பிரதமரிடமே பிளாக்மெயில்!
தி.மு.க. தலைவர் எத்தனையோ புத்தகங்கள் எழுதிவிட்டார். சுயநல சந்தர்ப்பவாதத்தினால் முன்னேறுவது எப்படி என்று அவர் அடுத்த தலைமுறைக்கு ஒரு தன்னம்பிக்கை நூல் எழுதலாம். சமீபத்தில் அந்தக் கட்சி நடத்திய டெசோ மாநாட்டில் ‘தி.மு.க. இளைஞர்கள் திராவிடக் கொள்கைகளில் தீவிர நம்பிக்கை வைக்க வேண்டும்’ என்று கருணாநிதி கோரிக்கை வைத்தார். திராவிடக் கொள்கைகள் என்ன என்று அவர் குடும்பத்து வாரிசுகளுக்கே தெரியாது. கட்சி என்பது பதவி + அதிகாரம் = பணம் என்கிற கணக்கோடு வருபவர்களுக்கு எப்படி திராவிடம், பகுத்தறிவு என்பதெல்லாம் புரியும்? அதற்கு பதில் சந்தர்ப்பவாத அரசியலை கற்றுக் கொடுத்தால் கட்சியிலுள்ள நாலு பேராவது பிழைத்துக் கொள்வார்கள்.
அதுபோகட்டும். நாமாவது தி.மு.க. பாணி முன்னேற்ற பாதை அரசியல் என்ன என்பதை விளக்குவோம். அது சுலபம். எளிதாக புரிய வைத்துவிடலாம்.
நவம்பர் மாதம் 30-ம் தேதி மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் அவர்கள் எப்ரல் 21, 1997லிருந்து 1998 மார்ச் 19 வரை சுமார் ஒன்பது மாதங்கள் இந்திய பிரதமராக இருந்தார். அவர் தலைமையிலான ஜனதா தள ஆட்சி கவிழ்ந்ததன் பின்னணியை பார்க்கும் முன் கொஞ்சம் குஜ்ராலை பற்றி தெரிந்து கொள்வோம்.
எளிமைக்கு குஜ்ரால் என்றே சொல்லலாம். 86-ம் வருடம் விகடனில் நிருபராக இருந்தபோது டெல்லியில் குஜ்ராலை சந்தித்து வியந்திருக்கிறேன். ஒரு தமிழனைவிட இலங்கை விஷயத்தில் அதிக தீவிரம் காட்டியவர். அந்த தீவிரத்தை பிரதமராக இருந்தபோது, செயலில் காட்டியவர். இவர் பிரதமராக இருந்த காலகட்டத்தில், இலங்கையில் அதிபராக இருந்தவர் சந்திரிகா குமாரதுங்கா. 1997, மே மாதம் 13-ம் தேதி இந்திய பிரதமர் குஜ்ராலும், இலங்கை அதிபர் சந்திரிகாவும் இலங்கையில் சந்தித்தார்கள். அப்போது இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்களை விற்க தடை விதித்திருந்தது. இந்திய தடையை நீக்க வேண்டும் என்று சந்திரிகா கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கை இந்தியாவை இலங்கையில் ‘சுழலில்’ சிக்க வைக்கும் என்பதை உணர்ந்திருந்தார் குஜ்ரால். ‘நீங்கள் பாகிஸ்தானிடமிருந்தும், அதைவிட அதிகமாக சீனாவிடமும் ஆயுதம் வாங்குகிறீர்கள். இரண்டு தேசங்களுமே இந்தியாவுடன் நட்பாக இல்லை. அதனால் எங்கள் தடையை நீக்க முடியாது’ என்று உறுதியாக சொன்னவர். மேலும் அந்த ஆயுதங்கள் அங்கே தமிழர்களுக்கு எதிராக பயன்படும் என்பதையும் உணர்ந்தேயிருந்தார் குஜ்ரால்.
இப்போது விஷயத்திற்கு வருவோம். குஜ்ராலின் அமைச்சரவையில் தி.மு.க.வும் இருந்தது. குஜ்ரால் பதவி ஏன் பறிபோனது? அதற்கு போகுமுன், குஜ்ரால் மறைவுக்கு தி.மு.க. தலைவர் முரசொலியில் செலுத்திய அஞ்சலியைப் பார்ப்போம். அதில் ‘அவரை பிரதமராக முன்மொழிந்தபோது, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த என்னை நள்ளிரவு 12 மணிக்கு வந்து உறக்கத்திலிருந்த என்னை எழுப்பி பொன்னாடை அணிவித்ததையும், அதன்பிறகு நன்றி மறவாமல் நாட்டுக்கும், நமது கூட்டணிக்கும் விசுவாசமாக பணியாற்றியதையும் மறக்க முடியாது’ என்று சொல்லியிருக்கிறார் கருணாநிதி.
நன்றியும், விசுவாசமும் என்ன ஒருவழிப் பாதையா?
தி.மு.க.வைப் பொறுத்தவரையில் இந்த இரண்டு வார்த்தைகளுமே ‘ஒன் வே டிராபிக்’தான். அவர்களுக்கு எப்போதுமே தங்கள் காரியம்தான் முக்கியம். பொது நலன் என்பது இரண்டாம் பட்சம்தான். இதை குஜராலின் எழுத்து பூர்வமாகவே பார்க்கலாம். குஜ்ரால் தன்னுடைய சுயசரிதையை 519 பக்கங்கள் கொண்ட புத்தகமாக எழுதியிருக்கிறார். புத்தகத்தின் தலைப்பு MATTERS OF DISCRETION
அதில் அவர் தி.மு.க.வைப் பற்றி சொன்னது என்ன?
‘நான் பிரதமராக இருந்தபோது, பல பேரின் பெயர்களை பரிசீலித்து, எம். கலைவாணன் என்கிற ஐ.ஏ.எஸ். அதிகாரியை சென்னை துறைமுகத்தின் தலைவராக நியமித்தோம். அப்போது கப்பல் துறைக்கு அமைச்சராக இருந்தவர் தி.மு.க.வின் டி.ஜி. வெங்கட்ராமன். அவருடைய ஒப்புதலின்பேரில்தான் இந்த நியமனம் நடந்தது.
அப்போது தமிழகத்தில் தி.மு.க. அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தவர் ஆலடி அருணா என்கிற அருணாச்சலம். இவர் என்னை 1997, நவம்பர் மாதம் 7-ம் தேதி சந்திக்க வந்தார். அவர் வந்த நோக்கம், காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தவேண்டும் என்று கேட்பதற்காக என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால், உண்மையான நோக்கம் அதுவல்ல. சென்னை துறைமுக தலைவராக நியமித்தவரை மாற்ற வேண்டும் என்றார். நியமித்த சில நாட்களிலேயே அவரை மாற்றுவது அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்று நான் அருணாச்சலத்திடம் (ஆலடி அருணா) விளக்கினேன். மேலும் அது தேவையில்லாத சட்ட சிக்கல்களை உருவாக்கும் என்று விளக்கினேன்.
அடுத்து என்னை வியப்பில் ஆழ்த்திய சம்பவம் நடந்தது. இந்த நியமனத்தை மாற்ற வேண்டும் என்று கருணாநிதி, சந்திரபாபு நாயுடுவை அணுகினார். நாயுடு என்னை அழைத்தபோது, அந்த உத்தரவை மாற்றினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று நான் அவரிடம் விளக்கினேன். நாயுடு என்னை வற்புறுத்தினார். அதற்கு காரணம் இதைச் செய்யாவிட்டால், தி.மு.க. அமைச்சர்கள் என்னுடைய ஐக்கிய முன்னணி அரசிலிருந்து பதவி விலகுவதாக கருணாநிதி அவரிடம் சொன்னாராம்.
அன்று மாலையில் வழக்கமான அமைச்சரவை கூட்டம் நடந்தது. அப்போது கருணாநிதியின் மருமகன் முரசொலி மாறன் அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்தார். கூட்டம் முடிந்ததும். நான் மாறனை சில நிமிடங்கள் இருக்கச் சொன்னேன். அப்போது ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக நீதிபதி ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கை வெளியாகியிருந்தது. ராஜீவ் கொலைக்கு தி.மு.க. தலைவர்களையும், வி.பி. சிங்கையும் ஜெயின் குற்றம் சாட்டியிருந்தார். முதலில் இதைப்பற்றி மாறனிடம் பேசினேன். பிறகு அவர் சார்ந்த துறையான கார் தயாரிப்பு பற்றி பேசினேன். அப்போது மாருதி கார் தயாரிக்கும் இந்திய கம்பெனிக்கும், அதன் கூட்டாளியான ஜப்பானின் சுசிக்கு கம்பெனிக்கு இடையேயிருந்த பிரச்னை குறித்து அவருடன் பேசினேன். அதற்கு பிறகு கலைவாணன் நியமன விவகாரம் குறித்து, ஏன் அந்த உத்தரவை திரும்ப பெறமுடியாது என்பதை விளக்கினேன். ஆனாலும். அவருடைய மாமா கருணாநிதியின் கருத்தையே அவரும் வலியுறுத்தினார். சென்னை துறைமுகத்திற்கு வேறு ஒரு தலைவரை நியமிக்க வேண்டுமென்றார். முடிவாக மாறன் நான் சொன்னதை ஏற்றுக்கொண்டார் என்றுதான் நான் நினைத்தேன்.
அன்றிரவு வனத்துறை மற்றும் சுற்றுப்புறச் சூழல் அமைச்சராக இருந்த சய்புதீன் சாஸ் கொடுத்த விருந்தில் கலந்துகொண்டு வீடு திரும்பினேன். ராம் விலாஸ் பஸ்வான் என்னை அழைத்தார். கருணாநிதி அவரை தொலைபேசியில் அழைத்து, கலைவாணன் விவகாரத்தில் தான் அதிருப்தியாக இருப்பதாக தெரிவித்ததாகச் சொன்னார்.
அப்போது எங்கள் அமைச்சரவையில், விமானப் போக்குவரத்துறை ராஜாங்க அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜனை அழைத்தேன். கருணாநிதியின் இந்த போக்கை பற்றி மூப்பனாரின கருத்தை அறிய விரும்புவதாகச் சொன்னேன். சென்னையிலிருந்த மூப்பனாரை, ஜெயந்தி நடராஜன் போனில் அழைத்து பேசினார். மூப்பனார், மறுநாள் காலை என்னுடன் போனில் பேசுவார் என்று ஜெயந்தி சொன்னார். பிறகு அன்றிரவு ஜெயந்தி என்னை போனில் அழைத்தார். காவிரி விவகாரத்தை காரணம் காட்டி, அமைச்சரவையிலிருந்து விலகி, வெளியிலிருந்து ஆதரவு தர யோசிப்பதாக கருணாநிதி பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுத்திருப்பதாக ஜெயந்தி சொன்னார். ஆனால், உண்மையான காரணம் காவிரி விவகாரம் அல்ல. சென்னை துறைமுகத் தலைவர் பதவி என்பது பணம், அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவி, அதனால்தான் அந்தப் பதவியை கருணாநிதி தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புகிறார்’ என்று ஜெயந்தி என்னிடம் தெரிவித்தார்.
நான் சந்திரபாபு நாயுடுவிற்கு போன் செய்து நிலைமையை விளக்கினேன். கருணாநிதியின் போக்கு குறித்து நாயுடு மிகவும் வேதனைப்பட்டார். அவருடன் போனில் பேச முயன்றார் நாயுடு. ஆனால், கருணாநிதி கிடைக்கவில்லை. தமிழ்நாடு முதல்வருடன் தான் மறுநாள் பேசுவதாக நாயுடு என்னிடம் தெரிவித்தார். சென்னைக்கு கிளம்பிக்கொண்டிருந்த மாறனிடம் நான் பேசினேன். கருணாநிதியுடன் பேசவில்லை. அவரது அறிக்கை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றார் அவர். ஆனால், மாறன் இனிமையாகப் பேசினார். எனக்கு ஒத்துழைப்பதாகச் சொன்னார். அதிர்ஷ்டவசமாக கலைவாணன் அந்த பதவியை ஏற்றுக்கொள்ளாததால் பிரச்னை சுமூகமாக முடிந்தது.
அதற்குப் பிறகு ஜெயின் கமிஷனை காரணம் காட்டி, தி.மு.க. அமைச்சர்களை நீக்க வேண்டுமென்று காங்கிரஸும், அதன் தலைவர் சீதாராம் கேசரியும் முரண்டு பிடித்தார்கள். விலக்காவிட்டால், ஆதரவை வாபஸ் வாங்குவோம் என்று மிரட்டினார்கள். இடைக்கால அறிக்கையை வைத்துக்கொண்டு தி.மு.க அமைச்சர்களை நீக்கமாட்டேன் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
காங்கிரஸ் ஆதரவை வாபஸ் வாங்கிக்கொண்டதும். பெரும்பான்மை இல்லாததால் நான், தார்மீகப் பொறுப்பேற்று என் பதவியை ராஜினாமா செய்தேன். ஆட்சி கவிழ்ந்தது. அதற்குப்பிறகு தேர்தல் வந்தது எல்லோருக்கும் தெரிந்ததே.’
இதுதான் குஜரால் சுயசரிதையில் உள்ள முக்கிய குறிப்புகள்.
‘ராஜீவ் கொலையில் தி.மு.க.விற்கு தொடர்புண்டு. அந்த தி.மு.க. அமைச்சர்கள் இருக்கும் ஆட்சிக்கு நாங்கள் ஆதரவு தரமாட்டோம்’ என்று பிடிவாதமாக குஜ்ரால் ஆட்சியை அன்று கவிழ்த்தது காங்கிரஸ்.
ஆனால், அதே காங்கிரஸோடு தி.மு.க. கூட்டணி போட்டுக்கொண்டதுவோ இன்று.
நன்றி : மீடியா வாய்ஸ் 15.12.2012
நன்றி : மீடியா வாய்ஸ் 15.12.2012
பயனுள்ள தகவல்.
ReplyDelete