Jan 27, 2009

என் `யுக’ புருஷன் -1


எனக்குத் தெரிந்த வரையில் `பத்ம பூஷண்’ பதவி தன் பாவங்களையெல்லாம் கழவி தனக்கே ஒரு `ஞானஸ்நானம்’ செய்து கொண்டிருக்கிறது. என் `யுக’ புருஷன் ஜெயகாந்தனுக்கு அந்த பட்டத்தை அளித்ததன் மூலமாக.

இந்த `ஞான்ஸ்நான’த்தில் மத்திய அரசுக்கு ஆதரவு அளித்துவரும் திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு ஏதாவது பங்கு உண்டென்றால், அவர்களும் தங்கள் கறைகளை கொஞ்சம் போக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

விருது வழங்குவதில் இவர்களுக்கு என்ன பங்கு என்று யாராவது அப்பாவித்தனமாக கேள்வி எழப்பலாம்.கடந்த பத்தாண்டுகளில் விருதுகள் எப்படியாவது வாங்கப்படுகிறது. அதனால் அது தகுதியில்லாத பலருக்கு கிடைத்தது என்பதற்கு ஒரு பட்டியலே போடலாம்.

விருதுகள் என்பது பணக்காரர்களுக்கு, அந்த பணத்தின் மூலமாக ஊடகங்களை வளைத்து அதில் தன்னைப் பிரபலப்படுத்திக்கொண்டவர்களுக்கு,அந்த ஊடகங்களில் வருவதினாலேயே அவர்களுக்கு எல்லா தகுதியும் வந்துவிட்டதாக அவர்களும், விருதை தீர்மானிப்பர்களும் நினைப்பவர்களுக்கு, அது தவிர அந்த மாநிலங்களில் மத்திய அரசுக்கு இணக்கமாக இருக்கும் அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு, அது தவிர மத்திய அரசின் மையப்பொறுப்பிலிருக்கும் முக்கியமானவர்களுக்கு வேண்டியவர்கள் என்று விருதைத் தீர்மானிக்க இப்படி பலவித காரணிகள் உண்டு.

இம்முறை ஜெயகாந்தனுக்கு கிடைத்தது கூட இது போன்ற ஏதாவதொரு காரணம் நிச்சயம் இருக்கும். இல்லையென்றால் இது நிச்சயம் நிறைவேறியிருக்காது. ஆனாலும் இம்முறை அந்த காரணிகளைக்கூட மன்னித்துவிடலாம் காரணம் அது கிடைத்தது, ஒரு தலைமுறையை தலைமுறையைத் தாண்டி சிந்திக்க வைத்த ஒரு ஞானஸ்தனுக்கு கிடைத்திருக்கிறது.

நான் சொல்வதை பலர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.என் கருத்துக்கள் எனக்கு சொந்தமானவை.அதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பது அவசியமற்றது.

இதில் திமுகவிற்கு பங்கு உண்டென்றால், அதில் அவர்களது கறைகளும் கொஞ்சம் கழவப்பட்டிருக்கும் என்று மேலே சொல்லியிருந்தேன். அதற்கு காரணம் உண்டு. துதிபாடிகளுக்குத்தான் தேர்தல் விளையாட்டில் இருக்கும் இரண்டு திராவிடக் கட்சிகளின் தலைவர்களுக்கும் பிடிக்கும். ஆனால் திமுக தோன்றிய காலத்திலிருந்தே அது இந்த நாட்டை அழிக்க வந்த நச்சுக்கிருமி என்று தொடர்ந்து தமிழக மக்களை எச்சரித்து வந்தவர் ஜெயகாந்தன்.

1972ம் வருடம் அவர் `துக்ளக்’ பத்திரிகையில் `ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ என்று ஒரு தொடர் எழதினார். அதிலிருந்து சில முக்கிய பகுதிகளை நிச்சயம் இங்கே பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

அதன் துவக்கத்தில் எழதுகிறார் ` ஒரு அரசியல் கட்சிக்குச் சார்பாக கொடி தூக்கி பிரசாரம் செய்வது எனக்குப் பழக்கப்பட்ட காரியம்தான். ஆனால் இப்போது நான் அந்த நிலையில் இல்லை’ (பக்கம் 17)

`திமுக கழகம் பிறந்த போது அதன் முக்கிய தலைவராக விளங்கிய திரு அண்ணாதுரை சொன்னார் `திராவிடர் கழகமும், தி.மு. கழகமும் இரட்டைக்குழல் துப்பாக்கி போன்றது’ என்றார்.

அதாவது இந்த இரண்டுக் கட்சிகளுக்கும் கொள்கை, லட்சியம், குறிக்கோள் எல்லாமே ஒன்றுதான். திராவிட இயக்கத்தலைவர் ஈ.வெ.ரா பெரியாரிடம் கொண்ட மனத்தாங்கல் காரணமாகவும், சமூக சீர்திருத்த கொள்கையை பிரசாரம் செய்த திரு ஈ.வெ.ராவே எழபது வயதுக்கு மேல் ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டதை கண்டிப்பதற்காகவும் வெளியே வந்திருக்கிற நாங்கள், அந்த இயக்கத்தின் கொள்கைகளுக்காக மேலும் தீவிரமாக போராடுவோம் என்றே திமுகழகத்தினர் தங்களை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து கொண்டார்கள்.

இந்த அறிவிப்பைக் கேட்டு நாங்கள் சிரித்தோம். இவர்களை அக்காலத்தில் யாரும் அரசியல்வாதிகளாக மதிக்கவில்லை. திமுகழகத்தினரும் தங்களை அரசியல்வாதிகள் என்று அந்தக் கால கட்டத்தில் சொல்லிக்கொள்ளவுமில்லை. இவர்கள் தங்களை அறிஞர்கள் என்றும், கலைஞர்கள் என்றும், சிந்தனைவாதிகள் என்றும் பாமரர்கள் மத்தியில் கூறிக்கொண்ட போது கற்றவர்களும், பண்டிதர்களும், அரசியல் அறிஞர்களும், கல்வியாளர்களும், இவர்களை மிகவும் அலட்சியமாகவும், ஏளனமாகவும், சிரித்தும், அருவருத்தும் பேசினார்கள். இவர்கள் மிகவும் சிறுபிள்ளைத்தனமானவர்கள் என்று எல்லா மக்களும் எல்லாக் கட்சிக்காரர்களும் மிகவும் அலட்சியமாகப் பார்த்தார்கள். அதுவே இவர்களுக்கு வசதியாகப் போயிற்று.

ஒரு தொழிலாளி இளைஞனுக்குரிய அரசியல் பண்பாடு கூட, அறிவியல் ஞானம் கூட, திமுகவின் தலைவரான அண்ணாதுரைக்கே கிடையாது என்பதை நாங்கள் அந்தக் காலத்தில் ஆதாரங்களோடு விவாதித்துச் சொல்லுவோம் (பக்கம்64,65,66)

திமுக அரசியலை ஒரு `ஸைடு பிசினஸாக’ வே வைத்திருந்தது. அதன் முக்கியத் தலைவர்கள், சினிமாக் கதைகளிலும், சிட்டு விளையாடிலும், சில்லறை ரஸானுபவங்களிலும் திளைத்துக்கொண்டிருந்தார்கள் என்பதை அவர்களது அந்தக் காலப் பேச்சும், எழத்தும் மக்களுக்கு எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தன.

`ஏக இந்தியாவில் எந்த ஆட்சி வந்தால் எங்களுக்கென்ன?> எங்கள் உயிர் மூச்சே திராவிட நாடு ஒன்றுதான். நாங்கள் கேவலம் அரசியல்வாதிகள் அல்ல. நாங்கள் ஒரு புதிய சமுதாயத்தைப் படைக்க புறப்பட்டவர்கள், சட்டசபைக்கு போகிறவர்கள் வெட்டுக்கிளிகள்: பதவிமோகம் என்கிற நோய் பிடித்தவர்கள்’ என்று அவர்கள் அப்போது கச்சேரி பாணியில் முழங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எதிலும் உண்மையான நாட்டம் கொள்ளவில்லை. சொந்த வாழ்க்கையில் உயருவதற்காக, சினிமா, நாடகம், அரசியல், எழத்து, பேச்சு எல்லாவற்றையும் பயன்படுத்தி இதில் எதுவுமே இல்லாத entertainers ஆக வளர்ந்துக்கொண்டிர்ந்தார்கள்.(பக்கம் 89)

திமுகழகம் என்பது ஒரு அரசியல் இயக்கமல்ல. அது மனித மரியாதைகளுக்கும், சமுதாய வளர்ச்சிக்கும் இந்திய நாகரீகத்திற்கும் நமது கலாச்சாரத்திற்கும் ஏற்பட்டிருக்கின்ற ஒரு பேரழிவின் அறிகுறி (a social cultural menace)என்ற எனது கருத்தை ஏற்றுக்கொள்கிற யாராக இருந்தாலும் நான் அவர்களைத் தேடி ஒடினேன்.(பக்கம் 127)

இப்படி திமுக மீது ஆழ்ந்த கருத்துக்கொண்டிருந்த ஜெயகாந்தனுக்கு திமுக பதம்விபூஷண் வாங்கிக்கொடுக்க முனைந்திருந்தால் அது கறைப்போக்கிக்கொள்ளுக்கிற விஷயமா? அல்லது இப்படி ஒரு கருத்துக்கொண்டிருப்பவருக்குக்கூட நாங்கள் மதிப்பளித்தோம் என்று காட்டிக்கொள்கிற ஒரு அரசியல் தந்திரமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

தான் அன்று திமுக மீது கொண்டிருந்த கருத்து தவறு என்று சொல்லி இன்றுவரை ஜெயகாந்தன் பகிரங்கமாக `பாவ மன்னிப்பு’ கேட்கவில்லை. ஆனால் அவர் இப்போது திமுக தலைவருடன் நெருக்கமாக இருப்பதால், நேரடியாக கேட்டாரா என்பது தெரியாது.

எது எப்படியோ ஒரு தலைமுறையின் சிந்தனைகளை வேறு மாதிரி திருப்பிவிட்டவர் ஜெயகாந்தன். என் போன்ற பலர் அவர் இல்லையேல் சிறிதேனும் ஆழ்ந்து யோசிக்கிற திறன் வந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.வனப்புகளை மட்டுமே காட்டிக்கொண்டிருந்த எழத்தாளர்களுக்கு நடுவே, வறுமையைக் காட்டி, அதிலுள்ள மனித மேன்மைகளை புரிய வைத்தவர் ஜெயகாந்தன்.

இன்று பிறாமணர்கள் இட ஒதுக்கீடு கேட்கிற அளவிற்கு யோசிக்கிறார்கள். ஆனால் பிறாமண எதிர்ப்பு தீவிரமாக இருந்த ஐம்பதுகளிலேயே பிறாமணர்களுக்கு குரல் கொடுத்த முதல் ஷத்திரியன் ஜெயகாந்தன் என்பது எத்தனை பிறாமணர்களுக்கு தெரியும்? அவரைப் போல் பிறாமணர்கள் கூட இன்றுவரை பிறாமணர்களுக்காக குரல் கொடுத்ததில்லை.

அப்படி என்னதான் குரல் கொடுத்தார் ?


(தொடரும்)

1 comment:

  1. //அப்படி என்னதான் குரல் கொடுத்தார் ?//

    என்னதான் சொன்னார் சார்?

    ReplyDelete