Jan 2, 2009

வந்துவிட்டது வானவியல் வருடம்


இந்த வருடத்தை சர்வேதேச வானவியல் வருடமாக (international year of astronomy) ஐ.நா.சபை அறிவித்திருக்கிறது.கி.பி.121-141ம் வருடத்தில் மாவீரன் அலெக்ஸாந்தரின் நம்பிக்கைக்குரிய விஞ்ஞானி டாலமி (ptolemy)தான் முதலில் கிரகங்கள் நகர்வதைப் பற்றி குறிப்பு எழதினார். அதற்கு பிறகு வான்வெளி ஆராய்ச்சியில் பல முன்னேற்றங்கள். நானூறு வருடங்களுக்கு முன்பு கலிலியோ தொலைநோக்கு கருவியை(telescope) கண்டுபிடித்தார். அதற்கு பிறகு அந்தத்துறையில் பல்வேறு விதமான முன்னேற்றங்கள் நிகழ்ந்து சமீபத்திய சந்திராயன் வரையில் வந்திருக்கிறது.

இந்தத் துறைக்கு பண்டைய இந்தியாவின் கொடை ஏராளமானது. இதன் குறிப்புகளை ரிக் வேதத்திலேயே காணமுடியும். முதலில் கிரகங்கள் நகருவதை கண்டுபிடித்து அதை வைத்தே அதை ஜோசியத்தின் அடிப்படையாக மாற்றினார்கள். வானவியலை காகிதக் கட்டங்களுக்குள் திணித்து அதை ஜாதகமாக மாற்றினாலும் கூட பண்டை இந்தியாவின் வான்வெளி பங்களிப்பு என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. கி.பி 500 வருடத்திலேயே பூமியின் சுழற்சியைப் பற்றிய கணக்கை ஆர்யபட்டா எழதிவைத்தார்.பூமி சுழற்சியின் எண்ணிக்கையை முதலில் கணக்கிட்டவரும் அவர்தான். அதை பின்னால் விஞ்ஞானமும் அதை ஏற்றுக்கொண்டது. 598.668 வரை உஜ்ஜயனியில் வான்வெளி ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கியவர் பிரம்ம குப்தா. இவர் வான்வெளியைப் பற்றி எழதிய புத்தகம்தான் பிரும்மாஸ்புதசித்தாந்தம். இதை அவர் எழதிய வருடம் 628.

1114-1185 வரை உஜ்ஜயினின் இந்த ஆராய்ச்சி மையத்திற்கு தலைமை தாங்கியவர் பாஸ்கரா. இவர் பிரும்மபுத்தரரின் சீடர். கணிதத்திற்கும் பூஜ்யத்தை அளித்தவர் இவர்தான். இவர் எழதிய சித்தாந்தசிரோமணி இரண்டு பாகங்களைக் கொண்டது. கோளாதயாயா, கிரககணிதம் என்பது அது.1975,ஏப்ரல் 19ந் தேதி இந்திய தனது முதல் செயற்கை கோளை விண்ணில் செலுத்தியது அதற்கு அவர்கள் வைத்த பெயர் ஆர்யபட்டா.

இந்த ஆண்டு விண்வெளியின் நிறைய ஆராய்ச்சிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் யாரையும் `மல்லாக்க பாத்துக்கிட்டு கிடக்காதே’ என்று சொல்லாதீர்கள். ஒரு வேளை அவர் வான்வெளி விஞ்ஞானியாக கூட இருக்கலாம்.

(மேலே படத்தில் இருப்பவர் ஆர்யபட்டா)

No comments:

Post a Comment