சூடிகொடுத்த சுடர்க்கொடி என்றாலே ஆண்டாளின் நினைவுதான் நமக்கு வரும். ஒரு முறை நாராயணனிடம் லட்சுமி கேட்டாள். ` உங்கள் பக்தர்களிலே உங்களுக்கு யாரை அதிகம் பிடிக்கும்?'
`எனக்கு பூமாலை சூடுபவர்களைப் பிடிக்கும். ஆனால் அதை விட எனக்கு பாமாலை சூடுபவர்களை இன்னும் அதிகம் பிடிக்கும் ' என்றார். அதாவது அவரைப்பற்றி பாடல்கள் புனைபவர்களை அதிகம் பிடிக்குமாம். இதற்காக பெருமாள் கூட புகழ்ச்சியை விரும்பியிருக்கிறார் என்பது பொருளல்ல. ஒருவர் மீது காதல் கொள்ளும்போதுதான், ஒரு மனிதனின் படைப்பாற்றல் அதிகம் வளம் பெறும். அதன் மூலமாக அந்த மொழியும் செழிப்புறும். ஆண்டாளை பெருமாளின் மகளிர் அணித் தலைவியாக மட்டும் பார்த்து நாத்திக செம்மல்கள் கொதிப்படைய வேண்டிய தேவையில்லை. பெரியாழ்வாரின் புதல்வியும் தமிழ் வளர்த்த சிந்தனையாளர்களில் ஒருவராக கொள்ளலாம்.
ஆண்டாள்தான் ஆண்டவனுக்கு பாமாலையும், பூமாலையையும் சூடிக்கொடுத்தவள். இதன் பொருள் என்ன ?அன்புக்காதல் தொலைதூரத்தையும் சமீபமாக்கிவிடுகிறது. அன்னியனையும் சகோதரனாக்குகிறது.
பக்திக்காதல் என்பது பரமபதத்தையும் மண்ணில் கொண்டு வந்து விடுகிறது.ஆண்டவனையும் அருட்காதலனாக தழவிக்கொள்கிறது. ஆண்டவன் காதலியைத் தழவி கொள்வது போல் பக்தனை அணைத்துப் பாதுகாக்கிறான் என்று நம்புகிறது.
அன்பின் மூலமாகத்தான் ஆண்டவன் பக்தர்களுக்கு அடியவன் ஆகிறான். அன்பனாகிறான்; காதலனாகிறான். பரமனே பரம பக்திக்கு கட்டுப்படுகிறான்.. பக்தன் விரும்புவதை தானும் விரும்புகிறான். பரத்வம் பரம பக்தியால் எளிமையிலும் எளிமையாகிவிடுகிறது.காதல் வெள்ளம் கரை புரண்டு ஒட அதில் ஆசாரம் முதலிய மரபுகள் எல்லாம் கரைந்து போகின்றன. அன்பு தழவியே ஒன்றே ஆசாரமாகிறது. மரபுகளாகிறது.