட்டுகள் இந்த முறை காங்கிரஸிடம் எடுபடவில்லை என்பதுதான்
யதார்த்த நிலை.

அதிக இடங்களை பெற வேண்டும் என்கிற முடிவு காங்கிரஸ் இப்போது எடுத்ததல்ல. 2010 ஜனவரியிலேயே இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ராகுலின் அபிமானத்திற்குரிய கார்த்திக் சிதம்பரம். அதற்கான காரண காரியங்களையும், அவசியத்தை மின்னஞ்சல் மூலமாக ராகுலுக்கு தெரிவித்து விட்டார். அதில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டுமென்கிற எண்ணம் காங்கிரஸின் இளைஞர்களுக்கு இருப்பதை ராகுல் புரிந்து கொண்டார். இளைஞர் காங்கிரஸ் தேர்தல்களும் அதை உறுதி செய்தது.

காங்கிரஸ் அதிக இடம் கேட்பதற்கான காரணங்களையும் அடுக்கினார்கள் டெல்லி வட்டாரத்து காங்கிரஸ் முக்கிய புள்ளிகள்.

2006 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸுக்கு 48 இடங்கள் கிடைத்தது. அதில் 34 இடங்களில் வெற்றி பெற்றார்கள். அதற்கு பிறகு தொண்டாமுத்தூர், மதுரை மேற்கு இடைத்தேர்தலில் அந்தத்
தொகுதிகள் காங்கிரஸிற்கு கிடைத்தது. அதனால் அவர்கள் அவர்கள் பலம் 36 ஆனது.

இப்போது தமிழகம் முழவதும் தொகுதி சீரமைப்பு முடிந்துவிட்டது. இதில் பல தொகுதிகள் காணாமல் போனது. அதில் பள்ளிப்பட்டு, தொட்டியம், சேரன்மாதேவி, சாத்தான்குளம் நான்கும் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகள். இது தவிர மூன்று பொதுத் தொகுதிகள், தனித் தொகுதிகள் ஆனது. ஒரு தனித் தொகுதி பொதுத் தொகுதியானது. உதாரணமாக மதுராந்தகம் பொதுத் தொகுதியில் வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சியின் டாக்டர் காயத்ரி தேவி. மதுராந்தகம் இப்போது தனித் தொகுதி. அதனால் காயத்ரி வேறு தொகுதியை பார்க்க வேண்டும். நாமக்கல் தனித் தொகுதி இப்போது பொதுத் தொகுதியாகிவிட்டது. அங்கு வெற்றி பெற்ற, காங்கிரஸின் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை குழ உறுப்பினரான ஜெயக்குமார், வேறு தொகுதியைப் பார்க்க வேண்டும்.

தங்களுடைய ஆறு தொகுதிகளை இழந்த காங்கிரஸுக்கு இப்போது 28 இடங்கள். இதில் செங்கம், குளச்சல் வேட்பாளர்கள் இறந்து போனதால் இப்போது இருக்கும் காங் சட்டமன்ற உறுப்பினர்கள் 26 தான். இருக்கும் 26 பேர்களுக்கு சீட் நிச்சயமாம். காரணம் அவர்களிடம் தான் செலவழிக்கும் `திராணி' இருக்கும் என்பது மேலிட கணிப்பு. பழைய 48 இடங்களையே திமுக ஒதுக்கினால் இன்னும் 22 பேருக்கு மட்டுமே காஙகிரஸ் வாய்ப்பு அளிக்க முடியும்.

மேலும், தமிழகத்தில் மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகள். ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்குள்ளும் 6 சட்டமன்ற தொகுதிகள். இதில் 15 நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் சுவடே இல்லை. உதாரணமாக மத்திய, தென் சென்னை. இந்த இரு நாடாளுமன்ற தொகுதிகளில் ஒரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கூட கிடையாது.

இதன் அடிப்படையில்தான் `கார்த்தி சிதம்பரம்' ஃபார்முலா ஒன்று ராகுலிடம் கொடுக்கப்பட்டது. அதாவது ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் காங்கிரஸிற்கு 2 சட்டமன்ற தொகுதிகள்.அதனால் காங்கிரஸ் இம்முறை கேட்பது 78 இடங்கள். கூடவே ஆட்சியில் பங்கு.

இது தவிர காங்கிரஸிற்கு இன்னொரு பயமும் உண்டு. தொகுதி ஒதுக்கீடு செய்யும்போதும் திமுக கையே ஒங்கி நிற்கும். திமுக வெற்றி பெற்ற தொகுதியை காங்கிரஸிற்கு கொடுக்காது. அதிமுகவின் கோட்டைதான் காங்கிரஸிற்கு கிடைக்கும்.

இப்போது இருக்கும் 26 சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் எதிர்ப்பு அலையையும் சமாளிக்க வேண்டி வரும். இந்த நிலையில் காங்கிரஸ் வளரவேண்டுமானால் 78 அவசியம் என்பது அவர்கள் கருத்து.
காங்கிரஸில் தொகுதிப் பதவி என்பது அரசாங்க அலுவலக வாயிலில் கட்டிய கழதை கதைதான். அதற்கு பணி நீக்கமே கிடையாது. ஆனால் 25 வருடங்கள் கழித்து அது சூப்பிரண்டெண்ட் என்று கணைக்கும். அதே போல்தான் சிலருக்கு மட்டுமே அந்த பதவிகள். சட்டமன்றத்தை எடுத்துக்கொண்டால் பீட்டர் அல்போன்ஸ், யசோதா, வேலூர் ஞானசேகரன்.க பதவிக்கே பிறந்தவர்களாக இவர்களை காங்கிரஸ் சுவீகரித்துக்கொண்டுவிட்டது. இது தவிர முன்னாள், இந்நாள் எம்பிக்களின் வாரிசுகளுக்குத்தான் முன்னுரிமை.

இதை வைத்துக்கொண்டு இங்கே கட்சியை எப்படி வளர்ப்பது? பதவியிலிருப்பவர்களுக்கு கட்சியைப் பற்றி கவலையில்லை. தங்களின் சுயநிதிக் கல்லூரிகளையும், தொழில்களையும் காத்துக் கொள்ள, உறுப்பினர் அட்டையில்லாத திமுகவாக செயல்பட அவர்கள் தயார். அதை செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் இருக்கும் மேஜை நாற்காலிகளுக்கு கூட கோஷ்டி உண்டு. அதே போல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் கூட்டணியிலிருக்கும் `ஆளுங் கட்சி கோஷ்டி'எப்போதுமே உண்டு.

`கருணாநிதி குடும்பத்து ரூவா நோட்டுகளை காய வைக்க கூட தமிழ்நாட்டில நிலம் கிடையாது' என்று வயலில் வேலை செய்யும் பெண்கள் கூட பேச ஆரம்பித்துவிட்டார்கள் என்பதும் காங்கிரஸிற்கு தெரியும்.

`2 ஜி குற்றத்தின் கூட்டாளி' என்று சோனியா காந்தியையே பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார் சுப்ரமணிய சாமி. இப்போது தொகுதியும் இல்லாமல், உண்மைக் குற்றவாளியின் தோளில் கை போட்டு வலம் வந்தால், கட்சி தாங்குமா என்கிற கவலையும் காங்கிரஸ் மேலிட இளைஞரான ராகுலுக்கு உண்டு.

இந்திய பொருளாதார ஸ்திரத் தன்மைய்யே தமிழ்க கூட்டணியைப் பொறுத்தே அமையும் என்பதை காங்கிரஸில் சிலர் உணரத் துவங்கிவிட்டார்கள்.

திமுக- காங் விவகாரத்தை அதிமுகவு உன்னிப்பாக கவனித்து வருகிறது. உதிரிக் கட்சிகளுடன் உடன்பாடு செய்து கொண்ட ஜெயலலிதா, தேசீய கட்சிகளான இடது சாரிகளுடம் இன்னும் உடன்பாட்டுக்கு வரவில்லை. ராஜ விசுவாசி வைகோ நிலையும் அதுதான். விஜய்காந்த நிலையும் அங்கே இழபறி.

காங்கிரஸின் முடிவுக்காக காத்திருக்கிறது தமிழக அரசியல் களம். இப்போது திமுகவிற்கு வடக்கே சூலம். வடக்கே டெல்லியில் சூலத்தை எடுத்து கையில் எடுத்து நம் கையில் கொடுப்பார்களா அல்லது மார்பில் குத்துவாரா என்று பயம் கலந்த ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறது திமுக.

விருத்தாச்சல விருதகிரி விஜய்காந்தும் வீம்போடு காத்துக்கொண்டிருக்கிறார். காங்கிரஸின் கடைக்கண் அங்கேயும் இருக்கிறது.

அரசியல் என்பது பந்தயக் குதிரை. அதை ஒட்டுபவர் குறைந்த அளவு காயங்களோடு வெளிவரத் தெரிய வேண்டும் என்பது ராகுலுக்கு தெரியும் என்பது அவருக்கு நெருக்கமானவர்களின் கருத்து.






No comments:

Post a Comment