Sep 9, 2008
காற்றில் கரைந்த தந்தி
அது ஒரு பொற்காலம் என்று சொல்லலாம். சினிமாவில் நிறைய படித்த, ரசனையுள்ள, சங்கீதம் ஞானம் கொண்டவர்கள் இருந்தார்கள். அப்ப்டி ஒருவர்தான் ஏ.பி. நாகராஜன். அவர் இல்லையென்றால், உடலால் மறைந்தாலும், கானத்தால் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் குன்னக்குடி வைத்தியநாதன், தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கமாட்டார்.
முதலில் மாடர்ன் தியேட்டர்ஸில் இசையமைப்பாளர் ஜி.ராமநாதனிடம்தான் குன்னக்குடி வயலின் வித்வானாக சேர்ந்தார். தன் சமயோஜிதத்தால் ராமநாதனிடம் சேர்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.அவர் முன் வயலின் வாசித்துக்காட்டுவதற்கு முன்பே அவருக்கு பிடித்த ராகம் சாருகேசி என்பதை தெரிந்து கொண்டார் குன்னக்குடி.சுத்தமான கர்நாடக பாணி பாடலான ஸ்வாதித்திருநாளின் `கிருபய பாலய' பாடலைத்தான் முதலில் அவருக்கு வாசித்துக் காட்டினார். அவர் ரசித்துக்கொண்டிருந்த நேரத்தில், அவர் அதே ராகத்தில் இசையமைத்த `மன்மதலீலையை வென்றார் உண்டோ' வை வாசித்தார். அப்படியே சேர்த்துக்கொண்டார் ராமநாதன்.
1952ல் சென்னைக்கு வந்தார். ஒரு எட்டு ஆண்டுகள் பக்க வாத்யம்தான். 1960களில் தான் வயலினுக்கு தனி அந்தஸ்து கொடுத்து வாசிக்க ஆரம்பித்தார். முதலில் தனிப்பாடல்கள் பக்தி பாடல்கள் தான் கிராமபோன் கம்பெனிகளுக்கு செய்து கொண்டிருந்தார். அப்படி அவர் இயற்றிய ஒரு பக்தி பாடல்தான் தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. அந்தப் பாடல்தான் `திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்'.பூவை செங்குட்டுவனின் இந்த பாடலை பாடியவர்கள் சூலமங்கலம் சகோதரிகள்.
பல சமயங்கலின் என் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வரும்போதும்,பிரும்ம கான சபாவிலும் நாங்கள் நிறைய பேசிக்கொண்டிருப்போம்.அப்போதுதான் அந்த சம்பவத்தைஅவர் நினைவு கூர்ந்தார். 1967களில் ஒரு நாள் ஒரு சினிமா கம்பெனியின் கார் இவர் வீட்டு முன்பு வந்த நின்றது. வந்த கார் இவரை ஏ.பி.நாகராஜனிடம் அழைத்துச் செல்கிற்து.`நீங்கள் இசையமைத்த `திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்' பாடலை என் `கந்தன் கருணை' படத்தில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் ' என்றார் ஏபிஎன்.
`கே.வி. மகாதேவன் சம்மதிக்க வேண்டுமே ?' குன்னக்குடி. அந்தப் படத்தின் இசையமைப்பாளர் மகாதேவன்.`அவர் ஒப்புக்கொண்டுவிட்டார்' என்றார் ஏபிஎன். அப்படித்தான் கந்தன் கருணையில் இந்த பாடல் இடம்பெற்று பிரபலமடைந்தது. அதாவது நல்ல இசை எங்கிருந்தாலும், அதை தேடி சேர்க்கிற ரசனை படைப்பாளிகளிடம் இருந்தது.
பிறகு பல சினிமாக் கம்பெனிகளுக்கு ஏறி இறங்கி அலைந்துதான் மிச்சம்.1969 களில் ஏபிஎன் மீண்டும் அழைத்து இவருக்கு வாய்ப்பு கொட்டுத்தார் அந்தப் படம்தான் `வா ராஜா வா'. மகாபலிபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டும் ஒரு சிறுவனைச் சுற்றிக்கதை. இதில் பிரபல கவிஞர்கள் யாருமே பாடல் எழதவில்லை. இந்த படத்தில் அத்தனை பாடல்களும் பிரபலம்.` பூவை செங்குட்டுவனின், ` இறைவன் படைத்த உலகையெல்லாம் மனிதன் ஆளுகிறான்' குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பாவின் `கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா' நெல்லை அருள்மணி எழதிய ` உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலை'காற்றலைகளில் பல காலம் தவழ்ந்து கொண்டேயிருந்தது.
இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏபிஎன் எடுத்த படம் `திருமலை தென்குமரி' பஸ்ஸில் கோவில்களுக்கு செல்லும் பயணிகளை வைத்து படம். இதில் எல்லா பாடல்களுமே பிரபலம். கானடா, பீம்ப்ளாஸ், கல்யாணி, குந்தலவராளி ஆகியவற்றை தொடும் அரிய பாடல் சீர்காழியின் குரலில் கணிரென்று ஒலிக்கும் `மதுரை அரசாளும் மீனாட்சி'
`திருப்பதி மலை வாழம் வெங்கடேசா' `குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா' இந்தப் படத்தில் பிரபலமான பாடல்கள். இந்த படத்தின் கிளைமாக்ஸ் குமரியில். அங்கு ஒரு கோஷ்டி பாடல் உண்டு.` நீலக்கடல் ஒரத்திலே நிலம் கொண்டு செல்லாமல், காலம் எல்லாம் காவல் செய்யும் கன்னித்தெய்வம் குமரியம்மா' இது எல். ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல். காபரே பாடிக்கொண்டிருந்த ஈஸ்வரி கருமாரிக்கு வந்தது இப்படித்தான்.
பக்தர்களையும், சங்கீதப் பிரியர்களையும் பிரமிக்க வைத்த படம் தேவரின் ` தெய்வம்'.கர்நாடக சங்கீதத்தின் பிரபலங்களெல்லாம் இந்த படத்தில் பாடினார்கள். இதில் தான் முதல் முறையாக மதுரை சோமுவை படத்திற்கு பாட சம்மதிக்க வைத்தார் குன்னக்குடி. அடுத்த பெங்களூர் ரமனியம்மாள். ` குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்'கொட்டகையில் பெண்கள் சாமி வந்து ஆடுவார்கள். படம் வெளியான வெலிங்கடன் (இப்போது ஷாப்பிங் மால்) கொட்டகையில் ஒரு பெரிய முருகர் சிலையே நிறுவியிருந்தார் தேவர்.
இதற்கு முன்பு வந்த படம் அகத்தியர். இதில் ராவணனுக்கும், அகத்தியருக்கும் ஒரு பாட்டுப் போட்டி. அகத்தியர் சீர்காழி. ராவணன் ஆர்.எஸ். மனோகர். `வென்றிடுவேன் எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்' டி.என்.எஸ்ஸீம், சீர்காழியும் பாடுவார்கள். இந்த பாடல் வரிக்கு வரி மாறிவரும் ராக மாலிகை.
`மேல் நாட்டு மருமகள்' சிவகுமார், கமல்ஹாசன், ஒரு அயல்நாட்டு பெண்மனி, வாணிகணபதி (கமலின் முன்னாள் மனைவி). இதில் உஷா உதூப்பை வைத்து, ஒரு பாப் பாடலை பாட வைத்து பிரபலமாக்கினார் குன்னக்குடி. தமிழ் மேதை கி.வா.ஜ். முதலில் சினிமாவிற்கு பாடல் எழதியது இவருடைய இசையில் வெளியான `நம்ம வீட்டு தெய்வம்' படத்தில்தான். `டி.எம்.எஸ் பாடிய `சிவனும் திருமாலும் நீயோ, அருள் செய்யும் மாகாளி நீயோ' மிகப்பிரபலம்.
கர்நாடக சங்கித்தத்தை பட்டித்தொட்டியெங்கும் கொண்டு சென்ற ஒரு பாமர வித்வானின் வயலின் தந்தியும் அவரோடு காற்றில் கரைந்து விட்டது.