மதிப்புக்குரிய சோனியாஜிக்கு ,
வணக்கம். சோனியா - ஜி. ஜி உங்களுக்கு இப்போது அலர்ஜிதான். நான சொல்வது மரியாதை கலந்த ஜி.
உங்களுக்கு இன்று ஆயிரம் பிரச்னைகள். தமிழகத்தின் ஒரு மூலையிலிருக்கும் இந்த `சாமான்ய' னின் குரல் உங்களை எட்டுமா ? நம்பிக்கை தானே வாழ்க்கை.
எங்கள் தமிழகத்தின் `சாமான்ய சீமான்'களால்தான் காங்கிரஸிற்கு எத்தனை அவமானம் என்கிற குற்ற உணர்ச்சி என் போன்ற் தமிழர்களுக்கு உண்டு.அதனாலேயே இந்த கடிதம்.
தமிழக நிலை முழமையாக உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. தெரியாததின் விபரீதத்தை இப்போது உணர்ந்திருப்பீர்கள்.
தமிழக அரசியலைப் பற்றி பதவி ஆசை இல்லாத, உங்கள் கட்சி வளர்ச்சி மீது அக்கறை கொண்ட, ஏதாவதொரு தமிழ்நாட்டு காங்கிரஸ்காரரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். (அப்படி ஒரு காங்கிரஸ்காரர் தமிழகத்தில் கிடைப்பாரா என்பது சந்தேகம்தான்.)
நேற்றைய நிலை தெரிந்தால்தான்,உங்களுக்கு இன்றைய ஆபத்து புரியும். 1967ல் உங்கள் கட்சி தமிழகத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. புதைத்தவர்கள் திமுகவினர். மேன்மை பொருந்திய உங்கள் கணவரின் தாத்தா பண்டித நேரு,உங்கள் மாமியார் இந்திரா காந்தி, உங்கள் கணவர் ராஜீவ் காந்தி, கர்ம வீரர் காமராஜர் உட்பட யாருமே திமுகவினரின் விரசமான விமர்சனத்திலிருந்து தப்பியதில்லை.
எமர்ஜென்ஸி முடிந்து உங்கள் மாமியார் தமிழகம் வந்தபோது அவர் மீது மதுரையிலும், சென்னையிலும் தாக்குதல் நடந்தது. அப்போது உங்கள் மாமியார் நெற்றியில் வழிந்த ரத்தத்திற்கு திமுகவினர் என்ன விளக்கம் கொடுத்தார்கள் என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களோடு கூட்டணி முறிந்தால் உங்களையும் கடுமையாக, விரசமாக விமர்சிக்க திமுகவில் பேச்சாளர்கள் `ஸ்டாக்' நிறையவே உண்டு.
மேடை விமர்சனங்களை விடுங்கள். கலைஞரின் சட்டமன்ற உரைகளின் தொகுப்பு வந்திருக்கிறது. அதை வாங்கி மொழிபெயர்த்து உங்களுக்கு கொடுக்கச் சொல்லுங்கள்.
`நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக' என்று உங்கள் மாமியாரோடு கூட்டணி கைகுலுக்குகிறவரையில் இங்கே காங்கிரஸ் தலைவர்கள் சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எத்தனை விமர்சனங்களுக்கு ஆளானார்கள். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி மீது என்ன குற்றங்கள் சுமத்தினார்களோ, அதே குற்றங்களை விரிவுபடுத்தி, விஞ்ஞான பூர்வமாக்கி `சாமான்ய'ர்கள் செல்வ சீமான்களான கதையையும் தெரிந்து கொள்ளுங்கள்.
காங்கிரஸில் இரண்டு வகை உண்டு.
தியாகிகள் காங்கிரஸ்.
வியாபாரிகள் காங்கிரஸ்.
இந்த இரண்டாவது வகையை சமாளிக்க வேண்டிய உங்கள் நிலை கண்டு நான் பரிதாபப்படுகிறேன்.
பழைய கதையை விடுங்கள். நீங்கள் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பேற்ற பிறகு தமிழக காங்கிரஸின் கதை என்ன ? உங்கள் கட்சியின் குறிப்பிட்ட சிலர் தொடர்ந்து பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பதவியை பிடிக்க திமுக-அஇஅதிமுக இரண்டு கட்சிகளுக்கும் பல்லக்கு தூக்குகிற யோசனையைத்தான் உங்களுக்கு சொல்வார்கள். அவர்கள் பதவியில் நீடிக்க !
2000ம் வருடத்தில் காங்கிரஸ் அவிழ்த்துவிடப்பட்ட மூட்டை நெல்லிக்காய்களாக சிதறிக்கிடந்தது. பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐந்து ஆண்டுகள் சுகமாக பதவி அனுபவித்தது திமுக.
பிறகு நீங்கள் சிதறிக்கிடந்த காங்கிரஸை சீராக்கி உச்சியில் கொண்டு வந்தீர்கள். உடனே தேசிய ஜனநாயக கூட்டணியை உதறிவிட்டு உங்களோடு ஒட்டிக்கொண்டது திமுக. 2006 சட்டமன்ற தேர்தலில் உங்கள் கூட்டணியோடு 96 இடங்களையே பெற்ற திமுக, உங்கள் 34 பேரின பலத்தோடு தொடர்ந்து ஐந்தாண்டுகள் ஒட்டிவிட்டது.
எல்லாத் தொழில்களையும், சினிமா உட்பட, `தேசியமயம்' மாதிரி கருணாநிதி குடும்ப மயமாக்கிவிட்டார்கள். நன்றி : தமிழக ஆட்சியில் பங்கு கேட்காத காங்கிரஸின் பெருந்தன்மை:
அதே சமயம் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு மத்தியில் உங்களை ஆட்டிப்படைத்தது திமுக. உங்களை மிரட்டியே வேண்டிய பதவியை `கூட்டணி தர்ம'த்தால் பெற்றார்கள். `ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதையாக அவர்களால் நாடாளுமன்றத்தில் நீங்கள் நிலைகுலைந்து போனீர்கள். குளிர்காலக் கூட்டத் தொடரே முடங்கியது. யாரால் உங்கள் கட்சிக்கு இத்தனை அசிங்கம்.?
அங்கே உங்களை அசிங்கப படுத்தியவர்களோடு தமிழக தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை துவக்கிவிட்டீர்கள். உங்கள் `பஞ்ச பாண்டவர்'கள் அதுதான் நீங்கள் நியமித்த ஐவர் குழவை, கேலி பேசி, கிண்டல் செய்து அனுப்பி விட்டது திமுகவின் கெளரவர் சேனை. இதுதான் `நவீன மகாபாரதக் கதையா ?
ஒருத்தி சிரித்தாள் அது மகாபாரதம்.
ஒருத்தி அழதாள் அதுதான் ராமாயணம் என்பார்கள்.
அப்போது பாண்டவர்களின் திரெள்பதி சிரித்தாள். இப்போதோ உங்கள் பாண்டவர்கள் முன்னால் `நவீன கெளரவ திரெளபதி' சிரித்து சிதம்பரம் தலைமையிலான ஐவர் குழவை அசிங்கப்படுத்தி அனுப்பிவிட்டார்கள்.
அசிங்கப்படுத்தியது திமுகவல்ல, அசிங்கப்பட்டது நீங்கள். உங்களை பெரிய கட்சியாகவோ, மத்தியில் ஆளுகிற கட்சியாகவோ திமுக பார்க்கவில்லை. பா.ம.கவிற்கு கொடுக்கப்பட்ட மரியாதை கூட உங்களுக்கு இல்லை. அதிக இடங்கள் கேட்கும் உங்கள் உரிமைக்கு, சீல் வைத்துவிட்டுத்தான் உங்களோடு பேசவே வந்தார்கள்.
அதிமுகவின் கதவுகளும் மூடப்பட்டுவிட்டது. முதலிலேயே சுயகெளரவம் பார்க்காமல் உங்களுடைய இயற்கையான கூட்டணி கட்சியான அதிமுக பக்கம் போயிருந்தால் கேட்கிற இடம் கிடைத்திருக்கும்.
தமிழகத்தை இப்போது இந்தியாவே கவனித்துக்கொண்டிருக்கிறது. காரணம் 2 ஜி கதாநாயகர்கள் இங்கே தான் இருக்கிறார்கள். இன்றைய நிலையில் ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால் `laughing stock'ஆக நிற்கிறது காங்கிரஸ்.
நான் காங்கிரஸின் பரம வைரி. ஆனால் சமீபத்தில் ஒ.வி. அளகேசன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் உங்கள் கட்சியினரால காஞ்சீபுரத்தில் நடத்தப்பட்டது. அப்போது பேசிய உள்துறை அமைச்சரின் பேச்சில் நானே கொஞ்சம் கிரங்கித்தான் போனேன். ஒரு வினாடி உங்கள் கட்சியின் புதிய 11 லட்சம் உறுப்பினர்களோடு, 11 லட்சத்தி ஒன்றாக ஆகிவிடலாமா என்று கூட சலனப்பட்டேன். தேர்தல் நேரத்து இந்த உணர்ச்சி ஏன் முன்கூட்டியே உங்கள் உள்துறைக்கு வரவில்லை. கூட்டத்தை விரட்டியடிக்காமல், மக்களை கட்டிப்போட்டு பேசுகிற திறன் கொண்ட ஒரு சில ஒரு சில காங்கிரஸ்காரர்களில், ப.சி.யும் ஒருவர். இத்தனை நாள் என்ன செய்து கொண்டிருந்தார்?
ஒன்று தன்மானத்தோடு நீங்கள் தனியாக நிற்க வேண்டும்? அல்லது திமுக தூக்கி உங்கள் பாத்திரத்தில் போடுகிற பிச்சையை எடுத்து கொண்டு 2 ஜி அலைக்கற்றை பாவ கரையோடு மக்கள் முன் நிறக வேண்டும்.வாக்குகளுக்கு `கற்றை'களை வாக்காளர்களுக்கு அள்ளி வீச வேண்டுமானால் திமுகவிற்கு நீங்கள் தேவை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
உங்களின் `முடமான வாத்து' (lame duck) பிரதமர் ஒரு பொருளாதார மேதை. இந்திய பொருளாதாரம் தழைக்க ஸ்திரமான ஆட்சி வேண்டும். ஸ்திரமான் ஆட்சிக்கு நம்பத்தகுந்த கட்சிகள் கூட்டணியில் வேண்டுமா இல்லையா என்பதை அவ்ரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
லண்டனிலிருந்து வரும் ஒரு பொருளாதார பத்திரிகை ` இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் (GDP) 20 சதவீதம் 50 பில்லியனர்கள் வசமுள்ளது. பங்கு சந்தையின் மூதலீட்டின் 60 சதவீதம் 50 பில்லியனர்களிடம் உள்ளது. இது இந்திய பொருளாதாரத்திற்கும், சமூகத்திற்கும் நல்லதல்ல. இந்தியாவில் அரசியல்வாதிகளும், புதிய தொழிலதிபர்களும் மேலும் மேலும் பணக்காரர்களாகிறார்கள். ஏழைகள், பரம ஏழைகளாகிறார்கள். இந்த நிலை நீடித்தால் இந்த பஞ்ச பராரி மக்கள் வீதிக்கு வந்து போராடும் நாள் வெகுதூரத்திலில்லை' என்கிறது.
சரிந்து கிடக்கும் காங்கிரஸின் செல்வாக்கை கொஞமாவது தூக்கிப் பிடிக்க, நீ வரப்போகும் கூட்டணி பேரத்தில் ந்நிங்கள் எடுக்கப்போகும் முடிவுதான் உதவும்.
நன்றி
இப்படிக்கு
தமிழக வாக்காளன்.