சரித்திர புருஷர்
தலைநகரிலிருந்து திரும்பி வேறு விஷயத்திற்கு வரலாம் என்றுதான் ஆசை. ஆனால், விட மறுக்கிறார்கள் இந்த காங்கிரஸ்காரர்கள்.
'கிழக்கிந்திய கம்பெனி என்பது சரித்திரம்'
'சில்லறை வர்த்தகம் என்பது எதிர்காலம்'
இது சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு கூட்டத்தில் பாரத பிரதமர் உதிர்த்த பொன்மொழிகள். இதை வருங்கால இந்தியாவைப் பற்றிய ஒரு ஒப்புதல் வாக்குமூலமாகவே (confessional statement) எடுத்துக்கொள்ளலாம். சாத்தியமில்லாததையெல்லாம் சாத்தியம் என்று சொல்லி இந்தியர்கள் தலையில் மிளகாய் அரைப்பதுதான் எங்கள் வேலை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் பிரதமர்.
நம்மில் பலருக்கு சரித்திரம் என்றாலே வேப்பங்காய். சரித்திரம் தெரிந்தால்தானே, நம் எதிர்காலம் புரியும்.?
முதலில் கிழக்கிந்திய கம்பெனி என்கிற சரித்திரத்தைப் புரட்டிப் பார்ப்போம். அப்போதும் சில்லறை வர்த்தகத்தில்தான் நாடு பிடிக்கிற வேலை நடந்தது என்கிற உண்மை புரியும்.
காலம். 16&ம் நூற்றாண்டு. பிரிட்டிஷ் வியாபாரிகள். தங்களுக்கு வேண்டிய மிளகு, லவங்கம், ஏலக்காய் போன்ற பொருட்களை டச்சுக்காரர்களிடம் வாங்கி வந்தார்கள். டச்சுக்காரர்கள் திடீரென்று விலையை ஏற்றிவிட்டார்கள். அதுவும் ஒரே நாளில் 5 ஷில்லிங். இனி இவர்களிடம் வியாபாரம் கூடாது என்று 24 லண்டன் வியாபாரிகள் முடிவெடுத்தார்கள். 1549 செப்டம்பர் 24&ம் தேதி 75 ஆயிரம் பவுண்டுகள் மூலதனத்துடன் லண்டனில் ஒரு கம்பெனி ஆரம்பித்தார்கள். அதே ஆண்டில் பிரிட்டிஷ் முதலாம் அரசி, இந்த கம்பெனி 'தன்னம்பிக்கை முனைக்கு' அப்பால் கீழ்த்திசை நாடுகளில் வியாபாரம் செய்து கொள்ளவும் அனுமதி அளித்தார். அந்த கம்பெனிக்கு பெயர்தான் கிழக்கிந்தியக் கம்பெனி.
உடனே கிளம்பினார் வியாபாரி 'வில்லியம் ஹக்கின்ஸ்' 500 டன் எடை கொண்ட 'ஹெக்டர்' என்கிற கப்பலில் 1600 ஆகஸ்ட் 24-ம் நாள் பம்பாய்க்கு வடக்கே உள்ள சூரத் துறைமுகத்தில் வந்து இறங்கினார். சரி, இங்கே வியாபாரம் செய்ய அரசு அனுமதி வேண்டுமே? அதனால் அப்போது இந்தியாவை ஆண்டது மொகலாய மன்னர் ஜஹாங்கீர். அவரைப் பார்க்க ஆக்ராவை நோக்கி புறப்பட்டார். ஜஹாங்கீரின் தர்பார் மண்டபத்தை கண்டு மிரண்டு போனார் ஹாக்கீன்ஸ். உலகிலேயே செல்வம், வலிமை மிகுந்த, மிகப்பெரிய நிலப்பரப்பும், மக்களும் கொண்ட தேசம் இந்தியா. அதன் சக்ரவர்த்தி ஜஹாங்கீருக்கு முன்னால் இங்கிலாந்து ராணியே ஒரு சிற்றரசிதான் என்கிற எண்ணம் அவருக்கு உறுதியாயிற்று.
ஜஹாங்கீரும் அவரை உபசரித்து, அனுமதியும் அளித்தார். பம்பாய்க்கு வடக்கே உள்ள பகுதிகளில் வியாபாரம் நடத்தலாம். பொருட்களைக் குவிக்க பண்டகசாலை அமைத்துக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது. மிகக்குறுகிய காலத்தில் வியாபாரம் பன்மடங்கு பெருகிறது. மாதத்திற்கு இரண்டு கப்பல்கள் இங்கே வந்தன. இங்கேயிருந்து பட்டுநூல், வாசனை திரவியங்கள், மிளகு போன்ற பொருட்கள், அவர்கள் நாட்டில் கொண்டுபோய் மலைபோல் குவித்தன. எல்லா செலவும் போக பல மடங்கு லாபம் கொழித்தது.
'எங்களுக்கு தேவை வியாபாரம். நாடு பிடிப்பது எங்கள் நோக்கமல்ல' என்றுதான் கிழக்கிந்திய கம்பெனி முதலில் பிரகடனப்படுத்தியது.
இங்கே இருந்த சிற்றரசர்களும், நவாபுகளும் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வதை கண்டார்கள். ஆளுக்கொரு பக்கமாக ஆட்சி செய்யும் இவர்கள் எப்போதும் போருக்கு தயாராகயிருப்பார்கள். அந்நியர்களுக்காவது தங்கள் நிலங்களை விட்டுக்கொடுப்பார்கள். தங்களுக்குள் சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள் என்கிற உண்மையை புரிந்து கொண்டார்கள்.
தங்களுக்கு அடங்காத ஒரு நவாபை 1757 பிளாசிப் போரில், ராபர்ட் க்ளைவ் தலைமையில் கைப்பற்றினார்கள். வட இந்தியா அவர்கள் வசமாயிற்று. 250 ஆண்டுகள் இங்கே ஆண்ட கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து, விக்டோரியா மகாராணி ஆட்சியை ஏற்றுக்கொண்டார். அவருடைய ராஜ பிரதிநிதியாக வைஸ்ராய் என்பவர் இந்தியாவை ஆண்டு வந்தார். அப்படிப்பட்ட ஒரு வைஸ்ராய்தான் நமக்கு சுதந்திரம் வந்தபோது இங்கே இருந்த மவுண்ட்பேட்டன். அந்த வைஸ்ராய்க்காக, கட்டப்பட்ட மாளிகையின் நிலப்பரப்பு மட்டுமே இரண்டு லட்சம் சதுர அடிகள். அதன் இன்றைய பெயர் ரெய்சினா ஹில்ஸ். இப்போது அங்கே இருப்பவர் வைஸ்ராய் அல்ல. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.
அப்படி ஆண்ட பிரிட்டிஷாருக்கும். இந்திய பாமர மக்களுக்கும் ஒரு ஒற்றுமை பாலம் தேவை என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் காங்கிரஸ் கட்சி. முதலில் பம்பாயிலும், அடுத்தது கல்கத்தாவிலும், மூன்றாவது சென்னையிலும் மகாசபை கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் பேச அழைக்கப்பட்ட இந்தியர்கள் அனைவரும் பிரிட்டிஷ் ஆட்சியையும், ஆட்சியாளர்களையும் எஜமான விசுவாசத்துடன்தான் பாராட்டிப் பேசினார்கள். காங்கிரஸ், முஸ்லீம் லீக் இரண்டுமே 'MADE IN ENGLAND' ரகம்தான்.
அன்றைக்கு பிரிட்டிஷார் அவர்களாக மிளகு வாங்க வந்துதான் நம்மை மிளகாய் அரைத்தார்கள். இன்று நிலை அப்படியில்லை. நாமே அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறோம். அன்று கிழக்கிலிருந்து வந்த பிரிட்டிஷ், இன்று மேற்கிலிருந்து வரும் அமெரிக்கா இது ஒன்றுதான் வித்தியாசம். அன்று வந்தது கிழக்கிந்திய கம்பெனி. இன்று வரப்போவது, அமெரிக்கா சார்ந்த பன்னாட்டு நிறுவனங்கள். அதைச் சுருக்கமாக பழைய நினைவாக மேற்கிந்திய கம்பெனி என்று அழைக்கலாம்.
இந்த மேற்கிந்திய கம்பெனி, மகாராணியின் கட்டுப்பாட்டில் இருக்காது. அதற்குப் பதிலாக அமெரிக்க அதிபர் வசம் இருக்கும். அவர்தான் உண்மையில் வைஸ்ராய், அவரை ஆட்டி வைப்பது பன்னாட்டு நிறுவனங்கள். வேண்டுமானால், இந்தியா பெரிய நாடு என்பதால், நம் நாட்டு பிரதமரையும் வருங்காலத்தில் வைஸ்ராய் என்றே அழைக்கலாம்.
நன்றி: மீடியா வாய்ஸ் 24.11.12