May 6, 2008

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி 3


பல வலைப்பதிவு வாசகர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க பக்தி மூலமாக தமிழ் பரப்பிய ஆண்டாளைப்பற்றிய செய்திகள் தொடர்கிறது.ஆண்டாளின் வாழ்க்கை என்பது வித்தில் அடங்கிய விருட்சம் என்று பொதுவாக சொல்லுவார்கள். காதல் துறையில் பெரியாழ்வார் தமது பக்தியை தாய் சொல்லும் பாசுரமாகவே வெளியிட்டிருக்கிறார் என்பது அந்த பாடல்களை படித்தாலே புரியும்.


ஆண்டாளை ஒரு கற்பனை கதாபாத்திரமாகவே பலரும் பார்த்தார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் ராஜாஜி, ரசிகமணி டிகேசி. தன் பாடல்கள் மூலமாக பெரியாழ்வார் ஆண்டாள், அவள் வாழ்க்கைப் பற்றி ஒரு தீர்க்க தரிசனமாக முன்கூட்டியே உணர்ந்துகொண்டார் என்று நினைப்பவர்களும் உண்டு.


`பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்' என்று ஒரு பாடலில் வருகிறது. ஆண்டாள் தன்னைப் பற்றி சொல்லும்போது ` பட்ட்ர்பிரான் கோதை' என்கிறாள்.` ஒரு மகள் தன்னையுடையேன்' என்கிறார் பெரியாழ்வார். இவற்றை வைத்து ஆண்டாளை சிலர் பெரியாழ்வாரின் சொந்தப் பெண் என்றே கருதுகிறார்கள்.


குருபரம்பரைக் கதைகளோ எல்லாம் ஒரு முகமாக ஆண்டாளை வளர்ப்புப் பெண்ணாகவே சொல்கின்றன். ` இவளுக்கு துளசியே தாய், பெரியாழ்வார் தந்தை' என்கிறார் ஒரு கவிஞர். இவள் பூமித்தாயின் புதல்வி என்று சொல்பவர்களும் உண்டு. பக்திக்கும், பணிக்கும் ஒரு இலக்கிய உதாரணமாக தோன்றியவள் என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் நம்புகிறார்கள்.


சூரியோதயத்திற்கு முன்பு பெரியாழ்வார் நந்தவனத்திற்குப் போனார், திருத்துழாய் செடியின் `மடி' யில் குழந்தை கோதையை கண்டாராம், ஒரு ஜோதி ரூபமாக,


ஜோதிமேல் ஜோதியாகித்

துலங்குதல் தொண்டர் கண்டார்

என்கிறார் வடிவழகிய நம்பிதாசர்


பசுமையாக இருந்த அந்த நந்தவனத்திலே ஒரு பகுதியிலே ! அங்கே பெரியாழ்வார் அதிசயமாக குழந்தை கோதையை கண்டாராம்


புதுமதுப் பொங்கும் பச்சைப்

பசுந்துழாய்ப் பூட்டினூடே

கதுமென விழியால் நோக்கி,

கருணையின் கொழந்தைக் கண்டார்


இந்தக் கருணை கொழந்தை பக்திக் கொழந்தாக பெரியாழ்வார் வளர்த்தார்,தத்துக்கொண்டதைப் போலே.ஏற்கெனவே, பெரியாழ்வாரின் பரம பக்தி மானசீகமாக கண்ணனைப் பெற்று வளர்த்தது. யசோதை தாய் போல், தேவகி தாய் போல், பெரியாழ்வாரும் தாயாகிவிட்டார்

பெரியாழ்வார் மானசீகமாகப் பெற்று வளர்த்த மகள் பாலகோபாலனுக்கே வாழ்க்கைப்பட்டாள் கோதை. அவனையே காதலித்தாள்; அவனுக்கே பித்தானாள்; அவன் காதலியாகவே வளர்ந்து வந்தாள். வளர்ப்புப் பெண் மானசீகப் புத்திரனை மணந்தாள் என்பது ஆண்டாளின் ரத்தினச் சுருக்கமான கதை.
கன்னித்தமிழ் தேவி மைக்கண்ணன் அவள் ஆவி
தன் காதல் மலர் தூவி மாலையிட்டாள் ' என்பார் கண்ணதாசன்.