என் தளத்தில் எழதி வெகு நாட்கள் ஆகிவிட்டது. எழதத் தோன்றவில்லையா அல்லது எழத வேண்டிய அவசியமில்லையா? எது காரணம் என்பது எனக்குத் தெரியவில்லை.
கற்றது கையளவு கல்லாதது உலகளவு, ஸாரி 2 ஜி அளவு. இன்னும் 4ஜி,5ஜி அளவு கற்ற பின் கொஞ்சம் விஷயத்தோடு எழதலாம் என்கிற அடக்கமா? அல்லது சோம்பலுக்கு நானே கொடுத்துக்கொள்ளும் புனைப் பெயரா?
எது எப்படியோ, இப்போது இரண்டு நாட்களாக எழத வேண்டுமென்கிற உந்துதல் வந்ததற்கு காரணம் உலகத் தரத்திற்கு தமிழன் உயர்ந்து விட்டானே என்கிற உற்சாக பெருமிதம்தான்.
எனக்கு பக்தி கிடையாது. ஆனாலும் பாசுரங்கள் பிடிக்கும். அதுவும் கோதை நாச்ச்சியாரின் திருப்பாவை எனக்கு ரொம்பவே பிடிக்கும்.
`மாதமெல்லாம் மார்கழியாக இருக்ககூடாதா?!' என்று ஏங்குகிறவன் நான் '
பக்தர்கள் போற்றுகிற பகவான் கண்ணனே கூட `மாதங்களில் நான் மார்கழி' என்கிறான்.
பகவானுக்கும், கலைஞருக்கும் இரண்டு விஷயங்கள் ரொம்பவே பிடிக்கும். இருவருமே புகழ்ச்சிக்கு ஆட்பட்டவர்கள். அதனால் கருணாநிதியை நாத்திகர் என்று சொன்னால் நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன்.
பூமாதேவியிடம் மகாவிஷ்ணு சொல்வார்,`எனக்கு பூமாலை சூடுபவர்களை விட பாமாலை சூடுபவர்களைத்தான் பிடிக்கும்' என்பார். அதே போல்தான் கலைஞருக்கும் தனக்கு புகழ்மாலை சூடுபவர்களை மிகவும் பிடிக்கும்.
ஆண்டவனும், ஆள்பவர்களும் ஒன்று தானே. ஆட்சி போனால் ஆள்பவனும், கடந்த காலமாகி `ஆண்டவன்' ஆகி விடுகிறானே.
அதனால் அந்த மாயக் கண்ணனை பாடுகிற திருப்பாவையிலிருந்தே துவங்குகிறேன்.
திருப்பாவை பாட்டு, திருக்குவளைக்கும் பொருந்துபடியாக க்டவுள் கலைஞருக்கு அருள் பாலித்திருக்கிறார்.
திருப்பாவையின் இரண்டாவது பாட்டு என்ன ?
`ஒங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி .... அந்த பாட்டின் கடைசி வரி
`நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்'
ஆஹா என்ன பொருத்தம். நீங்காத செல்வத்தோடு, உலகலாம் உயர்ந்து நிற்கிறான் தமிழன். அது யாரால் தமிழினத்தலைவர் டாக்டர் கலைஞரால்!
எகிபது நடந்தது, லிபியாவில் நடப்பது மக்கள் புரட்சி.
தமிழகத்தில் நடந்திருப்பதோ செல்வப் புரட்சி.
தமிழகத்தின் 2ஜி செல்வப் புரட்சியை இன்று உலகமே கண்டு வியக்கிறதே.
ஒரு காலத்தில்` வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்றோம்.
இன்று வடக்கு அவமானத்தால் வாடி நிற்கிறது.
தெற்கு தியாகச் சுடராய் திகார் சிறையில் ஜொலிக்கிறது.
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்றோம். இந்த கோஷத்தை முன் வைத்து பேரறிஞர் அண்ணா திமுகவை துவக்கினார்
அண்ணா சொன்னார், கலைஞர் செய்து காட்டினார்.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் கழகம் என்கிற கலைஞர் குடும்பத்தின் சுயாட்சி.
வடவர்கள் மரியாதைக்குரிய தனி நபர்களை பார்த்தால் அவர் பெயருக்கு பின்னால் `ஜி' போட்டு பேசுவது வழக்கம். அது தனி நபர் துதியாகி விடாதா? பிறகு தமிழனின் சுயமரியாதையும், தன்மானமும், பகுத்தறிவும் என்னாகும்.?
அதை முறிக்கத்தான் இன்று ஒரு `ஜி' வேண்டாமென்று அதை ` 2 `ஜி' ஆக்கியிருக்கிறோம்.
இப்படி தமிழன் உலகத்தரத்திற்கு வளர்ந்த பிறகும் கூட நான் எழதாமலிருந்தால், கலைஞர் ஆட்சியின் குடிமகன் என்று சொல்லிக் கொள்ள நான் வெட்கப்படவேண்டாமா ?
No comments:
Post a Comment