Aug 24, 2008

எது நாகரீகம் ?

Geetha

தோற்றத்தை வைத்து மனிதர்களை எடைபோடுவது, மகாகவி பாரதி சொல்லும் காட்சி பிழைதான். மனிதர்களின் தரத்தை தோற்றங்களினால் எடை போட்டுவிட முடியாது. ஆனால் தோற்றத்தை வைத்தே நாம் மனிதர்களை புரிந்து கொள்கிறோம். பெரும்பாலும் தவறாகவே.
அந்தப் பெண்மணியின் தோற்றத்தை வைத்துத் தான் முதலில் நான் அவரை எடை போட்டேன். ஆனால் அது தவறு என்பதை புரிந்து கொள்ள சில நாட்கள் ஆயிற்று.

அப்போது நான் ஜெயா டிவியில் நாட்டு நடப்பு நிகழ்ச்சியை விவாதம் என்கிற தலைப்பில் நடத்திக்கொண்டிருந்த சமயம். நாட்டு நடப்பு என்பது வெறும் அரசியல் அலசல் மட்டுமல்ல என்பதில் தீவிரமாக இருப்பவன் நான். அதனால் பிரபலமாகாத, வெகுஜன ஊடகங்களில் அதிகம் தென்படாத திறமையாளர்களை தேடிக்கொண்டு வந்த பேட்டி எடுத்துக்கொண்டிருந்தேன்.

அப்போது என் கவனத்திற்கு வந்தவர்தான் திருமதி கீதா மாதவன்.அமெரிக்க தூதரக நண்பர் மூலமாகத்தான் முதலின் அவர் என் கவனத்திற்கு வந்தார். அவர் வாங்கிய டாக்டர்
பட்டம்தான் என்னை முதலில் கவர்ந்தது. தீவிரவாதத்தில் சர்வதேச சட்டம் பற்றித்தான் அவர் டாக்டர் பட்டம் வாங்கியிருக்கிறார் என்று எனக்குச் சொல்லப்பட்டது. அடிப்படையில் அவர் ஒரு வழக்கறிஞர் என்பதை தெரிந்து கொண்டேன்.சட்டத்தில் எத்தனையோ பிரிவுகள் இருக்கும்போது ஒரு பெண்மணிக்கு எப்படி தீவிரவாத சட்டத்தில் ஈடுபாடு வந்தது என்கிற கேள்வி என்னை குடைந்து கொண்டிருந்தது.

அவரை எப்படியும் நிகழ்ச்சிக்கு வரவழைக்கவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தேன். ஆனால் உள்ளுக்குள் ஒரு சின்ன உறுத்தல். அவரைப் பற்றி சொன்னது அமெரிக்க தூதரக நண்பர். நான் நடத்துவதோ தமிழ் நிகழ்ச்சி. தமிழ்நாட்டில் பல துறைகளில் அறிவு ஜீவிகள் இருக்கிறார்கள்.ஆனால் தமிழில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு அதில் பல பேர் ஒத்துவரமாட்டார்கள். காரணம் அவர்களால் தொடர்ந்து தமிழில் பேச வராது. கீதா மாதவனும் அப்படியிருந்துவிட்டால் என்ன செய்வது? அதனாலேயே அவரை நிகழ்ச்சிக்கு அழைப்பதை சிறிது காலம் ஒத்திப்போட்டேன்.

பிறகு ஒரு வழியாக அழைக்கலாமென்று முடிவு செய்து தொலைபேசியில் அழைத்தேன். எடுத்தவுடனேயே ஆங்கிலத்தில்தான் தன் பேச்சை ஆரம்பித்தார். குரலில் எழந்த ஏமாற்றத்தை அடக்கிக்கொண்டு நிகழ்ச்சிக்கு அழைத்தேன். அவரும் ஒப்புக்கொண்டார். பேச்சை முடிக்கும்போது, ` மேடம், நிகழ்ச்சி தமிழில் உங்களுக்கு தமிழ் சுமாராகவாவது பேச வருமா ?' இது நான். மறுமுனையில் கலகலப்பான் சிரிப்பு. ` எனக்கு தமிழ் வராது என்று உங்களுக்கு யார் சொன்னது ? படித்தது வட நாட்டில், ஆங்கில மீடியத்தில் என்றாலும், அடிப்படையில் எங்களது பூர்விகம் நெல்லை மாவட்டம்' என்றார்.

என ம்னதுக்குள் ஒரு உற்சாக துள்ளல். தமிழில் பேசக்கூடிய ஒரு அறிவார்ந்த பெண்மணி கிடைத்துவிட்டார் என்கிற மகிழ்ச்சி ஒரு புறம், கூடவே எங்கள் மாவட்டத்துக்காரர் என்பதில் இருட்டிப்பு மகிழ்ச்சி. தன் கணவரும், சென்னையில் பிரபல வழக்கறிஞருமான மாதவனுடன் தான் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். புடவை அணிந்திருந்தாலும். தோற்றத்திலும், உரையாடலிலும் ஏராளமான ஆங்கில கலாச்சார வாடை.

நிகழ்ச்சியின் படப்பிடிப்பு துவங்கும்வரை எனக்குள் படபடப்புதான். என் முதல் கேள்விக்கு அவர் அளிக்கும் பதிலில்தான் அன்றைய நிகழ்ச்சியின் உயிரே இருந்தது. எத்தனை பெரிய மனிதர்களாக இருந்தாலும், பயப்படாமல் கேள்வி கேட்பது என் இயல்பு. மேலும் என் நிகழ்ச்சிகளில் முதல் கேள்வியை மட்டும்தான் மனதிற்குள் தயார் செய்து வைப்பேன். பிறகு எதிரே இருப்பவர் சொல்லும் பதில் மூலமாகத்தான் என் அடுத்த கேள்வி உருவெடுக்கும்.

என் முதல் கேள்விக்கு அவர் தங்கு தடையின்றி தமிழில் பதில் சொன்ன விதத்தில் நான் முதல் முறையாக அடுத்த கேள்வி கேட்க தடுமாறினேன். காரணம் இந்த பெண்மணியிடமிருந்து இப்படியொரு தமிழை நான் எதிர்பார்க்கவேயில்லை. பிறகு அந்தத் தம்பதிகள் குடும்ப நண்பர்களானார்கள். திரு மாதவனுக்கு என் எழத்து நடை மீது அலாதி பிரியம் உண்டு. எங்கு பார்த்தாலும் என் எழத்தை பற்றியே சொல்லிக்கொண்டிருப்பார்.

பழைய தமிழ் சினிமா பாடல்களில் எனக்கிருந்த ஆர்வம் காரணமாக ஜெயா தொலைகாட்சியில் தேன்கிண்ணம் நிகழ்ச்சியும் நடத்திக்கொண்டிருந்தேன். ஒரு பொது இடத்தில் சந்தித்தபோது,கீதா மாத்வன் தேன்கிண்ணம் பற்றியும் அதில் வருகிற பாடல்கள் பற்றியும் சரளமாக என்னுடன் பேசினார். அவருக்கு பிடித்தமான பாடல்களை வரிசைப்படூத்தினார். அதில் முதலிடம் வகித்தது குழந்தையும் தெய்வமும் படத்தில் வரும் அன்புள்ள மான் விழியே, வேட்டைக்காரனில் வரும் உன்னையறிந்தால், காக்கும் கரங்கள் படத்தில் ஞாயிறு என்பது பெண்ணாக என்று அவருடைய நேயர் விருப்ப பட்டியல் நீண்டது. அவரது ரசனையும், பழைய மெல்லிசை அதன் மொழி வளம் மீது அவருக்கிருந்த ஆர்வம் என்னை பிரமிப்பில் தள்ளியது.

அவருடைய் பெற்றோர்களுக்கு அவர் ஒரே மகள். தந்தை ராணுவத்தில் பணிபுரிந்ததால், அவர் பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாமே வட இந்தியாவில்தான். வட இந்தியர்கள் தூய இந்தி என்றால் உத்திரிபிரதேச இந்தியைத்தான் சொல்லுவார்கள். அந்த இந்தியை அட்சர சுத்தமாக பேசக்கூடியவர். தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்த பலருக்கே தமிழ் தாளபோடும்போது இவருக்கு மட்டும் எப்படி சுத்த தமிழம் சாத்தியமாயிற்று ? தமிழை எழத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்தது ஆனந்த விகடன் மூலமாக. தாமிரபரணி பூர்விகம் அவருக்குள் தமிழை ஆழமாக பதித்திருந்தது எனக்குப் புரிந்தது.


வருடத்தில் பல நாட்கள் அயல்நாடுகளுக்கு சென்று திரும்பி கொண்டிருப்பவர். பல நாடுகளில் கூட்ட்ங்களுக்கு பேச போய்வருவார். அவர் வக்கீல் என்றாலும், முழ நேரமாக அதில் ஈடுபடாதது எனக்குள் வியப்பை விதைத்தது. அவரிடம் அதற்கான காரணம் இருந்தது. திருமணமாகி கருவுற்றதும், தொழிலை விட தனக்கு பிறக்கப்போகும் குழந்தைதான் முக்கியம் என்று முடிவெடுத்தார். இவருக்கு ஆடம்பரமெல்லாம் ஒரு நல்ல தாயாக இருப்பதுதான். தன் படிப்பு, தனக்க்குக் கிடைக்கும் கெளரவங்களை விட மேலானது தாய்மை என்று முடிவெடுத்தார். கணவரின் வருமானத்தில் குடும்பம் நடத்தினாலே போதும், வருமானத்திற்காக ஒரு தாயின் கடமையை இழக்கக்கூடாது என்பதில் இவருக்கு தீவிரம் அதிகம்.

சராசரி குடும்ப பெண்கள் கூட இன்றைக்கு குழந்தைகளோடு தியேட்டரிலும், தொலைக்காட்சிகளிலும் சினிமா பார்ப்பது என்பது ஒரு பெருமையாகவே கருதப்படுகிறது. ஆனால் தன் மகன் நிரஞ்சனுக்கு ஐந்து வயதாகும்வரையில் தான் சினிமா பார்ப்பதற்கே தடை போட்டுக்கொண்டார்.உலக அரங்கில் பல இடங்களிலிருந்து இவருக்கு தொடர்ந்து அழைப்பு வந்தாலும் இவருக்கு முதல் முன்னுரிமை தன் குடும்பம் தன் பிள்ளை. மிகச் சிறந்த படிப்பாளி. அவரது ஆங்கில நடையைக்கொண்டு அவர் முனைந்தால் இந்தியாவிலேயே ஒரு நல்ல நாவலாசிரியையாக வர முடியும்.பல அயல் நாட்டு தூதரக விருந்துகளில் இந்த தம்பதிகளை பார்க்கலாம். தோற்றத்திற்கும் அவரது வாழ்க்கை முறைக்கும் துளியும் தொடர்பில்லை.

மகன் கல்லூரியில் படிக்கிறார். இன்றைக்கும் வெளியே எங்கே வேலை இருந்தாலும் தன் மகனுக்கு தான் தேவைப்படும்போது எப்போதும் தான் அங்கு இருக்க வேண்டுமென்பது இவரது அடிப்படை உறுதி. படித்தபடிப்பும், அயல்நாட்டு புழக்கமும் இவரிமிருக்கு அடிப்படை தாய்மையை பறித்து கொள்ள இவர் அனுமதித்தேயில்லை. இது எனக்கு ஒரு புதுப் பார்வையாகவே இருந்தது.வெகு சிலரிடம்தான் படிப்பு, பாரம்பரிய பழக்கமும் இணைந்து இருக்கும் அதில் என் கண்ணுக்கு பட்ட முதல் பெண்மணி இவர்தான். கிராமங்களில் பாட்டிகள் ரசம், குழம்ப்பு போன்றவற்றை ஈயப்பாத்திரத்தில்தான் வைப்பார்கள். அது உடலுக்கு நல்லது என்பார்கள். அந்த பாத்திரத்திற்கு அடிக்கடி மூலாம் போட்டு வைப்பார்கள். கீதா மாதவன் ஆங்கில மூலாம் பூசப்பட்ட குணமளிக்கும் கிராமத்து ஈயப்பாத்திரம்.

பொய்யான சில பேர்க்குப்
புது நாகரீகம்
புரியாத பல பேர்க்கு
இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு
எது நாகரீகம்?
முன்னோர்கள் சொன்னார்கள்

அது நாகரீகம் என்கிற வாலியின் வரிகள் தான் எனக்கு இவரை பார்க்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும் அந்நிய மொழியும், பயணமும் நம் அறிவை வளர்த்துக்கொள்ள பயன்படலாம், ஆனால் நம் அடிப்படை பண்புகளை சுரண்ட அல்ல என்பதற்கு இந்த பெண்மணி ஒரு மிகச்சிறந்த உதாரணம்.