Dec 30, 2012

பாகிஸ்தான்:



பகைக்கு கட்டிய பரிவட்டம்






இந்தியாவிற்குள் படுவேகமாக நுழைந்து கொண்டிருக்கும் பயங்கரத்தை ஊடகங்களும், படித்த அறிவுஜீவிகளும் உணர்ந்து கொண்டிருக்கிறார்களா? என்கிற கேள்வியே இந்த தேசத்தின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பீதியை எழுப்புகிறது. 
ஒரு பக்கம் அமெரிக்க வர்த்தகத்திற்கு இந்தியாவை திறந்துவிட்டாகிவிட்டது. வர்த்தகத்தகர்கள் ‘நாடு பிடிக்க’ வர்த்தக வேடத்தில்தான் வருவார்கள் என்பதை நாம் 1600 ஆண்டிலேயே உணரத் துவங்கிவிட்டோம்.
வர்த்தகர்கள் எப்போதுமே நேசக்கரத்தோடுதான் வருவார்கள். ஆனால், அவர்களது அடிவருடிகள், அடிமைகள் மூலமாகத்தான், தாங்கள் வர்த்தகம் செய்யப்போகும் தேசத்தின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பார்கள். 
முதலில் வந்தது சில்லறை வர்த்தக அனுமதி. அடுத்து இந்தியாவிற்கு வந்தார் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக். 26/11 மும்பையில் நடந்த தாக்குதலை தடுக்க இந்திய உளவு அமைப்புகள் தவறிவிட்டன என்று பகிரங்கமாக குற்றம்சாட்டிவிட்டு, அரசு விருந்தினராக எல்லா உபசாரங்களையும் பெற்றுக்கொண்டு தன் நாடு திரும்பிவிட்டார். 
எத்தனை துணிச்சல்? இதை அந்த நாட்டு அமைச்சர் 9/11 சம்பவத்திற்குப் பிறகு அமெரிக்காவிற்குப் போய், அங்குள்ள உளவுத்துறை ஸ்தாபனங்களான எஃப்.பி.ஐ.யும், சி.ஐ.ஏ.வும்தான் காரணம் என்று சொல்லிவிட முடியுமா?
சரி! அவர்கள் அப்படியே சொல்லியிருந்தாலும் கூட, பின்லேடன் கொல்லப்பட்டது எங்கே? எந்த நாட்டில்? பாகிஸ்தானிலுள்ள அபோட்டாபாத்தில்தான், பின்லேடனை நிலத்தில் சுற்றி வளைத்து அமெரிக்க கப்பற் படையினர் கொன்றார்கள்.
எங்கள் உளவுத்துறையை குற்றம் சுமத்திவிட்டும், நாங்கள் தேடிக் கொண்டிருக்கும் ஒரு சர்வதேச தீவிரவாதியை உங்கள் நாட்டிலேயே வைத்திருந்தீர்களா? என்ன செய்கிறோம் பாருங்கள் என்று அமெரிக்கா, பாகிஸ்தானை குர்மா செய்திருக்காதா? அல்லது ரஷ்யாவை ஆப்கானிஸ்தான் எல்லையிலிருந்து அழிக்க நீங்கள் உருவாக்கிய அவதாரம்தானே பின்லேடன். நீங்கள் வளர்க்கலாம், நாங்கள் புகலிடம் கொடுக்கக்கூடாதா என்று கேட்கிற தைரியம்தான் பாகிஸ்தானுக்கு இருந்திருக்குமா?
‘பாகிஸ்தான் அமெரிக்க பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, அல்&கொய்தா பயங்கரவாதி இலியாஸ் காஷ்மீரியுடனும் இணைந்து அபுஜிண்டால், ஜபியுல்லா, பாஹிம் அன்சாரி மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டினார்கள். அவர்கள் இந்தியாவில் சுதந்திரமாக சுற்றித் திரிந்துள்ளார்கள். ஆகவே மும்பை தாக்குதல் என்பது ஒரு அரசு ஆதரவு பெற்ற நாச வேலை அல்ல. இவையனத்தும், புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்திற்கு வந்திருக்க வேண்டும். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை. கூடவே இரு நாடுகளுக்கிடையே தகவல் பரிமாற்றமும் இருந்திருந்தால் மும்பை தாக்குதலை தடுத்திருக்க முடியும்’ இதுதான் அவர் பேச்சின் சாராம்சம்.
கூடவே மும்பை தாக்குதலில் ஈடுபட்டு, சவுதி அரேபியாவிற்கு ஓடிய அபு ஜிண்டால். இந்திய உளவு அமைப்புக்காக வேலை செய்தார் என்று சொல்லியிருக்கிறார். இதை  மத்திய உள்துறை செயலர் ஆர்.கே. சிங், ‘அபத்தம்’ என்று சொல்லிவிட்டார்.
இந்திய தலைமையும், இங்கே ஆளுகிற வர்க்கமும் இந்த தேசத்தை கூறு போடத் துணிந்துவிட்டார்கள் என்பதை உணர்ந்த துணிச்சலோடு பேசியிருக்கிறார் மாலிக் என்றே தெரிகிறது.
அபுஜிண்டாலைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டால்தான், பாக். அமைச்சரின் திமிரின் ஆழம் புரியும். 
அபு ஜிண்டால், சவுதி அரேபியாவிற்குள் தஞ்சம் புகுந்தான். அந்த நாடு அங்கிருந்து, அபு ஜிண்டாலை நாடு கடத்தி, இந்தியாவிற்கு அனுப்பியது. அபு ஜிண்டாலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இந்த ஆண்டு ஜூன் 21-ம் தேதி டெல்லி போலீஸார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரின் தங்கள் பிடிக்குள் வைத்து ஜூலை 5-ம் தேதி வரை விசாரித்தார்கள். அபு ஜிண்டாலுக்கு 26/11 தாக்குதலில் தொடர்புண்டு என்பதை சொன்னது, சமீபத்தில் தூக்கிலிடப்பட்ட கசாப்.
அபு ஜிண்டால் ஹம்சா என்கிற அபு ஜிண்டால், 26/11 போலவே இந்தியாவில் மேலும் சில தாக்குதல்களை நடத்த இந்தியாவிலுள்ள முஜாஹிதீன்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தான். 
டெல்லி போலீஸார் அவனிடம் நடத்திய 15 நாள் விசாரணையில், தான் சார்ந்த இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவிற்கும், இந்தியாவிலுள்ள முஜாஹிதீன்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. லஷ்கர்.இ.தொய்பா. ஆதரவுடன் இவர்கள் இந்தியாவில் பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டார்கள். 
இந்திய அமைப்புக்கு உதவியாக இருந்து அவர்களுக்கு ஆயுதங்கள், வெடிகுண்டுகள் வாங்கிக் கொடுத்து உதவ நியமிக்கப்பட்டவன்தான் அபு ஜிண்டால். அபு ஜிண்டால் கைதானாலும், அந்தத் திட்டம் இன்னும் சிறைபடவிலை என்று உறுதியாக நம்புகிறார்கள் விசாரணை அதிகாரிகள். 
26/11க்குப் முன்பு, பாகிஸ்தானிலுள்ள முரிட்கே பகுதியில் இந்திய தாக்குதலுக்காக 12 தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்தான் அபு ஜிண்டால். அதேசமயம், மும்பையின் மையப்பகுதிகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உடனுக்குடன் அவனுக்கு சொல்லிக்கொண்டிருந்தான் டேவிட் கோல்மென் ஹெட்லி. இந்த தகவல் லஷ்கர்-இ-தொய்பா தலைவனான ஸகி&உர்&ரஹ்மான் லக்விக்கும் சென்று கொண்டிருந்தது.
அபு ஜிண்டாலின் பயிற்சி 2007லேயே துவங்கிவிட்டது. தாக்குதல் நடந்தது 26.11.2008. இந்தியாவில் கைதான சயத் சகியுதீன் என்கிற அபு ஜிண்டாலிடம் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் என்று பல்வேறு பாதுகாப்பு, உளவு அமைப்புகள் விசாரணை நடத்தியது. ல.இ.தொ.ம், பாகிஸ்தான் ராணுவம் அதிகாரிகளும் சேர்ந்தேதான் இந்த தாக்குதலுக்கு திட்டம் திட்டினார்கள் என்று ஒப்புக் கொண்டிருக்கிறான் அபு ஜிண்டால். 
‘அபு ஜிண்டாலுக்கு, பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டையையும் வழங்கியது பாகிஸ்தான் அரசு. மும்பை தாக்குதலுக்காக ஜிண்டால் தொடர்பு கொண்ட கராச்சியிலிருந்த கட்டுப்பாட்டு அறை முழுவதும் பாக் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது இப்போது உறுதியாகியிருக்கிறது’ என்று அப்போது இந்திய உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் கொச்சியில் உறுதி செய்தார். 
அபு ஜிண்டால் கைது, அதன் மூலமாக மும்பை தாக்குதலில் பாக்.கிற்கு தொடர்பு வெளியானதும் ஒரு திடுக்கிடும் திருப்பம் பாக். போக்கில் ஏற்பட்டது. 
அமிர்தசரஸைச் சேர்ந்த சரப்ஜித் சிங் 22 வருடங்களாக பாகிஸ்தான் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு அங்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின் சரப்ஜித் சிங்கை திருப்பி அனுப்புவதாக ஒப்புக்கொண்டது. சரப்ஜித் சிங்கின் குடும்பமே ஆனந்த வெள்ளத்தில் மிதந்தது. அபு ஜிண்டால் கைதுக்கு பிறகு அப்படியே பல்டி அடித்தது பாக் அரசு. நாங்கள் சரப்ஜித் என்று சொல்லவில்லை சுர்ஜித் சிங் என்பவரைத்தான் விடுதலை செய்வதாகச் சொன்னோம் என்று அப்படியே பச்சையாக உல்டா ஆனார்கள். 
அபு ஜிண்டால் வெளியிட்ட உண்மைகள் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை குற்றவாளிக்கூண்டில் ஏற்றிவிட்டது. இந்த அவமானத்திற்கு பழிவாங்கவே சரப்ஜித் சிங் விவகாரத்தை கையிலெடுத்துக்கொண்டது பாகிஸ்தான். இத்தனையும் நடந்த பிறகு, இந்தியாவில் பாகிஸ்தானின் இரட்டை வேடம் பற்றி எந்த ஒரு உரத்த குரலும் எழவில்லை. 
26/11&ல் உயிரிழந்த 166 பேர்களின் உயிரை விட, பீதியிலுறைந்த இந்தியாவின் அதிர்ச்சியெல்லாம், சில்லறை வர்த்தக விவகாரத்தில் கரைந்துபோனது. 
இன்னும் பாகிஸ்தானில் பதுங்கிக்கொண்டிருக்கும் மும்பை தாக்குதல் ‘வில்லன்கள்’ அங்கே கதாநாயகர்கள். அங்கே சுதந்திரமாக உலவிக்கொண்ட்டுதான் இருக்கிறார்கள். பாகிஸ்தானில், கொடிகட்டிப் பறக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளைப் பற்றி அவர்கள் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. 
புகலிடமும், பாதுகாப்பும் கொடுத்தால்கூட,  தீவிரவாத அமைப்புகள் இப்போது பாகிஸ்தான் அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறது. கோபத்திற்கு என்ன காரணம்? அபு ஜிண்டால் வாக்குமூலத்திற்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு சர்வதேச நெருக்கடி அதிகமாகிவிட்டது. அதனால் பாகிஸ்தானின் உளவு ஸ்தாபனமான ஐ.எஸ்.ஐ. மும்பை தீவிரவாதிகளை காட்டிக்கொடுக்க, அமெரிக்காவுடன் சேர்ந்து ஜால்ரா போடுகிறது என்பதே கோபத்திற்குக் காரணம். 
இந்த கோபத்தை இப்போது அவர்கள் வெளிப்படையாகவே காட்டிக்கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, சரப்ஜித் சிங்கின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து, அவர் விதிக்கப்பட்ட தண்டனை காலத்தை அனுபவித்திருந்தால் அவரை விடுதலை செய்யலாம் என்று அறிவித்தார். 
இந்த முடிவை மாற்ற வேண்டும் என்று தீவிரவாத அமைப்புகளும், பாகிஸ்தானின் உளவுத்துறையும் அரசுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானின் அவாமி லீக் கட்சியும் இந்த நெருக்கடி போராட்டத்தில் உடன் நிற்கிறது. சரப்ஜித் சிங் பாகிஸ்தானின் எதிரி, அவரை விடுதலை செய்யக்கூடாது என்கிற எதிர்ப்பு குரல் அங்கே அதிகமாகிக் கொண்டிருக்கிறது. குரல்களை அதிகரிப்பதில் தீவிரமாக இருக்கிறது பாகிஸ்தானின் உளவுத்துறை. 
உண்மை நிலை இப்படியிருக்க, அரசு ஸ்தாபனமான உளவுத்துறை நமக்கு எமனாக இருக்கும்போது, அவர்களுடன் நாம் எப்படி தகவல்களை பறிமாறிக்கொள்ள முடியும்?
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, நம்மை அழிக்க அல்லும்பகலும் பாடுபடும் பகைவர்களுக்கு கூட, விருந்து உபசாரமும் கொடுத்து, பரிவட்டம் கட்டி அனுப்புவோம்.
பகைவர்களுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே குணம் நீடிக்கட்டும், கூடவே 26/11ம்


                                                                                                   நன்றி : மீடியா வாய்ஸ் 29.12.2012

                                                                                                 www.mediavoicemag.com/magazine.html               .


No comments:

Post a Comment