May 27, 2008

பக்திக் காதல்


பக்தியோடு வளர்ந்தவள் ஆண்டாள்.அவள் தந்தை பெரியாழ்வாருக்கோ பக்தி என்பது உண்ணும் உணவும் பருகும் நீரும் போல.தன் மகளுக்கு பக்தி கலந்த பாலையும், தேனையும் ஊட்டினார் பெரியாழ்வார். தன் மகளுக்கு கதை சொல்லும்போது கூட ஹரி கதைகளையே சொல்லுவார். யானைக்கு அன்று அருள் புரிந்தான் அவன் என்பார். துஷ்ட அசுரரை அருளால் அழித்தான் என்பார். மானிட பண்பு விளங்க ராமனாய்ப் பிறந்து வீரனாகவும், அதிவீரனாகிய தியாகியாகவும், அடைக்கலம் புகுந்தவரை உயிர் கொடுத்து காக்கத் துணிந்த கருணைக் கடலாகவும் விளங்கியதை கதை கதையாக சொல்லுவார்.


முக்கியமாக கண்ணனின் கதையை கண் முன் நடப்பது போல் சொல்வார். கல்வியோடு கலைகளையும் கற்றவளாக வளர்ந்தாள் ஆண்டாள். இளமை காலம் தொட்டே பாகவதர்கள்தான் அவளுக்கு சினேகிதர்கள். பகவானுடைய கல்யாண குணக் கடலில் ஆடுவாள். திருவருளிலேயே மூழ்கி இருப்பாள். நந்தவனத்திலேயே பெரும்பாலும் பொழதைப் போக்குவாள். இவள் மனம் மலரோடு மலராய் மலர்ந்தது.


சொல்நயம், பொருள் நயம் மிகுந்த பாடல்களை சிறு பருவம் தொட்டே பாடத்துவங்கினாள்.ஆண்டாள் ஞானப் பூங்கோதையாக வளர்ந்தாள். சிற்றில் இழைத்து அதாவது சிறு வீடு கட்டி விளையாடும்போதே கண்ணனுடைய நினைவுதான் அவளுக்கு. மணலை சிறு சொளகில் இட்டு குழைத்து, வண்டல் மண்ணும் கலந்து தண்ணீர் விட்டு மிதித்து, சிறு வீட்டிலேயே சின்னஞ்சிறு முற்றம், நீளமாகிய கூடம், அழகிய அறைகள் எல்லாம் முதுகு நோக அமைக்கும்போதே, கண்ணன் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து, அந்த இல்லத்தை சிதைத்து விடுகிறானாம் பிறகு புன்முறுவலோடு நிற்கிறானாம். இது அவனுக்கு ஒரு விளையாட்டு.


மறுபடியும் ஆண்டாள் தோழிகளோடு சேர்ந்து வீடு கட்டத் துவங்குவாள். அவளுக்கு கண்ணம் மீது கோபமே வராது.


`கண்ணா, இச்சிற்றிலோடு எங்கள் சிந்தையையும் அழிப்பாய் போலிருக்கிறதே ! என்கிறாள் கோதை ஆண்டாள். ` பித்தேற்றி எங்களை மயக்குகிறாய் என்ன மாயம்! ஆயன் பெருமானே ! என்கிறாள்


இப்படி சிறு வீடு கட்டிய நினைவுகளும் மனோபாவத்தில் வளர்ந்து ` நாச்சியார் திருமொழி' என்ற கோதையார் பிரபந்தத்தில் இடம் பெற்றது.


பெய்யுமாமழை போல் வண்ணா ! உன் தன்

பேச்சும் செய்கையும் எங்களை

மையல் ஏற்றி மயக்க, உன்முகம்

மாய மந்திரம் தான்கொலொ?

என்பது திருமொழியில் ஆண்டாள் வாக்கு.