Dec 26, 2008

அந்த `அலாதி’யான நட்பு!



குமுதம் ஆசிரியரான மறைந்த எஸ்.ஏ.பியின் புதல்வரும், தற்போது குமுதம் இதழின் கெளரவ ஆசிரியருமான திரு ஜவஹர் பழனியப்பன் சமீபத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். இந்த சந்திப்பு 31.12.2008 இதழ் குமுதத்தில் `கலைஞருடன் ஒரு காஃபி’ என்கிற தலைப்பில் அட்டைப்படக்கட்டுரையாக வெளிவந்தது. இந்த சந்திப்பைப் பற்றி சொல்லும்போது, `கலைஞரை நம்பி தமிழ்நாடு மட்டுமல்ல, தமிழனமே இருக்கிறது’ என்றார். அப்போது முதல்வர்,` எனக்கும் எடிட்டர் எஸ்.ஏ.பிக்கும் உள்ள நட்பு அலாதியானது’ என்றார்.

இந்த `அலாதியான’ நட்பு எப்படி என்று பார்ப்போம். எடிட்டர் எஸ்.ஏ.பி என்கிற தலைப்பில் அவருடன் சுமார் நாற்பதாண்டுகள் ஆசிரியர் இலாக்காவில் பணியாற்றிய ரா.கி.ரங்கராஜன், ஜா.ரா. சுந்தரேசன்(பாக்கியம் ராமசாமி), புனிதன் ஆகியோர் ஒரு புத்தகம் எழதியிருக்கிறார்கள். அதில் ரா.கி.ரங்கராஜன்,(இவர் குமுதம் வார இதழின் முன்னாள் இணையாசிரியர்)``ஒரு சமயம் கலைஞர் கருணாநிதியின் கதையைத் தொடராக குமுதத்தில் பிரசுரித்து வந்தோம்.(இத்தனைக்கும் அவருடைய பத்திரிகையில் ஏற்கெனவே வெளியான கதைதான்). அவருடைய எழத்தை வெளியிடுவதால் திமுக கட்சிக்கும் ஆட்சிக்கும் பத்திரிகை அடிமைப் பட்டுவிட்டது என்று வாசகர்கள் நினைத்துவிடக்கூடாது என்பதாலும், உள்ளபடியே எடிட்டருக்கு அந்த கட்சியின் போக்கு பிடிக்காததாலும், அதை விமரிசித்துத் தலையங்கமும் கார்ட்டூன்களும் வெளியிட்டுக்கொண்டிருந்தார்.

இதனால கோபங்கொண்ட கலைஞர் தன் கதையை இனி வெளியிட வேண்டாம் என்று அறிக்கை விடுத்து எழதுவதை நிறுத்திக்கொண்டுவிட்டார்.

அதன்பிறகு அவரைத் தாக்குவது மிகவும் சுலபமாகிவிட்டது எடிட்டருக்கு. முன்னைக்காட்டிலும் காரசாரமான தலையங்கங்களும் கார்ட்டூன்களும் வெளியிடத் தொடங்கினார்.திமுக ஆட்சியை விட்டு இறங்கியதில் ஒரு பெரும்பங்கு எடிட்டருக்கு உண்டு என்று கூடச் சொல்லலாம்.

அவருடைய கட்சித் தொண்டர்கள், அலுவலகத்தின் முன் நின்று பத்திரிகைகளைக் கொளுத்தினார்கள். பெரிய கல்லை எடுத்து வீசினார்கள். எடிட்டரின் அறை முன்பக்கம் இருந்ததால் ஒரு பெரிய கல், ஜன்னல் கண்ணாடியைப் உடைத்துக்கொண்டு எடிட்டரின் காலின் கீழே வந்து விழந்தது.

`நீங்கள் வேறு பக்கமாய் இருங்கள்’ என்று நாங்கள் சொல்லியும் `பரவாயில்லை’ என்று சொல்லிவிட்டு இடத்தைவிட்டு எழந்திராமலே இருந்தார்.

கட்டடத்தின் கேட்டில் ஒரு பக்கம் ` தேவி பிரஸ்’ என்ற பெரிய பித்தளைப் பலகையும் இன்னொரு பக்கம் `குமுதம்’ என்ற பெரிய பித்தளைப் பலகையும் பொருத்தப்பட்டிருந்தன. ஆர்பாட்டக்காரர்கள் சுவரை இடித்து அந்தப் பலகையைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.
`வேறு போர்டு வைத்துவிடலாம்’ என்று நாங்கள் சொன்னோம்.`` வேண்டாம்.. அப்படியே இருக்கட்டும். நம் பத்திரிகைக்குப் போர்டு வைத்துத்தான் பெயர் வரவேண்டும் என்ற தேவை இல்லை’’ என சொல்லி விட்டார். பெயர்த்த இடத்தை சிமெண்ட் பூசி அடைத்தோம். இதை எழதும்வரையில் `குமுதம்’ என்ற போர்டு வாசலில் இல்லாமலே இருக்கிறது. ‘

எஸ்.ஏ.பி ஆசிரியராக இருக்கும்வரையில் அவருடைய `அரசு’ கேள்வி பதில்கள் மிகவும் பிரபலம். அண்ணாமலை, ரங்கராஜன், சுந்தரேசன் இந்த மூன்று பெயர்களின் சுருக்கம்தான் `அரசு’ என்று பேசிக்கொள்வார்கள். ஆனால் கேள்வி- பதிலை’ எஸ்.ஏ.பி மட்டும்தான் எழதி வந்தார்.அந்த கேள்வி பதில்களின் ஒரு சிறிய அளவு தொகுப்ப்பாக தமிழ் புத்தகாலயம் வெளியிட்டது. இந்த பதிப்பகத்தை நடத்தும் அகிலம் கண்ணன், மறைந்த எழத்தாளர் அகிலனின் புதல்வர். அந்த கேள்வி பதில்களிலிருந்து எடிட்டர் எஸ்.ஏ.பி. கலைஞர் கருணாநிதியின் ` அலாதி’ யான நட்பை புரிந்து கொள்ளலாம்.

வி.ராமகிருஷ்ணன், செங்கோட்டை.

கருணாநிதியை இக்கால சாணக்கியர் என்று கூறுவது பொருத்தமாகுமா ?

பாக்கியையும் சொல்லிவிடுங்கள். நெடுஞ்செழியன் தான் இக்கால கெளதம புத்தர்,மாதவன் தான் மகா அலெக்சாந்தர், சத்தியவாணிமுத்துதான் ஒளவையார்.

ஆர். சங்கர். செங்கோட்டை

வருகின்ற தேர்தலில் மறுபடியும் திமுக வெற்றி பெற்றுவிட்டால் என்ன செய்வீர்கள் ?

ஒற்றைக் காதோடு நடமாட வேண்டியதுதான்.

பி.கே. பாண்டியன்,பழவேற்காடு

`நாங்கள் கருணாநிதியின் வீட்டில் புகுந்தாலும், பின்பு என்ன நிகழ்ந்தாலும் சாட்சி சொல்ல யார் இருக்கிறார்கள் ?’ என்று புரட்சித் தலைவர் கூறியுள்ளாரே?

பொறுப்பற்ற, அசிங்கமான பேச்சு. ஆனால் எதிரிகளை வன்முறையாகத்தாக்கும் விஷயத்தில் ஒன்றை கவனீத்தீர்களா? எம்.ஜி.ஆர் மிரட்டுவார், செய்வதில்லை. கலைஞர், மிரட்டுவதில்லை, செய்துவிடுகிறார்.

செ. வேதமூர்த்தி, அத்தாணி

முரசொலியில் தொடர்ந்து வரும் `குமுதா & கோ’ கார்ட்டூன் பற்றித் தங்கள் கருத்து என்ன ?

புகழிலும்,புத்திக்கூர்மையிலும், நாவன்மையிலும், நிர்வாகத் திறமையிலும், அந்தஸ்திலும், செல்வத்திலும் குமுதம் ஆசிரியரையும், வெளியீட்டாளரையும் விட கலைஞர் பன்மடங்கு உயர்ந்தவர். அவரைக் கள்வராகவும், ஜேப்படிக்காரராகவும் கார்ட்டூன் போடக் குமுதத்துக்குத் துணிவிருந்தால், அவர்களைப் பன்றிகளாகச் சித்திரித்து முரசொலி ஏன் மகிழக்கூடாது என்பது என் சொந்த அபிப்ராயம்.

இ.வியாகுலராஜ், திருச்சி.

நீரும், நானும் `சாமானியர்’களாவது எப்போது ?

கோடிஸ்வரர்கள் ஆகும்போது.

கி. கோதை, சேலம்.

``கேள்வி-பதில் பகுதி ரெடியாயிடுத்தா?’’
``கேள்விங்கள்ளாம் எழதிட்டேன். பதில்கள்தான் பாக்கி’’ - இந்த ஆனந்த விகடன் கிண்டலை பார்த்தீர்களா ?
இலக்கு: கோபாலபுரம், கீழ்ப் பாக்கம் அல்ல

`குமுதம்’ அலுவலகம் இருக்கும் பகுதி கீழ்ப்பாக்கம் என்பது வாசகர்கள் கவனத்திற்கு !