தேர்தல் பரபரப்பில் புத்தகக் கடைப் பக்கம் போகவே முடியவில்லை. போனாலும் படிக்க வேண்டுமென்கிற பேராசை `பர்ஸை' புண்ணாக்கிவிடுகிறது. ஆனாலும் இந்த பேராசையை அடக்க வேண்டியதில்லை என்று பல முன்னோர்கள் சொல்லியிருப்பதால் தொடர்ந்து பேராசைப் பட்டுக்கொண்டுதானிருக்கிறேன்.
அதோடு நிறுத்திக்கொள்வதில்லை. இதில் படிக்க வேண்டுமென்கிற கொள்கை பரப்பு வேறு! `நான் பட்டதாரிதான் ஆனாலும் ஆங்கிலம் அதிகமாக படிக்க வராது' என்று காரணம் சொல்லி பலர் தப்பித்துக்கொள்ள பார்ப்பார்கள்.நானும் விடமாட்டேன் நீ படிக்க விரும்பும் பல புத்தகங்கள் இப்போது தமிழிலும் இருக்கிறது. என்று பட்டியலிடுவேன். இப்படி பல புத்தகங்கள் என்னால் விற்பனையாகியிருக்கிறது. இதற்காக பதிப்பாளர்களிடம் நான் ` ராயல்டி' வசூலிப்பதில்லை.
அப்படித்தான் அன்றைக்கு கடைக்குள் நுழைந்தபோது, நண்பர் திரைப்பட, நாடக எழத்தாள நண்பர் காரைக்குடி நாராயணன் என்னை காரைக்குடியிலிருந்து கைபேசியில் அழைத்தார். `பழ. கருப்பையாவின் கருணாநிதி என்ன கடவுளா?' புத்தகம் வாங்கிவிட்டிர்களா?' என்றார். இந்த தலைப்பில் அவர் தின்மணியில் கட்டுரை எழதியது எனக்குத் தெரியும். அது புத்தகமாக வந்த விஷயம் எனக்கு தெரியவில்லை.
ஒரு வித குற்ற உணர்ச்சியுடன், புத்தக கடைக்காரரிடம் கேட்டேன் ` அது வந்தவுடனேயே வேகமாக வித்துப்போச்சு' என்றார். புருவத்தை உயர்த்திக்கொண்டேன்.புத்தகம் என்ன டாஸ்மாக் சரக்கா அத்தனை வேகமாக வித்துப் போக? மனதிற்குள் ஒரு உற்சாக ஆச்சர்யம்.
உடனே படிக்க வேண்டுமென்கிற ஆர்வத்தில் இன்னும் கடைகளில் தேடினேன். பல இடங்களில் ஏமாற்றும். கடைசியில் அதை வெளியிட்ட கிழக்கு பதிப்பக கடையிலேயே வாங்கி ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.
அரசியல், தலைவர்கள், சமயம், சமூகம், மொழி, பிற என்று ஆறு தலைப்புகளில் வந்திருக்கும் 34 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு.அதிமுகவின் துறைமுகம் தொகுதி வேட்பாளர் பழ. கருப்பையா. என்ன சிந்திக்க, எழத தெரிந்தவர்களுக்கு கூட திராவிட கட்சிகள் சீட் கொடுக்கிறதா ? என்று ஆச்சர்யபடவேண்டாம். சில சமயங்களில் அந்த மாதிரி அசம்பாவிதங்கள் நடந்துவிடும்.
இந்த கட்டுரைகள் எல்லாமே அவர் தினமணியிலும், துக்ளக் வார இதழிலும் எழதி நான் ஏற்கெனவே படித்தவைதான். ஆனாலும் முழமையாக படிக்கும்போது, சிந்தனை மெருகேறத்தான் செய்கிறது.
தமிழ்நாட்டு சூழலில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். அவருடன் முரண்பட, அல்லது காந்த எழத்துக்களில் கவரப்படவாவது நிச்சயம் படிக்க வேண்டும். கருணாநிதி வீட்டு வாயிலில் நிற்கும் வைரமுத்து மாதிரி, கருப்பையா வீட்டு வாயிலில் கைகட்டி நிற்கிறாள் தமிழ் அன்னை. அத்தனை அற்புத நடை. சொற்பிரயோகங்கள்.
உதாரணங்கள். கட்டுரையின் தலைப்பு `எடியூரப்பாவுக்கே சிலை வைக்கலாம்'. பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை கருணாநிதி திறந்து வைத்தபோது எழதியது.
`கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சி பம்பாயிலும், லக்னோவிலும், சண்டீகரிலும் கால்பதிக்க முனைந்து கொண்டிருக்கிறது '
`ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் டாலிமியாவுக்குக் கல்லக்குடியில் என்ன வேலை என்று கேட்டார் கருணாநிதி. இப்போது கருணாந்திக்கு லக்னோவில் என்ன வேலை என்று கேட்கக் கூடும்தானே .....!
இன்னும் சில க்ட்டுரைகளிலிருந்து சில உதாரணங்கள்
சாதியை திருமணங்களோடு நிறுத்திக்கொண்டு, மதத்தை வழிபாட்டுத் தலங்களோடு நிறுத்திக்கொண்டு, பசியை முன்னிறுத்தி நடத்துவதுதானே முறையான அரசியல்!
இராசாசி, பெரியார், அண்ணா, காமராசர் என்று ஒவ்வொருவராக அடுத்தடுத்து போய்விட்ட நிலையில் நாடு வெறுமை அடைந்துவிட்டது! கோல மயில்கள் குதித்தாடிய நாட்டில், வ்க்கரித்த வான்கோழிகள் கொக்கரிக்கின்றன !
ஒரு கூட்டத்தின் தகுதிக்குக் குறைவான ஒருவனும் தலைவனாக முடியாது; கூட்டத்தின் தகுதிக்கு மிகமிக மேலான ஒருவனும் தலைவனாக ஏற்கப்படுவதில்லை.
காமராசர் சத்தியமூர்த்தியை அரசியல் குருவாகக் கொண்டது போல், கக்கன் வைத்தியநாத ஐயரை அரசியல் குருவாகக் கொண்டவர்! சாதி என்னும் படி வரிசையில் மேலும் கீழுமான இருவர் கை கோர்த்து நின்றதென்பது, காந்திய அரசியல் இவற்றையெல்லாம் கடந்தது என்பதை மக்களுக்கு உணர்த்தியது.
உங்களுக்கு தீர்ப்பு வழங்கப்படப்போவது நீங்கள் வைத்திருக்கும் சொத்துக்களின் அடிப்படையில் அல்ல ! இவ்வலவு சொத்து வைத்திருந்து, உங்கள் பக்கத்தில் அனாதைகள் இருப்பதை அறிந்திருந்தும், ஏன் அவர்களுக்கு உதவவில்லை என்னும் கேள்விக்குத் தீர்ப்பு நாளில் பதில் சொல்ல நேரிடும்' என்கிறார் நபிகள் நாயகம்.
பூமி அல்லாவுக்குச் சொந்தம் என்னும் கருத்துக்கும் நிலம் அரசுக்கே சொந்தம் என்னும் சமதருமக் கருத்துக்கும் பெரிய அளவில் வேறுபாடில்லை. இரண்டிலும் நிலப்பிரபுக்கள் இல்லை !
பழைய காலத்தில் இருந்த சாதியமைப்புக்களில் ஒவ்வொரு சாதியும் தன்னை மேல் நிலைக்குத் தூக்கிக் கொள்ளப் போராடியது ! இப்போது ஒவ்வொரு சாதியும் தன்னைக் கீழ் நிலைக்கு இறக்கிக் கொள்ளப் போராடுகின்றது ! பிற்பட்டவன் மிகவும் பிற்பட்டவனாக விரும்புகிறான்; மிகவும் பிற்பட்டவனோ தாழ்த்தப்பட்ட சாதியினரோடு சேர்த்து அறிவிக்க கோருகிறான்.
1961ல் சம்பத்; 1972ல் எம்ஜிஆர்; நெருக்கடி நிலைக் காலத்தில் நெடுஞ்செழியன்: ஈழப்போரின்போது வைகோ என்று ஒவ்வொருவரையாக வெளியேற்றிக் கட்சியை குடும்பச் சொத்தாக மாற்றிவிட்ட பிறகு, குடும்பத்திற்குள்ளேயாவது சனநாயகம் வேண்டும் என்று அழகிரி கோருவது அதிசயமானது என்றாலும் நியாயமானதுதானே !
முதலவருக்கான போட்டி நடக்கப்போவதில்லை; அப்படி ஒரு வேளை நடக்கும் என்று கொண்டால், அது கருணாநிதி நினைப்பது போல் இர்ருமுனைப் போட்டியாக இருக்காது" மும்முனைப் போட்டியாகவே இருக்கும்!
தயாநிதி மாறன் திமுக காரராகவே, நேடே முகங்காட்டாதி காங்கிரசால் களமிறக்கப்படுவார்! தயநிதியிடம் இல்லாத பணமா ? ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரும், ` போது;போதும்' என்னும் அளவுக்குப் பணத்தால் அடிக்கப்படுவார்கள்!
காங்கிரசின் தயவில்லாமல் கருணாநிதியே ஆட்சியில் இருக்க முடியாதே ! கருணாநிதியின் மகன்களால் எப்படி முடியும் ?
திமுகவின் சார்பாகச் சிறுபொழதுக்கு யார் ஆள்வது என்பதைக் காங்கிரசு தீர்மானிக்கும்! தீர்மானிக்கும் சக்தி மாறுவதோடு திமுக வரலாறு முடியும்!
தோன்றியவை எல்லாம் அழிந்தே தீரும் என்பது இயற்கை விதி!
அப்படியல்லாமல் நீருள்ள அளவும், நிலமுள்ள அளவும், காருள்ள அளவும், கடலுள்ள அளவும் நானே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பேன் என்று சொல்வதற்குக்க் கருணாநிதி என்ன கடவுளா ?
----இப்படி பல விஷயங்களைச் சொல்லி யோசிக்க வைக்கிறார் கருப்பையா. அது சரி இந்த புத்தகம் ஏன் இப்படி பரபரப்பாக விற்பனையாகிறது. புத்தகத்தின் தலைப்பா? அல்லது வாக்காள மக்கள் மனதில் தொக்கி நிற்கும் கேள்வியா?
விடை மே 13 கிடைக்குமென்று நினைக்கிறேன்.
No comments:
Post a Comment