Jun 2, 2011

குற்றச்சாட்டே சாட்சியானது



ஜீன் 30ந் தேதி. 2001. அப்போது தமிழகத்து முதலமைச்சர் ஜெயலலிதா. அன்று தான் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டார். அந்த கைது சம்பவத்தை ஒரு அனுதாப அலையாக மாற்றிக் காட்டியது சன் டிவி.

தமிழகமே கொந்தளித்துவிட்ட நிலைதான். அப்போது நான் ஜெயா டிவியில் இருந்தேன். நானும் `தராசு' ஆசிரியர் ஷ்யாம் அவர்களும் இந்த கைது சம்பவத்தைப் பற்றி பேசினோம்.

நான் பேசியது இதுதான். ` சன் டிவி தன் ஜால வித்தைகளைக் காட்டி,அதன் உரிமையாளர் கலாநிதி மாறன் தாத்தாவிற்கு தன் நன்றிக் கடனை செலுத்தியிருக்கிறார். சன் டிவி என்ன திருக்குவளையில் நிலத்தை விற்று கொண்டு வந்த பணத்தில் துவங்கப்பட்டதா என்ன ? திமுக தலைவர் கட்சிக்கு நிதி வேண்டுமென்று முரசொலியில் கடிதம் எழதுவார். உடனே விசுவாச கழக உடன்பிறப்புக்கள் துண்டேந்தி எட்டணாவும் ஒரு ரூபாயுமாக பல லட்சங்களை திரட்டி கட்சிக்கு நிதி சேர்ப்பார்கள். அப்படி சேர்ந்த நிதியிலிருந்து கட்டப்பட்டதுதான் அண்ணா அறிவாலயம். பேரன் மாறன் சன் டிவி துவங்க பணம் தேவைப்பட்டது. அப்போது கட்சி நிதியிலிருந்த 8 கோடியை பணயமாக வங்கியில் கொடுத்து கடன் வாங்கி துவங்கப்பட்டதுதான் சன் டிவி. தாத்தா அறிவாலயத்தின் மாடியையே பேரனுக்கு `வாடகை'க்கு கொடுத்தார். அது என்ன வாடகை என்பது தாத்தாவுக்கும், முரசொலி மாறனுக்கும், பேரனுக்கு தான் தெரியும்.

அப்படி உருவாக்கப்பட்ட சன் டிவி துவங்கியவுடன் அதன் அதிபர் கலாநிதி மாறன் போட்ட முதல் உத்தரவே கீழே உள்ள கட்சி கரை வேட்டிகள் மாடிக்குள் நுழையக் கூடாது என்பதுதான். எந்த பேரன்களுக்காக கலைஞர் இதையெல்லாம் செய்தாரோ அதே பேரன்களால்தான் அவரது குடும்பத்திற்கே ஒரு நாள் ஆபத்தாக முடியப்போகிறது.'

இந்த பேட்டி ஜெயா டிவியில் ஜீன் 30 துவங்கி அடுத்த பல நாட்கள் ஒளிபரப்பினார்கள்.
அந்தப் பேரன்களால் வந்த ஆபத்துதான் 2007ல் நடந்த மதுரை தினகரன் எரிப்பு சம்பவம். அதற்கு பிறகு குடும்பம் பிரிந்ததும், பிறகு சேர்ந்ததும், அதற்காக கலைஞர் கண்கள் பனித்து, நெஞ்சம் இனித்த கதையெல்லாம் நாடே அறியும்.

கட்சிக்காரன் பணத்தில் தொலைக்காட்சியை துவங்கிவிட்டு அந்தக் கட்சிக்காரனையே உள்ளே அனுமதிக்கவில்லை என்பதை நான் அன்று ஒரு குற்றச்சாட்டாக சொன்னேன். அதுவே இன்று அவர்களுக்கு ஒரு சாட்சியாகிவிட்டது. 31ந்தேதி டைம்ஸ் நெள் தொலைக்காட்சியில் அலைக்கற்றை ஊழலில் தயாநிதி மாறனின் அத்துமீறலைப் பற்றி ஒரு விவாதம் நடத்தினார்கள்.

அதில் மாறன் சகோதரர்களின் ஊதுகுழலாக பேசினார் மூத்த பத்திரிகையாளர் ஆர். ரங்கராஜ்.`சன் டிவிக்கும் திமுகவிற்கும் எந்த தொடர்புமில்லை. கட்சிக்காரர்கள் மாடியிலுள்ள தங்கள் அலுவலகத்திற்கே வரக்கூடாது என்று உத்தரவு போட்டவர் கலாநிதி மாறன்' என்றார்.

கட்சி வேண்டும். அதில் தன் சகோதரர் தயாநிதி மாறனுக்கு மந்திரி பதவி வேண்டும். அதுவும் தங்கள் தொழிலுக்கு சாதமாக இருக்கும் பதவி வேண்டும். அதன் மூலம் ஒரு தொலைபேசி இணைப்பகத்தையே தங்கள் தொழிலுக்காக மட்டுமே உருவாக்கிக் கொள்ளவும் வேண்டும். ஆனால் ஊழல் என்று வந்தால் சன் டிவி நடுநிலையான தொலைக்காட்சி, அதற்கு திமுகவிற்கு எந்த தொடர்புமில்லை என்று சொல்வதுதான் அவர்களுடைய கார்பரேட் தர்மம்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் உடன்பிறப்புக்கள் அடுத்த ஐந்து வருடத்திற்காக காத்துக்கொண்டு, `சூரிய சின்னத்தை பாத்து போடுங்கம்மா ஒட்டு' என்று கோஷ்ம் போட்டு திரிய வேண்டியதுதான். நீ உழைப்பது உன் கட்சிக்காக அல்ல. கட்சித்தலைவரின் குடும்ப தொழிலுக்கு நீ கூலி பெறாத ஒரு தொழிலாளி என்பது எப்போது அவர்களுக்கு புரியும். தலைவர் குடும்பத்து உயர்மட்டக்குழ் திஹார் சிறையில் கூடும்போது உடன்பிறப்புகளுக்கு புரியவருமோ?

4 comments:

  1. உங்கள் கோபம் வெகு நியாயமானதே சுதாங்கன்.
    துல்லியமாகக் கணித்து அப்போதே சொல்லியுள்ளீர்கள்.
    நமது தமிழ் மக்களுக்கு பல விஷயங்கள் சற்றே தாமதமாகத்தான் உரைக்கும்.
    அதுவே வரலாறு.
    உங்கள் அபிப்ராயங்களை தொடர்ந்து எழுதுங்கள்.
    பகிர்ந்துகொள்ளுங்கள்.
    அருமையான உமது எழுத்து ஊற்று சுனை, மீண்டும் சுரக்கட்டும், நல்ல விஷயங்களை வளர்த்து வளமாக்க.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்,
    ஸ்ரீனிவாசன்.

    ReplyDelete
  2. There is plenty more. Kalanidhi sweet talked Kalaignar to take what he gave as the share for the seed money the old man gave at the start of Sun TV. Subsequently he went for the IPO and amassed crores [once with out spl'routes']

    How they arm twisted TATA to give them a TATA Sky is by now open to every one to judge.

    ReplyDelete
  3. அருமையான பதிவு. திமுக தொண்டர்களுக்கு இப்போதாவது புரிந்தால் சர்.

    ReplyDelete
  4. திமுக தொண்டர்கள் என்று யாராவது இன்னும் இருக்கிறார்களா என்ன? குடும்ப லாபக் கட்சியை இன்னும் யார் நம்புவார்கள்? ஒருவேளை கொள்ளை அடித்தபோது கூட இருந்து கொஞ்சம் சாப்பிட்ட அரசு ஊழியர்/அதிகாரி என்று யாராவது இருந்தால்தான் உண்டு!!

    ReplyDelete