Sep 9, 2008

காற்றில் கரைந்த தந்தி


அது ஒரு பொற்காலம் என்று சொல்லலாம். சினிமாவில் நிறைய படித்த, ரசனையுள்ள, சங்கீதம் ஞானம் கொண்டவர்கள் இருந்தார்கள். அப்ப்டி ஒருவர்தான் ஏ.பி. நாகராஜன். அவர் இல்லையென்றால், உடலால் மறைந்தாலும், கானத்தால் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் குன்னக்குடி வைத்தியநாதன், தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கமாட்டார்.

முதலில் மாடர்ன் தியேட்டர்ஸில் இசையமைப்பாளர் ஜி.ராமநாதனிடம்தான் குன்னக்குடி வயலின் வித்வானாக சேர்ந்தார். தன் சமயோஜிதத்தால் ராமநாதனிடம் சேர்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.அவர் முன் வயலின் வாசித்துக்காட்டுவதற்கு முன்பே அவருக்கு பிடித்த ராகம் சாருகேசி என்பதை தெரிந்து கொண்டார் குன்னக்குடி.சுத்தமான கர்நாடக பாணி பாடலான ஸ்வாதித்திருநாளின் `கிருபய பாலய' பாடலைத்தான் முதலில் அவருக்கு வாசித்துக் காட்டினார். அவர் ரசித்துக்கொண்டிருந்த நேரத்தில், அவர் அதே ராகத்தில் இசையமைத்த `மன்மதலீலையை வென்றார் உண்டோ' வை வாசித்தார். அப்படியே சேர்த்துக்கொண்டார் ராமநாதன்.

1952ல் சென்னைக்கு வந்தார். ஒரு எட்டு ஆண்டுகள் பக்க வாத்யம்தான். 1960களில் தான் வயலினுக்கு தனி அந்தஸ்து கொடுத்து வாசிக்க ஆரம்பித்தார். முதலில் தனிப்பாடல்கள் பக்தி பாடல்கள் தான் கிராமபோன் கம்பெனிகளுக்கு செய்து கொண்டிருந்தார். அப்படி அவர் இயற்றிய ஒரு பக்தி பாடல்தான் தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. அந்தப் பாடல்தான் `திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்'.பூவை செங்குட்டுவனின் இந்த பாடலை பாடியவர்கள் சூலமங்கலம் சகோதரிகள்.

பல சமயங்கலின் என் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வரும்போதும்,பிரும்ம கான சபாவிலும் நாங்கள் நிறைய பேசிக்கொண்டிருப்போம்.அப்போதுதான் அந்த சம்பவத்தைஅவர் நினைவு கூர்ந்தார். 1967களில் ஒரு நாள் ஒரு சினிமா கம்பெனியின் கார் இவர் வீட்டு முன்பு வந்த நின்றது. வந்த கார் இவரை ஏ.பி.நாகராஜனிடம் அழைத்துச் செல்கிற்து.`நீங்கள் இசையமைத்த `திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்' பாடலை என் `கந்தன் கருணை' படத்தில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் ' என்றார் ஏபிஎன்.

`கே.வி. மகாதேவன் சம்மதிக்க வேண்டுமே ?' குன்னக்குடி. அந்தப் படத்தின் இசையமைப்பாளர் மகாதேவன்.`அவர் ஒப்புக்கொண்டுவிட்டார்' என்றார் ஏபிஎன். அப்படித்தான் கந்தன் கருணையில் இந்த பாடல் இடம்பெற்று பிரபலமடைந்தது. அதாவது நல்ல இசை எங்கிருந்தாலும், அதை தேடி சேர்க்கிற ரசனை படைப்பாளிகளிடம் இருந்தது.

பிறகு பல சினிமாக் கம்பெனிகளுக்கு ஏறி இறங்கி அலைந்துதான் மிச்சம்.1969 களில் ஏபிஎன் மீண்டும் அழைத்து இவருக்கு வாய்ப்பு கொட்டுத்தார் அந்தப் படம்தான் `வா ராஜா வா'. மகாபலிபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டும் ஒரு சிறுவனைச் சுற்றிக்கதை. இதில் பிரபல கவிஞர்கள் யாருமே பாடல் எழதவில்லை. இந்த படத்தில் அத்தனை பாடல்களும் பிரபலம்.` பூவை செங்குட்டுவனின், ` இறைவன் படைத்த உலகையெல்லாம் மனிதன் ஆளுகிறான்' குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பாவின் `கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா' நெல்லை அருள்மணி எழதிய ` உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலை'காற்றலைகளில் பல காலம் தவழ்ந்து கொண்டேயிருந்தது.

இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏபிஎன் எடுத்த படம் `திருமலை தென்குமரி' பஸ்ஸில் கோவில்களுக்கு செல்லும் பயணிகளை வைத்து படம். இதில் எல்லா பாடல்களுமே பிரபலம். கானடா, பீம்ப்ளாஸ், கல்யாணி, குந்தலவராளி ஆகியவற்றை தொடும் அரிய பாடல் சீர்காழியின் குரலில் கணிரென்று ஒலிக்கும் `மதுரை அரசாளும் மீனாட்சி'
`திருப்பதி மலை வாழம் வெங்கடேசா' `குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா' இந்தப் படத்தில் பிரபலமான பாடல்கள். இந்த படத்தின் கிளைமாக்ஸ் குமரியில். அங்கு ஒரு கோஷ்டி பாடல் உண்டு.` நீலக்கடல் ஒரத்திலே நிலம் கொண்டு செல்லாமல், காலம் எல்லாம் காவல் செய்யும் கன்னித்தெய்வம் குமரியம்மா' இது எல். ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல். காபரே பாடிக்கொண்டிருந்த ஈஸ்வரி கருமாரிக்கு வந்தது இப்படித்தான்.

பக்தர்களையும், சங்கீதப் பிரியர்களையும் பிரமிக்க வைத்த படம் தேவரின் ` தெய்வம்'.கர்நாடக சங்கீதத்தின் பிரபலங்களெல்லாம் இந்த படத்தில் பாடினார்கள். இதில் தான் முதல் முறையாக மதுரை சோமுவை படத்திற்கு பாட சம்மதிக்க வைத்தார் குன்னக்குடி. அடுத்த பெங்களூர் ரமனியம்மாள். ` குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்'கொட்டகையில் பெண்கள் சாமி வந்து ஆடுவார்கள். படம் வெளியான வெலிங்கடன் (இப்போது ஷாப்பிங் மால்) கொட்டகையில் ஒரு பெரிய முருகர் சிலையே நிறுவியிருந்தார் தேவர்.

இதற்கு முன்பு வந்த படம் அகத்தியர். இதில் ராவணனுக்கும், அகத்தியருக்கும் ஒரு பாட்டுப் போட்டி. அகத்தியர் சீர்காழி. ராவணன் ஆர்.எஸ். மனோகர். `வென்றிடுவேன் எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்' டி.என்.எஸ்ஸீம், சீர்காழியும் பாடுவார்கள். இந்த பாடல் வரிக்கு வரி மாறிவரும் ராக மாலிகை.

`மேல் நாட்டு மருமகள்' சிவகுமார், கமல்ஹாசன், ஒரு அயல்நாட்டு பெண்மனி, வாணிகணபதி (கமலின் முன்னாள் மனைவி). இதில் உஷா உதூப்பை வைத்து, ஒரு பாப் பாடலை பாட வைத்து பிரபலமாக்கினார் குன்னக்குடி. தமிழ் மேதை கி.வா.ஜ். முதலில் சினிமாவிற்கு பாடல் எழதியது இவருடைய இசையில் வெளியான `நம்ம வீட்டு தெய்வம்' படத்தில்தான். `டி.எம்.எஸ் பாடிய `சிவனும் திருமாலும் நீயோ, அருள் செய்யும் மாகாளி நீயோ' மிகப்பிரபலம்.

கர்நாடக சங்கித்தத்தை பட்டித்தொட்டியெங்கும் கொண்டு சென்ற ஒரு பாமர வித்வானின் வயலின் தந்தியும் அவரோடு காற்றில் கரைந்து விட்டது.

Sep 3, 2008

விநாயகனுக்கு எத்தனை வடிவங்கள்?!


பிரபஞ்ச சக்தி,காத்தல் சக்தியின் உருவ விளக்கம்தான் விநாயகர்.பூமி, காற்று, நெருப்பு,நீர்,வானம் ஆகிய பஞ்சபூதங்களின் முழ வடிவம்தான் இந்த ஐங்கரன். அவருக்கு ஐந்து கைககள்.`ஒரு கை த்னக்கும்,ஒரு கை தேவர்களுக்கு, ஒரு கை பெற்றோர்களுக்கு,இரு கைகள் நம்மைக் காக்க'என்று தணிகைப் புராணத்திலே சொல்கிறார் கச்சியப்ப முனிவர்.

கடவுள்களுக்கும் பட்டங்கள் உண்டு. சிவனுக்கு `ஆல் அமர் செல்வன்' கண்ணனுக்கு, `ஆலிலைப் பாலன்' விநாயகனுக்கு ஆலமர அல்லது அரசமரத்தடி பிள்ளையார் என்று உண்டு. பல்வேறு வடிவங்களில் இவரை வழிபடுவார்கள். மகா கணபதி,ஹரித்ரா கணபதி அல்லது துந்திராஜ கணபதி, உச்சிஷ்ட கணபதி,நவநீதி கணபதி, ஸ்வர்ண கணபதி, சந்தான கணபதி என்கிற ஆறு வடிவ்ங்களில் வழிபாடுகள் உண்டு.

முத்கல புராணம் விநாயகரின் எட்டு அவதாரங்களையும்,முப்பத்திரண்டு திருவுருவங்களையும் விவரிக்கிறது. எட்டு அவதாரங்கள் என்பது மனிதர்களின் எட்டு பலவீனங்கள் அல்லது அசுர குணங்களை குறிக்கும். அகந்தையை வெல்லும் ஏகதந்தர்,செருக்கை அகற்றும் தும்ரவர்ணர்,பொறாமையை அழிக்கும் வக்ரதுண்டர்,மோகத்தை அடக்கும் மகோதரர்,பேராசையை நீக்கும் கஜானானர்,கோபத்தை குறைக்கும் லம்போதரர், காமத்தை விலக்கும் விடர்,தற்பெருமையை தணிப்பது விக்னராஜா.

முப்பத்திரெண்டு திருவுருவங்கள்:

1.ஸ்ரீபால விநாயகர் "- குழந்தை வடிவம், யானைத்தலை; பொன்னிற மேனி;நான்கு கைகளில் ஒன்றில் வாழைப்பழம்,ஒன்றில் மாம்பழம்,ஒன்றில் கரும்பு, ஒன்றில் பலாப்பழம்,துதிக் `கை'யில் அவருக்கு பிடித்த கொழக்கட்டை.

2.ஸ்ரீ தருண விநாயகர் : இளமை பொங்கும் அழகிய இளைஞனாக,ஒடிந்த தந்தம்,விளாம்பழம், கரும்புத்துண்டம், அங்குசம், பாசம், நெற்கதிர்,நாவற்பழம்,மோதகம் தாங்கிய எட்டு கைகளும் கொண்ட சிவந்த மேனியர்.

3.ஸ்ரீ பக்தி விநாயகர் : அறுவடை கால முழ நிலவு போல் ஒளிரும் சாம்பல நிற மேனியர்; வாழைப்பழம், மாம்பழம்,தேங்காய்,கிண்ணம் நிறைய பாயசம் கொண்ட நான்கு கைகள்.

4.ஸ்ரீ வீர விநாயகர் : வல்லமை வாய்ந்த மாவீரர் போல் அனைவரையும் கவர்ந்தீர்க்கும் வகையில், நின்ற நிலையில் அம்பு அங்குசம், மழ, குந்தாலி, சம்மட்டி, சூலம்,வாள்,சக்கரம், சங்கு, கேடயம், கதை, கொடி, பாசம், நாகம், வேல்,வில் கொண்ட பதினாறு கரங்கள் கொண்ட சிவந்த மேனி.

5.ஸ்ரீ சக்தி விநாயகர் : தனது சக்தியரில் ஒருவ்ரை மடியில் அமர்த்தி இடது கீழ்க்க்கரத்தால் அணைத்த வண்ணம் உட்கார்ந்த நிலையில் அங்குசம் பாசம் ஏந்தி வலது கீழ்க்கரத்தால் அபயம் அளிக்கும் நான்கு கரமுடைய ஆரஞ்சு சிவப்பு மேனியர்.

6.ஸ்ரீ துவிஜ விநாயகர்: நான்கு முக வெண்ணிலவு வண்ண மேனி, அக்கமாலை,தண்டம், கமண்டலம்,ஏடு ஏந்திய நான்கு கரங்கள்.

7.ஸ்ரீ சித்தி விநாயகர்: எடுத்ததை முடித்து வைக்கும் பொன் மஞ்சள் நிற மேனி,மாம்பழம்,பாசு,கரும்புத்துண்டம், மலர்க்கொத்து கொண்ட நான்கு கரங்கள்,துதிக்கையில் எள்ளுருண்டை.

8.ஸ்ரீ உச்சிஷ்ட விநாயகர்: பேரின்பம் அருளும் பண்பாட்டு காவலர், நீல நிற மேனி, தனது சக்தியுடன் வீற்றிருக்கும் இவர் அக்கமாலை, மாதுளம் பழம், வஜ்ஜிர திரிசூலம், நீலோற்பலம், நெற்கதிர், வீணை தாங்கிய ஆறு கரங்கள்.

9.ஸ்ரீ ஷிப்ர விநாயகர்: வரந்தரு விநாயகரான இவர் தந்தம், அங்குசம், பாசம், கற்பகக்கொடி நான்கு கரங்களில் தாங்கியிருப்பார் துதிக்கையில் இரத்தின கும்பம் கொண்ட வண்ன மேனி.

10.ஸ்ரீ விக்ன விநாயகர் : விக்கினங்களின் அதிபதி. தந்தம், மலரம்பு, பரசு, சக்கரம், சங்கு, பாசம், கரும்புவில், பூங்கொத்து ஏந்திய எட்டு கரங்கள். துதிக்கையில் கொழக்கட்டையை வைத்திருக்கும் பொன்னிற மேனி.

11.ஸ்ரீ ஹரம்ப விநாயகர்: சிங்கவாகனத்தில் அமர்ந்திருக்கும் ஐந்து முக வெண்ணிறமேனி.அபயகரம்,தந்தம்,மலர்மாலை,அக்கமாலை,சுத்தி, பாசம், பழம், கதை, கொழக்கட்டை கொண்ட பத்து கரம்.

12.ஸ்ரீ லட்சுமி விநாயகர்: வெற்றியைத் தருபவர்; நீல மலர் ஏந்திய இருதேவியர்களுடைய தூய வெண்ணிற மேனியர்; பச்சைக்கிளி, மாதுளம் பழம், வாள், அங்குசம், பாசம், கற்பகக் கொடி, மாணிக்கக்கும்பம், வரம் தரும் கரம் கொண்ட எட்டு கரங்கள்.

13.ஸ்ரீ மகர விநாயகர்: மூன்று கண்களுடன் நெற்றியில் பிறைச் சந்திரன் ஒளிர, சிவப்பு வண்ணத்தோற்றம். தந்தம், மாதுளம்பழம், நீலோற்பலம், நெற்கதிர், சக்கரம், பாசம், தாமரை, கரும்புவில், கதை ஆகியவற்றைத் தாங்கிய ஒன்பது கரங்கள், தாமரை எந்திய கையுடன் கூடிய சக்தியை பத்தாவது கையில் தழவிக்கொண்டு துதிக்கையில் ரத்தின கலசம்.

14.ஸ்ரீ விஜய விநாயகர்: மூஷிக வாகனத்தில் அமர்ந்திருக்கும் வெற்றியைத் தரும் செந்நிற மேனி, தந்தம், அங்குசம், பாசம், மாம்பழம் தாங்கிய நான்கு கரங்கள்.

15.ஸ்ரீ நிருத்திய விநாயகர்: ஊன்றிய இடது கால்,தூக்கிய வலது கால், கற்பக விருட்சத்தனடியில் ஆனந்த நடனமாடும் பொன்னிற மேனி. தந்தம், அங்குசம், அபிநயம் காட்டுவது போலுள்ள உயர்த்திய கையிலே பாசம், கொழக்கட்டை கொண்ட நான்கு கரங்கள்.

16.ஸ்ரீ ஊர்த்துவ விநயகர்: இடது மடியில் அமர்ந்திருக்கும் பச்சை நிறமுடைய தேவியை அணைத்த வண்ணமுள்ள பொன்னிற மேனி. தந்தம், அம்பு, செங்கழநீர்மலர், நெற்கதிர், கரும்புவில்,தாமரை மலர் கொண்ட ஆறு கரங்கள்.

17.ஸ்ரீ ஏகாட்சர விநாயகர்: பிறை சூடி, முக்கண்ணனுடன் செம்பட்டுடையும், செம்மலர் மாலையும் அணிந்து குட்டைக் கைகால்களை கொண்டு பத்மாசன நிலையில் மூஷிக வாகனத்தில் அமர்ந்திருக்கும் செந்நிற மேனி, மாதுளம் பழம், அங்குசம், பாசம், கொண்ட நான்கு கரங்கள்.

18.ஸ்ரீ வரத விநாயகர்: வரம் தரும் பிறைசூடிய முக்கண், செந்நிற மேனி, தேன்கிண்ணம், அங்குசம், பாசம், துவஜம் கொண்ட நான்கு கரங்கள்.

19.ஸ்ரீ திரயாட்சர விநாயகர்: ஆடும் காதுகளில் சாமரம் எனும் அணிகளும், தந்தம், அங்குசம், பாசம், மாம்பழம் கொண்ட நான்கு கரங்கள். தும்பிக்கையில் கொழக்கட்டை பொன்னிற மேனி.

20.ஸ்ரீ ஷிப்ர பிரசாத விநாயகர்: பிறையுடையாடை, முக்கண் கொண்ட சிவந்த மேனி, தந்தம், தாமரை, அங்குசம், பாசம், கற்பகக் கொடியுடன் ஆறு கரங்கள். துதிக்கையில் மாதுளம் பழம்.

21.ஸ்ரீ ஹரித்ரா விநாயகர்: மஞ்சள் ஆடையுடைய பொன்னிற மேனி. தந்தம், அங்குசம், பாசம், மோதகம் கொண்ட நான்கு கரங்கள்.

22.ஸ்ரீ ஏகதந்த விநாயகர்: பெருத்த வயிறு, ஒற்றைத் தந்தம், அக்கமாலை, கோடரி, லட்டு கொண்ட நான்கு கரங்களைக்கொண்ட நீல மேனி.

23.ஸ்ரீ சிருஷ்டி விநாயகர்: தந்தம், அங்குசம், பாசம், மாம்பழம். கொண்ட நான்கு கரங்கள். செந்நிற மேனியில் பெருச்சாளி வாகனம்.

24.ஸ்ரீ உத்தண்ட விநாயகர்: வலது கையில் தாமரை ஏந்தியுள்ள பச்சை நிற தேவியை இடது கையால் அணைத்துள்ள செந்நிற மேனி. த்ந்தம், மலர்மாலை, தாமரை, கதை, பாசம், நீலோற்பலம்,நெற்கதிர், கரும்புவில், மாதுளம்பழம் கொண்ட ஒன்பது கரங்கள் துதிக்கையில் ரத்ன கும்பம்.

25.ஸ்ரீ ருணமோகன விநாயகர்: செம்பட்டுடுத்தி வெண்பளிங்கு நிறம் கொண்டவர். தந்தம், அங்குசம், பாசம், நாவற்பழம் ஏந்திய நான்கு கரங்கள்.

26,ஸ்ரீ துண்டி விநாயகர்: நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் செந்நிற மேனி.தந்தம், அக்கமாலை, கோடரி, ரத்தின பாத்திரம் தாங்கிய நான்கு கரங்கள்.

27.ஸ்ரீ இருமுக விநாயகர்: இரு முகம், செந்நிற ஆடை, ரத்தின கீரிடம், நீலநிற மேனி. தந்தம், அங்குசம், பாசம், ரத்தின பாத்திரம் கொண்ட நான்கு கரங்கள்.

28.ஸ்ரீ திரிமுக விநாயகர்: அபயம், அக்கமாலை, அங்குசம் உள்ள மூன்று வலது கரங்கள், பாசம், அமுத கலசம், வரதம் மூன்று இடது கரங்கள், தங்க தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கும் செந்நிற மேனி.

29.ஸ்ரீ சிங்க விநாயகர்: சிங்க வாகனத்தில் அமர்ந்துள்ள வெண்ணிற மேனி. வரதம்,வீணை, சிங்கம், கற்பகக்கொடி கொண்ட நான்கு வலக்க்ரங்கள், தாமரை, மலர்க்கொத்து, ரத்தின கவசம், அபயம் கொண்ட நான்கு கரங்கள்.

30.ஸ்ரீ யோக விநாயகர் : யோக ஆசனத்தில் யோக பட்டம் கட்டிக்கொண்டு யோக தண்டம், அக்கமாலை, பாசம், கரும்பு தாங்கிய நான்கு கரங்கள், நீல நிற ஆடை அணிந்த பால சூரிய நிறம்.

31.ஸ்ரீ துர்க்கா கணபதி: அம்பு, தாமரை, அக்கமாலை, அங்குசம், பாசம், அஸ்திரம், கொடி, வில் ஆகியவற்றை எந்திய எட்டு கரங்கள் செந்நிற ஆடையுடைய பொன்னிறம்.

32.ஸ்ரீ சங்கட ஹர விநாயகர்: துயரங்களைப் போக்குபவர், நீல ஆடை அணிந்த பால சூரியன் போன்ற நிறம். இடது மடியில் நில மலரை ஏந்திய பச்சை மேனியுடைய தேவியை அமர்த்தியிருப்பவர். வரதம் அங்குசமுடைய வலக்கரம், பாசம், பாயச பாத்திரமுடைய இடக்கரம்.