`நீர்ப் பாத்திரத்தில் தெரியும் நிலவின் பிம்பத்தை வைத்துக்கொண்டு அதுதான் உண்மையான நிலா' என்று நம்பி ஏமாந்தான் என்று பாரதத்தில் துரியோதனனை சொல்வார்கள். இப்போது அந்த நிலையில்தான் இருக்கிறார்கள் திமுக தொண்டர்கள், அபிமானிகள்.
6.3.2011 ஞாயிற்றுக்கிழமை, பகல் 1.15. நான் இந்த பதிவை செய்யும் நேரம். அதாவது காங்கிரஸுடன் கூட்டணி முறிந்தது என்று திமுக அறிவித்த அடுத்த நாள்.
இன்று காலையிலிருந்தே ஊடகங்கள், ஆர்வலர்கள் எல்லோருமே இன்று மாலை குலாம்நபி ஆசாத்,பிரணாப் முகர்ஜி, அகமது படேல் - அதாவது சோனியாவிற்கு நெருக்கமான மூவரணி சென்னை வருகிறார்கள். கோபாலபுரத்திற்குச் சென்று கலைஞர் காலடியில் மண்டியிட்டு அவர் கொடுக்கிற இடங்களை காங்கிரஸ் பெற்றுக் கொள்ளும் என்று உறுதியாக ஆருடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் உள்ளே நடந்தது, நடக்கப்போவது எல்லாமே திகில் நிறைந்தது. திமுக வேண்டாம் என்று காங்கிரஸ் முடிவெடுத்து சில காலங்கள் ஆகிறது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்து முக்கிய உளவுத்துறை அதிகாரிகள்.
ப.சிதம்பரம் எளிதில் வாய்திறக்க மாட்டார். ராஜதந்திரி. சென்ற வாரம் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் ` ஒரு இலை உதிர்ந்தால் இரண்டு இலைகள் துளிர்க்கும்' என்று பேசியது பொருள் பொதிந்தது. வருமுன் உரைத்த சங்கேத வார்த்தைகள் என்கிறார்கள்.
63 இடங்களும், இந்த தொகுதிகள்தான் என்று காங்கிரஸ் நிபந்தனை விதித்தது என்பது திமுக தலைவரின் கற்பனை என்பதுதான் உயர்மட்ட காங் தரும் ரகசியச் செய்திகள்.
60 இடங்களை காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. அதே சமயம் எந்த 60 தொகுதிகள் என்பதை சொன்னால், அது குறித்தும் விவாதிக்கலாம் எனறுதான் சொல்லப்பட்டதாம்.அரசியல் பேச்சுவார்த்தை இப்படி போய்க் கொண்டிருக்கும் போது, திமுக வேண்டாம் என்று காங்கிரஸ் முடிவு எடுத்ததற்கு வலுவான காரணம் உண்டு.அது உச்ச நீதீமன்றத்தின் துப்பாக்கி.
வரும் 15ந் தேதிக்குள் 2ஜி அலைக் கற்றை விவகாரத்தில் அதி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது சிபிஐ. காரணம் உச்ச நீதி மனற உத்தரவு. அந்த நடவடிக்கை கலைஞரின் சிஐடி காலனியில் துவங்கி,கோபாலபுரம் வழியாக, மும்பை தொழிலதிபர் ரத்தன் டாட்டாவைத் தொட்டு, டெல்லி வரை பயணிக்கும். பல கைதுகள் நடக்க வாய்ப்புகள் உண்டு.
திமுக தரும் இடங்களை பெற்றுக்கொண்டு, களத்தில் இறங்கி மனுத்தாக்கல் செய்து கொண்டிருக்கும் நேரத்தில் திமுகவில் சில திடுக்கிடும் கைதுகள் நடந்தால் விளைவுகள் என்னவாகும்?
உணர்ச்சி வேகம் கொண்ட திமுக தொண்டனுக்கு, உச்சநீதிமன்ற உத்தரவிலதான் இந்த கைதுகள் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியாது. அதைத் தொடர்ந்து தீக்குளிப்புகள், போராட்டங்கள் வெடிக்கும். அது அத்தனையும் காங்கிரஸுக்கு எதிரான குரோதமாக மாறும். அந்த திமுக தொண்டன் காங் நிற்கும் தொகுதிகளில் எப்படி வேலை செய்வான்.?
காங்கிரஸிலோ களப் பணி ஆற்ற வேண்டிய தொண்டர்களைவிட, தலைவர்கள் தான் அதிகம். அதிலும் கோஷ்டிகளுக்கு கேட்கவே வேண்டாம். இந்த நிலையில் திமுகவுடன் களத்தில் இறங்குவது காங்கிரஸுக்கு பெரும தர்மசங்கடமாக இருக்கும்.
சிபிஐயின் கிடுக்குப்பிடி தேசிய அளவில் காங்கிரஸை கழவில் ஏற்றும். அதற்கு காரணம் அவர்களது தோழமைக் கட்சியான திமுக. இந்த களங்கத்தோடு அவர்கள் மேற்கு வங்கம், கேரளா, ஆசாம் மாநில தேர்தல்களையும் காங்கிரஸ் சந்திக்க வேண்டியுள்ளது.
இந்த மூன்று மாநிலங்களிலும் தங்களுக்கு அதிக வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் உறுதியாக்க் நம்புகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் அவமானங்களை ஆசையோடு வாங்கி அணிந்து கொள்வதை விட, கெளரவத்தை காப்பாற்றிக்கொள்ள நினைக்கிறது.
திகார் ` திகில்' திமுகவைத் தொட்டுவிட்டது. அதற்கு உதவ முடியாத நிலையில் காங்கிரஸ். புருஷன் வீட்டிலிருந்து மனைவி பிறந்த வீடு போயிருப்பதாக சிலர் சொல்கிறார்கள். `அவள் வரமாட்டாள் விவாகரத்து உறுதியாகிவிட்டது ' என்கிறார்கள் ஜன்பத்திற்கு நெருக்கமானவர்கள்.
No comments:
Post a Comment