இனிய வாசகர்களே
என்னுடைய வலைப்பதிவைப் பற்றி உங்களோடு பேச வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன்.ஏராளமான எழத்தாளர்கள் இப்படி இணையதளத்தில் தங்கள் எழத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்.அதற்கும் என்னுடைய வலைப்பதிவிற்கும் வேறுபாடுகள் உண்டு.. அவர்கள் படைப்பாளிகள், நான் சாதாரண பத்திரிகையாளன். அவர்கள் நிறைய படித்தவர்கள். நான் ஒரு பாமர நிருபனாக இருந்து கால ஒட்டத்தில் பத்திரிகை ஆசிரியனாக உயர்த்தப்பட்டேன்.அது என் தகுதிக்கு கிடைத்த உயர்வா அல்லது சூழலின் கோலமா என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் ரஜினிகாந்த்தை வைத்து பிரும்மாண்டமாய் சிவாஜி எடுத்துக்கொண்டிருக்கிற நேரத்தில், நான் இன்றைக்கும் அவரை வைத்து அவள் அப்படித்தான் எடுக்கலாமா என்று யோசிக்கிறவன்.அவர்கள் லாங் சைட் என்றால் நான் ஷார்ட் சைட் .நான் என் வலைப்பதிவில் என் அறிவைத்திறனை பறைசாற்றி கொள்வதை விட கண்டதையும் கேட்டதையும் எல்லா தரப்பினரும் விரும்பும் வகையில் கொடுக்க நினைக்கிற ஒரு வெகுஜன பத்திரிகையாளன். என்னுடைய எழத்துக்களுக்கு இலக்கிய அந்தஸ்தோ, தரமோ, உலகளாவிய பார்வையோ இருக்காது. நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை மட்டுமே எனக்குண்டு.பல பெரிய ஊடக ஸ்தாபங்களில் கிடைக்காத சுதந்திரம் எனக்கு இங்கே கிடைக்கும். வியாபார நிர்பந்தங்கள் இல்லை. என்னுடைய எழத்துக்களை நானே தீர்மானிக்கிறேன். விளம்பர பிரிவின் மேலதிகாரி அல்ல.
மனதில் பட்டதை துணிச்சலாக சொல்லுவேன். பொழதுபோக்கும், சினிமாவும்தான் தமிழர்களின் ஜீவாதார பிரச்னையாக ஊடகங்கள் பார்க்கத்துவங்கிவிட்டன. காரணம் இந்து நாளிதழின் கிராமப்புற ஆசிரியர் சாய்நாத் சொன்னதைப் போல இப்போது செய்தி ஊடகங்கள் வியாபார ஸ்தாபங்களின் கைக்குள் சிக்கிவிட்டது.செய்திகளின் தரத்தை வைத்து வாசகர்களின் எண்ணிக்கை பெருகி அதன் மூலமாக விளம்பரங்கள் கிடைக்கவேண்டும் என்கிற நிலை மாறி, விளமபரங்களுக்கு நடுவே, கு நடுவே, அந்த விளம்பர தாரர்களின் வியாபார நலன்கள் பாதிக்காத வகையில் செய்திகள் என்கிற நிலை வந்துவிட்டது.சமீபத்தில் ஒரு கல்லூரியின் இதழியில் துறையின் மாணவர்களோடு பேச நேர்ந்தது. அதில் நூற்றுக்கு தொண்ணூத்தி ஒன்பது பேர் பொழதுபோக்கு, சினிமா,சமையல் துறைகளில்தான் நிருபர்களாக வேண்டும் என்று துடிக்கிறார்கள். அரசியல், நீதித்துறை,கிராமப்புற அவலங்கள், சமூக சீர்கேடுகள் குறித்த துறையில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. ஒரு பத்திரிகையாளனுக்கு தேவையான ஒரு சமூக பார்வை அவசியமற்றது என்பது இளம் தலைமுறையினருக்கு ஆழமாக பதிந்துவிட்டது. எந்த கதவுகளையும் திறக்க வைக்கும் அதிகார சாவியாகத்தான் இந்த துறையை பார்க்கிறார்கள். இன்னும் பலருக்கு இது புகழம், பணமும் கொடுக்கும் சினிமாவிற்கு போகும் வழித்தடமாகவே தெரிகிறது.
தினமணியில் பொறுப்பாசிரியராக இருந்தபோது தேதியில்லாத டைரி என்று ஒரு தொடர் எழதினேன். அதன் கடைசி அத்தியாயத்தில் எழதியதை மீண்டும் இங்கே பதிவு செய்ய நினைக்கிறேன்.
`பிரும்மாண்ட அரங்கும், செழமையான காட்சிகளும் அமைக்கும் திறன் கொண்ட எழத்தாளர்களுக்கு நடுவே,இந்த பாமர நிருபனும் புகுந்து வர ஆசைப்பட்டதன் விளைவும் கூட இந்த வலைப்பதிவுக்கு ஒரு காரணம்'.
சுதாங்கன்