Jan 3, 2013

அரசியல்






                               திமுகவின் புது கேடயம் ? !








2013 உலக அரங்கில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள். வல்லரசு நாடுகள் பெரும் பொருளாதார சரிவுகளைச் சந்திக்கும் என்கிறார்கள்.
இது பாம்புகள் ஆண்டு என்கிறது சீன ஜோதிடம்.
எது எப்படியோ! புதிய காலனி ஆதிக்கத்தில் இந்தியா சிக்கிக் கொள்ளாமல் இருக்க இந்தியர்களுக்கு வாழ்த்து சொல்லுவோம். தமிழகத்திலிருந்து இருள் விலகட்டும், காவிரி நீரை கர்நாடக அரசு தானே முன்வந்து கொடுக்கட்டும், கச்சத்தீவை இந்திய அரசு மீட்டுத் தரட்டும். கூடவே தமிழகத்தில் எந்த ஒரு மூலைமுடுக்கிலும்கூட அசம்பாவிதமான சம்பவம் எதுவும் நடக்காமல் மூதறிஞர் கலைஞருக்கு நிம்மதி கொடுக்கட்டும் என்று எதிர்பார்ப்போம்.
பாவம், இந்த தள்ளாத வயதிலும்தான் அவருக்கு எத்தனை சோதனைகள்!
தமிழகத்தையும், தமிழினத்தையும் காக்க அவர் எத்தனை ஆண்டுகள்தான் தொடர்ந்து போராடுவார். அவருடைய தொடர் அறிக்கைகளையும், கடிதங்களையும் படித்தால் அந்த பெரியவர் மீது ஒரு அளவு கடந்த பாசமும், பரிதாபமும் வரத்தான் செய்யும். அவர் மீது வைக்கும் பாசமெல்லாம் கண்மூடித்தனமானது என்று பகுத்தறிவு வந்து அடிக்கடி பாடம் புகட்டுகிறது. பாடம் மறந்துபோனாலும் அவரது நெஞ்சுக்கு நீதி வந்து மறந்ததையெல்லாம் நினைவு படுத்திவிட்டுப் போகிறது. கருணாநிதியின் நினைவாற்றலைக் கண்டு வியக்காதவர்கள் யாரும் இல்லை. ஆனால், அவருக்கு எப்போதுமே எதிர்க்கட்சியாக இருக்கும்போது சில பிரச்னைகள் ஏற்படும்.
அந்த பிரச்னைகள் அவருக்கு 1977-ம் ஆண்டே துவங்கிவிட்டது. அதாவது எம்.ஜி.ஆர். முதலமைச்சரான பிறகு அவருக்கு தோன்றிய அரசியல் நோய் அது. அவர் ஆட்சி நடத்தும்போது, குடும்ப பாசம் என்னும் நோயினால் பலவீனப்பட்டுவிடுவார். மீண்டும் எதிர்க்கட்சி ஆனபின்தான் அவருக்கு கழகத் தொண்டர்கள், தமிழக நலன் என்பதெல்லாம் நினைவுக்கு வரும்.
சுருங்கச் சொன்னால் முதல்வர் பதவி அவருக்கு பலவீனம். பதவியில்லாத தி.மு.க. தலைவர் பதவி என்பதுதான் அவரது மிகப்பெரிய அசுரபலம். ‘தமிழகம் இருண்ட காடாகிவிட்டது. இருளை அகற்ற அகல் விளக்கை எடுத்துக்கொண்டு வா உடன்பிறப்பே’ என்று அறிவித்து, சென்ற மாதம் 18-ம் தேதி தி.மு.க. தமிழகம் எங்கும் போராட்டம் நடத்தியது. சென்னையில் அந்தப் போராட்டத்திற்கு அவரே தலைமை தாங்கினார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது, தான் ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தது அவருக்கு மறந்துபோகும்!
தமிழகத்தில் 2006 முன்பு வரை மின்வெட்டு இருந்ததா? எப்போது மின்வெட்டின் தீவிரத்தை தமிழக மக்கள் உணர ஆரம்பித்தார்கள்? மின்வெட்டு பற்றாக்குறை என்பது எப்போது ஆரம்பித்தது? 2008-ம் வருடம். அப்போது தமிழகத்தின் முதல்வர் கருணாநிதி, மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி. இப்படி ஒரு மோசமான மின்வெட்டை நாம் சந்திக்கப் போகிறோம் என்பதை அப்போது அவர்கள் உணர்ந்தார்களா? ஆற்காடு வீராசாமி அவரது இலாகா வேலையை பார்த்ததாக யாருக்கும் நினைவில்லை. 
அன்றைய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ஒரு அனல் மின் நிலைத்துக்கு அருகே நின்று போட்டோ கூட எடுத்துக் கொண்டதில்லை. நமது மின் நிலையங்களின் இயந்திரங்கள், 1995ல் நிறுவப்பட்டது. 2008ல் மின் பற்றாக்குறை ஏற்பட்டபோது அவைகளுக்கு வயது பதினேழு. அவை சீராக கவனிக்கப்படவில்லை. தாங்கள் ‘பவர் கட்’ ஆகாமல் இருக்க தினமும் பாசமிகு தலைவனுக்கு பாராட்டு விழாக்கள்தானே நடந்தது. அப்போது இந்த இருளைப் பற்றிய கவலை கருணாநிதிக்கு ஏன் இல்லை?
பதவியிலிருந்தால் பாராட்டு விழா பிடிக்கும். ஆட்சியில் இல்லாவிட்டால் தினமும் ஒரு ஆர்ப்பாட்டம் பிடிக்கும். இதுதானே கருணாநிதியின் 35 ஆண்டுகால ஆட்சி அரசியல். அதாவது அ.தி.மு.க. தோன்றிய பிறகான அரசியல். ஆள்பவர்கள் நிம்மதியாக ஆக்கபூர்வமான ஆட்சி நடத்தக்கூடாது. அவர்களின் கவனத்தை திசை திருப்பிக்கொண்டே இருக்கவேண்டும். அதுதான் அவரது எதிர்க்கட்சி அரசியல்.
அடுத்து டிசம்பர் 26-ம் தேதி, தூத்துக்குடியில் ஒரு ஆர்ப்பாட்டம் அறிவித்தார். எதற்காக? அதை கொஞ்சம் பார்க்கலாம்.
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட கிளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 12 வயதான புனிதா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இது நடந்தது டிசம்பர் 20-ம் தேதி. உடனே சம்பவ இடத்திற்கு சென்றது அந்தப் பகுதி மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களும், அந்த இயக்கத்தைச் சேர்ந்த ஜனநாயக மாதர் சங்கமும்தான். நான்கு நாட்கள் வரை புனிதாவின் புனிதம் கருணாநிதிக்கு தெரியவில்லை.
டெல்லியில் டிசம்பர் 16-ம் தேதி, இரவு நேரத்தில் ஓடும் பஸ்சில் ஒரு ரவுடிக் கும்பலால் டெல்லியில் ஒரு இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்தியாவே கொதித்தது. டெல்லியே அதிர்ந்தது. 
டெல்லியின் புரட்சி கருணாநிதியை உலுக்கியது. உடனே புனிதா நினைவுக்கு வந்தாள். இதே தூத்துக்குடி மாவட்டத்தில் 2012-ம் ஆண்டில் சிறுமி, பள்ளி மாணவி, இளம்பெண்கள் என்று ஐந்து பேர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்கள். 8.2.2012 இதே தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் உதவிக்கரம் என்கிற சிறுவர் இல்லத்தில் இதன் உரிமையாளர் ஸ்டீபன் ஜோசப் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். அதே தூத்துகுடியைச் சேர்ந்த செல்வமணி என்பவரின் நான்கு வயதுப் பெண் மீது பாலியல் பலாத்காரம் நடந்தது. அப்போதெல்லாம் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. தற்காலிக பணி நீக்கத்தில் இருந்ததா? சென்னையில் டிசம்பர் 18-ம் தேதி மின் வெட்டுக்காக போராட்டம் அறிவித்தபோதுகூட அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி பஸ்ஸில் நடந்த வன்கொடுமை அவருக்கு நினைவுக்கு வரவில்லை. டெல்லியில் போராட்டம் வெடித்தவுடன்தான் கருணாநிதிக்கு புனிதாவின் நினைவு வந்தது.
தினமும் ஒரு போராட்டம்தான் தி.மு.க. என்கிற எதிர்க்கட்சியை உயிரோடு வைத்திருக்கும் என்பதுதான் கருணாநிதியின் அரசியல் ராஜதந்திரம். அவரது நாற்பதாண்டுகால நண்பர் எம்.ஜி.ஆர். ஆட்சியிலிருந்தபோதும் இதைத்தான் தொடர்ந்து செய்து வந்தார். 1980-ம் வருடம் எம்.ஜி.ஆர். தமிழகத்தின் முதல்வர். அப்போது தருமபுரி பகுதியில் நக்ஸலைட்டுகள் ஊடுருவல் அதிகமாக இருந்தது. காவல்துறை அதை கட்டுபாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த நக்ஸல் இயக்கம் பற்றி இவர் சட்டசபையில் என்ன பேசினார்? 1982-ம் வருட போலீஸ் மானியத்தின்போது அவர் பேசியது.
‘ஏன் நக்ஸலைட் உருவாகிறான்? எந்தச் சூழ்நிலையில் இப்படிப்பட்ட வன்முறைகள் தலைதூக்குகின்றன? மிதிக்க மிதிக்க புழுவும் புலியாகும் என்கிற அளவுக்கு ஏழை எளிய மக்கள், விவசாய பெருங்குடி மக்கள், தொழிலாளர்கள்,  ஒடுக்கப்பட கிளர்ந்தெழுகிறார்கள். இந்த அடிப்படையைப் பற்றி சிந்திக்காமல் அலட்சியப்படுத்திவிட்டு துப்பாக்கி குண்டுகளால் பிரச்னையை தீர்த்துவிடலாமெனக் கருதி, நக்ஸலைட் அல்லாதவர்களுக்கும் நக்ஸலைட் பட்டம் சூட்டி அவர்களைப் போலீஸாரே கொன்று குவித்து தண்டனை வழங்குவது என்பது எங்கேபோய் முடியும் என்பதை இந்த அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்’ - இது கருணாநிதி சட்டமன்றத்தில் பேசியது. 
அடுத்து கருணாநிதி தன் ‘நெஞ்சுக்கு நீதி’ பாகம்-2, பக்கம் 314-ல் என்ன சொல்கிறார்? ‘ஆளுங்கட்சியாக இருந்தபோதும் சரி, எதிர்க்கட்சி நிலையிலும் சரி, நக்ஸலைட்டுகளின் தீவிரவாத வன்முறையை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட, அந்த இளைஞர்கள்பால் எனக்கொரு இரக்க உணர்வு இருந்தே வந்திருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால், இவர் முதல்வராக இருந்தபோது எழுபதுகளில் நெய்வேலிக்கு அருகில் நக்ஸலைட்டாக அப்போது கருதப்பட்ட கலியப்பெருமாள் என்பவரை என்ன பாடுபடுத்தினார்? தமிழகத்தில் நக்ஸல் மற்றும் தீவிரவாதிகளை கண்காணிக்கும் போலீஸின் ஒரு பிரிவாக இருந்த எஸ்.எஸ்.பி. என்ற அமைப்பு ஒரு டி.எஸ்.பி தலைமையில் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், கருணாநிதி முதல்வராக இருந்தபோது அந்த எஸ்.எஸ்.பி. என்ற அமைப்பு கலைக்கப்பட்டு அதற்கு அதிக அதிகாரங்களைக் கொடுத்து கியூ பிரிவு போலீஸ் உருவாக்கப்பட்டது. அதற்கு ஒரு எஸ்.பி. அந்தஸ்திலான அதிகாரி தலைவராக்கப்பட்டார். 
இப்போது ஆந்திராவிலிருந்து நேபாளம் வரை, ‘சிவப்பு தாழ்வாரம்’ (RED CORRIDOR) பகுதியிலுள்ள மாவோயிஸ்டுகளை மத்திய அரசு என்ன சிவப்பு கம்பளம் விரித்து அழைத்தா பேச்சுவார்த்தை நடத்துகிறது. மத்திய அரசின் கூட்டணி சகாவான, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கருணாநிதி நக்ஸல்கள் மேல் இருக்கும் தன் இரக்கத்தை பகிர்ந்துகொள்ள வேண்டியதுதானே?
இப்படியான இவரது எதிர்க்கட்சி அரசியல் தமிழக மக்களின் முன்னேற்றத்துக்கு எப்படி சாதகமாக இருக்க முடியும்? 


                                                                              நன்றி : மீடியா வாய்ஸ் 05.01.2013
                                                                        www.tamil.mediavoicemag.com/magazine.html  


No comments:

Post a Comment