May 4, 2008

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி - 2


ஆண்டாளைப் பற்றிய இந்த சிந்தனைகள் ஆன்மிகப் பிரசாரம் அல்ல.நாத்திகம் என்கிற பெயரால் எப்படி நல்ல தமிழ் பக்திக்குள் கிடந்ததால், தமிழகத்தை விட்டே விரட்டி அடிக்கப்பட்டது என்பதற்கான ஒரு வரலாற்று பதிவேடுதான். பக்தி இலக்கியங்களிலிருந்த நல்ல தமிழை நினைவுபடுத்தும் ஒரு முயற்சி.

ஒரு ராணி இருந்தாள். அவள் கடவுளுக்காக வைத்திருந்த மலரை நுகர்ந்து பார்த்தாள். அதற்காக அவளுக்கு தண்டனை கிடைக்கிறது.பக்திக்கு ஆசாரம் மிகவும் அவசியமானது என்பது மரபு.இதே கதை சைவத்திலும் உண்டு. இந்தச் செய்தியை உலகத்திற்கு சொன்னவர் சேக்கிழார் பெருமாள்.கண்ணப்பன் கதையில் வேடனின் எச்சிலை கூட சிவபெருமான் விரும்பிய்தாக பாடியுள்ளார்.இக்கதையில் அவர் ஆசாரம் பக்திக்கு மேலானது என்று காட்டுகிறார்.


ஆண்டாளின் கதையில் பெரியாழ்வார் நறுமலர் கொயது பூமாலை தொடுத்துக் கூடையில் வைத்திருந்தார். அந்த பூக்களின் நறுமணம் தன் தந்தையாரின் கைவண்ணம் என்று நினைத்தாள். பிறகு அந்த மலரை தன் தலையில் சூடிக்கொண்டு தானும் அதற்கு நறுமணம் சேர்ப்பதாக நினைத்தாள். தினமும் ஆண்டாள் சூடிய மலர்களே பெருமாளுக்கு போனது. ஒரு நாள் மாலையில் ஒரு உரோமம் தென்பட்டது. அதைக் கண்ட அர்ச்சகர் `மாலைகள் அசுத்தமாகிவிட்டன' என்று திருப்பி கொடுத்துவிட்டார். இதற்கு காரணம் யார் என்று தெரிந்து ஆண்டாளை கடிந்து கொண்டார். நல்ல மாலையை கொண்டு போனார் கோவிலுக்கு. அன்று இரவு பெரியாழ்வாரின் கனவில் பெருமாள் தோன்றி `பூவின் இயற்கை மணத்தோடு உம்முடைய புதல்வியின் கூந்தல் மணமும் எனக்கு பிடிக்கும்' என்றார்.இதே போல் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்த பலரும் கனவு கண்டார்கள்,` தன் மகள் தன் பரமபக்தியால் என்னை ஆண்டு கொண்டாள்' என்றார் பெரியாழ்வார். அன்றுவரை கோதையாக இருந்த்வள் ஆண்டாளாக ஆனாள்.இது பரமபக்தியின் உச்ச நிலை.ஆண்டாளின் காதலை பரமபக்தியாக எடுத்துக்கொண்டார் ஆண்டவன்


`ஒரு மகள் தன்னை உடையேன்:

உலகம் நிறைந்த புகழால்

திருமகள் போல் வளர்த்தேன்'

செங்கண்மால்தான் கொண்டு போனான். என்பது பெரியாழ்வார் வாக்கு.